தமிழ்த் தேசியக் கட்சிகள் ‘மீண்டும்’ ஒன்றிணைய வேண்டும் !! (கட்டுரை)

Read Time:16 Minute, 36 Second

இலங்கை அரசியல் வரலாற்றில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் உருவாக்கம், மிக முக்கியமானதொரு மைல்கல்லாகும்.

1971-1972இல், தமிழ் மக்களின் எந்தவொரு கருத்துகளும் உள்ளடக்கப்படாமலும் தமிழ் மக்களின் பங்களிப்பு இல்லாமலும், அதைவிடவும் இந்திய வம்சாவளி மக்களின் பிரதிநிதிகள் இல்லாமலும், சிறிமாவோ மற்றும் அவரது தோழர்களின் அரசாங்கத்தில், நாடாளுமன்றத்துக்கு வௌியில் அரசமைப்புப் பேரவை கூட்டப்பட்டது. இதன்போது, இலங்கையின் முதலாவது குடியரசு அரசமைப்பு நிறைவேற்றப்பட்டு, 1972இல் நடைமுறைக்கு வந்தது.

முற்றாகச் சிறுபான்மையினரை, குறிப்பாகத் தமிழ் மக்களைப் புறக்கணித்து, அவர்களது அபிலாசைகளுக்கு மதிப்பளிக்காது, புதிய அரசமைப்பு ஸ்தாபிக்கப்பட்டமையானது, பேரினவாத எதேச்சாதிகார அடக்குமுறையின் வௌிப்பாடாகவே பார்க்கப்பட்டது.

இந்நிலையில், தமிழ்க் கட்சிகளிடையே ஒற்றுமைக்கான தேவை, தமிழ் அரசியல் தலைமைகளால் தீவிரமாக உணரப்பட்டது. தாம் பிரிந்து நிற்பது, தமது நலன்களுக்கே கேடாக அமைகிறது என்பதைத் தமிழ்த் தலைமைகள் காலங்கடந்தேனும் உணர்ந்து கொண்டன.

அதன் விளைவாக, தமக்கிடையேயான ஐக்கிய மேடையொன்றை உருவாக்கத் துணிந்தன. 1972 மே 14ஆம் திகதி, ஜீ.ஜீ.பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ், சா.ஜே.வே.செல்வநாயகம் தலைமையிலான இலங்கைத் தமிழரசுக் கட்சி, சௌமியமூர்த்தி தொண்டமான் தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ‘அடங்காத் தமிழன்’ சி.சுந்தரலிங்கத்தின் ஈழத் தமிழர் ஒற்றுமை முன்னணி உட்பட சில தமிழ் அமைப்புகள் இணைந்து, தமிழர் ஐக்கிய முன்னணியை (TUF) உருவாக்கின.

வடக்கு, கிழக்கு, மலையக மக்கள், இதுவரை காலமும் முதலும் கடைசியுமாக ஏற்படுத்திய அரசியல் கூட்டணி இதுமட்டுமேயாகும். இந்தத் தலைவர்களிடையே நிறைய வித்தியாசங்கள் இருந்தன. அவர்களது சித்தாந்தம், இலட்சியம், அணுகுமுறை என்பவை, நிறையவே வேறுபட்டிருந்தன.

ஆனால், அரசாங்கத்தால் தமிழ் மக்கள் புறக்கணிக்கப்பட்டபோது, இந்த ஒற்றுமை அவசியமானதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள். அதனாலேயே இந்தக் கூட்டணி உருவாகியது.

1976இல், தமிழர் ஐக்கிய முன்னணி, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியாக (தமிழர் விடுதலைக் கூட்டணி) தனித் தமிழீழக் கொள்கையை முன்னெடுத்தபோது, சௌமியமூர்த்தி தொண்டமான் இந்தக் கூட்டணியிலிருந்து விலகினார்.

தமிழீழமானது, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினையைத் தீர்க்காது என்று அவர் கருதினார். வடக்கு, கிழக்கு, மலையக மக்கள் இதுவரைகாலமும், முதலும் கடைசியுமாக ஏற்படுத்திய அரசியல் கூட்டணி இதுமட்டுமேயாகும். அது, சௌமியமூர்த்தி தொண்டமானின் வௌியேற்றத்துடன் முடிவுக்கு வந்தது.

