அவர் நல்ல பாடகர் சிறந்த ஓவியர்.. :டூலெட் தயாரிப்பாளர் பிரேமா செழியன் ஓப்பன் டாக்!! (மகளிர் பக்கம்)

Read Time:17 Minute, 45 Second

பிரேமா செழியன். ஒளிப்பதிவாளர்-இயக்குநர் செழியனின் மனைவி. சிறந்த தயாரிப்பாளருக்கான தேசிய விருதை டூலெட் படத்திற்காகப் பெற்றவர். சென்னை சாலிகிராமத்தில் ‘தி மியூசிக் ஸ்கூல்’ என்கிற மேற்கத்திய இசைப் பள்ளியை நடத்தி வருகிறார். ஒரு பெண் நினைத்தால் குடும்பத்தை மட்டுமல்ல ஒரு திரைப்படத்தையே அழகாக வழி நடத்தி, விருதுவரை கொண்டு சேர்க்க முடியும் என நிரூபித்திருக்கிறார். டூலெட் படம் விருது பெற்ற நொடிகளின் பிரமிப்பை நம்மிடத்தில் பகிர்ந்தார்…

உங்களைப் பற்றி சொல்லுங்கள்…

என் சொந்த ஊர் மதுரை. எம்.காம்.எம்.எட். படித்து பிறகு கம்ப்யூட்டரில் ஜாவா, சிசி முடித்து அங்குள்ள நிறுவனத்தில் பணியில் இருந்தேன். வீட்டில் நான் கடைக்குட்டி. செல்லம் அதிகம். திருமணத்திற்கு பின் அவர் குடும்பம் எனக்கு கிடைத்த மிகப்பெரிய அன்பு பரிசு. அவர்கள் வீட்டில் பெண் குழந்தை இல்லை என்பதால் என்னை ஒரு மகளாகவே பார்த்தனர். மாமியார் எனக்கு அம்மாவாகவே இருந்தார். சின்ன வயதில் இசை மீது எனக்கு ஆர்வமிருந்தது. திரைப் பாடல்களைக் கேட்டுக்கொண்டே வேலை செய்வது எனக்கு பிடித்த விசயம். ஆனால் இசையை முறைப்படி பயில அப்பா அனுமதிக்கவில்லை. திருமணத்திற்கு பிறகு, மேற்கத்திய இசை தொடர்பாக இவர் பக்கம் பக்கமாக எழுதினார். அவற்றை நான் கம்ப்யூட்டரில் பதிவேற்றினேன்.அவர் எழுத்து என்னை வெகுவாக ஈர்த்தது.

இசை மீதிருந்த ஆர்வமும் இணைய, இசையை முறையாகக் கற்கலாம் என்று கீ போர்டு ஒன்றை வாங்கி கற்கத் தொடங்கினேன். அவர் எழுத்தில் தவறுகளைச் சுட்டிக் காட்டித் திருத்தும் அளவுக்குத் தேறினேன். தொடர்ந்து இசைப் பள்ளி ஒன்றை தொடங்கும் ஆர்வமும் எனக்கு வந்தது. என் விருப்பத்தை தெரிவித்து, 2012ல் ‘தி மியூசிக் ஸ்கூல்’ என்கிற இசைப்பள்ளியை தொடங்கினோம். கீ போர்டு, பியானோ, கிட்டார், வயலின் எல்லாம் இங்கு கற்றுத் தரப்படுகிறது. மாணவர்களை தயார்படுத்தி, தேர்வெழுத சென்னை அண்ணா சாலையில் உள்ள ‘டிரினிட்டி லண்டன் யுனிவெர்சிட்டி’ மையத்திற்கு அனுப்பி வைக்கிறோம். மேற்கத்திய இசை குறித்து செழியன் எழுதிய இரண்டாயிரம் பக்கங்களையும் 10 பாகங்களாகப் பிரித்து ‘தி மியூசிக் ஸ்கூல்’ என்கிற தலைப்பில் புத்தகம் வெளியிட்டோம். சென்னை புத்தக காட்சியில் ‘தி மியூசிக் ஸ்கூல் பப்ளிக்கேஷன்’ என ஸ்டால் அமைத்தோம். நாங்கள் எதிர்பார்த்ததைவிட சிறப்பாகவே விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.

பிரேமா செழியன் தயாரிப்பாளரானது எப்படி?

