நிகழ்ந்திருக்கவே கூடாத பயங்கரம் !! (கட்டுரை)

Read Time:20 Minute, 38 Second

இலங்கையின் பல பாகங்களிலும், இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் அதிர்ச்சிகளில் இருந்து, நாடும் நாட்டு மக்களும் இன்னும் முழுமையாக மீளவில்லை.

கிறிஸ்தவர்கள், கத்தோலிக்கர்களின் புனித நாளான உயிர்த்த ஞாயிறு தினத்தில், தேவாலயங்கள், நட்சத்திர ஹோட்டல்களை இலக்குவைத்து, மேற்கொள்ளப்பட்ட இந்தத் திட்டமிட்ட குண்டுத்தாக்குதல்கள், வரலாற்றில் மிக மோசமான இழப்பையும் துயரஅனுபவத்தையும் தந்திருக்கின்றது.

இந்த நாட்டில், இனசெளஜன்யத்தோடு வாழ்ந்து வருகின்ற முஸ்லிம்களுக்கும் கத்தோலிக்கர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையிலான உறவை, இத்தாக்குதல்கள் சிதைத்திருப்பது மட்டுமன்றி, மதங்களுக்கு இடையில் ஓரளவுக்கேனும் இருந்துவந்த புரிந்துணர்வை, அதலபாதாளத்துக்குத் தள்ளியிருக்கின்றது.

குறிப்பாக, ஒரு சிலரது நடவடிக்கை, இன்று முஸ்லிம் சமூகத்தை, ஏனைய மக்கள் சந்தேகக் கண் கொண்டு பார்ப்பதற்கும், அவர்கள் மீது விரல் நீட்டுவதற்கும் வழியேற்படுத்திக் கொடுத்திருப்பதுடன், சந்தர்ப்பம் கிடைக்கும் வரை பார்த்துக் கொண்டிருந்த சிங்கள, தமிழ் அரசியல்வாதிகள் சிலருக்கு, ‘வாய்க்கு அவலாகவும்’ அமைந்திருக்கின்றது என்றே சொல்ல வேண்டியுள்ளது.

யாராக, எந்த இன, மதத்தைப் பின்பற்றுபவராக இருந்தாலும், வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்வது என்பது, அவர்களைப் பொறுத்தமட்டில் ஆத்மார்த்தமானதும் புனிதமானதுமாகும். தமது துன்பங்களை இறைவனிடம் முறையிடவும் மனஆறுதல் வேண்டியும் நன்மைகளைத் தேடிக் கொள்வதற்காகவுமே பொதுவாக எல்லா மதத்தினரும் இறைவழிபாட்டில் ஈடுபடுவதை நாமறிவோம்.

அப்படியான ஒரு மனநிலையுடனேயே கடந்த 21ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமையும் இலங்கையில் வாழும் கிறிஸ்தவர்கள் உயிர்த்த ஞாயிறு வழிபாடுகளுக்காகத் தேவாலயங்களுக்குச் சென்றிருப்பர்.

ஆனால், எதிர்பாராத விதமாக கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலம், நீர்கொழும்பு கவுடாப்பிட்டிய புனித செபஸ்தியார் தேவாலயம், மட்டக்களப்பு சீயோன் தேவாலயம், தலைநகரில் உள்ள மூன்று பிரபல ஹோட்டல்களில், கிட்டத்தட்ட சமகாலத்தில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல்கள், அதன்பின்னர் தெமட்டகொடவிலும் தெஹிவளையும் இடம்பெற்ற தாக்குதல்கள், பெரும் உயிரிழப்புகளையும் கிறிஸ்தவர்களுக்கு மட்டுமன்றி முஸ்லிம்கள் உள்ளிட்ட எல்லாச் சமூகத்தினருக்கும் சொல்ல முடியாத பெருங் கவலையையும் இக்கட்டான நிலைமையையும் ஏற்படுத்தி இருக்கின்றது.

