By 4 November 2019 0 Comments

ஜனாதிபதித் தேர்தல்: தமிழர் தலைமைகளின் நிலைப்பாடுகள் !!(கட்டுரை)

எதிர்பார்த்தது போலவே, யாழ்ப்பாணம், கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களின் உந்துதலின் பெயரில், ஐந்து தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து சமர்ப்பித்த 13 அம்சக் கோரிக்கைகளை, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எந்தப் பிரதான வேட்பாளரும் ஏற்றுக்கொள்ளவில்லை.

ஜே.வி.பி சிலவற்றை ஏற்றுக்கொள்ள முடியும் என்று குறிப்பிட்டிருக்கிறது; ஆனால், வடக்கு, கிழக்கு இணைப்பை முற்றாக நிராகரித்து இருக்கிறது. கோட்டா, மேலோட்டமாகக் குறித்த கோரிக்கைகளை நிராகரித்திருக்கிறார் என்று செய்திக்குறிப்புகள் மூலம் தெரிகிறது. சஜித், இதுபற்றி வாய்திறக்கவே இல்லை.

இந்தச் சூழலில், குறித்த 13 அம்சக் கோரிக்கைகளைக் கையளித்த ஐந்து தமிழ்க் கட்சிகளில் ஒன்றான, தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் முன்னாள் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சருமான நீதியரசர் சீ.வி. விக்னேஸ்வரன், தபால்மூல வாக்களிப்புக்கு முன்னதாகத் தம்முடைய இறுதி நிலைப்பாட்டை, அறிக்கையொன்றில் மூலம் தெரியப்படுத்தியிருந்தார்.

அந்த அறிக்கையில் அவர், ‘ஒற்றை ஆட்சி முறைமையை நிராகரித்து, இணைந்த வடக்கு, கிழக்கில் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்ற தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் கோரிக்கை, இந்த ஆவணத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது; அத்துடன், உடனடியாக மேற்கொள்ள வேண்டிய பொருளாதார, மனிதாபிமான நடவடிக்கைகளையும் இந்த ஆவணம் வலியுறுத்தியுள்ளது. தமிழ் மக்கள் சார்பில் முன்வைக்கப்பட்ட, இந்த 13 அம்சக் கோரிக்கைகளையும் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்கள் பரிசீலிக்கவேண்டும் என்றும், அவற்றை நிறைவேற்றுவது தொடர்பில் அவர்களுடன் பேசுவதற்குத் தயாராக இருப்பதாகவும் நாம் அறிவித்திருந்தோம். ஆனால், எந்தப் பிரதான கட்சிகளின் முக்கிய சிங்கள ஜனாதிபதி வேட்பாளருமே, இந்தக் கோரிக்கைகளின் அடிப்படையில் எம்முடன் பேசுவதற்கு முன்வரவில்லை’ என்பதைக் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

குறித்த 13 அம்சக் கோரிக்கைகள் தொடர்பில், தெற்கில் முன்வைக்கப்படும் எதிர்மறைப் பிரசாரம் பற்றித் தனது அறிக்கையில் கருத்துரைத்த நீதியரசர் விக்னேஸ்வரன், ‘எமது கோரிக்கைகள் தொடர்பில், இனவாதக் கருத்துகளை முன்வைத்து, பேரினவாதச் சக்திகளைத் திருப்திப்படுத்தி, சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்ளும் குறுகிய அரசியலிலேதான், மற்றைய பிரதான சிங்கள வேட்பாளர்கள் அனைவரும் ஈடுபட்டுள்ளார்கள். துரதிர்ஷ்டவசமாகத் தென் இலங்கையின் தேர்தல் இயக்கவியலும் முற்றுமுழுதாக மகாவம்ச மனோநிலைக்கு உட்பட்டுள்ளது என்று காண்கின்றோம்’ என்று, தனது மன ஆதங்கத்தைப் பதிவு செய்துள்ளார்.

