`நடனக்கலையில் முத்திரை பதித்தவர்’ பத்மினியின் வாழ்க்கை குறிப்பு

Read Time:10 Minute, 59 Second

padmini.Sisters.jpgநடிகை பத்மினி நடனக்கலையில் முத்திரை பதித்தவர் ஆவார். நடிகை பத்மினியின் வாழ்க்கை குறிப்பு விவரம் வருமாறு:- சினிமாவில் அறிமுகம் திருவாங்கூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகளான லலிதா, பத்மினி, ராகினி ஆகிய மூவரில் லலிதா 1932-லும், பத்மினி 1934-லும், ராகினி 1938-லும் பிறந்தவர்கள். தந்தை பெயர் தங்கப்பன் பிள்ளை. தாயார் பெயர் சரசுவதி அம்மாள். மூன்று சகோதரிகளில் முதலில் பத்மினி தான் நடனப்பயிற்சி பெற்றார். 40-களில், இந்தியாவிலேயே நடனத்தில் புகழ் பெற்று விளங்கியவர் உதயசங்கர். இவர் சிதார் மேதை ரவிசங்கரின் சகோதரர்.

ரவிசங்கர் சென்னை வந்திருந்தபோது, பத்மினியும், ராகினியும் அவரை சந்தித்து ஆசி பெற்றனர். அப்போது, முழுக்க, முழுக்க நடனங்கள் கொண்ட “கல்பனா” என்ற இந்தி திரைப்படத்தை ஜெமினி ஸ்டூடியோவில் ரவிசங்கர் தயாரித்துக் கொண்டிருந்தார். அந்தப் படத்தில் நடிப்பதற்கு லலிதா-பத்மினிக்கு ரவிசங்கர் வாய்ப்பளித்தார். “கல்பனா” மூலமாக லலிதாவும், பத்மினியும் திரைப்பட உலகில் அறிமுகம் ஆனார்கள்.

சிவாஜிக்கு ஜோடி

1948 ஆகஸ்டு மாதம் வெளியான “வேதாள உலக”த்தின் சிறப்பு அம்சமாக, லலிதா-பத்மினியின் நடனங்கள் அமைந்தன. 1952-ல், “பராசக்தி” தயாராகி வந்தபோதே, என்.எஸ்.கிருஷ்ணன் டைரக்ஷனில் ஏ.எல்.எஸ். தயாரித்த “பணம்” என்ற படத்திலும் சிவாஜி கணேசன் நடித்து வந்தார். இந்த படத்தின் கதாநாயகி பத்மினி.

“பராசக்தி” வெளிவந்த சில நாட்களுக்குப்பின் “பணம்” வெளியாகியது. பராசக்தியைப் போல இப்படம் பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும், சிவாஜி-பத்மினி ஜோடிப் பொருத்தம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. அதன் காரணமாக, நிறைய படங்களில் இருவரும் இணைந்து நடித்தனர். சிவாஜிகணேசனும், பத்மினியும் இணைந்து நடித்து, பல அற்புதமான படங்களை தந்தனர். தமிழ்த்திரை உலகின் இணையற்ற ஜோடி என்று ரசிகர்களால் பாராட்டப்பட்டனர்.

மங்கையர் திலகம்

1954-ம் ஆண்டில் சிவாஜியும், பத்மினியும் பல படங்களில் இணைந்து நடித்தனர். 1955 ஆகஸ்டில் வெளிவந்த “மங்கையர் திலகம்” பத்மினியின் மிகச்சிறந்த நடிப்பைக் கொண்ட அருமையான படமாகும். இதில் பத்மினி, எஸ்.வி.சுப்பையாவின் மனைவியாக – அதாவது சிவாஜியின் அண்ணியாக நடித்தார். ஒப்பற்ற அழகால் ரசிகர்களை கவர்ந்திருந்த பத்மினி, அருமையான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கக் காரணமான படம் “மங்கையர் திலகம்”.

எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன், ஜெமினிகணேசன் ஆகியோர் தமிழ்த்திரை உலகின் மூவேந்தர்களாக பவனி வந்தபோது, பானுமதி, பத்மினி, சாவித்திரி ஆகியோர் மூன்று மகாராணிகளாகத் திகழ்ந்தனர்.
பத்மினி, நடனக்கலையில் தேர்ந்தவராக இருந்ததால், நடனங்கள் இடம் பெற்ற படங்களில் அவர் கொடி உயரமாகப் பறந்தது.

சிவாஜியின் மகத்தான படமான “வீரபாண்டிய கட்டபொம்ம”னில் பத்மினி நடித்த போதிலும், அவருக்கு ஜோடி ஜெமினிகணேசன். பத்மினியும், ஜெமினிகணேசனும் இணைந்து நடித்த படங்களில் “வஞ்சிக்கோட்டை வாலிபன்”, “மீண்ட சொர்க்கம்” ஆகியவை முக்கியமானவை.

வஞ்சிக்கோட்டை வாலிபன், ஜெமினியின் பிரமாண்டமான படம். இதில் பத்மினியும், வைஜயந்திமாலாவும் பங்கு கொண்ட “போட்டி நடனம்”, கண்ணுக்கும், செவிக்கும் அரிய விருந்தாகும். இந்தியப் படங்களில் இடம் பெற்ற மிகச்சிறந்த நடனக் காட்சி எது என்று கேட்டால், “வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் வரும் பத்மினி – வைஜயந்திமாலா போட்டி நடனக் காட்சி” என்று தயங்காமல் கூறலாம்.

மதுரை வீரன்

எம்.ஜி.ஆருடன் பத்மினி நடித்த படங்களில் “மதுரை வீரன்” முக்கியமானது அதில், பானுமதியும் எம்.ஜி.ஆரின் மற்றொரு ஜோடியாக இடம் பெற்றிருந்தார். இந்தப் படம் “சூப்பர் ஹிட்”. பிரபல இந்தி நடிகர் ராஜ்கபூர் தயாரித்து இயக்கிய “ஜிஸ்தேஷ் மே கங்கா பஹ்தி ஹை” (இந்த தேசத்தில் கங்கை ஓடுகிறது), “மேராநாம் ஜோக்கர்” ஆகிய இந்திப்படங்களில் பத்மினி நடித்தார். இந்தப் படங்களில் பத்மினி கவர்ச்சிகரமாக நடித்தது, ரசிகர்கள் இடையே பெரும் சர்ச்சையை எழுப்பியது.

திருமணம்

“உலக நாட்டியப் பேரொளி” என்று புகழ் பெற்ற நடிகை பத்மினியின் திருமணம், கேரளாவில் உள்ள குருவாïர் கோவிலில் 1961-ம் ஆண்டு மே 25-ந் தேதி சிறப்பாக நடைபெற்றது. மாப்பிள்ளை டாக்டர் ராமச்சந்திரன், கேரளாவில் உள்ள தலைச்சேரியைச் சேர்ந்தவர். சென்னையில் மருத்துவக் கல்லூரியில் படித்து, எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்றவர். ஆலப்புழையில் சொந்தமாக “கிளினிக்” நடத்தி வந்தார்.

குருவாïரில், குருவாïரப்பன் கோவிலில் நடைபெற்ற பத்மினியின் திருமணத்தைக் காண, தமிழ்நாட்டில் இருந்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ரெயில்களிலும், தனி பஸ்களிலும், வேன்களிலும் குருவாïருக்குச் சென்றனர்.

தில்லானா மோகனாம்பாள்

திருமணத்துக்குப்பின் நடிக்க மாட்டேன் என்று பத்மினி அறிவித்து இருந்தபோதிலும், நடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. திருமணத்துக்குப்பின் சில சிறந்த படங்களில் அவர் நடித்தார். “தில்லானா மோகனாம்பாள்” ஒரு திரைக்காவியமாக அமைந்தது. 1967-ல் வெளி வந்த “இருமலர்கள்” ஒரு காதல் காவியம். இதில் சிவாஜிகணேசன், பத்மினி, கே.ஆர்.விஜயா ஆகியோர் சிறப்பாக நடித்திருந்தனர். வியட்னாம்வீடு (1970) படத்திலும் சிவாஜி – பத்மினி நடிப்பு கொடிகட்டிப் பறந்தது.

