திருநங்கைகளுக்கு தனி மருத்துவமனைகள் தேவையா?(மகளிர் பக்கம்)

Read Time:11 Minute, 48 Second

திருநங்கைகளுக்கு தனி மருத்துவமனைகள் மற்றும் சிறப்புப் பிரிவும் தொடங்கப்பட உள்ளது என்று தமிழ்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அறிவித்திருக்கிறார். இக்கட்டான சூழலில் சட்ட போராட்டத்தின் மூலம் திருநங்கைகள் தங்களுக்கான உரிமைகளை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும் போது திருநங்கை சமூகத்தை சார்ந்தவர்களின் முன்னேற்றம் தமிழகத்தில் அதிகரித்திருக்கிறது என்கிறது புள்ளி விவரம். ஆனால் திருநங்கை, திருநம்பிகளுக்கான சிகிச்சை முறையில் தமிழகம் பின் தங்கி இருக்கிறது என்பதுதான் இங்கு உள்ளவர்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது. இந்த சூழலில் அமைச்சரின் இந்த அறிவிப்பு குறித்து சிலர் தங்களுடைய கருத்துகளை பகிர்ந்துகொண்டனர்.

கிரேஸ் பானு

‘‘அனைத்து திருநங்கைகளும் இந்த சமூகத்தோடு ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம். இந்தச் சூழலில் எங்களுக்கு தனி மருத்துவமனை, தனி கழிவறை, தனி நீதிமன்றம் இப்படி தனித்தனியாக ஒதுக்குவது என்பது இந்த சமூகத்தில் இருந்து எங்களை பிரித்தாளும் சூழ்ச்சியாகத்தான் நான் பார்க்கிறேன். உச்ச நீதிமன்ற தீர்ப்பு அனைத்து துறைகளிலும் திருநங்கைகளை அனுமதிக்க வேண்டும் என்று கூறுகிறது. அவர்களை தனியாகப் பிரித்து பார்க்கவேண்டும் என்று சொல்லவில்லை.

திருநங்கைகளுக்காக தனி மருத்துவமனை அமைப்பதில் உடன்பாடில்லை என்றாலும், இத்தனை நாட்கள் வாய் திறக்காதவர்கள் இன்று திருநங்கைகள் குறித்து பேசுகிறார்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் இங்கு ஏற்கன‌வே இருக்கின்ற பிரச்சனைகள் குறித்து நாம் பேசவேண்டியிருக்கிறது. இன்றைக்கு திருநங்கை, திருநம்பிகளுக்கான மருத்துவ சிகிச்சை என்பது இந்தியாவிலேயே இல்லை. அனைவரது உடலையும் சோதனை எலி போல பார்க்கிறார்கள். தாய்லாந்து போன்ற நாடுகளில் மாற்றுப் பாலின அறுவை சிகிச்சை அந்தந்த துறையின் நிபுணர்களை கொண்டு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இங்கு இது போன்ற எந்த மருத்துவர்களும் கிடையாது. தனி மருத்துவமனைகளை கொண்டு வருவது ஒரு பக்கம் இருந்தாலும், அந்த மருத்துவமனையில் இந்த சிகிச்சை முறையில் அனுபவமிக்க மருத்துவர்கள் இருக்க வேண்டும். மாற்று பாலின அறுவை சிகிச்சையை அரசு பொது மருத்துவமனைகளில் இலவசமாக செய்து கொள்ளலாம் என்று ஏற்கனவே தமிழ்நாடு அரசு ஒரு அரசாணை வெளியிட்டது.

ஆனால் இலவசமாக அறுவை சிகிச்சை செய்கிறோம் என்பதற்காக மிக மோசமான சூழலில் அறுவை சிகிச்சைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன‌. இதனால் உடலில் பிரச்சனைகள் ஏற்படுகின்றன‌. இங்கு ஹார்மோன் தெரபி, அறுவை சிகிச்சைக்கு தனி நிபுணர்கள் இல்லை. தமிழ்நாடு மருத்துவத்தில் சிறந்து விளங்கினாலும் கூட மாற்றுப் பாலின அறுவை சிகிச்சை நிபுணர்கள் இல்லை என்பது வேதனைக்குரிய ஒன்று. திருநங்கைகள் குறித்து புரிதல் உள்ள சிறந்த மருத்துவர்கள் இங்கு தேவை.

இங்கு இருக்கக்கூடிய மனநல மருத்துவர்கள் கூட இது ஒரு மன நோய் என்றுதான் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அப்படித்தான் இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு உலக சுகாதார நிறுவனம் இது அவர்களின் பாலின அடையாளத்தில் வரும் என்று கூறி மன நோய் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டனர். இப்படியான விழிப்புணர்வும் மருத்துவர்களுக்கு வேண்டும். இதை எல்லாம் செய்தால்தான் இந்தத் திட்டங்கள் பலனளிக்கும். அதுதான் முழுமையான திட்டமாக இருக்கும்.’’

பிரியா பாபு

‘‘அமைச்சர் கூறியிருக்கும் சிறப்புப் பிரிவு என்பது வரவேற்கத்தக்க ஒன்று. திருநங்கைகளுக்காக அமைக்கப்படும் சிறப்புப் பிரிவு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து சில கோரிக்கைகளை நாங்கள் முன்வைக்கிறோம். திருநங்கைளுக்கான சிறப்புப் பிரிவுகளில் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் முதல் மருத்துவ ஊழியர்கள் வரை திருநங்கைகள் குறித்து நல்ல புரிதல் இருக்க வேண்டும். ஏனென்றால் திருநங்கைகள் என்றால் முழுமையான பெண் தோற்றத்தில் இருப்பார்கள் என்று சொல்ல முடியாது.