ஒரு வாசகியாக அவர் எழுத்துக்களை நான் முதலிலேயே படித்துவிடுவேன். டூலெட் படத்தின் கதையினை 2007ல் எழுதிவிட்டார். அந்தக் கதையினை படிக்கும்போதே எனக்கு பிடித்துப் போனது. எங்கள் வாழ்க்கையில் நடந்த ஒரு சில விசயங்கள், மற்றும் அவரது நண்பர்களின் அனுபவங்களின் தொகுப்புதான் படம். 2017ல் படமாக எடுக்க நினைத்து, நடிகர், நடிகைகள் தேர்வாகி, தயாரிப்பாளரும் முடிவானது. படப்பிடிப்பு தொடங்க இருந்த நிலையில், மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் தடங்கல் ஏற்பட்டது. எதற்கும் மனம் தளராதவர் ரொம்பவே சோர்வாகி, ஸ்கிரிப்டைத் தூக்கி வைத்துவிட்டார். அவரின் உழைப்பு வீணாகிவிட்டதே என நானும் வருந்தினேன்.

செலவு மொத்தமும் என் பொறுப்பு. நான்தயாரிப்பை கவனித்துக்கொள்கிறேன், பணத்தை பற்றி யோசிக்காமல் படப் பிடிப்பை தொடங்குங்கள் என்றேன். முதலில் அவர் என்னை நம்பாமல் சிரித்தார். முடியும் என்ற நம்பிக்கையை அவரிடத்தில் விதைத்தேன். கலங்கிய கண்களோடு படப்பிடிப்பை ஆரம்பித்தார். படப்பிடிப்பு துவங்கிய முதல் நாளில் இருந்தே அவருக்கு டென்ஷன் இல்லாமல், தேவையான பணத்தை எப்படியாவது தயார் செய்து கொடுத்துவிடுவேன். வெற்றிகரமாகப் படத்தை முடித்த கடைசி நாள் என்னால் எப்படி இது சாத்தியம் என அவரே பிரமித்தார். எனக்கும் அது மிரட்சியாக இருந்தது.படத்தை எப்படி எடுத்து முடித்தோம் என்றே தெரியவில்லை. பணத்தை தினமும் புரட்டிக் கொடுத்தது.செலவுகளை எழுதி வைத்தது என என் செயல்பாட்டைப் பார்த்தவர், ஆளுமை நிறைந்த ஒரு மனைவியைத்தான் அம்மா எனக்காகத் தேர்ந்தெடுத்திருக்கிறார் என நெகிழ்ச்சியோடு சொன்னார். இதைவிட வேறென்னவிருது வேண்டும் (சிரிக்கிறார்).

விருதைப் பற்றிச் சொல்லுங்கள்…

முதலில் கொல்கத்தாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில்தான் டூலெட் விருது வென்றது. அப்போது 12 படங்கள் நாமினேஷனில் இருந்தது. 12 படத்தின் இயக்குநர்களையும் தனியாக வரிசையாக அமர வைத்திருந்தார்கள். டூலெட் இயக்குநராக அவரும் வரிசையில் இருந்தார். இத்தாலி, ஸ்வீடன், பிரெஞ்சு என பல நாட்டின் ஜுரிகளும் அங்கே இருந்தனர். திக்..திக்.. என நிமிடங்கள் நகர்ந்தது.. 3வது இடத்திற்கான அறிவிப்பு. தொடர்ந்து 2வது இடமும் முடிந்தது. நான் சோர்ந்து விட்டேன். ஒவ்வொரு முறையும் அறிவிப்பிற்கு முன் 12 படங்களும் திரையில் சுற்றும். முதல் இடத்தை அறிவிக்கும் முன்பாக மீண்டும் 12ம் சுற்றியது. ‘தி பெஸ்ட் பியூட்சர் பிலிம் கோஸ் டூ டூலெட்’ என்றதும் என் இதயமே நின்றது. அவரைகட்டிப் பிடித்து அனைவரும் கொண்டாடினார்கள். விருதைப் பெறும்போது என் மனைவிதான் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் என அவர் சொன்னதும், என்னையும் மேடைக்கு அழைத்தார்கள். நேர்மையான கடின உழைப்பாளி அவர். இந்த அங்கீகாரம் அவருக்கு கிடைத்ததில் கண்ணீர் சிந்த நடந்து சென்று மேடை ஏறினேன். அவர் அம்மா இருந்திருந்தால் எத்தனை மகிழ்ச்சி அடைந்திருப்பார் என அந்த நொடி நினைத்தேன். அதன் பிறகே 100 சதவிகிதமும் தேசிய விருதுக்கான நம்பிக்கை எங்களுக்கு வந்தது.

