பணியிடங்களில் பாலியல் தொல்லையா?

Read Time:21 Minute, 11 Second

தொழில்கள் அனைத்திலும் பெண்களின் பங்களிப்பு இருந்தாலும் அவர்கள் கல்வியறிவு பெற்று அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிக்குச் சென்றது கடந்த நூற்றாண்டில்தான். வீடு என்னும் குறுகிய வட்டத்தைத் தாண்டி பெரும் பரப்புக்குள் பெண்கள் வந்தது கடந்த நூற்றாண்டின் குறிப்பிடத்தகுந்த சமூக மாற்றம். கொண்டாடப்பட வேண்டிய இச்சமூக மாற்றத்தின் பின்னே நிற்கும் முதன்மையான கேள்வி பணியிடங்களில் பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா? என்பதுதான். உயர் பொறுப்பில் இருப்பவர்களால் நேரடியாகவும், சக பணியாளர்களால் குறிப்புணர்த்தும்படியான பேச்சாலும் தொடர்ச்சியாக பெண்கள் பாலியல் சீண்டலுக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள். பல ஆய்வறிக்கைகள் இதனை உறுதிப்படுத்துகின்றன. பணியிடங்களில் பெண்கள் எவ்வாறெல்லாம் பாலியல் துன்புறுத்தலுக்கும், சீண்டலுக்கும் ஆளாகிறார்கள்? இதற்கு எதிரான சட்டங்கள் மற்றும் பெண்கள் எவ்வாறு இதனை அணுக வேண்டும் என்பதைப் பற்றி இக்கட்டுரையில் அலசலாம்…

ஐடி நிறுவனத்தில் மனிதவள அலுவலராகப் பணியாற்றும் பெயர் சொல்ல விரும்பாத பெண் ஒருவர்…
‘‘25-30 சதவிகித பெண்கள் இது போன்ற பிரச்னைகளுக்கு ஆளாகிறார்கள். நாம பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தப்படுகிறோமாங்குற தெளிவு ஒவ்வொரு பெண்ணுக்கும் இருக்கணும். நேரடியாக யாரும் வெளிப்படுத்த மாட்டார்கள். ஓவர் டைம் வேலை செய்யச் சொல்வது, பேசிக்கிட்டிருக்கப்பவே ‘‘கிளம்ப லேட்டாகுமா?’’ன்னு கேட்குறது. உங்களுக்கு எதாவது ஹெல்ப் வேணும்னா சொல்லுங்கன்னு சொல்றது. இது மாதிரியா மறைமுகமாக வெளிப்படுத்துவாங்க. பாட்டுப் பாடுறது, சைகைகள் வழியாகவும் சீண்டுவாங்க. இப்படியான புகார்கள் எங்ககிட்ட நிறைய வந்திருக்கு. புகாரளிக்கப்பட்டவங்களை உடனடியாக பணி நீக்கம் பண்ணியிருக்கோம். நம்மளை நாம் எப்படிப் பாதுகாத்துக்கணும்னு ஒவ்வொரு பெண்ணும் தெரிஞ்சுக்கிறது அவசியம்’’ என்கிறார்.

மருத்துவரான யாழினி மருத்துவத்துறையில் நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் பற்றிப் பேசுகிறார்…
‘‘மருத்துவக் கல்லூரிகளைப் பொறுத்தவரை கல்லூரியில் இணைந்த முதல் நாளில் இருந்தே பிரச்சனைகள் தொடங்குகின்றன‌. பெண்களில் கொஞ்சம் அழகாகவோ, துடுக்காக மனதில் பட்டதை பேசும் பெண்களை கட்டம் கட்டி, சீனியர் ஆண்கள் வழிக்கு கொண்டு வருகிறோம் என்ற பெயரில் கேலி செய்வதை ஒரு வாடிக்கையாகவே வைத்திருக்கிறார்கள். ஏன் என்று கேட்டால், இதுதான் கல்லூரி பாரம்பரியம் என்று சொல்கிறார்கள். அது பல நேரங்களில் வரம்பு மீறிச் செல்கிறது. தங்கள் ஆழ் மனதின் போதாமைகளே இப்படியாக வெளிப்படுகிறது என்பது என் அனுமானம்.

