பூமிக்கு திரும்பினார் முதல் பெண் விண்வெளிப் பயணி
விண்ணில் சுற்றிக்கொண்டு இருக்கும் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு 11~நாள் சுற்றுப் பயணம் சென்றிருந்த முதல் பெண் விண்வெளிச் சுற்றுலாப் பயணியான அனெüஷா அன்சாரி, வெள்ளிக்கிழமை காலையில், ரஷியாவின் சோயுஸ் விண்கலம் மூலம் பத்திரமாகப் பூமிக்குத் திரும்பினார். அவருடன் ரஷிய விண்வெளி வீரர் பாவல் வினோக்ரதோவ், அமெரிக்க விண்வெளி வீரர் ஜெஃப்ரே வில்லியம்ஸ் ஆகியோரும் பூமிக்குத் திரும்பினர்.
முன்னாள் சோவியத் குடியரசான கஜக்ஸ்தானின் அர்க்கலைக் நகரிலிருந்து 90 கி.மீ. தொலைவில் வெள்ளிக்கிழமை இந்திய நேரப்படி காலை 6.44-க்கு (மாஸ்கோ நேரம் காலை 5.14) அவர்கள் வந்த சோயுஸ் விண்கலம் தரையிறங்கியது. அவர்களை மீட்க 3 விமானங்களும் 12 ஹெலிகாப்டர்களும் தயாராக இருந்தன.
விண்கலத்திலிருந்து இறங்கிய அவர்கள் மூவரும் புல்வெளிகளுக்கு நடுவே நாற்காலிகளில் அமர வைக்கப்பட்டனர். அப் பகுதியில் அப்பொழுது உறைபனி நிலையைவிட கடுங்குளிர் (மைனஸ் 3 டிகிரி செல்ஷியஸ்) நிலவியது. உடனடியாக அனெüஷா அன்சாரிக்கு ரோஜா மலர்க்கொத்து கொடுத்து வரவேற்று, கனமான கம்பளிப் போர்வையால் போர்த்தி, தயாராக நின்ற ஹெலிகாப்டரில் ஏற்றி, கஜக்ஸ்தானின் குஸ்தானை நகருக்கு அதிகாரிகள் அனுப்பிவைத்தனர். அங்கிருந்து மாஸ்கோ அருகே உள்ள ரஷிய விண்வெளி வீரர்கள் பயிற்சி மையத்துக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.
அனெüஷா அன்சாரியின் கணவர் ஹமீதும் அவரை வரவேற்க அங்கு வந்திருந்தார். ஈரானைப் பூர்வீகமாகக் கொண்ட அனெüஷா, அமெரிக்காவில் பெரிய தொழிலதிபராவார். 90 கோடி Indian ரூபாய் கட்டணம் செலுத்தி, விண்வெளிக்கு 11-நாள் சுற்றுலா சென்று திரும்பியிருக்கிறார் அவர்.