By 4 November 2019 0 Comments

மகாராஷ்டிரா மாநிலம்: பா.ஜ.கவுக்கா, சிவசேனாவுக்கா முதலமைச்சர் பதவி? (கட்டுரை)

மகாராஷ்ரா மாநிலத்தில், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டும், இன்னும் ஓர் அரசாங்கம் அமையாமல், வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது.

காபந்து அரசாங்கமாக முதலமைச்சர் பட்னாவீஸ் தலைமையிலான அரசாங்கம் நீடித்தாலும், புதிய அரசாங்கம் உருவாகும் விடயத்தில் கூட்டணிக் கட்சியான சிவசேனாவுக்கும் பாரதிய ஜனதாக் கட்சிக்கும், ஏழாம் பொருத்தமான ஏட்டிக்குப் போட்டியான பேட்டிகள் வெளிவந்து, ‘சிக்கல், சீவிச் சிங்காரித்து வந்து வரிசை’யில் நிற்கிறது.

சட்டமன்றத்தில், 288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்ரா மாநிலத்தில், 164 இடங்களில் போட்டியிட்டால், அறுதி பெரும்பான்மை பா.ஜ.கவுக்கே கிடைத்து விடும் என்று, முதல் முறையாகத் தவறான வியூகத்தை வகுத்து, பிரதமர் நரேந்திர மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தேசியத்தை முன் வைத்து, களத்தில் இறங்கினார்கள்.

கடுமையான பிரசாரம் செய்தும், அந்த முழக்கத்தை இரு கரம் கூப்பி வரவேற்கும் மாநிலங்களில் முதன்மை மாநிலமாக இருக்கும் மகாராஷ்ரா மாநில வாக்காளர்கள், பா.ஜ.கவுக்கு மட்டும் தனிப் பெரும்பான்மை கொடுக்கத் தவறி விட்டனர்.

காஷ்மிரோ, தேசியமோ, பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைக்கு எதிரான பேச்சோ, பாகிஸ்தான் மீதான கண்டனங்களோ, பொருளாதார தேக்க நிலைமையின் பாதிப்புகளை உணரும் மகாராஷ்ரா வாக்காளர்கள் மத்தியில், மாற்றத்தை ஏற்படுத்தி விட்டன.

நாடாளுமன்றத் தேர்தலில் அபரிமிதமாக பா.ஜ.கவுக்கு வெற்றியை அள்ளிக் கொடுத்த அந்த வாக்காளர்கள், சட்டமன்றத் தேர்தலில் சிவசேனாவின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க வேண்டிய நெருக்கடியை உருவாக்கி விட்டார்கள். அந்த நெருக்கடியை, சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே முழுமையாக பயன்படுத்திக் கொண்டு, “எங்களுக்கு முதலமைச்சர் பதவி உள்ளிட்ட அனைத்துப் பதவிகளிலும் 50:50 எனத் தேர்தலுக்கு முந்தைய பேச்சுவார்த்தையின் போது கொடுத்த வாக்குறுதியை, நிறைவேற்றுங்கள்” என பா.ஜ.க தலைமையை வலியுறுத்தி வருகிறார்.

288 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ள மகாராஷ்ரா சட்டமன்றத்தில், பா.ஜ.கவுக்கு 105 எம்.எல்.ஏக்கள் மட்டுமே; இதனால் ஆட்சி அமைக்க இன்னும் 40 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், கூட்டணிக் கட்சியான சிவசேனாவிடம் உள்ள 56 எம்.எல்.ஏக்கள் கையில், பா.ஜ.க என்ற குதிரையின் கடிவாளம் கொடுக்கப்பட்டுள்ளது.

இப்படி, மகாராஷ்ரா வாக்காளர்கள் முடிவு எடுத்தது, பா.ஜ.கவின், இந்துத்துவாதக் கொள்கை மீது அவர்களுக்கு ஏற்பட்ட சலிப்பா, பொருளாதாரத் தேக்க நிலைமை மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள கோபமா என்பது விவாதத்துக்கு உரியவை.

ஆனால், காங்கிரஸுக்கும், அதன் கூட்டணிக் கட்சியான தேசிய வாத காங்கிரஸ் கட்சிக்கும் 98 எம்.எல்.ஏக்களை கொடுத்துள்ள வாக்காளர்கள், மகாராஷ்ரா மாநிலத்தில் ஒரு ‘திரிசங்கு’ சூழ்நிலையை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

தேர்தலுக்கு முன்பே, “நாட்டில் நிலவும் பொருளாதாரத் தேக்க நிலைமைக்குத் தீர்வுகாண, டொக்டர் மன்மோகன்சிங்கின் பொருளாதார அறிவை பா.ஜ.க பயன்படுத்த வேண்டும்” என்று வெளிப்படையாக அறிவித்த கட்சி சிவசேனா ஆகும். பா.ஜ.கவின் கூட்டணியாக இருந்து கொண்டே, அப்படியொரு வலுவான கருத்தை அது, முன்வைத்திருந்தது.