இந்த வரம்பு மீறல் பெரும்பாலும் கொச்சையான மெசேஜ்க‌ள் என்ற அளவில் இருந்தாலும், அது மனதளவில் ஏற்படுத்தும் தாக்கத்தை நமது அமைப்பு உணர்ந்தவாறு தெரியவில்லை. இதில் கேவலம் என்னவென்றால் மற்ற துறையில் உள்ளவர்களுக்கு மனம் பற்றிய புரிதல் பெரிதாக இருக்காது. ஆனால் உடல் மற்றும் மனம் குறித்து நன்கு அறிந்திருக்கும் மருத்துவத் துறையில் இது போன்ற வரம்பு மீறல்கள் நடப்பதுதான் வேதனை. பெரும்பாலும் நிர்வாகம் இது போன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு அளிக்கும் தண்டனை என்னவோ, யாருக்கும் வலிக்காத அதட்டல் மட்டுமே என்பதை எல்லோரும் அறிவர்.

இப்பொழுது ஆசிரியர்களுக்கு வருவோம். பாலியல் சார்ந்த தொந்தரவுகள், அத்துமீறல்கள், இன்டெர்னல் மதிப்பெண்
கள் வாங்குவதிலிருந்து, பதிவேடுகளில் கையொப்பம் பெறுவதிலிருந்து, பல்கலைக் கழகத் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவது வரை நீள்கிறது. இங்கு வர்க்க வேறுபாடுகளே இல்லாமல் சமத்துவம் மேலோங்கி, வருகைப் பதிவு எடுப்பவரிலிருந்து, கல்லூரி டீன் வரை, காலத்துக்கும் பாலியல் அத்துமீறல் செய்பவர்கள் எவ்வித தண்டனைக்கு உட்படாமல் இருப்பதுதான் காலக் கொடுமை.

அதிகாரத்தின் உச்சத்தில் இருப்பவரே அத்துமீறினால் நீங்கள் யாரிடம் முறையிடுவீர்கள்? பல சமர்ப்பிக்கப்படாத புகார்கள் இந்த கேள்வியிலேயே பஸ்பமாகி விடும். அடுத்து, அப்படியே புகார் அளித்தாலும் அவர்களுக்கு எத்தகைய தண்டனை கிடைத்துவிடப் போகிறது என்ற கேள்வி நம்மை காலத்திற்கும் இது குறித்து வாய் திறக்கவே விடாத படிக்கு செய்யும். இங்கு குற்றம் சாட்டுபவரின் சாதியும், குற்றம் சாட்டப்பட்டவரின் சாதியும் வேலை செய்யும் என்பதும் குறிப்பிட வேண்டியது.

‘‘யாருக்கும் தீங்கிழைக்காதே’’ என்ற கொள்கை வரம்பினுள் செயலாற்றும் மருத்துவத் துறையில்தான், பாலியல் அத்துமீறல்களை நிகழ்த்துபவர்கள் (பல டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்கள்) தண்டனையே இல்லாமல் சுதந்திரமாக இருக்கிறார்கள். விருதுகள் பெறுகிறார்கள். அதே நேரம் இந்த வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் உடல் மற்றும் மன அளவிலான பாதிப்புகளுக்கு ஆளாகி நிசப்தத்தில் உழன்றே செத்துக்கொண்டிருக்கிறார்கள்.

மருத்துவர்களாலும், மருத்துவ ஊழியர்களாலும் பாலியல் வன்முறைக்கோ அத்துமீறல்களுக்கோ ஆட்படுபவர்கள் அவமான உணர்வால் பெரும்பாலும் அதை யாருக்கும் தெரிவிப்பதில்லை, தங்களை நேசிப்பவர்கள் உட்பட. காரணம், மருத்துவர்கள் நம் சமூகத்தில் ஒரு புனித பசு. அவர்கள் தவறிழைத்ததாகச் சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள் என்ற புரையோடிப்போன எண்ணம்’’ என்கிறார் யாழினி.

