ரத்த சோகையை சரி செய்யும் உணவுகள்!!(மருத்துவம்)

Read Time:11 Minute, 48 Second

பரவலாக அதிகரித்துவரும் பிரச்னையாக ரத்தசோகை உள்ளது. ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக ஏற்படும் இந்த ரத்தசோகை உடனடியாக கவனிக்க வேண்டிய குறைபாடாகவும் இருக்கிறது.

உடனடியாகவோ, மேலோட்டமாகவோ தெரியாதது என்பதால் பலருக்கும் இதுபற்றி இன்னும் போதுமான விழிப்புணர்வு இல்லை. அதிலும் பெண்களை பெருமளவில் பாதிக்கக் கூடியது என்பதால் ரத்தசோகை பற்றியும், அதனை உணவின்மூலம் நீக்கும் முறைகள் பற்றியும் இந்த இதழில் கற்றுக் கொள்வோம்…

நாம் உயிர்வாழ ரத்தத்தில் சிவப்பு வட்ட அணுக்கள் தேவை. இந்த சிவப்பணுக்களுக்குள் உள்ள புரதமே ஹீமோகுளோபின் ஆகும். இந்த ஹீமோகுளோபின்தான் ரத்தத்தில் ஆக்சிஜனைக் கடத்தி உடலுக்கு சக்தியைத் தருகிறது. ஹீமோகுளோபினின் எண்ணிக்கை குறைந்தால் உடலில் இருக்கும் செல்களுக்கு ஆக்ஸிஜன் கிடைக்காது. இதனால் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படும் நிலையினையே ரத்தசோகை(Anemia) என்கிறோம்.

சத்தான உணவு உண்ணாததன் காரணமாகவே பெரும்பாலும் ரத்த சோகை ஏற்படுகிறது. குறிப்பாக, உணவில் வைட்டமின் பி12 போதுமான அளவு கிடைக்காதது, அடிக்கடி கர்ப்பம் தரிப்பது மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் சத்தான உணவு உட்கொள்ளாமல் இருப்பது, அறுவை சிகிச்சை மற்றும் விபத்து போன்ற காரணங்களால் உடலிலிருந்து அதிக ரத்த இழப்பு ஏற்படுவதால் ரத்தசோகை உண்டாகும்.

ரத்தசோகையின் அறிகுறிகள்

அசதி, சோர்வு, தூக்கம் வருதல், மாடிப்படி ஏறும்போது மூச்சு வாங்குதல், அன்றாட வேலைகளை செய்யவும் சிரமப்படுவது, முகம் வெளிறி காணப்படுதல், கண்களின் வெண்மைப்பகுதி வெளிறிப்போய் இருப்பது, மார்பு படபடப்பு, நெஞ்சு வலி, நகம் வெளிறிப்போய் இருப்பது மற்றும் முக வீக்கம், தலை சுற்றுதல், மூச்சு விடுவதில் சிரமம், தலைவலி, சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் கோபப்படுதல் போன்ற அறிகுறிகள் தென்படும்.இரும்புச்சத்துள்ள உணவுகளைப் போதுமான அளவில் சேர்த்துக் கொள்ளும்போது ரத்தசோகையை வென்றுவிட முடியும். இந்த இரும்புச்சத்து உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சி, கல்வித்திறன் ஆகியவற்றுக்கு மிகவும் இன்றியமையாதது.

ஆட்டு ஈரல், ஆட்டு இறைச்சி, ஆட்டு சிறுநீரகம், ஆட்டுக்கறி, ஆட்டு ரத்தம், கோழிக்கறி, மீன் மற்றும் முட்டை போன்ற அசைவ உணவுகளில் இரும்புச்சத்து அபரிமிதமாக கிடைக்கிறது. கீரை வகைகள், பயறுவகைகள், ராஜ்மா, பட்டாணி, உலர்ந்த பழங்கள்(Dry fruits), கொட்டை வகைகள், விதைகள், தானியங்கள் போன்ற சைவ உணவுகளிலும் இரும்புச்சத்து நிறைந்து இருக்கிறது.

