நடு வானில் விமானங்கள் மோதல்: 155 பேர் பலி?
பிரேசிலில், அமேசான் காட்டின் மீது நடு வானில் இரு விமானங்கள் பயங்கரமாக மோதிக் கொண்டன. இதில் பயணிகள் 155 பேரும் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. பிரேசில் நாட்டின் அமேசான் நகரில் உள்ள மனோஸ் விமான நிலையத்திலிருந்து 149 பயணிகள், 6 ஊழியர்களுடன் விமானம் ஒன்று தலைநகர் பிரேசிலியாவுக்கு கிளம்பியது. இந்த விமானம், பீக்ஸோடோ டி அசெவேடோ என்ற இடத்தில் வந்தபோது விமானத்துக்கும், தரைக் கட்டுப்பாட்டு நிலையத்திற்கும் இடையேயான ரேடார் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து அந்த விமானம் என்ன ஆனது என்று தேடும் பணி தொடங்கியது. இந்த நிலையில்தான் அமேசான் காட்டின் மீது அந்த விமானம் பறந்து கொண்டிருந்தபோது, எதிரே குறுக்கிட்ட சிறு விமானம் ஒன்றுடன் மோதியது தெரிய வந்தது.
இந்த விபத்தில் பெரிய விமானத்தில் பயணித்த 155 பேரின் கதி என்ன என்பது தெரியவில்லை. அவர்கள் அனைவரும் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. விமானத்தில் பயணித்து காணாமல் போயுள்ள 155 பேரையும் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. ஜரீனா என்ற இடத்தில் விபத்தில் சிக்கியவர்கள் மாட்டியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எனவே இப்பகுதியில் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.