களமிறங்கத் தயாராகும் இன்னுமோர் அணி!!(கட்டுரை)

Read Time:21 Minute, 30 Second

முஸ்லிம்களை மய்யப்படுத்தியதாகப் பல அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளும் சமூக இயக்கங்களும் இயங்கிக் கொண்டிருக்கின்ற போதிலும், உள்ளார்ந்த ஒற்றுமை என்பது கேள்விக் குறியாகவே இருக்கின்றது.

அத்தோடு, மேற்சொன்ன அரசியல்வாதிகளால் சமூகம் விரும்புகின்ற, மக்கள் நலனை மட்டும் இலக்காகக் கொண்ட, அரசியலைச் செய்ய முடியாமலும் போயிருக்கின்றமையும் நிதர்சனமாகும்.

பெரும்பான்மைக் கட்சிகளுடன் சங்கமிக்கும் அரசியல் தேவையில்லை என்றும், தமிழ்த் தேசிய அரசியலோடு இரண்டறக் கலந்து பயணிக்க முடியாது என்றும், தனித்துவ அடையாள அரசியலை முஸ்லிம் சமூகம் கட்டமைத்திருந்தது. பின்னர், ‘தாய்க் கட்சி’ சரியில்லை என்று, பல கட்சிகளை ஒன்றன் பின் ஒன்றாக உருவாக்கி இருக்கின்றது.

அதுபோதாது என்று, ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில், புதிதுபுதிதாகக் கட்சிகளும் அணிகளும் களத்துக்கு வருகின்றன. ஆனால், ஒட்டுமொத்தமாக முஸ்லிம் தனித்துவக் கட்சிகளாலோ, இணைக்க அரசியல் செய்கின்ற அரசியல்வாதிகளாலோ, முஸ்லிம்களின் அபிலாஷைகளை நோக்கிப் பயணிக்கவும் முக்கியத்துவம் மிக்க பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் முடியவில்லை.

தூய்மை அரசியல் பேசிக் கொண்டு, அரசியலுக்குள் வருகின்ற ஆளுமைகள் பலர், வழக்கமான சாக்கடை அரசியலையே கடந்து போக வேண்டியிருக்கின்ற காரணத்தால்…. அவர்கள், அதற்குள் புதைந்து போகின்றார்கள்; அவர்கள் மீதும் சேறு தெறித்து, அழுக்காக்கி விடுவதைக் காண முடிகின்றது.

பெரும்பாலான முஸ்லிம் அரசியல்வாதிகள்,சீர்குலைந்த பாரம்பரிய அரசியலில் மூழ்கியிருப்பதுடன், புதிய சிந்தனாவாதிகள், யதார்த்தபூர்வ அரசியலைக் கற்றுக் கொள்ளவும் சமாளிக்கவும் பெரும்பாடுபட வேண்டியிருக்கின்றது.

அதுமட்டுமல்லாமல், மாற்றுக் கலாசாரத்தை உருவாக்க வேண்டும் என்ற முனைப்புடன் களத்துக்கு வருகின்றவர்களை, மக்கள் கொள்கையளவில் மட்டுமே ஏற்றுக் கொள்கின்றனர்.

தாம் ஆதரவளிக்கும், ஆஸ்தான அரசியல்வாதிகளுக்கான ஆதரவை வாபஸ் பெற்று, இந்தப் புதியவர்களைத் தங்களது மாற்றுத் தலைவர்களாக, பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுப்பதற்கு, நீண்டகாலத்தை மக்கள் எடுத்துக் கொள்கின்றனர்.

இதற்குக் காரணம், முஸ்லிம் அரசியல்வாதிகளைப் போலவே மக்களும், அரசியலைப் பதவி, பணம், அபிவிருத்தி சார்ந்ததாக மட்டுமே நோக்குகின்ற, ஒரு பிற்போக்கான மனப்பாங்கு என்று கூறலாம்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்ட பின்னர், முஸ்லிம் வாக்காளப் பெருமக்களின் வாக்குகள், பிரதானமாக இரு கூடைகளுக்குள் விழுந்தன. ஒன்று, எம்.எச்.எம் அஷ்ரபின் கூடை; மற்றையது, பெரும்பான்மைக் கட்சிகளின் கூடை.