அதன் பின்னர், இலங்கைத் தமிழ் மக்களின் குரலாக, தமிழ்த் தேசியத்தின் குரலாக, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி செயற்பட்டது. ஆனால், ஜீ.ஜீ.பொன்னம்பலம், சா.ஜே.வே.செல்வநாயகம் ஆகியோரின் மறைவைத் தொடர்ந்து, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைமை அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்திடமும் எம்.சிவசிதம்பரத்திடமும் வந்தது.

இவர்களுக்கும், ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் வாரிசான குமார் பொன்னம்பலத்துக்கும் இடையிலான பனிப்போர், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் அஸ்தமனத்துக்கு வழிசமைத்தது.

1977 தேர்தலில், குமார் பொன்னம்பலத்தை, அமிர்தலிங்கமும் எம்.சிவசிதம்பரமும் ஓரங்கட்டினார்கள் என்பதை யாரும் மறுக்கமுடியாது. ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் மறைவுக்குப் பின், வெற்றிடமாக இருந்த யாழ்ப்பாணத் தொகுதியை, குமார் பொன்னம்பலத்துக்கு வழங்குவதில் எந்தத் தடையும் இருந்திருக்க முடியாது.

புதியதாக ஒருவரை அங்கு களமிறக்குவதைவிட, குமார் பொன்னம்பலத்தை அங்கே களமிறக்குவது எந்த வகையிலும் குறைபாடான ஒன்றல்ல; ஆனால், அமிர்தலிங்கமும் எம்.சிவசிதம்பரமும் யாழ்ப்பாணத் தொகுதியை குமார் பொன்னம்பலத்துக்கு வழங்கத் தயாராக இருக்கவில்லை.

“வேறெந்தத் தொகுதியை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள்” என்று சொன்னதை, ஏற்றுக்கொள்ளக் குமார் பொன்னம்பலம் தயாராக இருக்கவில்லை. நியாயமான காரணங்களின்றி, யாழ்ப்பாணத் தொகுதியில் தான், போட்டியிடுவது மறுக்கப்பட்டதை, அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. இதன் பின்னர் குமார் பொன்னம்பலம், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியிலிருந்து வௌியேறி, மீண்டும் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸுக்கு உயிரூட்டினார். மீண்டும் தமிழ் அரசியல், இரண்டு பாசறைகளாகப் பிரிந்தது.

இம்முறை தமிழ்க் காங்கிரஸ், விடுதலைக் கூட்டணி என்ற இரண்டு பாசறைகள் தோன்றின. தமிழ் மக்களின், தமிழ்த் தேசியத்தின் நலன் நோக்கில், இணைந்த தலைமைகள், அதிகாரப் போட்டியாலும், உள்ளார்ந்த பனிப்போராலும், சுயநல விருப்பு வெறுப்புகளாலும் மீண்டும் பிரிந்தன.

இது, தமிழ் அரசியல் வரலாற்றின் சாபக்கேடு என்று சொன்னால் மிகையல்ல. சுதந்திர இலங்கையின், முதலாவது தமிழ்க் கட்சிகளின் கூட்டணிக்கு நேர்ந்த கதி இது.

இதன் பின்னர், பல்வேறு ஆயுதக் குழுக்களும் தமக்கான ஜனநாயக அரசியல் கட்சிகளைக் கொண்டு, செயற்படத் தொடங்கிய தனித்த வரலாறும் உண்டு; அது வேறாகத் தனித்து ஆராயப்பட வேண்டிய பரப்பு.

இதன் விளைவாக, தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தும் கட்சிகள் பல, சமகாலத்தில் செயற்படத் தொடங்கின. அவற்றை மேலோட்டமாக, முழுமையான ஜனநாயக வழி நிற்கும் கட்சிகள், ஆயுதக் குழுக்களின் அரசியல் கட்சிகள் என்றும் பிரிக்கக்கூடியதாக இருந்தது.

இந்தக் கட்சிகளிடையே, தமிழ் மக்களின் வாக்குகள் சிதறுண்டு போய்க்கொண்டிருந்தன. இதன் விளைவாக, தமிழ் மக்களுக்கான, ஒன்றுபட்ட பலமானதொரு ஜனநாயகக் குரல் இருக்கவில்லை.