மேற்படி தொடர் குண்டுத் தாக்குதல்களால், இதுவரை 359 பேர் பரிதாபமாக உயிரிழந்திருக்கின்றனர். பெருமளவிலான பெண்களும் சிறுவர்களும் காரணமெதுவும் இன்றி, உயிர்பறிக்கப்பட்டு இருக்கின்றார்கள். இறந்தவர்களுள் 41பேர் வெளிநாட்டவர்கள்; 500இற்கும் மேற்பட்ட காயமடைந்தவர்களில், நூற்றுக்கணக்கானோர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதன் தொடர் நிகழ்வாக, குண்டுகள் மீட்கப்படுவதும் பாதுகாப்பாக வெடிக்க வைக்கப்படுவதும் சந்தேகநபர்கள் கைது செய்யப்படுவதுமாகப் பதற்றம் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது.

சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்ட நிலையில், இரவு வேளையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்துக்கு மத்தியில், பெரும் அச்சத்துடன் நாட்டில் வாழும் எல்லா மக்களும் பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கின்றனர்.

ஓர் இனத்தவரை, மற்றவர் பார்க்கின்ற பார்வையில், இப்போது மாறுதல் ஏற்பட்டிருக்கின்றது. மீண்டும் ஓர் இருண்ட யுகத்துக்குள் நாம் தள்ளப்பட்டிருக்கின்றோம்.

இலங்கையில் வழிபாட்டுத் தலங்கள் தாக்கப்படுவதோ, வணக்கஸ்தலங்களுக்குள் இரத்தம் சிந்தப்படுவதோ இது முதன்முறையல்ல. இதற்கு முன்னர் யுத்தகாலத்தில் ஆயுதம் தரித்தோர் நடத்திய தாக்குதல்களில், பள்ளிவாசல்களில் தொழுதுகொண்டிருந்த முஸ்லிம்கள் பலியெடுக்கப்பட்டு இருக்கின்றார்கள்; விகாரைகளில் குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கோவில்கள், தேவாலயங்களில் உயிர்ப்பலிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.

ஆனால், கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தில், இலங்கையில் இடம்பெற்ற சம்பவம், இவற்றையெல்லாம் விட வித்தியாசமானதும் பாரதூரமானதுமாகும் என்றே குறிப்பிட வேண்டும்.

கிட்டத்தட்ட ஒரு மணித்தியால இடைவெளியில், பல இடங்களில் தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டிருப்பதுடன், ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இலக்குவைத்து, மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதல்களில், பெருமளவு கிறிஸ்தவர்கள் உள்ளடங்கலாக, எல்லாச் சமூகங்களையும் சேர்ந்த அதிக எண்ணிக்கையிலானோர் உயிரிழந்திருக்கின்றார்கள்; காயமடைந்திருக்கின்றார். மீதமுள்ள எல்லோரும் மனக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெற்றிருப்பதாக, முஸ்லிம்களுக்குச் செய்தி கிடைத்ததும், ‘இது இனவாதிகளின் வேலையாக இருக்கலாம்’ என்றே ஆரம்பத்தில் கருதினர்.

இதற்கும் எந்தவொரு முஸ்லிமுக்கும் தொடர்பு இருந்து விடக்கூடாது என்பதும் நம்மீது பழிவிழுந்துவிடக் கூடாது என்பதுமே, நாடெங்கும் வாழும் பெரும்பாலான முஸ்லிம்களின் பிரார்த்தனையாக இருந்தது.

ஆனால், சாதாரண முஸ்லிம் மக்களின், ‘அவ்வாறு இருக்காது’ என்ற நம்பிக்கை, வீண்போயிருக்கின்றது என்றே சொல்ல வேண்டியுள்ளது. துரதிர்ஷ்டவசமாக முஸ்லிம் இளைஞர்களே, இச்சம்பவத்துடன் தொடர்புட்டவர்களாக அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர்.

இவர்கள், உண்மையான இஸ்லாமிய வழிமுறையைப் பின்பற்றுபவர்களாகக் குறிப்பிட முடியாது. எனினும், அவர்கள் முஸ்லிம் பெயர்களுடனேயே அடையாளம் காணப்பட்டிருப்பதை மறுக்க முடியாது.

