வெள்ளை சர்க்கரைக்கு தடை?! (மருத்துவம்)
‘இனிப்பு மிகுந்த பானங்களின் விளம்பரங்களுக்கு ரேடியோ, தொலைக்காட்சி, பத்திரிகை மற்றும் ஆன்லைனில் தடை விதிக்கப்படும்’ என்று சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் வெள்ளை சர்க்கரைக்கு எதிரான விளம்பரத் தடையை அமல்படுத்தும் உலகின் முதல் நாடு என்ற பெயரை சிங்கப்பூர் பெற்றுள்ளது.
சர்வதேச சர்க்கரை நோயாளிகள் அமைப்பு சமீபத்தில் ஓர் அறிக்கை வெளியிட்டிருந்தது. இன்றைய உலகில் 42 கோடியாக இருக்கும் சர்க்கரை நோயாளிகள் எண்ணிக்கை, வரும் 2045-ம் ஆண்டில் 62.90 கோடியாக அதிகரிக்கும். மேலும் வளர்ந்த நாடுகளிடையே அதிகபட்சமாக சிங்கப்பூரில் 13.7 சதவீதம் பேர் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்துதான் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் வெள்ளை சர்க்கரைக்கும், இனிப்பு மிகுந்த பானங்களுக்கும் தடை விதிக்க சிங்கப்பூர் அரசு முடிவு செய்து இந்த விளம்பரக் கட்டுப்பாடு முடிவை அறிவித்திருக்கிறது. இது தொடர்பாக சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுகாதாரமற்ற பானங்களின் லேபிளில் அதில் உள்ள ஊட்டச்சத்து பொருட்கள், சர்க்கரையின் அளவு தெரியும்படி குறிப்பிடப்பட வேண்டும்.
மிகவும் சுகாதாரமற்றதாக அடையாளம் காணப்படும் பானங்களின் விளம்பரங்கள் ரேடியோ, தொலைக்காட்சி, பத்திரிகை, ஆன்லைனில் இடம் பெற தடை விதிக்கப்படும். விளம்பரங்கள் மூலம் வாடிக்கையாளர்களை சென்றடைவதைத் தடுக்கும் வகையில் இந்த விளம்பர தடை அமல்படுத்தப்பட உள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கையாக சர்க்கரைக்கு வரி அல்லது தடை விதிப்பது குறித்து அரசு ஆலோசனை நடத்த இருக்கிறது.
எனவே, இனிப்பு பானங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளில் சர்க்கரையின் அளவை குறைக்கவோ அல்லது பானத்தில் சேர்க்கும் மூலப்பொருட்களை சீர்படுத்தவோ கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். விளம்பரத் தடை குறித்து தொழில் நிறுவனங்களின் கருத்துகள் கேட்டறியப்பட்ட பின்னர், அடுத்த சில மாதங்களில் இவை அமல்படுத்தப்படும்.
இதனை மேம்படுத்தும் திட்டங்கள் குறித்து அடுத்தாண்டு அறிவிப்பு வெளியாகும் என்று கூறியிருக்கிறது. வெள்ளை சர்க்கரை ஆரோக்கியக் கேடு என்று பல தரப்பிலும் பேசத் தொடங்கியிருக்கும் நிலையில், சிங்கப்பூர் அரசு எடுத்திருக்கும் இந்த முன்னெடுப்பு நடவடிக்கை கவனத்துக்குரியது!
Average Rating