இரும்புச்சத்து கிடைப்பதற்கான வழிமுறைகள்

* இரும்புச்சத்து முழுமையாக கிடைக்க வைட்டமின் சி உதவுகிறது. ஆகையால் எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி, கொய்யா போன்ற பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

* காபி, டீ அருந்தக் கூடாது. அவை இரும்புச்சத்து கிடைப்பதை தடுத்துவிடுகிறது. எனவே, இவற்றை உணவுடன் உட்கொள்வதைத் தவிர்க்கவும்.

ரத்த சோகையை நீக்கும் நான்கு உணவுகளும், அதன் செயல்முறையும் இங்கே கொடுக்கப்பட்டிருக்கின்றன. ரத்தசோகை குறைபாடு கொண்டவர்கள் இந்த உணவுகளை அடிக்கடி சேர்த்துக் கொள்வது நல்லது.

ராகி கீரை குழி பணியாரம்

தேவையான பொருட்கள்

ராகி மாவு – 1 கப், கோதுமை மாவு – 1 கப், பலகார சோடா – 1 சிட்டிகை,
கடுகு – ¼ டீஸ்பூன்,
பெருங்காயம் – 1 சிட்டிகை அளவு,
கறிவேப்பிலை – சிறிதளவு,
சின்ன வெங்காயம் – 2,
பச்சை மிளகாய் – 2,
கீரை – 1 கப், உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – தேவையான அளவு.

எப்படி செய்வது?

* முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம், சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
* அத்துடன் கீரையைச் சேர்த்து வதக்கவும். 7-8 நிமிடம் வதக்கவும். பச்சை வாசனை போனவுடன் அதை அடுப்பில் இருந்து
இறக்கிவிட வேண்டும்.
* ஓர் அகன்ற பாத்திரத்தில் கோதுமை மாவு, ராகி மாவு, பலகார சோடா சேர்த்து அத்துடன் இந்த வதக்கிய கீரை கலவையை சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு (Thick batter) தோசை மாவு பதத்தில் கலக்கிக் கொள்ளவேண்டும்.
* இந்த கலவையை 30 நிமிடம் தனியாக மூடி வைக்க வேண்டும்.
* அடுப்பில் பணியாரக்கல் வைத்து சூடுபடுத்தவும். பின்பு பணியாரக்கல் குழிகளில் எண்ணெய் ஊற்றி இந்த மாவை அதில் ஊற்றி 2 நிமிடம் வேக விடவும். ஒருபக்கம் மொறுமொறுப்பாக வந்தவுடன் அதைத் திருப்பி விட்டு, 2 நிமிடம் வேக விடவும்.
* அதை சூடாக இறக்கி பரிமாறவும்.

மட்டன் லிவர் டிக்கா (Mutton Liver Tikka)

தேவையான பொருட்கள்

மட்டன் ஈரல் – 200 கிராம்,
வெங்காயம் – 2, பூண்டு – 6 பல்,
இஞ்சி – 20 கிராம், பச்சை மிளகாய் – 1, தக்காளி – 1, குடை மிளகாய் – 1,
சோம்பு – ¼ டீஸ்பூன், மிளகு – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய்த்தூள் – ½ டீஸ்பூன்,
தனியாத்தூள் – ½ டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன்,
எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
எண்ணெய் – தேவையான அளவு.
டூத்பிக் (Tooth pick) – தேவைப்படும்
எண்ணிக்கையில்.