பணியிடங்களில் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் சீண்டலுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் குறித்துப் பேசுகிறார் வழக்கறிஞர் அஜிதா…

‘‘பணியிடங்களில் நிகழும் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான சட்டம் 2013ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால் அதற்கு முன்பே 1996ம் ஆண்டு விசாகா தீர்ப்பின் மூலமாக இச்சட்டத்தின் அனைத்து அம்சங்களும் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டு விட்டன. பணிபுரியும் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் துன்புறுத்தலை குற்றமாக மட்டும் பார்க்காமல் வேலை செய்யும் உரிமை மற்றும் கண்ணியத்துடன் வாழும் உரிமைக்கு எதிராகவும் பார்க்க வேண்டும். இந்த உரிமைகளை நிலை நாட்டுவதற்காகத்தான் இச்சட்டம் கொண்டு வரப்பட்டது. 18 வயதுக்கு உட்பட்டவர்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறைக்கு எதிராக ஏற்கனவே சட்டம் பிறப்பிக்கப்பட்டு விட்டதால் இச்சட்டம் 18 வயதுக்கும் மேற்பட்ட இந்தியப் பெண்களுக்கானதாக இருக்கிறது. பாலியல் துன்புறுத்தலை தடுத்தல், அதிலிருந்து பெண்களைப் பாதுகாத்தல், துன்புறுத்தியவர்களை தண்டித்தல் ஆகியவை இச்சட்டத்தின் தன்மை. பாலியல் துன்புறுத்தலில் இருந்து பெண்களைப் பாதுகாக்க ஒவ்வொரு அரசு நிறுவனமும், தனியார் நிறுவனங்களும் எந்த மாதிரியான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இச்சட்டம் கூறுகிறது.

பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுகிறவரை வேலையை விட்டு நீக்கலாம் என இச்சட்டம் கூறுகிறது. சிவில் சர்வீஸ் சட்டப்படி பணியாளரின் ஒழுங்கீனத்தில் இதனை மோசமான ஒழுங்கீனமாகவும் சேர்க்கலாம். குடியுரிமை சார்ந்து மட்டுமல்ல குற்றவியல் சார்ந்த நடவடிக்கையையும் மேற்கொள்ள முடியும். குடியுரிமை சார்ந்து துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளலாம். குற்றவியல் சார்ந்து துன்புறுத்தியவருக்கு சிறைத்தண்டனை கூட வாங்கித் தர முடியும். பாதிக்கப்பட்ட பெண்தான் குற்றவியல் நடவடிக்கை எடுக்கக் கோர வேண்டும் என அவசியமில்லை.

பணி புரியும் இடத்தில் இக்குற்றம் நிகழ்த்தப்பட்டிருந்தால் அந்த நிர்வாகமே இதை குற்றவியல் நடவடிக்கைகளுக்கு எடுத்துச் செல்ல முடியும். முன்பு இலை மறை காய் மறையாக பாலியல் சீண்டல் இருந்து வந்திருக்கிறது. ஆனால் இதை எதிர்க்கும்போது வேலை போய்விடும். இதனால் வருவாய் இழப்பு நேரிடும் அபாயம் இருந்ததால் கட்டாயத்தின் பேரில் பல பெண்கள் சகித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் இப்போது அப்படியான கட்டாயம் இல்லை. தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்குபவர் உயர் அதிகாரியாக இருந்தாலும் பயப்படவே தேவையில்லை. சட்ட ரீதியாக நியாயமான தீர்வை எட்ட முடியும்.

இச்சட்டத்தின்படி ஒவ்வொரு அரசு மற்றும் தனியார் நிறுவன அலுவலகங்களிலும் பாலியல் அத்துமீறலை கண்காணிப்பதற்கென ஒரு விசாரணை கமிட்டி அமைக்க வேண்டும். அந்த அலுவலகத்திலேயே மூத்த பெண் அலுவலர் அந்த கமிட்டிக்கு தலைமை வகிக்க வேண்டும். அவர் பெண்களின் முன்னேற்றம் குறித்த கருத்துகளைக் கொண்டிருப்பவராக இருக்க வேண்டும். நிர்வாகத்துக்குத் தொடர்பில்லாத மூன்றாம் நபர் அக்கமிட்டியில் இடம்பெற வேண்டும். அந்த நபருக்கு சட்டப் பரிட்சயம் இருக்க வேண்டும். அவர் நிர்வாகத்துக்கு சார்பானவராக இருக்கக் கூடாது. பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண் பணியாளர் இக்கமிட்டியிடம் புகாரை எடுத்துச் செல்லலாம். அவர் கொடுக்கும் புகார் உண்மையா என்பதை விசாரணையின் மூலம் அக்கமிட்டி கண்டறியும்.

