பின்லேடன், டைபாய்டு காய்ச்சலால் இறந்துவிட்டானா? உறுதி செய்ய அமெரிக்கா, பாகிஸ்தான் மறுப்பு

Read Time:3 Minute, 36 Second

Al.Haida(Bin.Laden).jpgபின்லேடன், டைபாய்டு காய்ச்சலால் இறந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் அரசுகள் இந்த தகவலை உறுதி செய்ய மறுத்து விட்டன. உலகை உலுக்கிய அமெரிக்க இரட்டைக்கோபுர தகர்ப்பு நடவடிக்கையின் மூளையாக செயல்பட்டவன், பின்லேடன். அமெரிக்க ஆதரவு படைகள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியபின், பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் மலைக்காடுகளில் பின்லேடன் தனது ஆதரவாளர்களுடன் பதுங்கி இருந்தான்.

சர்வதேச அளவில் `நம்பர் ஒன்’ பயங்கரவாதியான பின்லேடனை பிடிக்க அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன அவன் இறந்துவிட்டதாக அடிக்கடி தகவல்கள் வெளியாவதும், பின்னர் அந்த தகவலை மறுத்து, வீடியோ அல்லது ஆடியோ ஆதாரங்கள் வெளியிடப்படுவதும் உண்டு.

டைபாய்டு காய்ச்சலில்…

இந்த நிலையில், டைபாய்டு காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த பின்லேடன், பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் கடந்த மாதம் (ஆகஸ்டு) 23-ந்தேதி பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டதாக, பிரான்சு நாட்டு பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியாகி உள்ளது. சவூதி அரேபியா நாட்டு தகவலின் அடிப்படையில், பிரான்சு உளவுத்துறை தகவலை மேற்கோள் காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டு இருக்கிறது,

இந்த மாதம் 4-ந்தேதிதான் பின்லேடனின் மரணம் பற்றி சவூதி அரேபியாவுக்கு தகவல் தெரிந்ததாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால், பிரான்சு அதிபர் சிராக், இந்த தகவலை உறுதி செய்ய மறுத்துவிட்டார். அந்த நாட்டின் ராணுவ அமைச்சகமும் பின்லேடன் மறைவுச்செய்தியை உறுதி செய்யவில்லை. உளவுத்துறையின் ரகசியம் கசிந்தது பற்றி விசாரணை நடத்தப்படும் என்று பிரான்சு அறிவித்து உள்ளது.

அமெரிக்கா-பாகிஸ்தான்

அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளும் இந்த தகவலை உறுதி செய்யவில்லை. “பின்லேடன் மரணம் அடைந்தது பற்றி பேச்சு அடிபடுவது உண்மைதான் என்றாலும், அந்த தகவலை எங்களால் உறுதி செய்ய முடியவில்லை” என்று, அமெரிக்காவின் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பாகிஸ்தான் உள்துறை அமைச்சக அதிகாரிகளும் பின்லேடன் மரணம் பற்றி தங்களுக்கு எந்த தகவலும் இல்லை என்று தெரிவித்தனர். தலீபான் அதிகாரிகளும் பின்லேடன் மறைவுச்செய்தியை மறுத்து உள்ளனர். “முஸ்லிம் புனித போராளிகளுக்கு எதிரான வழக்கமான ஆதாரமற்ற பிரசாரம் இது” என்று அவர்கள் கூறினார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post உலக அழகி தேர்வில் புதிய முறை: பொதுமக்களின் கருத்தும் கேட்கப்படும்
Next post மன்மோகன் சிங்கை சந்திக்க முடியவில்லை: இலங்கை தமிழ் எம்பிக்கள் பேட்டி