தேசிய விருது அறிவிப்பு செய்தது ஏப்ரல் 13. தமிழ் புத்தாண்டிற்கு முதல் நாள். மதிய வேளையில் தூர்தர்ஷனில் நேரலை செல்கிறது. தொலைக்காட்சி முன்பு குடும்பமாக அமர்ந்திருந்தோம். எல்லா மாநிலப் படங்களும் அறிவிக்கப்பட்டன. தமிழ் மட்டும் சொல்லப்படாமலே இருந்தது. தேர்வுக் கமிட்டியின் சேகர் கபூர் அருகில் இருந்தவரிடம், தமிழ் என்றார் இறுதியாக. பக்கங்களைப் புரட்டியவர் “தி பெஸ்ட் பியூச்சர் பிலிம் கோஸ் டூ தமிழ் டூலெட்” என்றபோது ஊஊஊஊ என கத்தி நானும் குழந்தைகளும் கூச்சலிட்டோம். அப்போதும் அவர் நிதானமாய் சின்னதாக புன்னகைத்தார்.தொடர்ந்து மத்திய அரசிடமிருந்து, நீங்கள் அரசு மரியாதைக்குரிய ஒருவர் எனும் ரீதியில் என் பெயருக்கும் அவர் பெயருக்கும் தனித்தனியாக கடிதங்கள் வந்தது. எனக்கு சிறந்த தயாரிப்பாளருக்கான விருது வழங்கப்பட்டது. மே 3 டெல்லியில் இருவருமாய் விருதை வாங்கினோம். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மாம் பட விருதை பெற அவர் கணவர் போனிகபூர் அவரது மகள்கள் வந்திருந்தார்கள். காற்று வெளியிடை படத்திற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மனைவியோடு வந்திருந்தார், அதேபடத்தில் பின்னணி பாடிய சாஷாவும் விருது பெற வந்தார். மேலும் நிறைய பிரபலங்கள் அங்கிருந்தார்கள்.டூலெட் என் செல்லக் குழந்தை. விருதுக்காக பல ஊர்களுக்கும் எங்களை அழைத்துச் சென்றது. படத்தில் நடித்த நடிகர், நடிகை, குழந்தை நட்சத்திரம் என எல்லோருக்கும் சர்வதேச விருது கிடைத்தது. விருதுகளைப் பெற பல நாடுகளுக்கும் இவர் பயணித்துவிட்டார்.

டூலெட் படம் பற்றி…

தான் நினைத்ததை மட்டுமே எடுக்க வேண்டும் என அவர் உறுதியாக நினைத்தார். எங்கள் குடும்பத்தின் பங்களிப்பு படத்தில் நிறையவே இருக்கிறது. ‘டூலெட்’ என ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதியது 5ம் வகுப்பு படிக்கும் என் மகள் அதித்தா. படங்களை பேப்பரில் வரைந்து சுவற்றில் ஒட்டியது +1 படிக்கும் என் மகன் சிபி.இருவரும் இணைந்தே அந்த சுவற்றில் நிறைய கிறுக்கினார்கள். போஸ்டர்களை வரைந்தார்கள். படப்பிடிப்பிற்கு தேவையானதை முதல் நாள் இரவு பக்காவாகத் திட்டமிடுவோம். காட்சிக்குத் தேவையானதை அவர் வரிசைபடுத்தி எழுதுவார். தேவையற்ற செலவுகளை குறைத்து, தேவையானதை மட்டுமே வாங்கினோம்..

காட்சிகளின் எதார்த்தத்திற்காக நடிகர், நடிகை உடைகள் பெரும்பாலும் பயன்பாட்டில் இருந்தவையே. காட்சிகளின் நேர்த்திக்காக பயன்படாத பழைய பொருட்களை சேகரித்துக் கொடுத்தேன். ஷீலா பயன்படுத்திய பழைய ரேடியோவில் தொடங்கி, பழைய ஹேண்ட் பேக், சந்தோஷ் பயன்படுத்திய பழைய நோக்கியா மொபைல், ஜோல்னா பை, அந்த வீட்டில் இடம் பெற்ற தலையணை, படுக்கை விரிப்பு என அனைத்தும் எங்கள் வீட்டில் இருந்தவை தான். குட்டி பையன் பயன்படுத்திய விளையாட்டு பொருட்களும் எங்கள் குழந்தைகள் பயன்படுத்தியதே. வீட்டைக் காலி செய்கிற காட்சியில், எங்கள் வீட்டில் இருந்த பொருட்களையே மூட்டை மூட்டையாகக் கட்டிவைத்துவிட்டேன்.