மேலும், ‘அத்துடன் நேற்றுத் திங்கட் கிழமை வரை, குறிப்பிட்ட ஐந்து தமிழ்க் கட்சிகளும் கூட, ஒரு பொது முடிவுக்கு இதுவரை வரவில்லை என்பதும் கவலைக்குரிய விடயமாகும்’ என்றும் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

13 அம்சக் கோரிக்கையை, முதன்மை ஜனாதிபதி வேட்பாளர்களிடம் முன்வைத்த பின்னர், அந்தக் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதன் பின்னர், என்ன செய்வதென்று முடிவெடுப்பதில், ஒன்றிணைந்த ஐந்து கட்சிகளால் ஒன்றுபட முடியவில்லை என்பது, இந்த அறிக்கையின் மூலம் வௌிப்பட்டு நிற்கிறது.

ஜனாதிபதித் தேர்தலில், யாரை ஆதரிப்பது என்ற நிலைப்பாடு பற்றித் தனது அறிக்கையில், ‘தமிழ் மக்களின் நியாயமான 13 அம்சக் கோரிக்கைகள் தொடர்பாகப் பிரதான சிங்களக் கட்சிகள் எம்முடன் பேசக் கூடத் தயாராக இல்லாத சூழ்நிலையில், எந்த ஒரு சிங்கள வேட்பாளருக்கும் வாக்களிக்கும்படி, எமது விரலால் சுட்டிக் காட்டுவதற்கான தார்மீக உரிமை, எமக்கு இல்லை என்பதே எனதும் எமது கட்சியினதும் நிலைப்பாடாகும்’ என்று நீதியரசர் விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

‘ஜனநாயக ரீதியாகத் தேர்தலில் வாக்களிக்கும் எமது மக்களின் ஜனநாயக உரிமையை, நாம் மதிக்கின்றோம். அவ்வுரித்தை, எம்மக்கள் பயன்படுத்த விரும்பின், எமது கடந்த கால வரலாறு, தற்போதுள்ள அகப்புற சூழ்நிலைகளைக் கவனத்திற்கொண்டு, மக்கள் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கருதுகின்றோம். எம்மால் முன்வைக்கப்பட்ட 13 அம்சக் கோரிக்கைகளை, பிரதான சிங்கள வேட்பாளர்கள் கவனத்தில் கொள்ளாத இத்தகைய சூழ்நிலையில், அவற்றை நாமே கைவிட்டுவிட்டு, எமது சகோதரக் கட்சிகள், எந்த ஒரு முக்கிய கட்சி வேட்பாளருக்கேனும் களம் அமைத்து, கூட்டங்கள் கூட்டி, வெளிப்படையாக வாக்குக் கேட்க மாட்டார்கள் என நம்புகின்றோம். எமது நியாயமான 13 அம்சக் கோரிக்கைகள் தொடர்பாகக் கலந்துரையாடக் கூட விரும்பாத வேட்பாளருக்கு, வாக்களிக்குமாறு கேட்கும் தார்மீக உரிமை, எந்த ஒரு கட்சிக்கும் இல்லை என்பதே, எமது நிலைப்பாடாகும்’ என்றும் நீதியரசர் சீ. வி. விக்னேஸ்வரன் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

சுருங்கக் கூறின், வாக்களிக்க விரும்பும் தமிழ் மக்கள், அனைத்து விடயங்களையும் கவனமாகக் கருத்திற்கொண்டு வாக்களிக்கவும்; ஆனால், தமிழ் மக்களின் கோரிக்கைகளை நிராகரித்த, அதைப்பற்றிப் பேசவே தயங்கும் வேட்பாளரைத் தமிழ் அரசியல் கட்சிகள் ஆதரிப்பது அபத்தமானது என்பதே, சீ.வி. விக்னேஸ்வரனின் நிலைப்பாடாகும்.

