நம் வாக்கு நம் உரிமை ———- நல்லவரைப் பார்த்து!! (கட்டுரை)

Read Time:12 Minute, 10 Second

நம் வாக்கு நம் உரிமை —————–போடுங்கய்யா போடுங்கம்மா ஓட்டு நல்லவரைப் பார்த்து

நம் சார்பில் நமக்கான நலத்திட்டங்களைச் செயல்படுத்த வேண்டியவர்களைத் தேர்ந்தெடுக்கப்போகும் நாள் வந்தே விட்டது. நடைபெறவிருக்கும் தேர்தல், அடுத்த ஐந்து ஆண்டுகள் நாம் எப்படியிருக்கப் போகிறோம் என்பதை நாமே தீர்மானிக்கும் மிகப் பெரிய துருப்புச் சீட்டு. ஆணுக்கு நிகராகப் பெண்களும் பெற்றிருக்கும் உரிமைகளில் முக்கியமானது வாக்குரிமை. பல நாடுகளில் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகே பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்திருக்கிறது. ஆனால், இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு நடைபெற்ற முதல் தேர்தலிலேயே பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. எதுவும் செய்யாமல் ஒன்று கிடைத்துவிட்டது என்பதற்காகவே அதைக் குறைத்து மதிப்பிடக் கூடாது.

தமிழகம் முழுக்க ஏப்ரல் 18-ல் நடைபெறுகிற தேர்தலில் ஆண்களைவிட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட ஐந்து லட்சத்தைவிட அதிகம் என்பதால் வெற்றியை நிர்ணயிக்கிற சக்தியாகவும் பெண்களின் வாக்கு இருக்கிறது. இந்தத் தேர்தலில் நாம் அளிக்கப்போகும் வாக்கு வேறெதையும்விட முக்கியமானது. தவிர, தேர்தலில் போட்டியிடுகிறவர்களில் பத்து சதவீதம்கூட பெண் வாக்காளர்கள் இல்லை. அதனால் வாக்குரிமையை முறைப்படி பயன்படுத்தியாவது பெண்கள் தங்கள் பிரதிநிதித்துவத்தை நிரூபிக்க வேண்டிய அவசியமும் இருக்கிறது.

அரசியல், வாக்குரிமை என்று சொன்னாலே, ‘நம்ம கையில என்னம்மா இருக்கு?’ – பெரும்பாலான பெண்களின் சலிப்பு நிறைந்த கேள்வி இதுவாகத்தான் இருக்கிறது. அரசியல் என்றால் ஏதோ ஆண்கள் மட்டுமே அதிகாரம் செலுத்தும் வெளி என்று நினைத்துவிடுகிறார்கள். உண்மையில் அரசியல் நிகழ்வின் ஒவ்வொரு செயல்பாடும் நேரடியாகவோ மறைமுகமாகவோ பெண்களையே பாதிக்கிறது. பால் விலையேற்றம் நேரடியாகப் பாதிக்கிறது என்றால் பண வீக்கம் மறைமுகமாகப் பாதிக்கிறது. இப்படியான பாதிப்புகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது நம் கைகளில்தான் இருக்கிறது என்பதைப் பெண்கள் உணர வேண்டும்.

இலவசம் மட்டும் போதுமா?

மது விலக்கு பற்றி அனைத்து கட்சிகளும் பேசிவருவதால் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அது குறித்து ஓரளவாவது நடவடிக்கை இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். பல்வேறு கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு இலவசங்களை அறிவித்திருக்கின்றன. பெண்ணுக்கு இலவசமாகவோ மானிய விலையிலோ பொருட்களைத் தருவதைவிட தரமான அடிப்படைக் கல்வி, சீரான குடிநீர் விநியோகம், பொதுச் சுகாதாரம், கழிப்பறை, பொது இடங்களில் பாதுகாப்பு போன்ற அடிப்படை தேவைகள் அவசியம் இல்லையா? கல்விக் கடன்களை ரத்து செய்வதைக் காட்டிலும் கடன் வாங்கத் தேவையில்லாத கல்வி முறையை ஏற்படுத்தித்தருவதும் போதுமான வேலை வாய்ப்பை உருவாக்குவதும் முக்கியம்தானே?