ஆயுதப் போராட்டப் பரப்பில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு, ஏனைய ஆயுதக் குழுக்களை ஏறத்தாழ முழுமையாகவே ஓரங்கட்டி, ‘ஏகபோக’ நிலையை அடைந்திருந்தார்கள்.

ஆனால், பலமானதோர் அரசியல் அங்கத்தை, அவர்கள் ஸ்தாபிக்கவில்லை. உலக ரீதியில், விடுதலை அமைப்புகளை எடுத்துப்பார்த்தால், அவற்றில் பலவற்றுக்கு மிகப்பலமான அரசியல் அங்கம் இருந்தது.

புத்திஜீவிகளைப் கொண்ட அந்த அரசியல் அங்கம், விடுதலைக்கான அவர்களது வேட்கையில், அந்த இலக்கை அடைந்துகொள்வதில், போராட்டத்துக்கும் அரசியலுக்கும் இடையிலான சமநிலை அணுகுமுறையைச் சாத்தியமாக்கின.

ஒற்றைப்போக்கு நிலையிலான போராட்டமாக, அவை இருக்கவில்லை. அந்த விடுதலைப் போராட்ட அமைப்புகளின் அரசியல் அங்கமானது, உள்ளூரிலும் சர்வதேசத்திலும் தமது இலக்குகளை, அரசியல் ரீதியில் அணுகுவதற்காக வாய்ப்பையும் வழங்கியது.

ஆனால், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் நிலை, அவ்வாறு இருக்கவில்லை. ஆயுதப் போராட்டமளவுக்கு அரசியல் ரீதியிலான அணுகுமுறைக்கு, முக்கியத்துவம் வழங்கப்படவில்லை.

ஆகவே, அரசியல் பரப்பில், தமிழர்களின் பிரதிநிதித்துவம் சிதறுண்டு கிடந்தது. அடிப்படையில், ஒரே நோக்கத்தைக் கொண்ட பல கட்சிகள் செயற்பட்டாலும், அவை பிளவுண்டு, சிதறுற்று இருந்ததால், ஒன்றுபட்ட பலமான குரலாக, அவை ஒலிக்கவில்லை.

இந்தச் சூழலில்தான், புதிய சகாப்தத்தின் தொடக்கத்தில், தமிழ்த் தேசியத்தின் வழிநிற்கும் தமிழ்க் கட்சிகள், ஒன்றுபட வேண்டும் என்ற குரல், தமிழ் சிவில் தரப்பிலிருந்து எழுகிறது. இந்தக் குரல்தான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிறப்புக்கு அத்திபாரமாகிறது.

‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்’ உருவாக்கம் பற்றி, நிறைய மாயைகள், நம்பிக்கைகள் இங்கு உலவிக்கொண்டிருக்கின்றன. அதில் பிரதானமானது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது, தமிழீழ விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்டது என்பதாகும்.

இது, மிகத் தவறான நம்பிக்கை என்று சுட்டிக்காட்டுவது, தமிழ் அரசியல் வரலாறு தெரிந்த ஒவ்வொருவரினதும் கடமையாகும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாகிச் சில ஆண்டுகளில், தமது அரசியல் அங்கத்தின் ஒரு பகுதியாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை, விடுதலைப் புலிகள் பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதுதான் உண்மை.

இந்தப் பத்தியின் நோக்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வரலாற்றை ஆராய்வது அல்ல; அது, தனித்து ஆராயப்பட்டு எழுதப்பட வேண்டியதொன்று. அதைச் செய்வதற்கு, அதன் உருவாக்கத்தில் பங்கெடுத்தவர்களே மிகப் பொருத்தமானவர்கள்.

ஆகவே, அந்த வரலாற்றாய்வுக்குச் செல்லாது, மீண்டும் தமிழ்க் கட்சிகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக ஒன்றிணைந்ததற்கான காரணத்தை, நாம் சிந்தித்தலே, இந்தப் பத்திக்கு அவசியமானதாக இருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்துக்கான வித்து, பலமான ஜனநாயக அரசாங்கத்தில், தமிழ்த் தேசியத்துக்கு முகம் அவசியம் என்ற காலத்தின் தேவைதான்.