இயக்குநர் செழியன் பற்றி சொல்லுங்கள்…

அவர் பிறந்து வளர்ந்த ஊர் சிவகங்கை. அவரது பெற்றோர்கள் இருவருமே ஆசிரியர்கள். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் சிவில் இஞ்சினியரிங் முடித்தார். சின்ன வயதில் இருந்தே சினிமாவில் ஆர்வம் இருந்திருக்கிறது.இயக்குநர் ஆவதே அவர் கனவு. அலைபாயுதே படம் வெளியானபோது எங்கள் திருமணம் நடந்தது. எங்களுக்கு சிபி செழியன், அதித்தா செழியன் என இரண்டு குழந்தைகள். அவர் பெண்களை ரொம்பவும் மதிப்பவர். எதற்கும் அதிகாரம் செய்ய மாட்டார். தன்னை பெரிதாக வெளிப் படுத்திக்கொள்ள மாட்டார். ரொம்பவே நிதானமாக அமைதியாகச் செயல்படுவார். எத்தனை பெரிய மகிழ்ச்சியும் அவருக்கு சாதாரண நிகழ்வுதான். குற்றங்களை பெரிதாக்கி குறை காணாமல் திறமைகளை மட்டுமே பார்ப்பார். எத்தனை மணிக்கு சென்று படுத்தாலும் அதிகாலை 4,30 மணிக்கு டான் என எழுவார். அவர் எழுதிய கவிதைகளும் சிறுகதைகளும் புத்தகங்களாக வெளிவந்துள்ளன. பெலோஷிப் விருது மற்றும் கதா விருதுகளைப் பெற்றுள்ளார்.

மேற்கத்திய இசையில் டிரினிட்டி லண்டன் யுனிவர்சிட்டியில் டிஸ்டிங்சன் வாங்கியுள்ளார். நல்ல பாடகர். கீபோர்ட், பியானோவை சிறப்பாக பிளே பண்ணுவார். எல்லாவற்றுக்கும் மேல் சிறந்த ஓவியர்.இன்று அவர் வெற்றியினை சுவைத்தாலும், அவர் கடந்து வந்த பாதைகள் வலியானது. சென்னைக்குள் நுழையும் போதே சினிமாக் கனவுகளோடுதான் நுழைந்தார். எப்போதும் உலக சினிமாவை யும், புத்தகங்களையும் நேசித்துக் கொண்டே இருப்பவர். உலக சினிமா தொடரை இரண்டு ஆண்டுகளுக்கு மேல் எழுதினார். அவர் எதையாவது செய்கிறார் என்றால் அது சினிமா தொடர்பாகவே இருக்கும்.வித்தியாசமாக புகைப்படங்களை எடுப்பதில் அவருக்கு அலாதி பிரியம். சினிமாட்டோகிராஃபராக சினிமாவில் தன் பயணத்தை தொடங்கினார். பி.சி. ஸ்ரீராம் சாரிடம் துணை ஒளிப்பதிவாளராக இருந்தார். பாலாஜி சக்திவேல் சாரின் கல்லூரி படத்தில் துணை இயக்குநராக அறிமுகமானார். தனது முதல் படப் பிடிப்பான கல்லூரி படம் பிறந்த ஊரான சிவகங்கையில் நடந்ததில் இவருக்கு மகிழ்ச்சி.

தொடர்ந்து தென்மேற்கு பருவக் காற்று, ரெட்டை சுழி, பரதேசி, தாரதப்பட்டை என பணியாற்றினார். பரதேசி படத்தில் பணியாற்றியபோது வீடு முழுவதும் அட்டைகளில் படங்களாக வரைந்து வைத்திருந்தார். அவர் எழுதுவதே ஆர்ட் மாதிரி இருக்கும். அவசரத்தில் அட்ரஸ் எழுதினாலும் பேப்பரை விசிட்டிங் கார்ட் மாதிரி கிழித்து பிரிண்ட் எடுத்த மாதிரி அழகாக எழுதிக் கொடுப்பார். பரதேசி படத்தின் டைட்டிலை இவர்தான் எழுதி டிசைன் செய்தார். எதைச் செய்தாலும் அர்ப்பணிப்பு உணர்வோடு செய்வார். தமிழ் பற்றாளர். தன் கையெழுத்தை எப்பொழுதும் தமிழில்தான் போடுவார்.கொல்கத்தாவில் இவர் ஒரு படப் பிடிப்பில் இருந்தபோதுதான் இவரது அம்மா மாரடைப்பால் திடீரென இறந்தார். எந்த மாநிலத்தில் இருந்து படப்பிடிப்பை பாதியில் நிறுத்தி கலங்கிய மனநிலையோடு கிளம்பினாரோ, அந்த மாநிலத்திலேயே அவரின் வெற்றிக்கான முதல் விருது கிடைத்ததில் மகிழ்ச்சி. தன்னுடைய மிகப் பெரிய வெற்றியையும், விருதுகளையும் பார்க்க அம்மா இல்லையே என்கிற வருத்தம் அவருக்குள் எப்போதும் இருக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஃபைப்ராய்டை தடுக்க எளிய வழி… உடற்பயிற்சி!! (மருத்துவம்)
Next post ஒரு தாயின் குரல்!! (மருத்துவம்)