இதேவேளை, ஐ.எஸ் அமைப்பு இந்தத் தாக்குதல்களை உரிமை கோரியுள்ளதாகச் சர்வதேச செய்திகள் குறிப்பிடுகின்றன. இந்தப் பின்னணியில், இலங்கையில் முஸ்லிம் சமூகத்தின் மீதான சந்தேகப் பார்வை உருவாக, இது காரணமாகியுள்ளது.

இந்தத் தாக்குதலை, இலங்கையில் சாதாரண முஸ்லிம்கள் யாரும் ஏற்றுக் கொள்ளாத நிலையிலும், இந்தப் பயங்கரவாதிகள் செய்த மிலேச்சத்தனமான செயலுக்கு, இவர்களே விலைகொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது.

எது எவ்வாறிருந்தாலும், இலங்கையில் இடம்பெற்ற மனித வெடிகுண்டுத் தாக்குதல்கள், மிகுந்த கண்டனத்துக்கு உரியவையாகும். இவற்றை எந்தக் காரணங்களுக்காகவும் நியாயப்படுத்தவோ, ஏற்றுக் கொள்ளவோ முடியாது.

நியூசிலாந்தில் பள்ளிவாசலில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்குப் பதில் தாக்குதலாக, இது இருக்கலாம் என்று அனுமானிக்கப்பட்டாலும் கூட, யாரோ, எங்கோ செய்த தவறுக்காக, இலங்கையில் அப்பாவிக் கிறிஸ்தவர்கள் பலியெடுக்கப்படுவதையும் அதனால் முஸ்லிம்களுடனான ஏனைய சமூகத்தின் உறவு பாதிக்கப்படுவதையும் எவ்வகையிலும் அங்கிகரிக்க முடியாது.

இஸ்லாம் ஏனைய மதங்களையும் மனிதர்களையும் மதிக்கச் சொல்கின்றது. கொலையோ, வன்முறையோ இஸ்லாமிய மார்க்கத்தால் முன்மொழியப்பட்டவையல்ல.

உலகில் இடம்பெறுகின்ற சில பிழையான முன்னுதாரணங்கள் மற்றும் இஸ்லாமிய விரோத நாடுகளின் உத்திகளால், அவ்விதம் நோக்கப்படுகின்றதே தவிர, உண்மையான இஸ்லாம் இவ்வாறான கொடூர செயல்களை அங்கிகரிக்கவில்லை. அத்துடன்,புனிதப்போர் என்பது வேறு; அப்பாவிகளைக் கொல்வதை, அவ்வாறான புனித யுத்தமாக இஸ்லாமிய அறிஞர்கள் சொல்லவும் இல்லை.

ஆனால், இதையெல்லாம் மீறி, இலங்கையில் நடக்கக் கூடாத ஒரு பேரழிவு இடம்பெற்றிருக்கின்றது என்பது, முஸ்லிம்களுக்கு பெரும் கவலையையும் ஒருவித தலைகுனிவையும் ஏற்படுத்தியிருக்கின்றது.

இந்தத் தருணத்தில், கிறிஸ்தவர்கள் காட்டுகின்ற பொறுமை குறித்து, முஸ்லிம் பொதுமக்கள் மட்டுமன்றி, அரசியல்வாதிகளும் தங்களுக்கிடையில் நன்றி பாராட்டுவதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

விடுதலைப் புலிகள் செய்த குற்றத்துக்காக, எல்லாத் தமிழ் மக்களும் அதற்குப் பொறுப்பேற்க முடியாது. ஒரு சிங்களக் காடையர் குழு, முஸ்லிம்களைத் தாக்கியதற்காகச் சாதாரண சிங்கள மக்கள் அனைவரும், இனவாதிகளாக ஆகிவிட முடியாது என்பதைப் போலவே, யாருடைய ஏவலுக்காகவோ அல்லது நோக்கங்களை அடைந்து கொள்வதற்காகவோ ஒரு சிறுகுழுவினர் செய்த இந்த வன்கொடுமைக்காக, சுமார் 20 இலட்சம் முஸ்லிம் மக்கள் மீது, சுட்டுவிரல் நீட்டக் கூடாது என்ற குரல்கள், இப்போது பரவலாக எழுந்திருக்கின்றன. இது மிக முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும்.

