வெளியூரில் கைப்பை தொலைந்தால்…!!(மகளிர் பக்கம்)
வெளியூருக்கு சென்று, அங்கு திடீரென ஏ.டி.எம். கார்டு உட்பட பணப்பையை கணவரோ அல்லது மனைவியோ, வேலை விஷயமாகச் சென்ற மகனோ, மகளோ தொலைத்து விட்டால் அவர்களுக்கு நாம், நம் இருக்குமிடத்திலிருந்தே உதவ இதோ ஓர் வழி…அருகில் உள்ள ஏதாவது ஒரு பெரிய தபால் நிலையத்திற்குச் செல்ல வேண்டும். அங்கே போய் IMO (Instant Money Order) அனுப்ப வேண்டும் என்று சொல்ல வேண்டும். விண்ணப்பத்தில் பெறுநர், அனுப்புநர் விவரம் மற்றும் அனுப்ப விரும்பும் தொகை மூன்றையும் நிரப்பி பணத்தை செலுத்தினால், ஒரு சீல் செய்யப்பட்ட கவரை நம்மிடம் தருவார்கள். வெளியே வந்து அந்தக் கவரைப் பிரித்தால் உள்ளே ஒரு பதினாறு இலக்க எண் இருக்கும். அந்த நம்பரை, வெளியூரில் எல்லாவற்றையும் தொலைத்து விட்டு தவித்துக் கொண்டிருக்கும் நபருக்கு, அந்த பதினாறு இலக்க எண்ணை எஸ்.எம்.எஸ் செய்ய வேண்டும். அந்தக் கவரை நம்மிடம் கொடுத்த தபால் இலாகா ஊழியருக்கே அந்த நம்பர் தெரியாது. அந்த எண் அவ்வளவு ரகசியமாக பாதுகாக்கப்படுகிறது.
நாம் எஸ்.எம்.எஸ் செய்த எண்ணை தொலைத்த நபர், அந்த ஊரிலுள்ள பெரிய தபால் நிலையத்திற்கு சென்று அங்குள்ள விண்ணப்பத்தில் இந்த பதினாறு இலக்க எண்ணை எழுதிக் கொடுத்தால், உடனே பணம் கொடுக்கப்படும்.ரூ.1000 முதல் ரூ.50,000 வரை அனுப்பலாம். இது ‘வெஸ்டர்ன் யூனியன் மணி டிரான்ஸ்ஃபர்’ (Western Union Money Transfer) போல தானேன்னு எல்லோரும் கேட்பார்கள். ஆனால் ‘வெஸ்டர்ன் யூனியன்’ கிளைகள் இல்லாத இடங்களிலும் அஞ்சல் துறை அலுவலகம் உள்ளது.இந்த சேவை இந்தியா முழுவதும் சுமார் 40,000 இடங்களில் உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 1,500 கிளைகளில் இந்த சேவை கிடைக்கும்.
Average Rating