காங்கிரஸும் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் பொருளாதார தேக்க நிலைமையை முன் வைத்து, வாக்குக் கேட்கும் போது, ‘உண்மைதான்! பொருளாதாரத் தேக்கநிலைமை இருக்கிறது; அதற்கு பா.ஜ.கதான் காரணம்’ என்பது போன்ற தோற்றத்தை, சிவசேனாக் கட்சியே மகாராஷ்ரா மாநில வாக்காளர்கள் மத்தியில் ஏற்படுத்தியது.

அதன் பலனாக, 122 எம்.எல்.ஏக்களை வைத்திருந்த பா.ஜ.கவுக்குத் தற்போது, 105 சட்டமன்ற உறுப்பினர்களாகப் பலம் குறைந்து விட்டது. அக்கட்சியின் வாக்கு வங்கியே, கடந்த தேர்தலை விட, ஆறு இலட்சம் குறைந்து விட்டது.

தேசிய வாத காங்கிரஸ் கட்சித் தலைவரும், மகாராஷ்ராவின் ‘பெருமை’ என்று வர்ணிக்கப்பட்டவருமான சரத்பவாருக்கு, அமலாக்கப்பிரிவு விசாரணைக்கு வருமாறு, அழைப்பாணை அனுப்பிய போது, “சரத்பவாருக்கும் கூட்டுறவு வங்கி ஊழலுக்கும் சம்பந்தமில்லை; அவர் அப்போது அமைச்சராக இல்லை” என்று சிவசேனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ரவ்த் கருத்துத் தெரிவித்தார்.

தேர்தலுக்கு முன்பே, பொருளாதாரத் தேக்க நிலைமை பிரசாரத்தில், காங்கிரஸுக்கு ஆதரவாகவும் அமலாக்கப்பிரிவு அனுப்பிய அழைப்பாணை விவகாரத்தில், தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாருக்கு ஆதரவாகவும் சிவசேனா தெரிவித்த கருத்துகள், தேர்தலுக்குப் பிறகு வரப் போகும் தேர்தல் முடிவுகளை, அக்கட்சி கணித்து வைத்திருந்தது என்பதையே காட்டுகிறது.

இந்த நல்லிணக்கத்தின் விளைவாக, இன்றைக்கு பா.ஜ.கவுடன், சிவசேனாக் கட்சி கடுமையாகப் பேரத்தை நடத்துகிறது. “எங்களுக்கு இந்த முறை, முதலமைச்சர் பதவி வேண்டும்” என்று வலியுறுத்துவதோடு, “முதலமைச்சர் பதவி தனக்கே பொருத்தம் என்று, பா.ஜ.க சட்டமன்றக் கட்சித் தலைவர் பட்னாவீஸ் நினைக்கக் கூடாது” என்று வெளிப்படையாகவே, சிவசேனாக் கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே அறிவித்து விட்டார்.

குறிப்பாக, “அமைச்சர் பதவியில் மட்டுமல்ல, முதலமைச்சர் பதவியிலும் 50:50” என்று ஏற்கெனவே பேசப்பட்டு விட்டது என்கிறார். “எங்களுக்கு முதல் இரண்டரை வருடம்; அடுத்த இரண்டரை வருடம் உங்களுக்கு” என, முதலமைச்சர் பதவியைப் பகிர்ந்து கொள்வோம் என்று பேட்டி கொடுக்கிறார். இவை அனைத்தும் பா.ஜ.க தலைமைக்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. பா.ஜ.கவின் நம்பிக்கைக்குரிய கூட்டணிக் கட்சி மட்டுமல்ல; ஓரளவுக்குக் கொள்கை ரீதியாக, ஒரே சிந்தனையுள்ள கட்சி சிவசேனா. அந்தக் கட்சியுடன் இன்றைக்கு பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வு காண முடியாமல் தவிக்கிறது, மகாராஷ்ரா பா.ஜ.க தலைமை.

அது மட்டுமின்றி, அகில இந்திய பா.ஜ.க தலைமையும் அமைதி காக்கின்றது. “கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்” என்று பா.ஜ.க தலைமைக்குக் கிடுக்கிப்பிடி போடும் சிவசேனாவுக்கு ‘எச்சரிக்கை மணி’ அடிப்பது போல், பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி, முதலமைச்சராக இருக்கும் பட்னாவீஸை மீண்டும் சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்ந்தெடுத்து விட்டார்கள். இது பா.ஜ.கவின் உள்கட்சி விவகாரம் என்றாலும், சிவசேனாவுக்கு ‘முதலமைச்சர் பதவியை விட்டுத் தர முடியாது’ என்ற செய்தி, அதில் ஒளிந்துள்ளது.