மறுபுறத்தில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, மீண்டும் தனது தேர்தல் புறக்கணிப்புக் கோரிக்கையை முன்வைத்திருக்கிறது. இதுபற்றி ஊடகங்களுக்குக் கருத்துரைத்த அக்கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், “ஜனாதிபதித் தேர்தலைத் தமிழ் மக்கள் புறக்கணிக்கவேண்டும் என்ற முடிவைத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாம் எடுத்துள்ளோம். இந்த முடிவை, மறுபரிசீலனை செய்யவேண்டும் என நினைக்கும் வல்லரசுச் சக்திகள், சமஷ்டித் தீர்வு பெற்றுத்தரல், போர்க்குற்றத்துக்கான பொறுப்புக்கூறலை நடத்துதல் ஆகிய இரு விடயங்களுக்கான உத்தரவாதத்தைப் பெற்றுத்தர வேண்டும். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற முதன்மை வேட்பாளர்கள், தங்களின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தி உள்ளார்கள்.

அவர்களுடைய கருத்துகளைப் பார்த்தால், முக்கியமான மூன்று கட்சிகளின் வேட்பாளர்களின் நிலைப்பாடு, பொதுவானதாகவே உள்ளது. இலங்கை, சிங்கள பௌத்த நாடு என்ற விடயமும் அதற்கு மேலதிகமாக, முதன்மையான இரண்டு கட்சியும் இலங்கை என்ற நாடு, ஒற்றையாட்சி நாடாக மட்டும்தான் இருக்கமுடியும்; அந்த ஒற்றையாட்சித் தன்மையைப் பலப்படுத்துவதுதான் தமது நோக்கம் என்று மிகத் தெளிவாகக் கூறியுள்ளன” என்று தெரிவித்திருந்தார்.

அத்துடன், “தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இரண்டு விடயங்கள் முக்கியமானவை. அரசியல் தீர்வு; அதில் சிறப்பாக ஒற்றையாட்சியை நிராகரித்து, தமிழ்த் தேசம் அங்கிகரிக்கப்படுகின்ற தமிழரின் இறைமை அடிப்படையில், ஒரு சமஷ்டித் தீர்வுதான் எங்களுக்குத் தேவையான விடயம். அதனால் மட்டுமே, தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கட்டமைப்பு சார்ந்த இன அழிப்பிலிருந்து எமது மக்களைப் பாதுகாத்துக்கொள்ளலாம்.

ஏற்கெனவே, இடம்பெற்றிருந்த இனஅழிப்பு, முள்ளிவாய்க்கால் இன அழிப்பில் அத்தகைய சம்வங்கள் தொடராமல் இருப்பதற்கு, நடந்த குற்றங்களுக்கு நாங்கள், பொறுப்புக்கூறலைச் செய்தே ஆகவேண்டும். அவ்வாறு செய்வதே, கடந்த காலத்தைப்போன்று எதிர்காலத்திலும் தமிழ் மக்களை அழிக்கலாம் என்று நினைப்பவர்களுக்கு எச்சரிக்கையாக அமையும். இவை, இரண்டும்தான் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இன்று நடக்கும் அத்தனை நடவடிக்கைகளுக்கும் தீர்வைக் கொடுக்கும். இதில் எந்தவிதமான விட்டுக்கொடுப்புக்கும் இடமில்லை. ஆனால், இவை எதையும் கருத்தில் கொள்ளாது, சிங்கள வேட்பாளர்கள் நேர் எதிரான செயற்பாடுகளைத் தங்களை வேட்பாளர்களாக அறிமுகப்படுத்திய மாநாடுகளில் தீர்மானங்களை எடுத்துள்ளார்கள்.

இத்தகைய நிலையில், தமிழ் மக்களுக்கு யோசிப்பதற்கு ஒன்றுமேயில்லை. நாங்கள், தமிழ் மக்களுடைய நலன்கள் என்று பார்ப்பதால், எங்களுக்கு இந்தத் தேர்தலில் எவ்விதமான அக்கறையும் இருக்கமுடியாது. எங்களுக்குரிய தேர்தல் இதுவல்ல என்பதுதான் இன்றைக்குள்ள யதார்த்தம். இதற்கு மாற்று வழி எதுவும் இல்லை. ஆனால், புறக்கணிப்பு என்ற விடயம், கடும் போட்டி ஏற்படுகின்ற வேட்பாளர்கள் மத்தியில், அவர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்துகின்ற முடிவாக இருக்கலாம். தமிழ் மக்களின் வாக்குகள் இல்லாமல் வெற்றியடைய முடியாத நிலைமை என்ற முடிவைத் தேர்தல்ப் புறக்கணிப்பால் உருவாக்கமுடியும்” என்றும் தெரிவித்திருந்தார்.