தாகம் தீருமா?

இன்றைய சூழலில் மிக முக்கியமானது தண்ணீர்ப் பிரச்சினை. தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் தண்ணீர்ப் பற்றாக்குறை இருக்கத்தான் செய்கிறது. தண்ணீர்த் தட்டுப்பாட்டால் மூன்றாம் உலகப் போர் மூளுமோ இல்லையோ குடும்பங்களுக்கிடையேயும் சக மனிதர்களுக்கு இடையேயும் தினம் தினம் சிக்கல்கள் வெடித்துக்கொண்டிருக்கின்றன. தண்ணீரைச் சேகரிப்பதிலேயே பல பெண்கள் தங்கள் பெரும்பாலான நேரத்தைச் செலவிடுவது வேதனையானது. இதனால் பெண்களின் ஆரோக்கியமும் பாதிப்புக்குள்ளாகிறது. தண்ணீர்ச் சிக்கலைத் தீர்க்கும் நீண்ட காலத் திட்டங்களை யார் அறிவித்திருக்கிறார்கள் என்பதையும் இந்தத் தேர்தலில் நாம் கவனிக்க வேண்டும்.

அதைச் செய்வேன், இதை மாற்றுவேன் என மேம்போக்காகக் கோடிக் கணக்கில் திட்டங்களை அறிவிப்பதை நம்பி ஏமாறாமல், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பயனுள்ள திட்டங்களை யார் அறிவித்திருக்கிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வேண்டாமே கட்சி அடையாளம்

‘நாங்க மூணு தலைமுறையா இந்தக் கட்சிக்குத்தான் வாக்களிப்போம், என் அப்பா இந்தக் கட்சியைச் சேர்ந்தவர், இந்தக் கட்சிக்கு வாக்களிக்கவில்லை என்றால் என் தம்பி கோபப்படுவான், என் வீட்டுக்காரர் சொல்ற இடத்துல ஓட்டுப் போடறதுதானே என் கடமை, எங்க சாதி கட்சிக்கு இல்லாம வேற யாருக்கு ஓட்டுப் போட முடியும்…’ – இது போன்ற சமாதானங்கள் ஏற்புடையவையல்ல. இந்தச் சிந்தனைகள், நம்மைத் தகுதியில்லாதவர்களிடம் ஒப்படைத்துவிட்டு நாமே நமக்கு அடிமைச் சங்கிலி பிணைத்துக்கொள்வதற்குத்தான் சமம்.

ஒரு காலத்தில் சிறந்த தலைவர்களைக் கொண்ட கட்சி இப்போதும் அப்படியே இருக்கிறதா, அதன் தலைமையும் தொண்டர்களும் ஊழலுக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்கிறார்களா என்பதை யோசித்தாலே புரிந்துவிடும் நம் நினைப்பு எத்தனை அபத்தம் என்று.

சாதியின் பெயரால் ஓட்டு கேட்கிறவர்களிடம் நிச்சயம் எந்தவித ஆக்கப்பூர்வமான மாற்றத்தையோ முன்னேற்றத்தையோ எதிர்பார்க்க முடியாது. அதுவும் சாதிய ஆணவக் கொலைகள் அதிகரித்துவரும் இந்நாளில் சாதிப் பெருமை பேசும், சாதியை உயர்த்திப் பிடிக்கும் கட்சிகளையும் ஆட்களையும் நிச்சயம் புறக்கணிக்க வேண்டும். கட்சி வேறுபாடின்றி வேட்பாளர்களின் தரத்தை மதிப்பிட்டு, தகுதியானவருக்கு வாக்களித்தாலே போதும், நாம் தெளிவாக இருக்கிறோம் என்பது அரசியல் செய்கிறவர்களுக்குப் புரிந்துவிடும்.

பதவியேற்க எது தகுதி?