இதற்குப் போட்டியாக, சிவசேனாவும் தங்கள் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தைக் கூட்டி, தங்கள் கட்சியின் சார்பில், சட்டமன்றத் தலைவரைத் தெரிவு செய்து விட்டார்கள். உத்தவ் தாக்கரேயின் மகன் ஆதித்ய தாக்கரேவை, சட்டமன்றத் தலைவராகத் தெரிவு செய்தால், சிவசேனாவுக்குள் அதிருப்தி ஏற்படலாம் என்று நினைத்திருக்கக் கூடும். அதனால், ஆதித்ய தாக்கரேக்குப் பதில், அக்கட்சியைச் சேர்ந்த ஏகநாத் சிண்டே, சட்டமன்றத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்தத் தெரிவு முடிந்தவுடன், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவாரைச் சந்தித்துள்ள சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவ்த், “தீபாவளி வாழ்த்துச் சொல்லப் போனேன்; அரசியலும் பேசினோம்” என்று அறிவித்துள்ளார்.

இது, பா.ஜ.கவுக்கு சிவசேனா விடுத்துள்ள இறுதி எச்சரிக்கை என்றே பார்க்கப்படுகிறது. சிவசேனாவின் கோரிக்கைக்கு, பா.ஜ.க ஒப்புக்கொள்ளாவிடில், காங்கிரஸ், தேசிய வாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன், ஆட்சியமைக்க உரிமை கோரத் தயங்க மாட்டோம் என்ற செய்தியை, இதன் மூலம் பா.ஜ.க தலைமைக்கு அனுப்பியிருக்கிறார் உத்தவ் தாக்கரே.

அப்படியோர் ஏற்பாடு உருவாகுமானால், சிவசேனா தலைமையில் அமையும் ஆட்சிக்கு 154 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். அது தவிர, சுயேட்சைகள் ஆதரிக்கக் கூடும் என்ற நிலை தற்போதைக்கு இருக்கிறது.

ஆகவே, மகாராஷ்ராவில் மீண்டும் பா.ஜ.க ஆட்சியா? முதலமைச்சர் பதவியை சிவசேனாவுக்குக் கொடுத்து, பா.ஜ.க – சிவசேனா கூட்டணி ஆட்சியா என்ற கேள்வி ஒரு புறம் பிறந்திருந்தாலும், இன்னொரு புறம், புத்தம் புதிதாகச் சிவசேனா – தேசிய வாத காங்கிரஸ் – காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய கூட்டணி ஆட்சியா என்ற அடுத்த கேள்வியும் மகாராஷ்ரா மாநிலத்தில் எழுந்துள்ளது. முதற்கேள்விக்குத் தீர்வு காணப்பட்டு விடும் என்று ஒரு நம்பிக்கை இருந்தாலும், பா.ஜ.கவும் சிவசேனாவும் வெளிப்படையாகப் நடத்திக்கொள்ளும் மோதல் பேட்டிகள், அந்த வாய்ப்புக்கான இடைவெளியைக் குறைத்துள்ளன.

தங்களது வாக்கு வங்கிக்குப் போட்டியாக இருக்கும் சிவசேனாவின் செல்வாக்கை, மகாராஷ்ராவில் குறைக்க வேண்டும் என்றால், அக்கட்சியைக் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியை நோக்கித் தள்ளிவிடுவதே சிறந்தது என்று பா.ஜ.க தலைமை நினைக்கலாம். ஆனால், சிவசேனாவோ, “மகாராஷ்ரா நலன் கருதி, இந்த ஆட்சியை அமைக்கிறோம்” என்றும் “கூட்டணிக் கட்சியான எங்களுக்கு, பா.ஜ.க துரோகம் செய்து விட்டது” என்றும் பிரசாரத்தை முன் எடுத்துச் செல்லும்.

“மகாராஷ்ராவில், சிவசேனா முதலமைச்சர் பதவியேற்பார்” என்று அக்கட்சி அறிவித்துள்ளதைப் பார்த்தால், பா.ஜ.க – சிவசேனாவுக்கு இடையில் ஏற்பட்டுள்ள, கூட்டணிப் பிரச்சினையை, மகாராஷ்ரா மாநில பா.ஜ.க தலைமையால் தீர்க்க முடியவில்லை. அகில இந்திய பா.ஜ.க. தலைமையால், குறிப்பாக உள்துறை அமைச்சராக இருக்கும் அமித்ஷா, பா.ஜ.கவுக்கான முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை.

இந்நிலையில், மோடி தலையிட்டால் மட்டுமே, பா.ஜ.க- சிவசேனா கூட்டணியும் நீடிக்கும்; அக்கூட்டணியின் ஆட்சியும் மஹாராஷ்டிரா மாநிலத்தில் அமையும் என்ற நிலைமை உருவாகி இருக்கிறது.Post a Comment

Protected by WP Anti Spam