#MeToo ஹேஷ்டேக்!!(மகளிர் பக்கம்)

Read Time:10 Minute, 17 Second

பாலியல் வன்முறைக்கு ஆளாகும் பெண்களின் குரலாக பெண்களால் தோற்றுவிக்கப்பட்டது “மீ டு ஹேஷ்டேக்”.

பாலியல்ரீதியாக சீண்டுதல் அல்லது துன்புறுத்தலை ஒருவர் மறுக்கும்போது அவரைத் தொடுவது, தொட முயற்சிப்பது, பாலியல் உணர்வை தூண்டும் வகையில் கொச்சையாகப் பேசுவது, உடலுறவு வைத்துக் கொள்ளச் சொல்லி வற்புறுத்துவது, ஆபாசப் படங்களை காட்டுவது அல்லது அதுபோல் நடந்து கொள்ள முயற்சிப்பது, அனுமதியில்லாமல் பாலியல்ரீதியாக தொடர்பு கொள்வது எனச் சொல்லலாம். பாலியல் துன்புறுத்தல் இந்தியாவில் எவ்வளவு சாதாரணமான ஒன்றாக மாறிவிட்டது.

எத்தனை பெண்கள் தனிப்பட்ட முறையிலும், பணியிடங்களிலும் வன்புணர்வுக்கு ஆளாகிறார்கள்? அதில் எவ்வளவு பேர் வேறு வழியில்லாமல் மெளனமாக இருக்கிறார்கள் என்பது சமூக ஊடகங்களில் #MeToo என்ற ஹேஷ்டேக் மூலமாக ட்விட்டரில் வெளிவந்தன. பல காலமாக இந்த விசயங்களைப் பேசத் தயங்கி, மனதிற்குள் வைத்து புழுங்கிக் கொண்டிருந்த பல பெண்களுக்கு துணிவூட்டி, அவர்களையும் சமூக ஊடகங்களில் பதிவிட வைக்கும் ஒன்றாக இது அமைந்தது.

பல பெண்கள் தங்களை பாலியல்ரீதியாக துன்புறுத்திய ஆண்களின் பெயரை தைரியமாக வெளியிட்டனர், சிலர் பெயர் குறிப்பிடாமல் பதிவிட்டனர். அதில் சில சம்பவங்கள் பணியிடத்தில், பெண்களின் ஒப்புதல் இன்றி வலுக்கட்டாயமாக செய்யப்பட்டது தொடர்பாகவும், பல பதிவுகள் பாலியல்ரீதியாக உறவு கொள்ளலாமா என்ற கோரிக்கைகள் மற்றும் ஆபாசப்படங்களை காண்பித்தது தொடர்பாகவும் இருந்தன. “எனக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல் பற்றி வெளிப்படையாகப் பேசுவதற்கு எந்தவித தயக்கமும் எனக்கில்லை.

இதில் என்னுடைய தவறு என்று எதுவும் இல்லை. எனவே வெட்கமும், குற்றவுணர்ச்சியும் எனக்குத் தேவையில்லை என்பது எனக்கு நன்றாகவே தெரியும். உண்மையில் வெட்கக்கேடான செயலை செய்தவர்களை சமூகத்தின் முன் நிறுத்துவதற்காக, என் மீது அவர்கள் தொடுத்த, தொடுக்க நினைத்த தாக்குதலை வெளிப்படையாக பேசுவேன்…” இதைச் சொன்னவர் அனு புயான். ‘தி வொயர்’ செய்தி வலைத்தளத்தின் நிருபர். ‘பிஸினஸ் ஸ்டேண்ட்டர்ட்’ பத்திரிகையின் மயங்க் ஜெயின் என்ற பத்திரிகையாளரின் பெயரையும் அனு தனது ட்விட்டர் செய்தியில் சேர்த்தே குறிப்பிட்டிருந்தார்.

பாலியல் துன்புறுத்தலில் எதிர்கொண்ட சம்பவங்களை சமூக வலைத்தளங்களில் எழுதிய சில பெண்களில் இவரும் ஒருவர். தொடர்ந்து பெரும்பாலான குரல்கள் பத்திரிகை உலகத்திலிருந்து வெளிவரத் துவங்கின. அனுவின் பதிவுக்கு பிறகு, ‘ஃபெமினிசம் இன் இண்டியா’ என்ற வலைத்தளத்தை நடத்தி வரும் ஜப்லீன் பஸ்ரிசா என்ற பெண், இதுபோன்ற போக்கு கடந்த சில ஆண்டுகளாக தொடர்வதாகவும் அது தொடர்பாக பல குற்றச்சாட்டுகள் பதிவாகி இருப்பதாகவும் தெரிவித்தார். பல பெண்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதையும் தெரிவித்தார்.

#MeToo இந்த கனமான மெளனத்தை உடைத்து பேசும் பொருளாக்குவதற்காக உருவாக்கப்பட்டது” என்றும் அவர் மேலும் கூறியிருந்தார். அலிஷா மிலனோ என்ற ஹாலிவுட் நடிகை, #Metoo ஹேஷ்டேக்கை உருவாக்கி, பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் சீண்டலைத் தடுக்கும் பிரசாரத்தில் இறங்கினார். அவர் தன்னுடைய பக்கத்தில், “பெண்கள் எல்லோரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் சீண்டல் குறித்துப் பேச #Metoo ஹேஷ்டேக் என்று தங்களின் ஸ்டேடஸில் பதியுங்கள். அப்போதுதான் இந்தப் பிரச்னையின் ஆழத்தை அறிந்துகொள்ளமுடியும்” என்று எழுதியிருந்தார்.