அத்துடன், அடிப்படையற்ற விதத்தில், முஸ்லிம் அரசியல்வாதிகளுடன் முடிச்சுப் போட்டு அரசியல் செய்வதற்காகவோ, முஸ்லிம் இளைஞர்கள் மீது கெடுபிடிகளை மேற்கொள்வதற்காகவோ, இந்தத் தருணத்தைப் பயன்படுத்தக் கூடாது. முஸ்லிம்களின் பூரண ஒத்துழைப்புடன் குற்றவாளிகளைக் தண்டித்து, பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதையெல்லாம் மீறி, இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில், பொதுவாக நாட்டு மக்களிடமும் அரசியல்வாதிகள், அவதானிகளிடமும் சில கேள்விகள், சந்தேகங்கள் இருக்கின்றன.

எனவே, விசாரணைகளில் அதுகுறித்தும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இதில் முதலாவது கேள்வி, புலனாய்வுத் தகவல் கிடைத்தும், ஏன் பொறுப்பு வாய்ந்தவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை? என்பதாகும்.
அத்துடன், இலங்கையில் தௌஹீத் ஜமாஅத் மற்றும் இன்னுமோர் அமைப்பு இணைந்து, தாக்குதலை நடத்தியதாக அரசாங்கம் கூறினாலும், ஐ.எஸ் அதைப் பொறுப்பேற்றிருந்தாலும் இதில் வேறு ஏதாவது சர்வதேச மற்றும் உள்நாட்டு அரசியல் பின்னணி இருக்கின்றதா என்பதையும் முஸ்லிம்கள் மீது பழிபோடுவதற்கான முன்முயற்சியா என்பதையும் ஆராய வேண்டியுள்ளது.

இலங்கையில் முஸ்லிம்களை நெருக்குவாரப் படுத்துவதற்காகவும், வெளிநாடுகளின் ஆதிக்கத்தை அதிகரிப்பதற்காகவும் அரபுலகம் போல, குழப்பத்தை உண்டுபண்ணுவதற்காகவும் கிறிஸ்தவ மக்கள் இலக்கு வைக்கப்பட்டார்களா என்பதைக் கண்டறிய வேண்டும்.

அதேபோன்று, உள்நாட்டில் ஆட்சி அதிகார மாற்றத்துக்காக இது திட்டமிடப்பட்டதா என்பதுடன், போதைப் பொருள் மீதான கெடுபிடிகளின் எதிரொலியாக, இச்சம்பவம் இருக்கலாமா என்பதையும் புலன்விசாரணை செய்தாக வேண்டும்.

இலங்கையில் முஸ்லிம்கள் உட்பட எல்லா இன, மதக் குழுமத்தைச் சேர்ந்த மக்களும் ஒற்றுமையாக வாழவே விரும்புகின்றனர்.

எனவே, இதற்குக் குந்தகம் விளைவிக்கும் நோக்கிலான சதித்திட்டங்களும் சக்திகளும் முறைப்படி கட்டுப்படுத்தப்பட வேண்டும். இலங்கை போன்ற பல்லின நாடுகளுக்கு அது இன்றியமையாததும் கூட.

முஸ்லிம் அரசியல்வாதிகளின் பதில் கருத்து

கொழும்பு உட்பட, நாட்டின் பல பாகங்களிலும் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்தியதாக, முஸ்லிம் இளைஞர்கள் சிலரது பெயர் பாதுகாப்புத் தரப்பினரால் அறிவிக்கப்பட்டுள்ளன.

இவர்கள் முஸ்லிம் சமூகத்தின் ஆதரவைப் பெறாத சிறியதொரு பிரிவினரே என்றபோதும், பொதுவாக முஸ்லிம்களையும் தாடி வைத்து, தொப்பி போட்டவர்களையும் சந்தேகக் கண் கொண்டு பார்க்கின்ற நிலையும், புர்காவை தடை செய்ய வேண்டிய இக்கட்டான நிலையும் நாட்டில் ஏற்பட்டிருக்கின்றது.

