“டான்” தொலைக்காட்சி உரிமையாளர் கைது
உரிமம் பெறாமல் திரைப் படங்களை வெளிநாடுகளில் திரையிட்ட “டான்” தொலைக்காட்சி உரிமையாளர் கைது செய்யப்பட்டார். சென்னை அசோக் நகரில் டான் தொலைக்காட்சி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இதன் உரிமையாளர் குலாம் உசேன் மலேசியாவை சேர்ந்தவர். இதன் இயக்குனர்களாக பிரான்ஸைச் சேர்ந்த குகநாதன், மணிவேல் மெல்லோன் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த அருள்குமாரன், ஆனந்த கணேஷ் ஆகியோர் உள்ளனர்.
இந்த நிறுவனம் தமிழ்நாட்டிலும், வெளி நாடுகளிலும் பல தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது. உரிமம் இல்லாமல் தமிழ்த் திரைப் படங்களையும் இந்த நிறுவனம் வெளிநாட்டு தொலைக்காட்சிகளுக்கு விற்று, ஒளிபரப்பி வந்தது.
இது தொடர்பாக திருட்டி விசிடி போலீசாரிடம் புகார்கள் குவிந்தன. இதையடுத்து போலீசார் டான் நிறுவன நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது உரிமம் இல்லாத திரைப் படங்களை இந்தியாவுக்குள் ஒளிப்பரப்பவில்லை. வெளி நாடுகளில் ஒளிபரப்பினோம் என்று ஒப்புக் கொண்டனர்.
இதையடுத்து அந்த நிறுவனத்துக்கு போலீசார் சீல் வைத்தனர். மேலும் அதன் உரிமையாளர் குலாம் உசேனை கைது செய்தனர். பிரான்ஸைச் சேர்ந்த குகநாதன், மணிவேல் மெல்லோன், புதுச்சேரியை சேர்ந்த அருள்குமரன், ஆனந்த் கணேஷ், நிர்வாகி கபிலன் ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.