கொரியா ஓபன் : ஹிங்கிஸை வீழ்த்தினார் சானியா மிர்சா!
சன்ஃபீஸ்ட் ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதியில் தன்னை நேர் செட்களில் தோற்கடித்த உலகத் தரவரிசையில் 9வது இடத்தில் உள்ள மார்ட்டினா ஹிங்கிஸை, கொரியா ஓபன் டென்னிஸ் போட்டியின் 2வது சுற்றில் சானியா மிர்சா தோற்கடித்துள்ளார்!
தென் கொரியத் தலைநகரான சியோலில் நடைபெற்று வரும் உலக டென்னிஸ் சங்கத்தின் அங்கீகாரம் பெற்ற ஹன்சால் கொரியா ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் உள்ளூர் வீராங்கனை லீ ஏ ராவை 3-6, 6-0, 6-0 என்ற செட்கள் கணக்கில் சானியா வென்றார்.
இன்று நடந்த 2வது சுற்றுப் போட்டியில், முதல் செட்டை 4-6 என்ற கணக்கில் தோற்ற சானியா மிர்சா, அடுத்த செட்டை 6-0 என்ற கணக்கில் வென்றார். வெற்றி – தோல்வியை முடிவு செய்யும் 3வது சுற்றில் இரு வீராங்கனைகளும் சிறப்பாக விளையாடினர். ஆயினும் சானியா, ஹிங்கிஸின் சர்வை உடைத்து 6-4 என்ற ஆட்டக் கணக்கில் வென்று 3வது சுற்றிற்கு முன்னேறினார்.
உலகத் தரவரிசையில் 9வது இடத்தில் உள்ள வீராங்கனையை வீழ்த்தியதனால் சானியா உலகத் தரவரிசையில் மேலும் முன்னேறுவார்.