ஆனால், முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் மறைவைத் தொடர்ந்து, அக்கட்சியின் தலைவராக ரவூப் ஹக்கீம் பொறுப்பேற்ற பின்னர், தொடர்ச்சியாக இன்றுவரையும் உடைவுகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

எம்.எச். சேகு இஸ்ஸதீன், ஏ.எல்.எம். அதாவுல்லா, ரிஷாட் பதியுதீன் தொடங்கி, இன்று ஹசன்அலி வரையும், பல தடவை இக்கட்சியில் பிளவுகள் ஏற்பட்டிருந்தன. இவ்வாறு பிரிந்து வந்தவர்களை, உள்வாங்கியதாகப் புதிய காங்கிரஸ்களும் தனியான அணிகளும் உருவாகின.

அதேநேரத்தில், புதிய கலாசாரத்தைக் கட்டியெழுப்புதல் என்ற தாரக மந்திரத்தோடு, ‘நல்லாட்சிக்கான மக்கள் முன்னணி’ என்றொரு கட்சி நிறுவப்பட்டது. ஆனால், இந்த அரசியல் நிலைப்பாடுகள் எல்லாம், முஸ்லிம் அரசியலில் பிரிவினைக்கே வித்திட்டன.

முஸ்லிம் காங்கிரஸ் நிறுவப்பட்ட, ஆரம்ப காலத்தில் இருந்த ஒற்றுமையோ, சமூக சிந்தனையோ, பிற்காலத்தில் சிதைவடைந்து போயிற்று. கட்சிகளுக்கு இடையில், ஒற்றுமை இல்லாமல் போனதற்குப் புறம்பாக, ஒரே கட்சிக்குள்ளும் ஆளுக்காள் கழுத்தறுப்புகளும் காட்டிக் கொடுப்புகளுமாக, வெட்டுக்குத்துக் கலாசார அரசியலையே, அநேக முஸ்லிம் கட்சிகளுக்குள் காண முடிகின்றது.

இந்தப் பின்னணியோடு, கடந்த ஆறேழு வருடங்களாக, மூன்று கோஷங்கள் அல்லது கோட்பாடுகள் வலுப்பெற்று வருவதாகச் சொல்ல முடியும்.

முதலாவது, தமிழ்க் கட்சிகளுக்கு அன்று புலிகளும், இன்று சர்வதேசத் தமிழ்ச் சமூகமும் அழுத்தம் கொடுத்து வந்தது – வருவதுபோல, முஸ்லிம் கட்சிகளுக்கு வெளியில் இருந்து, அழுத்தம் கொடுக்கக் கூடிய ஓர் ‘அழுத்தக் குழு’ உருவாக வேண்டும் என்பதாகும்.

இரண்டாவது, முஸ்லிம் அரசியல்வாதிகளை வழிநடாத்தக் கூடிய, ‘புத்திஜீவிகள் குழு’ ஒன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும்.

மூன்றாவது, முஸ்லிம் கட்சிகளிடையே ‘ஒன்றிணைவு அல்லது ஒற்றுமை’ (கூட்டமைப்பு) உருவாக வேண்டும் என்பனவே, அந்தக் கருத்தியல்கள் ஆகும்.

இவ்வாறான ஒரு சூழலில், சில வருடங்களுக்கு முன்னர், ‘கிழக்கின் எழுச்சி’ என்றொரு கோஷம் உருப்பெற்றது. சமூக வலைத்தளத்தில், பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த இந்த எழுச்சி, ஓர் ஊடக சந்திப்பை நடாத்தியதைத் தொடர்ந்து, எல்லாம் ‘சப்’ என்று ஆகிப்போனது.

அதை, முன்னின்று நடாத்தியவர்களின் பின்புலங்களைப் பார்த்து, இதன் நோக்கங்கள் தொடர்பில், பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

அதன்பின், புத்திஜீவிகளின் அமைப்பொன்றை உருவாக்கும் முயற்சி, கிழக்கின் பல அரசியல்வாதிகளின் ஆசிர்வாதத்துடன் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், எதிர்பாராத விதமாக, முன்னாள் அமைச்சர் அதாவுல்லா, இந்தத் தொனிபொருளுக்கு உருவம் கொடுத்தார். ‘கிழக்கு அவையம்’ என்று ஒன்றை நிறுவினார்.

இந்த அவையம் சுயாதீனமான ஒரு புத்திஜீவிகள் அமைப்பாக காட்டப்பட்ட போதும், அதில் அங்கம் வகித்தவர்களை வைத்து, அதை ஒரு கட்சிசார்பான அமைப்பாகவே, மக்கள் அடையாளம் கண்டுகொண்டனர்.