அயர்லாந்து விடுதலைப் போராட்டத்தைப் பொறுத்தவரையில், ஐரிஷ் விடுதலை இராணுவம் (IRA) ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த அதேவேளை, ஷின் பெய்ன் கட்சி, ஐரிஷ் விடுதலையின் அரசியல் முகமாக இருந்தது. இதுபோன்ற கட்டமைப்பு, தமிழ்த் தேசியத்துக்கு இருக்கவில்லை.

இது, தமிழ்த் தேசியப் போராட்டப் பரப்பின் மிகப் பெரும் பின்னடைவாக இருந்தது. ஆகவே, தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தும் பலமானதோர் அரசியல் சக்தியை உருவாக்குதற்கான, காலத்தின் தேவையின் குரல்தான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தொடக்கம் ஆகும்.

‘தமிழ்த் தேசியம்’ வெறும், ஆயுதம் தூக்கியவர்களின் கோரிக்கை என்ற வட்டத்துக்குள் முடங்கிவிடாது, மக்களால் ‘ஜனநாயக’ ரீதியில் தெரிவுசெய்யப்பட்டவர்களின் குரலாகவும் இருக்கும் போது, அது சர்வதேச அளவில் தமிழ்த் தேசியத்துக்கான பலமானதோர் அரசியல் குரலாக அமையும் என்ற, காலத்தின் தேவையை உணர்த்துவதாக இருந்தது.

ஏனெனில், 1994இல் பொதுத் தேர்தலில், விடுதலைப் புலிகள் அமைப்பு தேர்தலைப் புறக்கணிக்க வலியுறுத்தியதன் விளைவாக, தமிழீழ விடுதலைப் புலிகளின் வைரிகளான டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி)வெறும் 10,748 வாக்குகளை யாழ். மாவட்டத்தில் பெற்று, ஒன்பது நாடாளுமன்ற ஆசனங்களை, வெற்றி கொண்டிருந்தது.

இதன் விளைவாக, தமிழ் மக்களின் ‘ஆயுதக் குரலும்’, தமிழ் மக்களின் ஜனநாயகப் பிரதிநிதிகளின் ‘ஜனநாயகக் குரலும்’ ஒன்றுபட்டதாக இருக்கவில்லை.

மறுபுறத்தில், ஜனநாயக ரீதியாகத் தெரிவுசெய்யப்பட்டவர்களையே, ஆயுதக் குழுக்கள் சுட்டுக் கொல்லும் கொடுமையான கலாசாரம் வடக்கு, கிழக்கில் நிகழ்ந்துகொண்டிருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளால், சுட்டுக் கொல்லப்பட்ட மக்களில், ஜனநாயக ரீதியாகத் தெரிவுசெய்யப்பட்ட தலைவர்கள் பட்டியல் நீளமானது.

இது தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளுக்கும், ஆயுதக் குழுக்கள், குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையில் அச்சத்தையும் சந்தேகத்தையும் முரண்பாட்டையும் தோற்றுவித்திருந்தது. ஒரு தரப்பு மறுதரப்பை நம்பவுமில்லை; ஏற்கவுமில்லை.

அரசியல் பரப்பில், விடுதலைப் புலிகளை ஆதரித்த தலைவர்கள் கூட, அவர்கள் மீது முழுமையான நம்பிக்கையைக் கொண்டிருக்கவில்லை என்பதுடன், விடுதலைப் புலிகள் பற்றிய அச்சத்தைத் தொடர்ந்தும் கொண்டிருந்தார்கள்.

மறுபுறத்தில், இலங்கை அரசாங்கத்துடனான அரசியல் ஊடாட்டங்களின் ஊடாகத் தீர்வைப் பெற்றுக்கொள்ள முயற்சித்துக் கொண்டிருந்த தமிழ்த் தேசியத் தலைமைகள், விடுதலைப் புலிகளால் ‘துரோகிகளாகப்’ பார்க்கப்பட்டார்கள். அவர்களின் கொலைகள், விடுதலைப் புலிகளால், ‘துரோகி’ முத்திரை குத்தி, நியாயப்படுத்தப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சேப்பங்கிழங்கு ரகசியம்!! (மருத்துவம்)
Next post இதுவரை நீங்கள் கண்டிராத மிரளவைக்கும் வெறித்தனமான இயற்க்கையின் கோர தாண்டவங்கள்!! (வீடியோ)