நம் தொகுதியில் போட்டியிடுகிறவர் ஏற்கெனவே எம்.எல்.ஏ-வாகப் பதவி வகித்தவர் என்றால் அவர் நம் தொகுதிக்காகச் செய்த நலத்திட்டங்கள், அடிப்படைக் கட்டமைப்புகளில் அவர் செய்த மாற்றம், அரசுப் பணிகளின் தரம், ஊழலின் சதவீதம், அவரது சொத்து மதிப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலன் சார்ந்து அவர் முன்வைத்த செயல்பாடுகள், பொதுப் பிரச்சினைகளை அவர் அணுகிய விதம், பொது மக்களுடன் அவருக்கு இருக்கும் இணக்கத்தின் அளவு என்று பல கேள்விகளைக் கேட்டுப் பாருங்கள். இவற்றில் பாதிக்கும் மேல் எதிர்மறையான பதில் வந்தால் நிச்சயம் அவரை உங்கள் பட்டியலிலிருந்து வெளியேற்றுங்கள்.

நம் தொகுதியில் பெண் வேட்பாளர் போட்டியிடுகிறார் என்றால் அவர் பெண் என்ற ஒரே காரணத்துக்காக அவருக்கு வாக்களிப்பது தவறு. பெண்களிலும் மோசமான அரசியல்வாதிகள் உண்டு. ஆண் வேட்பாளர்களுக்கு வைத்திருக்கிற அதே வரையறையை இவர்களுக்கும் வைக்க வேண்டும். இன்னொரு விஷயம், பெண்களைப் பொறுத்தவரை கவுன்சிலர் வேட்பாளர்களிலிருந்து நாடாளுமன்ற வேட்பாளர்கள்வரை பெரும்பாலானோர் தங்கள் கணவர், தந்தை, மகன் போன்றோரின் கைப்பாவைகளாகத்தான் இருக்கிறார்கள். ஆகவே, நாம் வாக்களிக்கவிருக்கும் பெண் வேட்பாளர் கைப்பாவையா, சுய ஆளுமை கொண்டவரா என்று பார்த்துத்தான் வாக்களிக்க வேண்டும்.

சிலர் யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்று தங்கள் வாக்கை நோட்டாவில் பதிவுசெய்வார்கள். இப்படிச் செய்வதால் தன் அதிருப்தியைத் தெரிவிக்கலாமே தவிர மறு தேர்தல் நடக்கப்போவதில்லை, தகுதியானவர் பதவிக்கு வரப்போவதில்லை. யார் அதிக வாக்குகளைப் பெற்றிருக்கிறாரோ அவரே வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். இது போன்ற சூழலில், ‘எல்லோரும் கயவர்களாக இருந்தால் யாருக்குத்தான் வாக்களிப்பது?’ என்ற எரிச்சல் மண்டத்தான் செய்யும். அநீதியின் வழியில் செல்கிறவர்களில் ஓரளவுக்காவது மனசாட்சியுடன் மக்கள் பணி ஆற்றுவார் என்ற நம்பிக்கை யார் மீது ஏற்படுகிறதோ அவருக்கு வாக்களிக்கலாம்.

வயதானவர்களாக இருந்தால் அனுபவம் அதிகம் என்ற கணிப்பு தேர்தல் நேரத்தில் பொய்த்துப்போகக் கூடும். அவர்களது அனுபவம், சாட்சியம் இல்லாமல் ஊழல் செய்வதில் வெளிப்பட்டுவிடுவதற்கான ஆபத்து இங்கே அதிகம். சிறந்த நலத்திட்டங்களுடன், சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பாதிப்பில்லாத வகையில் சாதி, மத பேதமற்ற, ஊழலற்ற… அனைத்தையும்விட பெண்களின் பாதுகாப்பையும் முன்னேற்றத்தையும் உறுதி செய்கிற ஆட்சி அமைப்போம் என்று உறுதி தருகிறவர்களில் சிறந்தவருக்கு உங்கள் பொன்னான வாக்குகளை அளிக்கலாம் தோழிகளே. மாற்றத்தை விதைப்பதற்கான மந்திர சக்தி நம் விரல்களில் இருக்கிறது!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கருமம் இது எல்லாம் எங்க போய் முடிய போகுதுனு தெரியல!! (வீடியோ)
Next post போர் விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது!! (உலக செய்தி)