செய்முறை

* மட்டன் ஈரலை சுத்தம் செய்ய வேண்டும். அதில் மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக சுத்தம் செய்யவும். பின்பு அதில் தண்ணீர் விட்டு 5 நிமிடம் வேக விடவும்.
* வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், மிளகு சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும்.
* ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடான பின்னர், அதில் அரைத்த விழுதை சேர்க்கவும். வேக வைத்த மட்டன் ஈரலை அதனுடன் சேர்த்து மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு சேர்த்து கிளறவும். சுருள வதங்கியவுடன் இறக்கி விடவும்.
* தோசைக்கல்லில் எண்ணெய் சிறிதளவு விட்டு, அதில் சதுர வடிவில் கட் செய்த தக்காளி, வெங்காயம், குடை மிளகாய் சேர்த்து இரண்டு பக்கமும் லேசாக வேக விடவும்.
* குச்சியில் ஒரு தக்காளி துண்டு, லிவர், வெங்காயத்துண்டு, குடை மிளகாய் துண்டு சொருகி வைத்து பரிமாறவும்.

Garden cress Balls

தேவையான பொருட்கள் :

ஆளி விதை (Flax seeds) – 150 கிராம்,
வெல்லம் – 50 கிராம்,
ஏலக்காய் தூள் – ¼ டீஸ்பூன்,
பாதாம் – 7, திராட்சை – 7,
ரவை – 100 கிராம்,
நெய் – தேவையான அளவு.

எப்படி செய்வது?

* முதலில் ஆளி விதையை 3 – 4 மணி நேரம் தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும்.
* அடுப்பில் அடி கனமான பாத்திரத்தை வைத்து நெய் விட்டு சூடான பின்னர், அதில் ஊற வைத்த ஆளி விதையை தண்ணீரில் இருந்து எடுத்து, தண்ணீரை முழுமையாக வடித்து நெய்யில் 5 -10 நிமிடம் மிதமான சூட்டில் வதக்கவும்.
* பின்னர் அதில் வெல்லம் சேர்த்து நன்றாக கிளறவும்.
* வேறு ஒரு கடாயில் ரவையை லேசாக வறுத்து எடுக்கவும்.
* வறுத்த ரவையை ஆளி விதையுடன் சேர்த்துக் கிளறவும்.
* தேவைப்பட்டால் நெய் விட்டு சுருள வரும் வரையில் கிளறவும்.
* பின்னர் பொடித்த ஏலக்காய் தூள் தூவவும்.
* வேறு கடாயில் நெய் விட்டு பாதாம், திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
* அதை ஆளி விதையுடன் சேர்த்து கிளறி எடுக்கவும்.
* கையில் எண்ணெய் / நெய் தடவி சூடாக அதை கையில் பந்துகளாக (Balls) பிடிக்கவும்.

(10-15) நாட்கள் வரை அதை எடுத்து வைத்து உண்ணலாம்.

ஆட்டு ரத்த கொண்டைக்கடலை பொறியல்

தேவையான பொருட்கள்

ஆட்டு ரத்தம் – 1 கப்,
இஞ்சி, பூண்டு விழுது – ½ டீஸ்பூன், கொண்டைக்கடலை – 50 கிராம்,
வெங்காயம் – 2,
பச்சை மிளகாய் – 1,
சோம்பு தூள் – ¼ டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன்,
மிளகு தூள் – 1 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய்த்தூள் – ½ டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு,
கறிவேப்பிலை – சிறிதளவு,
எண்ணெய் – தேவையான அளவு.

எப்படி செய்வது?

* ஆட்டு ரத்தத்தை கழுவி சுத்தப்படுத்தி, பின்னர் தண்ணீர் விட்டு அதை ஐந்து நிமிடம் வேக விடவும்.
* வெந்தவுடன் அதை நன்றாக மசித்துக்கொள்ள வேண்டும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடான பின்னர், அதில் வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
* ஊற வைத்து வேக வைத்த கொண்டைக்கடலையை அதனுடன் சேர்த்து வதக்கவும். அதனுடன் ஆட்டு ரத்தத்தையும் சேர்க்கவும்.
* அதில் சோம்பு தூள், மஞ்சள் தூள், மிளகு தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
* பின்னர் அதை சூடாக பரிமாறவும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடிகையின் உச்சக்கட்ட கவர்ச்சி புகைப்பட காலேண்டர்… !!( சினிமா செய்தி)
Next post கர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்!!(மகளிர் பக்கம்)