கண் திறந்த ஷீரடி சாய்பாபா சிலையை பார்க்க அலைமோதும் கூட்டம்
ஒரு கண் திறந்துள்ள நிலையில் உள்ள ஷீரடி சாய்பாபாவின் சிலையைக் காண பெங்களூரில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். பெங்களூர் கவிபுரம் குட்டஹள்ளியைச் சேர்ந்தவர் பாபு. அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த ஷீரடி சாய்பாபா சிலையின் மூடிய நிலையில் இருந்த வலது கண் திடீரென திறந்துகொண்டது. இதை அறிந்த பக்தர்கள் வெள்ளிக்கிழமை பாபுவின் வீட்டுக்கு சென்று அந்த சிலையைப் பார்த்து அதிசயித்துச் சென்றனர். இந்தச் செய்தி தொலைக்காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் வெளியானது. இதைப் பார்த்த சாய் பக்தர்கள் மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து குறிப்பாக தும்கூர், கோலார் மாவட்டங்களில் இருந்து சனிக்கிழமை பெங்களூருக்கு வந்த வண்ணமிருந்தனர். அவர்கள் கவிபுரத்தில் உள்ள பாபுவின் வீட்டுக்குச் சென்றனர். இதனால் சனிக்கிழமை காலை 6.30 மணிக்கே அவரது வீட்டுமுன் பெரும் கூட்டம் கூடிவிட்டது. இதனால் போலீஸôரின் உதவியை நாடினார் பாபு. போலீஸர் அங்கு சென்று பக்தர்களை வரிசையில் நிற்கவைத்து ஒவ்வொருவராக பாபுவின் வீட்டுக்குள் அனுமதித்தனர். நேரம் ஆக ஆக கூட்டம் அதிகரித்தது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸôர் பெரிதும் சிரமப்பட்டனர். மேலும் அந்தப் பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. ஆனாலும் பக்தர்கள் ஒவ்வொருவராகச் சென்று ஷீரடி சாய்பாபா சிலையை தரிசித்துச் சென்றனர்.
Average Rating