அத்துடன், மேற்சொன்ன இரு அணிகளாலும், முஸ்லிம் அரசியல்வாதிகள் மீது, எவ்வித உள்நோக்கமும் இன்றி, அழுத்தம் கொடுத்து, அதன்மூலம் முஸ்லிம்களின் நீண்டகாலப் பிரச்சினைகள் தொடர்பிலான, அவர்களின் போக்கை மாற்றியமைக்க முடியாமல் போய்விட்டது.

இவ்வாறான ஒரு சூழலிலேயே, முஸ்லிம் கூட்டமைப்பு நிறுவப்பட்டது. முஸ்லிம் கட்சிகள் எல்லாம், மக்கள் நலன்சார்ந்த அடிப்படையில், ஒரு குடையின் கீழ் வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு, முஸ்லிம் மக்களுக்கு நீண்டநாட்களாகவே இருந்து வருகின்றது.

ஆயினும், பூனைக்கு மணிகட்டுவது யார் என்ற பிரச்சினை இருந்தது. ‘நாம் அவருடன் சேர்வதா’ என்ற கௌரவம் ஒவ்வொருவரையும் தடுத்தது. அதையும் தாண்டி, ஒரு கூட்டமைப்பை உருவாக்குவதற்கான களநிலை உருவானது.

எல்லாக் கட்சிகளும் இணைந்தாலேயே, அது முழுமையான ஒற்றுமையாகவும் அர்த்தமுள்ள கூட்டமைப்பாகவும் இருக்கும் என்பது உண்மையென்றாலும், அதற்கான நிகழ்தகவுகள் இல்லாத நிலையில், இரு கட்சிகள் இணைந்து, ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு பிரகடனப்படுத்தப்பட்டது.

ஆயினும், தேர்தல்காலத்தில் இருந்த வேகம் இப்போது இல்லை. கூட்டமைப்பால் பிரகடனப்படுத்தப்பட்ட 12 கொள்கைப் பிரகடனங்களையும் நிறைவேற்றி, அது தொடர்பாக மக்களுக்கு ஏற்பட்ட எதிர்பார்ப்பை நிவர்த்தி செய்யும் போக்குகளைப் பெரிதாகக் காண முடியவில்லை. இப்படியே போனால், இந்தக் கோட்பாடும் தூர்ந்து போய்விடலாம்.

எனவே, மீண்டும் பழைய கோஷங்கள் வலுப்பெறும் சாத்தியங்கள் உள்ளன. குறிப்பாக, முஸ்லிம் கட்சிகளை வழிப்படுத்துவதற்கு ஆளுமையுள்ள புத்திஜீவிகள் அமைப்பொன்று, ஓர் அழுத்தக் குழுபோல இயங்க வேண்டும் என்ற தேவை, தொடர்ந்தும் உணரப்பட்டே வருகின்றது.

இந்நிலையில், எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில், கிழக்கை மய்யப்படுத்தியதாக ஒரு புதிய அணி, முஸ்லிம் அரசியல் ஆடுகளத்தில் குதிக்கவுள்ளதாகத் தகவல்கள் கசிந்திருக்கின்றன.

தற்போது கதிரைகளைச் சூடாக்கிக் கொண்டிருக்கின்ற முஸ்லிம் கட்சித் தலைவர்கள், மந்திரிகள், அரை மந்திரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரை உள்ளடக்கிய முஸ்லிம் அரசியல்வாதிகளை, (நேரடி அரசியலுக்குள் வராமல்) வெளியில் இருந்து வழிப்படுத்துகின்ற புத்திஜீவிகள் மற்றும் கற்றறிந்ததொரு குழுவொன்று தேவை என்ற நிலைப்பாடே, இதுவரை இருந்தது.

ஆனால், இப்போது அந்தப் புத்திஜீவிகள் என்ற தரப்பினரே, நேரடியாக அரசியலுக்குள் குதிக்கவுள்ளனர் என்பதுதான், சில அரசியல்வாதிகளுக்கு அதிர்ச்சியளிக்கும் தகவலாக உள்ளது.

அதாவது, தவறான அரசியல் பழக்க வழக்கங்களில் ஊறிய தற்காலத்து முஸ்லிம் அரசியல்வாதிகளை வழிப்படுத்த முடியாது என்பதுடன், அதைத் தனியான ஒரு வழியிலேயே முன்னெடுக்க வேண்டும் என்பதே, இந்தப் புத்திஜீவிகள் என்பவர்களின் பார்வைக் கோணமாக இருக்கின்றது.