சுருங்கக் கூறின், கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் நிலைப்பாடானது, தமிழ் மக்கள் தேர்தலைப் புறக்கணித்தால், அது நிச்சயம், ஒரு பிரதான வேட்பாளருக்கேனும் பாதகமாக அமையும்; அந்தப் பாதக விளைவை, அவர்கள் தடுக்க நினைத்தால், தமிழ் மக்களின் ஆதரவு அவர்களுக்கு வேண்டுமென்றால், அவர்கள் தமிழர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்; இல்லையென்றால், தமிழ் மக்கள் எந்த நிபந்தனையுமின்றி, வாக்களிப்பதால் பயனில்லை என்பதாகும்.

மறுபுறத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அதன் பிரதான பங்காளியான இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலான தனது நிலைப்பாடு பற்றித் தொடர்ந்து மௌனம் காத்துவருகிறது.

பதின்மூன்று அம்சக் கோரிக்கைகளை முன்வைத்துக் கையொப்பமிட்ட ஐந்து தமிழ்க் கட்சிகளில் இலங்கைத் தமிழரசுக்கட்சியும் ஒன்றாகும். ஆயினும், இன்றுவரை ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை ஆதரிப்பது, தேர்தல் புறக்கணிப்பு என, எந்த நிலைப்பாட்டையும் தமிழரசுக் கட்சி அறிவிக்கவில்லை.

கோட்டாவினதும் சஜித்தினதும் தேர்தல் விஞ்ஞாபனங்களை ஆராய்ந்து வருகிறோம் என்பதே, தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிடம் இருந்துவந்த அண்மைய அறிக்கைகளாகும். 2015 ஆம் ஆண்டுத் தேர்தலில் கூட, தேர்தல் பிரசாரக் கட்டத்தின் அந்தம் வரை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தனது நிலைப்பாட்டை வௌிப்படையாக அறிவிக்கவில்லை. அதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட, அதன் ஆதரவைப் பெறும் பிரதான வேட்பாளரின் தந்திரோபாயமும் ஒரு காரணமாக இருக்கலாம் என்பதையும் இங்கு மறுக்க முடியாது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வௌிப்படையான ஆதரவு என்பது, தெற்கின் தீவிர ‘சிங்கள-பௌத்த’ வாக்கு வங்கியைப் பாதிக்கலாம் என்ற அச்சம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வௌிப்படையான ஆதரவைப் பெறும் பிரதான வேட்பாளருக்கு இருக்கும் ஒன்று.

குறிப்பாக, எழுத்துமூல உறுதிமொழிகளை வழங்குவதில், இந்த அச்சம் பெரும் தயக்கத்தை ஏற்படுத்திவிடுகிறது. ஏனெனில், மாற்றுப் பிரதான வேட்பாளர் தரப்பு, தீவிர ‘சிங்கள-பௌத்த’ வாக்கு வங்கிக்கு முன்னால், இதைத் தமிழ் மக்களுக்கு ‘தனிநாடு’ வழங்குவதற்கான ஒரு நடவடிக்கையாகக் காட்ட முனைவது வழக்கமாகிவிட்டது என்றால் அது மிகையல்ல.

