ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் 3 ஆயிரம் இந்தியத் தொழிலாளர்கள் விடுதலை
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் ராஸ் அல் கைமாக் நகரில் ஒரு கட்டுமான கம்பெனியில் வேலை பார்த்த இந்திய தொழிலாளர்கள் தாங்கள் தங்க வைக்கப்பட்டு உள்ள குடியிருப்பில் மோசமான உணவு வழங்கப்படுவதை எதிர்த்தும் அங்கு உள்ள வசதிக்குறைவுகளை கண்டித்தும் வன்முறைப் போராட்டத்தில் குதித்தனர். அவர்களில் 3 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் இந்த மாதத் தொடக்கத்தில் நடந்தது. கைது ஆனவர்கள் அனைவரும் நேற்று துபாய் சிறையில் இருந்தும், அபுதாபி சிறையில் இருந்தும் விடுதலை ஆனார்கள். அவர்களை அழைத்து வருவதற்காக கட்டுமான கம்பெனியின் 50 பஸ்கள் சிறைவாசலில் நின்று இருந்தன. அவர்கள் விரைவில் வேலையில் சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து தொழிலாளர்களையும் மீண்டும் வேலைக்கு எடுத்துக்கொள்ள கம்பெனி விரும்புகிறது என்று கம்பெனி அதிகாரிகள் இந்தியத்தூதரக அதிகாரிகளிடம் தெரிவித்தனர். அவர்களில் 8 பேர் மட்டும் விடுதலை செய்யப்படவில்லை. அவர்களில் ஒருவர் வங்காளதேசத்தைசேர்ந்தவர் ஆவார். அவர்கள் தொடர்ந்து சிறையில் இருப்பார்கள் என்று தெரிகிறது.
Average Rating