ராணுவம் – புலிகள் மோதலில் 15 பேர் பலி
இலங்கையின் வட கிழக்கில் நடந்த இரு வேறு மோதல்களில் 12 விடுதலைப் புலிகள் உள்பட 15 பேர் கொல்லப்பட்டனர். கிழக்கில் உள்ள சம்பூரை ராணுவம், புலிகளிடமிருந்து மீட்ட பின்னர் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே நடந்த கடும் மோதல் தணிந்தது. அதன் பின்னர் இரு தரப்பினரும் பெரிய அளவிலான மோதலில் ஈடுபடாமல் உள்ளனர்.
இந்த நிலையில் அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் தயார் என விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் சமீபத்தில் அறிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்க நார்வே தூதுக் குழு நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
இந்த நிலையில் இலங்கையின் வட கிழக்கு மாகாணத்தில் மோதல் வெடித்துள்ளது. திரிகோணமலை மாவட்டம் புல்லுமலை என்ற இடத்தில் ராணுவ அதிரடிப்படையினரின் முகாம் மீது இன்று அதிகாலை விடுதலைப் புலிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.
பதிலுக்கு ராணுவ¬ம் திருப்பித் தாக்கியது. இந்த மோதலில் 12 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது. அவர்களிடமிருந்து ஏராளமான டி56 ரக துப்பாக்கிகளை ராணுவம் பறிமுதல் செய்தது.
இதேபோல, மன்னார்வவுனியா சாலையில் உள்ள சலம்பக்குளம் என்ற இடத்தில் நடந்த மற்றொரு மோதலில் 3 போலீஸார் கொல்லப்பட்டனர். கண்ணி வெடியில் சிக்கி அவர்கள் இறந்தனர்.
பேச்சுவார்த்தை தொடங்கக் கூடிய சூழ்நிலை உருவாகி வரும் நிலையில் புதிய மோதலில் 15 பேர் கொல்லப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.