அதன் பிறகு இந்த கமிட்டி என்ன முடிவு எடுக்கிறதோ அதை நிர்வாகம் ஏற்றுக் கொள்ள வேண்டும். குடியுரிமை அளவிலான நடவடிக்கைகளை இக்கமிட்டி மேற்கொள்ளும். குற்றவியல் சார்ந்த நடவடிக்கைக்கு காவல் நிலையத்தில் புகாரளிக்க வேண்டும்.தீண்டுதல், தீண்டுவதற்கான முயற்சி, ஆபாசப்படங்களைக் காட்டு தல், பாலியல் உறவுக்கு இணங்க கட்டா யப்படுத்துதல், கோரிக்கை வைத்தல், குறிப்பு ணர்த்தும்படியாக பேசுதல், பாலியல் ரீதியிலான வார்த்தைகளோ, வார்த்தைகளற்ற அனைத்துமே பாலியல் வன்முறைதான் என்று 1996ம் ஆண்டு வெளியான விசாகா தீர்ப்பு கூறுகிறது. இதற்காக தனிச்சட்டம் வரும் வரை இத்தீர்ப்பை சட்டமாக நடைமுறைப்படுத்தலாம் என்று கூறப்பட்டது. பெயரளவில் விசாகா கமிட்டி என்கிற பெயரில் விசாரணை கமிட்டி இருந்தது. ஆனால் இப்போது சட்டமாக்கப்பட்ட பின் கட்டாயமாகியிருக்கிறது.

முதலில் இது குறித்த விழிப்புணர்வை பரவலாக எடுத்துச் செல்ல வேண்டும். இந்த விசாரணை கமிட்டியில் யாரெல்லாம் இருக்கிறார்கள் எனத் தெரியப்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்டவர் குறித்த ரகசியம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றெல்லாம் இச்சட்டம் கூறுகிறது. ஆனால் பெரும்பாலான அலுவலகங்களில் இந்த கமிட்டி பெயரளவில்தான் இருக்கிறது. இது போன்ற பாலியல் புகார்களை மூடி மறைக்கப் பார்க்கிறார்கள். இதன் மூலம் நிறுவனத்துக்குப் பொருளாதார ரீதியாக நட்டம் ஏற்படும் என்று கருதுகிறார்கள். இதனால் பெரும் அலட்சியப்போக்கு கடைபிடிக்கப்படுகிறது.

இச்சமூகத்தில் பெண்ணுக்கு எதிரான மனநிலை பரவலாக இருக்கிறது. ஒரு தவறு நடந்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தூண்டுதல் இல்லாமல் நடந்திருக்காது என்று சொல்லி பாதிக்கப்பட்டவரையே குற்றவாளி ஆக்குகிறோம். இந்த மன நிலையில் மாற்ற வேண்டும். இச்சட்டம் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. ஏனென்றால் இது போன்ற துன்புறுத்தலில் ஈடுபடுபவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் இருந்த நிலை இன்று மாறியிருக்கிறது. இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்கிற நிலை உருவாகியிருக்கிறது.ஆனால் இச்சட்டம் நடை முறைப்படுத்தப்படுவதில் பல போதாமைகள் இருக்கவே செய்கின்றன. பாதிக்கப்பட்டவர்கள் முன் வந்து புகாரளிக்கும்படியான நம்பிக்கையான சூழலை உருவாக்க வேண்டும். இது போன்ற புகார்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுப்பதன் மூலமே அந்த நம்பிக்கை உருவாகும்.