கடந்த சில வருடங்களாக, அரசியல், சமூகச் செயற்பாட்டாளராக இருந்து வருகின்ற கிழக்கைச் சேர்ந்த வைத்தியர் ஒருவரைப் பிரதானமாகக் கொண்டு, தலைநகர் உட்பட, நாட்டின் பல பாகங்களையும் சேர்ந்த புலமையாளர்களை உள்ளடக்கியதாக, இவ்வணி கட்டமைக்கப்பட்டு வருகிறது. அடுத்த தேர்தலில் போட்டியிடுவதற்கான கலந்தாலோசனைகள், மந்திராலோசனைகள் கொழும்பில் இடம்பெற்று வருவதாகவும் அறியக் கிடைக்கின்றது.

ஊழல் இல்லாத, வெளிப்படைத் தன்மையான, கறைபடியாத புதிய அரசியல் கலாசாரம் ஒன்றை உருவாக்குவதே, இந்த அணியின் நோக்கமாக இருக்கும் என்று, விடமயறிந்த முக்கியஸ்தர் ஒருவர் கூறினார்.

முஸ்லிம்களின் அபிலாஷைகள், நீண்டகால மற்றும் குறுங்கால அடிப்படையில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்கான கொள்கைத் திட்டத்தை வகுத்து, அதன்படி ஓர் அங்குலமும் பிசகாமல், இந்த அணி பயணிக்க வேண்டும் என்பது, அவர்களுடைய தாரக மந்திரமமாம்.

இவ்வணி பொருத்தமான அறிவாளிகள், புத்திஜீவிகளை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இவ்வணியுடன் கொள்கை, கோட்பாட்டு அடிப்படையில் சேர்ந்தியங்க விரும்பும் ஆளுமைகளுக்கு விரைவில் அழைப்பு விடுக்கப்படலாம் என்றாலும், பொருத்தமற்ற யாரையும் எக்காரணத்துக்காகவும் உள்வாங்குவதில்லை என்ற நிலைப்பாட்டில் இவ்வணி இருப்பதாகச் சொல்லப்படுகின்றது.

நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்ற மாகாண சபைத் தேர்தலில், குறிப்பாகக் கிழக்கு மாகாணத்திலும் சில வேளைகளில் வேறுசில மாகாணங்களிலும் இந்தப் புத்திஜீவிகள் அணி களமிறங்கவுள்ளது.

தற்போது இவ்வணிக்குக் கைவசம் அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சியொன்று இல்லாததன் காரணமாக, கன்னித் தேர்தலில் வேறொரு முஸ்லிம் கட்சியூடாகக் களமிறங்குவதற்கு, அவர்கள் உத்தேசித்துள்ளனர்.

ஆனால், பிரதான முஸ்லிம் கட்சிகளின் செயற்பாடுகளுடன் உடன்படாத இத்தரப்பினர், அக்கட்சிகளோடு தேர்தல் கூட்டு ஒன்றில் சங்கமிக்க மாட்டார்கள் என்றே ஊகிக்க முடிகின்றது.

முஸ்லிம் அரசியல் கலாசாரம் மாற வேண்டிய தேவையுள்ளது. அமைச்சு, அரை அமைச்சு, தேசியப்பட்டியலுக்குப் பின்னால் திரிதல், பணம் உழைப்பதில் மட்டும் குறியாய் இருத்தல், மது, மாது, போதை சார்ந்த பலவீனங்கள், மிக முக்கியமாக, மக்களை மடையர்களாக நோக்குகின்ற மனோநிலை எல்லாம் மாற வேண்டியுள்ளது.

முஸ்லிம்களின் காணிப் பிரச்சினை, யுத்தகாலத்தில் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட உரிமை மீறல்கள், இனப் பிரச்சினைத் தீர்வில் முஸ்லிம்களுக்குரிய பங்கு, புதிய தேர்தல் முறைமையால் ஏற்படப் போகும் பாதிப்பு, எல்லை மீள்நிர்ணயம், அரசமைப்பு மறுசீரமைப்பு விவகாரம், முஸ்லிம்களின் இன, மத அடையாளம் மீதான அச்சுறுத்தல்கள் என்று முக்கிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டியுள்ளது.

அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தொழில் வழங்குதல், வீதிக்கு கொங்கிறீட் கொட்டுதல், மின்விளக்குப் பொருத்துதல், வீட்டுப் பாவனைப் பொருட்கள் வழங்குதல், உலர் உணவு வழங்குதல் என்ற எல்லைகளைத் தாண்டி, முஸ்லிம்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான ஒரு தெளிவுள்ள அரசியல் அணி அவசியமாக இருக்கின்றது. அந்த இடத்தை நிரப்புவதற்காகவே, மேற்சொன்ன புத்திஜீவிகள் அணி களமிறங்கவுள்ளதாக சொல்லப்படுகின்றது.