“தேனும் பாலும்” படத்தில் சிவாஜிகணேசனுடன் பத்மினியும், சரோஜாதேவியும் இணைந்து நடித்தனர். கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் “சித்தி”யிலும் பத்மினியின் நடிப்பு பெரும் வரவேற்பை பெற்றது. “திருவருட்செல்வர்”, “பேசும்தெய்வம்”, “குலமா குணமா” முதலிய படங்களிலும் பத்மினி நடித்தார்.

சிவாஜியுடன் அதிக படங்கள்

தமிழ் கதாநாயகர்களில் சிவாஜி கணேசனுடன்தான் பத்மினி அதிக படங்களில் நடித்துள்ளார். அவர்கள் ஜோடியாக நடித்த படங்கள் 59. எம்.ஜி.ஆருடன் 12 படங்களிலும், ஜெமினிகணேசனுடன் 12 படங்களிலும் இணைந்து நடித்தார்.

எம்.ஜி.ஆர் – மஞ்சுளா நடித்த “ரிக்ஷாக்காரன்” படத்தில் பத்மினி குணச்சித்திர வேடத்தில் நடித்தார்.

அமெரிக்காவில் உள்ள நிïஜெர்சி நகரில், டாக்டர் ராமச்சந்திரன் சொந்தமாக ஆஸ்பத்திரி (கிளினிக்) நடத்தி வந்தார். எனவே, கணவருடன் அமெரிக்கா சென்ற பத்மினி அங்கு ஒரு நாட்டியப் பள்ளியை தொடங்கினார். டாக்டர் ராமச்சந்திரன், கடந்த 1981-ம் ஆண்டு செப்டம்பர் 17-ந் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

மகன் பிரேம் ஆனந்த்

கணவர் இறந்த துயரம் பத்மினியை வெகுவாக பாதித்தது. எனினும் தன் ஒரே மகன் பிரேம் ஆனந்த்தை நன்கு படிக்க வைக்க வேண்டும், அவன் எதிர்காலத்தை நன்கு அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று உறுதி எடுத்துக்கொண்டார்.

அதேபோல் மகனை உயர் பட்டப்படிப்பு படிக்க வைத்தார். இப்போது பிரேம் ஆனந்த், அமெரிக்காவில் இருந்து வரும் உலகப்புகழ் பெற்ற “டைம்” ஆங்கிலப் பத்திரிகையில் பத்திரிகையாளராகவும், புகைப்பட கலைஞராகவும் வேலை பார்க்கிறார்.

பிரேம் ஆனந்துக்கு திருமணம் ஆகி விட்டது. மனைவி கேரளாவைச் சேர்ந்தவர். டாக்டருக்கு படித்தவர். இந்தத் தம்பதிகளுக்கு ஒரே மகன் (அதாவது, பத்மினிக்கு ஒரே ஒரு பேரன்). அவர் அமெரிக்காவில் படித்துக் கொண்டிருக்கிறார்.

பூவே பூச்சூடவா

கேரளாவின் புகழ் பெற்ற டைரக்டரான பாசில் 1985-ல் “பூவே பூச்சூடவா” என்ற படத்தை தமிழில் தயாரித்தார். இதன் கதாநாயகியாக நதியா அறிமுகம் ஆனார். நதியாவின் பாட்டி வேடத்தில் பத்மினி நடித்தார். அவர் கடைசியாக நடித்த படம் அதுதான். நடிகை ஷோபனா பத்மினியின் அண்ணன் மகள் ஆவார். பத்மினியின் கணவர் ராமச்சந்திரனின் அண்ணன்களில் ஒருவரது மகன் தான் இளம் நடிகர் வினித்.

padmini.Sisters.jpg

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பார்வர்ட் பிளாக்கும் போலி லெட்டர் பேடும்-
Next post விடுதலைப் புலிகள் தாக்கும் அபாயம்: சொந்த ஊரை காலி செய்து தீவுக்கு தப்பிய 1400 முஸ்லிம்கள்