இவர் இப்படிப் பதிவிட்டதிலிருந்து, பல பெண்கள் இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லையை பகிர்ந்துகொள்ள தொடங்கினர். ஹாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வே வெய்ன்ஸ்டீன் மீதான பாலியல் குற்றச்சாட்டு. அதைத் தொடர்ந்து, அந்தத் தயாரிப்பாளரின் திரைப்படங்களில் நடித்த கேட் வின்செல்ட், ஏஞ்சலினா ஜோலி போன்ற பிரபல நடிகைகள், அவரின் திரைப்படங்களில் நடித்தபோது பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகினோம் என வெளிப்படையாகக் கூறினர்.

பிரபல நடிகர் நானா படேகரின் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில், நகைச்சுவைக் கலைஞரான உத்சவ் சக்ரவர்த்தி மீது பல பெண்கள் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை அடுக்கினர். தொடர்ந்து பிரபலங்கள் உட்பட பல பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் பற்றிய சர்ச்சைகளும், விவாதங்களும் சமூக ஊடகங்களில் வலுவடையத் தொடங்கின. தமிழ்நாட்டிலும் இந்த ஹேஷ்டேக் அதிகம் ட்ரண்டானது. பல சமூக ஆர்வலர்கள், தங்களின் பதிவில் ‘மீ டு’ என்று மிகவும் தைரியமாகவே பதிவிட்டு இருந்தனர். பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களை பற்றி பேச முன்வருவது ஒரு ஆக்கப்பூர்வமான மாற்றம்தானே.

* பணியிடங்களில் பாலியல் துன்புறுத்துதல் தொடர்பாக 1997ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட வழிகாட்டுதல்களின் அடிப்படையில் 2013ல் இது சட்டமாக்கப்பட்டது. இச்சட்டத்தின் கீழ், நிறுவனங்கள் பாலியல் துன்புறுத்தல்களை விசாரிக்க குழு ஒன்றை நியமிக்க வேண்டும் என்ற கட்டாயம் உருவானது.

பாலியல் துன்புறுத்தல் புகார்களை விசாரிப்பதற்கான ஒரு பெண்ணின் தலைமையில் குழு ஒன்றை நிறுவனங்கள் அமைக்க வேண்டும் என்று இந்த சட்டம் அறிவுறுத்துகிறது. ஆனால், நிறுவனத்தில் அமைக்கப்படும் விசாரணைக் குழுக்கள் எப்போதுமே பயனுள்ளதாக இருப்பதில்லை என்றும், புகார்களை விசாரித்து நியாயம் வழங்குவதற்கு இந்த குழுக்கள், நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்கின்றன என்றும் கூறுகின்றனர் சமூக ஊடகங்களில் எழுதும் பத்திரிகையாளர்கள்.

* 10 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க நாட்டைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் டரானா புர்க்கே இந்த இயக்கத்தை தொடங்கினார். பல வி.ஐ.பி.க்கள் மற்றும் பிரபலங்களின் முகத்திரைகள் அப்பட்டமாய் கிழிந்தன. துவக்கத் தில் முழு ஆதரவு கிடைக்காத நிலையில் இது தொடக்கம்தான் என்றார் டரானா. தொடர்ந்து இதை ஓர் இயக்கமாகவும் மாற்றினார். இந்த இயக்கம் சமூக வலைத்தளங்களில் ஹேஷ்டேக்காக மாறியது.

தொடர்ந்து இந்த ஆண்டு டைம் இதழால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த இயக்கம், பாலியல் வன்கொடுமைகளை வெளிக்கொணர்ந்த, ஐந்து பெண்களின் புகைப்படங்களை இணைத்து அட்டைப்படமாகவும் வெளிப்படுத்தி அப்பெண்களைக் கௌரவித்தது. அட்டையில் இடம் பெற்ற ஐந்து பெண்களும் கருப்பு வண்ண உடை அணிந்திருக்க, ஆறாவது பெண் மட்டும் உருவத்தை மறைத்து அவரது ஒரு கையினை மட்டும் வெளிப் படுத்தியிருந்தார்.

மருத்துவமனை ஒன்றில் பணியாற்றிய அந்தப் பெண் ஊழியர் தன் அடையாளத்தை வெளிக்காட்டாமல் தனக்கு நேர்ந்த கொடுமைகளை வெளிக்கொண்டு வந்தார் என்பதற்காக, அடையாளத்தை மறைத்தாவது பாலியல் வன்கொடுமைகளை வெளிக்கொண்டுவரும் பெண்களின் குறியீடாக அப்பெண்ணின் கை மட்டும் அந்த அட்டைப் படத்தில் இடம் பெற்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அதிகார போதையில் தடுமாறும் மைத்திரி!!(கட்டுரை)
Next post அமெரிக்கா இடைக்கால தேர்தல் முடிவுகள் :அதிபர் ட்ரம்பின் குடியரசுக் கட்சி முன்னிலை!!