முஸ்லிம் சமூகத்தில் அநேகமான படித்தவர்கள், வைத்தியர்கள், பொறியியலாளர்கள் மற்றுமுள்ள தொழில்சார் தகுதிகளைக் கொண்டவர்களின் இலக்குகள் பெரும்பாலும் தொழில் வாழ்க்கையோடு மட்டுப்படுத்தப்பட்டு விடுகின்றன.

புத்திஜீவிகளின் அரசியல்சார்ந்த சமூக அக்கறை என்பது, நேரம் கிடைக்கும் போது, தூர இருந்து விமர்சிப்பதாகவே இருந்து வருகின்றது. விமர்சிப்பதோடும் ஆய்வு செய்வதோடும் தமது பணி முடிந்து விடுகின்றது என்று எண்ணுகின்ற படித்தோர் அதிகமுள்ளனர்.

அதையும் தாண்டி, அரசியலுக்குள் வர நினைப்பவர்களை, உள்ளே இருக்கும் ‘நாற்றங்கள்’ உள்ளே வர விடுவதில்லை என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

நிலைமை இவ்வாறிருக்க, இவர்களுள் தொழில்சார் ஆளுமைகள் அல்லது புத்திஜீவிகள் என்ற தரப்பினர், முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகளை முன்னிறுத்திச் செயற்பாட்டுக் களத்துக்குள் களமிறங்குவார்களாக இருந்தால், அது மிகவும் வரவேற்புக்குரியது.

ஆனால், புத்திஜீவிகள் களத்துக்கு வருவதையன்றி, அவர்கள் தமக்குப் பின்னால் இருந்து ஆலோசனைகள் கூறுவதையே அரசியல்வாதிகள் விரும்புகின்றார்கள்; இனியும் விரும்புவார்கள். படித்தவர்கள் எல்லோரும் களத்துக்கு வந்தால் நமது நிலை என்னவாகும் என்ற பயமும் அவர்களுக்கு இல்லாமலிருக்காது.

ஆனாலும், ஒரு விடயத்தைச் சொல்லியேயாக வேண்டும். அதாவது, யதார்த்தபூர்வமான அரசியலுக்கும் கோட்பாட்டு, கற்பனா அரசியலுக்கும் இடையிலான வித்தியாசமும் அது, வெகுஜனங்கள் மத்தியில் ஏற்படுத்துகின்ற தாக்கமுமே அதுவாகும். பொதுவாகவே முஸ்லிம்களின் பெரும் எண்ணிக்கையானோர், வாடிக்கையான அரசியல் கலாசாரத்துக்குள் மூழ்கடிக்கப்பட்டுள்ளனர்.

இதுதான், சரியான அரசியல் என்று நினைப்போரும் உள்ளனர். இப்பின்னணியில், புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்கப் போகின்றோம் என்ற பந்தாக்களோடு அரசியலுக்குள் வந்த தரப்பினரை, மக்கள் மெதுமெதுவாகவே அங்கிகரிக்கத் தொடங்குவதையும், நடைமுறை அரசியல் பற்றிய கள அறிவும், நிதிப் பலமும் இல்லாமல், படித்தவர்களின் அரசியல் முடங்கியிருப்பதையும் காணலாம்.

எனவே, முஸ்லிம் அரசியல் கலாசாரத்தை மாற்றப் போகின்றோம் என்று சொல்லிக் கொண்டு, புத்திஜீவிகள் முன்வருவது நல்லதே; என்றாலும் ‘நாற்றமெடுக்கும் அரசியல்’ என, அவர்களால் விமர்சிக்கப்படுகின்ற இன்றைய அரசியலோடு கலக்காமல், இன்றைய அரசியல்வாதிகளுக்கு போட்டியாக நின்று, அரசியல் செய்வது பெரும் சவாலாகும்.

அத்துடன், அதனூடாக மக்களின் மனங்களை கவர்ந்திழுப்பதற்கும் நெடுங்காலம் எடுக்கும். ஆனால், அது நடக்குமாயின் முஸ்லிம்களின் அரசியல் தலைவிதி மாற்றி எழுதப்படும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருநங்கைகளுக்கு தனி மருத்துவமனைகள் தேவையா?(மகளிர் பக்கம்)
Next post ப்யூட்டி பாக்ஸ்!!(மகளிர் பக்கம்)