ஜெயலலிதா மரணம், உண்மைகள் நிரூபணம் – சசிகலா தரப்பு தகவல்!! (உலக செய்தி)

Read Time:6 Minute, 29 Second

ஜெயலலிதா மரணம் குறித்த நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தில், குறுக்கு விசாரணைக்காக சசிகலாவின் உறவினர் இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா, மகன் விவேக் (ஜெயா டி.வி. தலைமை செயல் அதிகாரி), அரச டொக்டர் சுவாமிநாதன் (இதய நோய் நிபுணர்), ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை உடற்கூறு இயல் துறை தலைவர் டொக்டர் சுதா சேஷையன், அப்பல்லோ மருத்துவ நிர்வாக அதிகாரி டொக்டர் சத்யபாமா, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வெங்கட்ரமணன், ஜெயலலிதா வீட்டில் சமையல் வேலை செய்து வந்த ராஜம்மாள், சசிகலாவின் உதவியாளர் கார்த்திகேயன் ஆகியோர் வந்திருந்தனர்.

இவர்களில் டொக்டர் சத்யபாமா, கார்த்திகேயன் தவிர மற்ற 6 பேரிடமும் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜாசெந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தினார். டொக்டர் சத்யபாமா, கார்த்திகேயன் மற்றும் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் ஆகியோரிடம் வருகிற 30 ஆம் திகதி குறுக்கு விசாரணை நடைபெற உள்ளது.

குறுக்கு விசாரணையின்போது நடந்தது குறித்து வழக்கறிஞர் ராஜாசெந்தூர்பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

குறுக்கு விசாரணையில் ஜெயலலிதாவின் உடலுக்கு ‘எம்பாமிங்’ செய்த டொக்டர் சுதா சேஷையன் கூறும்போது, “5.12.2016 நள்ளிரவு 11.30 மணிக்கு நான் ‘எம்பாமிங்’ செய்ய ஆரம்பித்தேன். அப்போது ஜெயலலிதாவின் திசுக்களை பார்க்கும் போது, 15 மணி நேரத்துக்கு உள்ளாக மரணம் நடந்திருக்கும்” என்றார்.

ஜெயலலிதா அடித்து கொல்லப்பட்டு இறந்துபோன பிறகு வைத்தியசாலைக்கு கொண்டு வந்து சேர்க்கப்பட்டார் என்ற குற்றச்சாட்டையும், இறந்துபோன ஜெயலலிதாவின் உடலை நீண்டகாலமாக அவர்கள் வைத்து இருந்தார்கள் என்ற குற்றச்சாட்டையும் தவிடு பொடியாக்கும் வகையில் டொக்டரின் சாட்சியம் அமைந்து இருக்கிறது. 5.12.2016-ல் ஜெயலலிதா மரணம் அடைந்துள்ளார் என்பதை சாட்சியமாக உறுதி செய்துள்ளார்.

மேலும், 5.12.2016 அன்று வந்த ‘எய்ம்ஸ்’ டொக்டர்கள் இனி உடலில் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை. அவரது ஈ.சி.ஜி. ஒரே நேர்க்கோட்டில் இருக்கிறது என்று சொன்னதன் அடிப்படையில், அப்போதைய மத்திய மந்திரி வெங்கையா நாயுடு, ஓ.பன்னீர்செல்வம், ராமமோகன் ராவ், தம்பிதுரை, முக்கிய அமைச்சர்கள் எல்லோருடைய முன்னிலையிலும் அன்று இரவு ‘எக்மோ’ கருவி அகற்றும் முடிவு எடுக்கப்பட்டதாக சாட்சியம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

3.12.2016 அன்று அப்பல்லோ வந்த ‘எய்ம்ஸ்’ டொக்டர்கள், ஜெயலலிதாவின் இதயம் நன்றாக உள்ளது என்று கையெழுத்துபோட்டு கொடுத்துள்ள ஆவணத்தை நாங்கள் தாக்கல் செய்துள்ளோம். அதன் அடிப்படையில் அன்று ஜெயலலிதாவின் இதயம் நன்றாக இருந்திருக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

வெங்கட்ர மணன், “ஜெயலலிதாவே எங்கள் எல்லோரையும் கூப்பிட்டு ஊடகங்கள், சமூக வலைத்தளங்களில் நான் இறந்துவிட்டதாகவும், என்னை யாரோ அடித்துவிட்டார்கள் என்றும் தவறான தகவல்கள் பரவுகின்றன. மக்களுக்கு உண்மைநிலை தெரியவேண்டும் எனவே செய்தி வெளியிடுங்கள்” என்று சாட்சியம் கூறியிருக்கிறார். ராமமோகனராவும் இதையே சொல்லி இருந்தார்.

ஆணிக்கட்டையால் அடிக்கப்பட்டிருந்தது என்று சிலர் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். ‘எம்பாமிங்’ செய்த டொக்டரும், “அதுபோன்று எதுவும் இல்லை. ஆணிக்கட்டையில் அடித்து ஓட்டை இருந்திருந்தால், எம்பாமிங் செய்யும்போது திரவம் எல்லாம் ஓட்டை வழியாக வெளியே வந்திருக்கும். எனவே அதற்கான வாய்ப்பே இல்லை” என்று தெரிவித்து இருக்கிறார்.

‘எக்மோ’ கருவியை 5.12.2016 அன்று அகற்றும்போது தங்கமணி உள்ளிட்ட அமைச்சர்கள் உடன் இருந்ததாக ராமமோகன ராவ் தெரிவித்து இருந்தார். இதுவரை 22 சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்து இருக்கிறோம். இன்னும் மீதம் இருக்கும் சாட்சிகளையும் தாமதமின்றி குறுக்கு விசாரணை செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

டொக்டர் சுவாமிநாதன் கூறும்போது, “நான் ஜெயலலிதாவுக்கு நேரடியாக சிகிச்சை அளிக்கவில்லை என்று ஏற்கனவே தெரிவித்து இருந்தேன். அதையே தான் இப்போதும் தெரிவித்து உள்ளேன்” என்றார்.

கிருஷ்ணபிரியா கூறும்போது, “ஏற்கனவே ஆணையத்திடம் அளித்த மனுவில் நான் கூறியிருந்ததில் இருந்து கேட்ட கேள்விக்கு பதில் அளித்தேன். அதில் வீடியோ ஆதாரம் குறித்தும் கேட்கப்பட்டது” என்றார். விவேக்கும் இதே கருத்தைத் தான் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாலியல் புகாரில் சிக்கிய அதிகாரியை நீக்க பிரதமர் முடிவு !!
Next post குடிக்க பணம் தர மறுத்ததால் தந்தையை அடித்துக் கொன்ற மகன்!!(உலக செய்தி)