அறுவை சிகிச்சைக்கு முன் இருப்பவர்களும் அறுவை சிகிச்சைக்கு பின் இருப்பவர்களும் உண்டு. அதை பற்றிய முழுமையான புரிதல் பணியாளர்களுக்கு இருக்க வேண்டும். திருநங்கைகளுக்கான பாலின மாற்று அறுவை சிகிச்சை என்பது வெறும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மட்டும் அல்ல. முழுமையாக தன்னை பெண்ணாக மாற்றிக்கொள்ளக்கூடிய சிகிச்சை ஆகும். தேவையற்ற ரோமங்களை அகற்றுவதற்காக லேசர் தெரபி, எலக்ட்ரோலைஸ், குரல் மாறுவதற்கான வாய்ஸ் தெரபி, மார்பகங்களுக்கான சிகிச்சை, இவை அனைத்தையும் உள்ளடக்கியதுதான் பாலின மாற்று அறுவை சிகிச்சை.

இதற்கான அனுபவமுள்ள மருத்துவர்கள் சிறப்புப் பிரிவில் இருக்க வேண்டும். பாலின மாற்று அறுவை சிகிச்சை முடிந்த பிறகு அதற்கான சான்றிதழ் வழங்க வேண்டும். இந்த சிறப்புப் பிரிவில் மருத்துவத்துறையில் இருக்கும் திருநங்கைகளை அதில் இடம்பெற செய்ய வேண்டும். இந்தப் பிரிவில் திருநங்கை ஒருவர் பணியாற்றும்போது திருநங்கைகள் தங்களுடைய பிரச்சனைகளை சொல்லி அணுகுவதற்கு எளிமையாக இருக்கும். நல்ல அனுபவமுள்ள முழுமையான பாலின மாற்று அறுவை சிகிச்சை அளிக்கக்கூடிய மருத்துவர்கள் இடம் பெற வேண்டும்.

மாற்று அறுவை சிகிச்சைக்காக வெளி மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய சூழல் இருக்கிறது. அரசு மருத்துவமனைகளில் இந்த முழு பாலின மாற்று சிகிச்சை கிடைக்குமாறு செய்ய வேண்டும். திருநங்கைகளை இந்தப் பிரிவில் பணியமர்த்துவதன் மூலம் திருநங்கைகள் பலரும் மருத்துவத்துறையை தேர்ந்தெடுத்து படிக்கும் வாய்ப்புகள் அதிகரிக்கும். இந்தியாவிலே மூன்று திருநங்கைகள் அரசு மருத்துவமனையில் வேலை பார்க்கிறார்கள் என்ற பெருமை தமிழகத்திற்கு உண்டு. தற்போது இரண்டு பேர் மருத்துவத்திற்கு படிக்கிறார்கள். அவர்களை இது போன்ற சிறப்புப் பிரிவுகளில் பணியில் அமர்த்த வேண்டும்.’’

சங்கரி

‘‘திருநங்கைகளுக்கான தனி மருத்துவமனைகள் வருவது என்பது வரவேற்கத்தக்க ஒன்றுதான். இதுவரை வேறெங்கும் இது போன்ற மருத்துவமனைகள் இல்லை. தனி மருத்துவமனைகள் எதற்கு என்றால் திருநங்கைகளுக்கான சிகிச்சை முறை என்பது ஆண், பெண் சிகிச்சை முறையில் இருந்து மாறுபடும். குறிப்பாக சொல்ல வேண்டுமானால், மனநல ஆரோக்கியம், ஹார்மோன் சிகிச்சைகள், தன்னை பெண்ணாக மாற்றிக்கொள்ளக்கூடிய சிகிச்சைகள் இதில் அடங்கும்.

தரம் உயர்த்தப்பட்டு நல்ல நிலையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றால் சிறப்பு மருத்துவர்களும், மருத்துவமனைகளும் கட்டாயத் தேவையாக இருக்கிறது. உண்மையாக திருநங்கைகளுக்கு என்ன தேவை இருக்கிறது என்று தெரிந்துகொண்டு அதற்கேற்ற சிகிச்சையை தரமான முறையில் வழங்க வேண்டும். ஒரு திருநங்கை தான் இருக்கும் இடத்திலிருந்து அருகில் இருக்கும் அரசு மருத்துவமனையை அணுகினால் அங்கு திருநங்கை பற்றிய புரிதல் உள்ள மருத்துவர்கள் இருப்பார்கள். முறையான சிகிச்சை எங்களுக்கு கிடைக்கும்.

தனியார் மருத்துவமனைகளில் அப்படியான மருத்துவர்கள் இருப்பார்களா? அங்கு என்ன மாதிரியான சிகிச்சை எங்களுக்கு கிடைக்கும் என்று தெரியாத போது, இந்த திட்டம் நிச்சயம் பலன் அளிக்கும் என்று நம்புகிறேன். திருநங்கைகளுக்கான தனி மருத்துவமனை எனும் போது அதில் திருநங்கை, திருநம்பி குறித்த புரிதல் உள்ள மருத்துவர்களைத்தான் கண்டிப்பாக பணியில் அமர்த்த வேண்டும். இப்போது அரசு மருத்துவமனைகளில் இருக்கக்கூடிய சிகிச்சைபோல் இல்லாமல் உலகத்தரம் வாய்ந்த தரமான சிகிச்சையாக இருக்க வேண்டும். அப்படியான மருத்துவர்களை உருவாக்க வேண்டும்.’’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கெட்ட வார்த்தை பு…சு…கோ…ஓ…ப… !!( வீடியோ )
Next post களமிறங்கத் தயாராகும் இன்னுமோர் அணி!!(கட்டுரை)