ஆகவே, ஒன்றோடொன்று முரணாகக் கருதிக்கொள்ளும் இனத் தேசியங்களின் நலன்கள் இடையேயான போட்டியில், ஒரு சமநிலையை அடைந்துகொள்ளும் சவால், தமிழ் தலைமைகளுக்கு மட்டுமல்ல, சிங்களப் பௌத்த தலைமைகளுக்கும் பெருஞ்சிக்கலானதே! தற்போது, இந்தச் சிக்கல் முஸ்லிம்கள், சிங்களப் பௌத்த தலைமைகள் இடையேயும் ஏற்பட்டு வருவதையும் காணக்கூடியதாக இருக்கிறது. இந்த நிலையில், தேர்தலுக்குச் சில நாள்கள் முன்பதாகத் தம்முடைய ஆதரவு யாருக்கு என்பதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழரசுக் கட்சி அறிவிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கைத் தமிழரசுக் கட்சியைப் பொறுத்தவரையில், அது ஒருபோதும் தேர்தலைப் புறக்கணிக்கக் கோராது என்பது நிச்சயமானது. தேர்தல்ப் புறக்கணிப்புக் கோரிக்கையை முன்வைப்பதில், இன்னொரு சிக்கல் இருக்கிறது. தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகத் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் ஒரு கட்சியானது, தேர்தலைப் புறக்கணிக்கக் கோரும் போது, ஒருவேளை தமிழ் மக்கள் அந்தக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளாது தேர்தலில் கணிசமானளவில் வாக்களித்தால், அது புறக்கணிப்புக் கோரிக்கையை விடுத்த குறித்த கட்சியின் செல்வாக்கை மட்டுமல்ல, தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகத் தம்மை முன்னிறுத்திக்கொள்ளும் அவர்களது ஏற்புடைமையையும் கடுமையாகப் பாதிப்பதாக அமையும்.
ஆகவே, புறக்கணிப்புக் கோரிக்கை என்பது, ‘எடுத்தோம், கவிழ்த்தோம்’ என்று முன்வைக்கக்கூடியதொரு விடயமல்ல; தமிழரசுக் கட்சியோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ, தானே விரும்பினால் கூட, புறக்கணிப்புக் கோரிக்கையை முன்வைக்கத் தயங்கும். அதற்குக் காரணம், தாம் விடுதலைப் புலிகள் அல்ல; அத்தகைய செல்வாக்கோ, பலமோ தம்மிடம் இல்லை என்பதையும் தமிழரசுக் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அறிந்தே இருக்கிறது.

ஆகவேதான், வாய்ச்சவடால் அரசியலை முன்னெடுப்பதில், தயக்கம் காட்டுகிறது. இந்தத் தயக்கத்தை நீதியரசர் விக்னேஸ்வரனின் அறிக்கையிலும் காணலாம். இதே காரணங்களுக்காகத்தான் அவர் கூட, புறக்கணிப்பு என்ற கோரிக்கையை முன்வைக்கவில்லை; மாறாகத் தமிழ் மக்களை, அனைத்து விடயங்களையும் கருத்திற்கொண்டு வாக்களிக்கக் கோருகிறார்.

ஜனாதிபதித் தேர்தல், தமிழ் மக்களுக்கான தேர்தல் அல்ல என்று நாம் சொல்ல முடியாது. ஏனெனில், யார் ஜனாதிபதியாக வரப் போகிறார் என்பது, தமிழ் மக்களை நேர்மறையாகவோ, எதிர்மறையாகவோ, ஏதோ ஒரு வகையில் பாதிக்கத்தான் போகிறது.

தமிழ் மக்களைப் பாதிக்கும் எந்தவொரு தேர்தலும், அவர்களுக்கான தேர்தல்தான். இதில் எமக்கு நன்மை கிடைக்குமா, இல்லையா என்று பார்ப்பது எவ்வளவு முக்கியமோ, அதேயளவுக்கு இதில் எமக்குத் தீமை விளையுமா, இல்லையா என்று பார்ப்பதும் முக்கியமானது.

சில முடிவுகளால், எமக்குப் புதிய நன்மைகள் எதுவும் விளையாதுவிட்டாலும், புதிய தீமைகளை விளைவிக்காத முடிவானது, புதிய தீமைகளை விளைவிக்கக்கூடிய முடிவிலும் சிறந்ததாகவே கருதப்பட வேண்டும்.

ஆகவே, இந்தத் தேர்தல், தமிழ் மக்களைப் பாதிக்காத தேர்தல் என்ற கருத்து ஏற்புடையதொன்றல்ல; ஆகவே, தமிழ் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்ற நிலைப்பாடுதான், தமிழ்த் தலைமைகள் எடுக்கத்தக்க உசிதமானதொரு நிலைப்பாடாகும்.Post a Comment

Protected by WP Anti Spam