இச்சட்டம் பற்றி எல்லோருக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்று சட்டத்தின் ஒரு பிரிவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பாலியல் ரீதியான புகார்களுக்கான விசாரணை கமிட்டி அமைக்காத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கலாம் என்று இச்சட்டம் கூறுகிறது. மற்ற சட்டங்களைப் போலவே இதுவும் ஓர் சிறப்பான சட்டம்தான். ஆனால் அது பெயரளவில் இல்லாமல் முறையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அதற்கு அரசுக்கு உள்ள கடமையை அரசு உணர வேண்டும்’’ என்கிறார் அஜிதா.

பாலியல் அத்துமீறல்களை பெண்கள் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும்? பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண் எதிர்கொள்ளும் உளவியல் பிரச்னைகள் எப்படிப்பட்டவை என்று மன நல மருத்துவர் ஜெயக்குமாரிடம் கேட்டேன்…

‘‘இன்றைய சமூக சூழல் பாதிக்கப்படும் பெண்ணுக்கு ஆதரவானதாக மாறிக் கொண்டு வருவது ஆரோக்கியமானது. இதைப் பற்றிய விழிப்புணர்வு இன்றைக்கு அதிகரித்திருக்கிறது என்றாலும் அது இன்னமும் பரவலாக்கப்பட வேண்டும். இன்றைக்கும் இது போன்ற துன்புறுத்தலை, அத்துமீறலை வெளியில் சொல்ல முடியாமல் தனக்குள்ளாகவே வைத்துக் கொள்ளும் பெண்கள் அதிகம் இருக்கிறார்கள். இது போன்ற வன்முறைகளுக்கு ஆட்படுகிறவர்கள் மன அழுத்தத்துக்கும், குழப்பத்துக்கும் ஆளாவார்கள். இந்த வன்முறையை சகித்துக் கொள்வதா அல்லது எதிர்ப்பைத் தெரிவிப்பதா என்கிற குழப்பம் அவர்களுக்கு இருக்கும். முதலில் இது வன்முறைதானா என்பதை அவர்கள் உணரவே சில காலம் தேவைப்படும். இந்த வன்முறையை எதிர்கொள்ள முடியாமல் நிறைய பேர் பணியிலிருந்து விலகி விடுவார்கள். சிலருக்குத் தற்கொலை எண்ணம் ஏற்பட்டு தற்கொலை செய்து கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது. Post Traumatic Stress Disorder என்று சொல்லப்படும் பேரழிவிலிருந்து மீண்டு வந்தவர்களின் மனப் பிரச்னைக்கு நிகராகவும் ஆளாகலாம்.

பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருந்தே இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெற்றோருக்கும் இது குறித்த விழிப்புணர்வு தேவைப்படுகிறது. அனைவரிடமும் சரியான முறையில் கம்யூனிகேட் செய்ய வேண்டும். வன்முறைக்கு ஆளாக்கப்படுகிறோம் என்பதை உணர்ந்தால் அதனை துணிச்சலாக எதிர்கொள்ள வேண்டும். தன்னிடம் ஒருவர் இப்படியாக நடந்து கொள்வதைத் தான் விரும்பவில்லையென்றால் அதை அவரிடம் வெளிப்படுத்தி விட வேண்டும். தனி மனிதராக மட்டும் இதனை எதிர்கொள்ள முடியாது. அதற்கு சட்டம் மற்றும் அமைப்புகளின் உதவியும் தேவை. அதற்கான சாத்தியங்கள் இப்போது அதிகரித்திருக்கின்றன. என்பதால் பிரச்னையை வெளிப்படுத்தும் மன நிலைக்கு அனைவரும் தயாராக வேண்டும். தவிர பெண்கள் இச்சட்டத்தை தனிப்பட்ட காழ்ப்புக்காக தவறாக பயன்படுத்தி விடக்கூடாது’’ என்கிறார் ஜெயக்குமார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்தியா ஊடாக இலங்கைக்கு ஹெரோய்ன் கடத்த முற்பட்டவர் கைது!!
Next post பிரபல சீரியல் நடிகை ஸ்ரீ வித்யா தற்போதைய நிலை!!(வீடியோ)