இதனால், முஸ்லிம்கள் பெரும் சிக்கலுக்குள் அகப்பட்டுக் கொண்டிருப்பது மட்டுமன்றி, தாம் பழிக்குப்பழி வாங்கப்படுவோமோ என்ற அச்சமும் ஏற்பட்டிருக்கின்றது.

இதேவேளை, முஸ்லிம் அரசியல்வாதிகள் முஸ்லிம்களுக்குள் கட்டமைக்கப்பட்ட அடிப்படையிலான தீவிரவாத, பயங்கரவாத மற்றும் அடிப்படைவாத குழுக்கள் இல்லை என்றே ஆரம்பத்திலிருந்து கூறிவந்தனர்.

அதுதான் பரவலான முஸ்லிம்களின் நிலைப்பாடாகவும் இருந்தது. ஆனால், அவர்கள் மட்டுமன்றி, பாதுகாப்புத் தரப்பும் சர்வதேச பயங்கரவாத அமைப்பின் ஊடுருவல் குறிப்பிடத்தக்களவுக்கு இலங்கையில் இல்லையென்றே கூறி வந்தது.

ஆனால், கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தாக்குதல்களும், அதற்குக் காரணமானவர்கள் என வெளிவரும் பெயர்களும் பாதுகாப்புத் தரப்பை மாத்திரமன்றி, முஸ்லிம் சமூகத்தையே வெட்கித் தலைகுனியச் செய்திருக்கின்றது.

குறிப்பாக, முஸ்லிம் அரசியல்வாதிகள் ஏதும் பேச முடியாத நிலைக்குள் தள்ளப்பட்டிருக்கின்றனர்.

குறிப்பிட்ட ஒருசிலர் செய்த காரியத்துக்காக, ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் தவறான கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டாம் என்று நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் சில தமிழ் அரசியல்வாதிகளும் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஆனால், பெயர் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய முஸ்லிம் அரசியல்வாதிகள், மூன்று, நான்கு பேரின் பெயர்களைத் தாக்குதல் நடத்தியதான சந்தேகநபர்களுடன் தொடர்புபடுத்தி, சில ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

இது குறித்து, சம்பந்தப்பட்ட முஸ்லிம் அரசியல்வாதிகள் கவனம் செலுத்தியிருப்பதுடன், நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் தம்மீதான பொய்க் குற்றச்சாட்டுகளை மறுத்துரைத்துள்ளனர்.
அவை சோடிக்கப்பட்ட கதைகள் என்று குறிப்பிட்டுள்ள சம்பந்தப்பட்ட முஸ்லிம் அரசியல்வாதிகள், தாம் அரசியல்வாதிகள் என்ற வகையில், தம்முடன் பலரும் தொடர்பு வைத்திருப்பார்கள்; சந்திப்பார்கள் என்பதை உலகறியும். ஆனால், அவ்வாறானவர்கள் குற்றவாளியாக உறுதிப்படுத்தப்பட்டால் அவர்கள் மீதான சட்ட நடவடிக்கைக்குத் நாமே முன்னிற்போம் என்ற தொனியில் கருத்து வெளியிட்டுள்ளதைக் காணமுடிகின்றது.

எனவே, அரசியல்வாதிகளுடன் தொடர்பிருப்பது உறுதி செய்யப்பட்டால், அதனை விசாரித்து, உண்மைகளைக் கண்டறிவது வேறு விடயம்.

அதைவிடுத்து தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்துவதும், பிரச்சினையைத் திசை திருப்புவதும், இதனை முஸ்லிம்களுக்கு எதிரான ஆயுதமாகப் பயன்படுத்துவதும் நல்லதல்ல.

தாக்குதலின் ரிஷிமூலத்தை கண்டறிந்து, நிரந்தர தீர்வு காண்பதே இன்றைய தேவையாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கெஜ்ரிவால் மனைவி சுனிதாவுக்கு 2 இடங்களில் ஓட்டு உள்ளதாகப் புகார்!! (உலக செய்தி)
Next post பேஷன் ஷோவில் மயங்கி விழுந்து இறந்த மாடல் அழகி!! (உலக செய்தி)