கூட்டணி அரசில் கருத்து வேறுபாடு தீவிரம்: முஷரப்பை நீக்கும் முயற்சிக்கு நவாஸ் ஷெரீப் ஒத்துழைக்க மறுப்பு; சர்தாரியுடனான அமெரிக்க பயணத்தை தவிர்த்தார்
பாகிஸ்தான் கூட்டணி அரசில் கருத்து வேறுபாடு அதிகரித்து வருகிறது. முஷரப்பை நீக்க அமெரிக்காவை சம்மதிக்க வைப்பதற்காக, நவாஸ் ஷெரீப்புடன் சேர்ந்து சர்தாரி அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளார். ஆனால் அவருடன் செல்ல நவாஸ் ஷெரீப் மறுத்து விட்டார். பாகிஸ்தானில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற தேர்தலில் பெனாசிர் கட்சி அதிக இடங்களை பெற்றதால், அக்கட்சியை சேர்ந்த ïசுப் கிலானி பிரதமராக பதவி ஏற்றுள்ளார். இக்கூட்டணி அரசில் நவாஸ் ஷெரீப் கட்சியும் இடம்பெற்றது. ஆனால், அதிபர் முஷரப்பை பதவி நீக்கம் செய்ய வேண்டும், நீக்கப்பட்ட நீதிபதிகளை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் ஆகிய நவாஸ் ஷெரீப்பின் கோரிக்கைகளை நிறைவேற்ற கூட்டணி அரசு தாமதம் செய்ததால், கடந்த மே மாதம் நவாஸ் ஷெரீப் கட்சி, அரசில் இருந்து விலகியது. தற்போது வெளியில் இருந்து ஆதரவு அளித்து வருகிறது. இதுதொடர்பாக, நீடித்து வரும் கருத்து வேறுபாடுகளை தீர்க்க, பெனாசிர்-நவாஸ் ஷெரீப் கட்சிகளிடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆனால் சர்தாரியின் அந்தர்பல்டிகளால் அதிருப்தி அடைந்த நவாஸ் ஷெரீப், அடுத்த கட்ட பேச்சுவார்த்தைதான் கடைசி பேச்சுவார்த்தை என்று கூறியுள்ளார். இந்நிலையில், முஷரப்பை நீக்குவதற்கு அமெரிக்காவை சம்மதிக்க வைப்பதற்காக, அமெரிக்கா சென்று அந்நாட்டு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த சர்தாரி திட்டமிட்டுள்ளார். இம்மாத இறுதியில் பிரதமர் ïசுப் கிலானி அமெரிக்கா செல்லும்போது, அவருடன் தானும், நவாஸ் ஷெரீப்பும் செல்வது என்று அவர் திட்டமிட்டுள்ளார். 3 முக்கிய தலைவர்களும் ஒன்றாக சென்றால், அதன் முக்கியத்துவம் கருதி, முஷரப்பை நீக்க அமெரிக்கா சம்மதிக்கும் என்று சர்தாரி எதிர்பார்க்கிறார். மேலும், அமெரிக்கா சம்மதிக்கும் வகையில் நவாஸ் ஷெரீப் வாதாடுவார் என்று சர்தாரி கருதுகிறார்.
நவாஸ் ஷெரீப் மறுப்பு
ஆனால், சர்தாரியுடன் அமெரிக்கா செல்ல நவாஸ் ஷெரீப் மறுத்து விட்டார். முஷரப்பை நீக்க வேண்டும் என்பதுதான் நவாஸ் ஷெரீப்பின் கருத்து. இருந்தாலும், அவர் சர்தாரியுடன் செல்வதை விரும்பவில்லை. அவரது ஒத்துழையாமையால், சர்தாரி அதிருப்தி அடைந்துள்ளார். அவர் பிரதமருடன் சேர்ந்து அமெரிக்கா செல்வாரா? அல்லது தனியாகவே அமெரிக்கா செல்வாரா? என்பது தெரியவில்லை.
முஷரப்புக்கு அதிக எதிர்ப்பு
இதற்கிடையே, அமெரிக்க நிறுவனம் ஒன்று பாகிஸ்தான் மக்களிடம் நடத்திய கருத்துக்கணிப்பில், முஷரப்பை பதவி நீக்கம் செய்ய 83 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் தவறான திசையில் செல்வதாக 86 சதவீதம் பேர் கூறினர். புதிய அதிபராக அணு விஞ்ஞானி அப்துல் காதர்கானை நியமிக்கலாம் என்று 67 சதவீதம் பேர் கூறினர்.
Average Rating