By 22 December 2019 0 Comments

இந்தியா பெண்களுக்கு பாதுகாப்பற்றது!! (மகளிர் பக்கம்)

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரியங்கா என்கிற கால்நடை பெண் மருத்துவர் கூட்டுப் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு கால்நடை மருத்துவரும் ஏறத்தாழ நடமாடும் கால்நடை மருத்துவமனைகள்தான். காரணம், எல்லாக் கால்நடைகளையும் சிகிச்சைக்கென மருத்துவமனைக்கு அழைத்துவர முடியாது. டூ வீலரோ, காரோ கண்டிப்பாக அவரின் வண்டி தார்ச்சாலைகளில் மட்டுமே பயணிக்காது. மண்சாலைகள், ஒற்றையடி பாதைகள், வாய்க்கால் வரப்பென்று ஓடிக் களைத்திருக்கும்.

வண்டியில் மருந்து, மாத்திரை, ஊசிகள் நிரப்பிய பை இருக்கும். சினை ஊசி போடும் சாதனங்கள் இருக்கும். வாயில்லா ஜீவன் நோயால் கஷ்டப்படுமே என்று பரிதாபப்பட்டு, ஒற்றை போன் காலை நம்பி முன்பின் அறியாதவர் வீட்டுக்கு தோட்டத்துக்கு மலையடிவாரத்துக்கு தனியாக ஒரு பெண் தனது இருசக்கர வாகனத்தில் செல்வதை கற்பனை செய்து பாருங்கள்.

கிராமப் புறங்களில் பணியாற்றும் பெண் கால்நடை மருத்துவர்களிடம் பேசிப்பாருங்கள். நிறைய சுவாரஸ்யமான திகில் கதைகள் கிடைக்கும். அப்படியான ஒரு போன் காலை நம்பி ஒரு வாயில்லா ஜீவனுக்கு சிகிச்சை அளித்துவிட்டு திரும்புகின்ற வழியில் தனது இருசக்கர வாகனம் பஞ்சரானதால், செய்வதறியாது திகைத்து நின்ற பெண் கால்நடை மருத்துவர் கூட்டு பாலியல் வல்லுறவுக்கு ஆட்பட்டு, கொலை செய்யப்பட்டு, எரிக்கப்பட்டிருக்கிறார்.

‘‘என் அக்காவிற்கு நடந்தது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. என்னால் இதைத் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. இனி இதுபோல் யாருக்கும்நிகழக் கூடாது’’ என்கிறார் பிரியங்காவின் தங்கை பவ்யா. அடுத்த கனம் என்ன நடக்கும் என்பதை நாம் எதிர்பார்க்க முடியாதுதான். குறிப்பாக பெண்கள் இரவு எங்காவது தனியாகச் செல்ல நேர்ந்தால் உங்களுக்குத் தெரிந்தவர்களிடம் சொல்லிவிட்டுச் செல்லுங்கள். தவறு நடக்கப் போகிறது என்பதை நீங்கள் உணர்ந்தால், அடுத்த கனமே தாமதிக்காமல் காவல் துறையினரை அழையுங்கள். பாதுகாப்புக்கான செயலிகளை உங்கள் கைபேசியில் வைத்துக்கொள்ளுங்கள். எப்போது வெளியில் சென்றாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையோடு செல்லுங்கள் எனவும் பவ்யா பேசியிருக்கிறார்.

ஐதராபாத்தில் உள்ள ஷம்சாபாத் நரசய்யாபள்ளியைச் சேர்ந்த தர்-விஜயம்மா தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள். மூத்த மகள் பிரியங்கா கால்நடை மருத்துவர். இளைய மகள் பவ்யா விமானநிலைய ஊழியர். பிரியங்கா கொல்லூரில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்திருக்கிறார்.

தினமும் அவரது வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு செல்ல இருசக்கர வாகனத்தில் சென்று சுங்கச்சாவடிப் பகுதியில் தனது வாகனத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்து மருத்துவமனைக்கு பேருந்தில் செல்வது வழக்கம். சம்பவம் நடந்த நவம்பர் 28 அன்றும் அதேபோல் தனது இருசக்கர வாகனத்தில் சென்று வீடு திரும்பிய பிரியங்கா மீண்டும் தனக்கு வேலை இருப்பதாகச் சொல்லிவிட்டு தன் இருசக்கர வாகனத்தில் சென்றதாகத் தெரிகிறது.

இரவு 9 மணிக்கு தங்கை பவ்யாவுக்கு போன் செய்த பிரியங்கா ஹைதராபாத்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடி அருகே தனது இருசக்கர வாகனம் பழுதாகி நின்றுவிட்டதாகத் தெரிவித்தவர், சுற்றுவட்டாரப் பகுதிகளில் லாரி ஓட்டுநரைத் தவிர வேறு யாரும் இல்லை எனவும் அவர்களின் நடவடிக்கை சரியாக இல்லை எனவும் தனக்கு பயமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தன்னுடன் தொடர்ந்து போனில் பேசிக் கொண்டே இருக்கும்படியும் தனது தங்கையிடம் கூறியுள்ளார். அதற்கு பவ்யா, இருசக்கர வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு வேறு வாகனத்தில் வீட்டுக்கு வரும்படியும், காலையில் சென்று வாகனத்தை எடுத்துக்கொள்ளலாம் என்றும் ஆலோசனை கூற, சரியென்ற பிரியங்காவை மீண்டும் அவரின் தங்கை அழைத்தபோது, கைபேசி இணைப்பு சட்டென துண்டிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு பிரியங்காவின் கைபேசி சுவிட்ச் ஆஃப் நிலைக்கு சென்றுள்ளது.

பிரியங்கா குடும்பத்தினர் உடனே சுங்கச்சாவடி இருக்கும் குறிப்பிட்ட பகுதிக்கு அவரைத் தேடி விரைந்துள்ளனர். அங்கு அவரைக் காணாமல் அருகே இருந்த காவல்நிலையத்தில் புகார் செய்துவிட்டு இரவு முழுவதும் தேடியுள்ளனர். மறுநாள் காலை அருகே இருந்த ரங்காரெட்டி மேம்பாலம் அருகே இளம்பெண் ஒருவரின் உடல் எரிந்த நிலையில் கிடப்பதாக அந்த வழியாகச் சென்ற பால்காரர் ஒருவர் மூலம் சாய்நகர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்திருக்கிறது.

சடலம் கைப்பற்றப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட நிலையில், மருத்துவமனை சென்ற பிரியங்காவின் தங்கை பவ்யா, எரிக்கப்பட்ட சடலத்தின் மீதிருந்த தங்கச் செயின் மற்றும் உடமைகளை வைத்து கொல்லப்பட்டது தனது அக்கா பிரியங்காதான் என உறுதி செய்தார். பிரியங்காவின் உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.

இதையடுத்து கொலை வழக்குப் பதிவு செய்த சாய்நகர் காவல்துறையினர், சிசிடிவி கேமரா மற்றும் பிரியங்காவின் செல்போன் அழைப்புகளை வைத்து லாரி ஓட்டுநர்களான முகமது பாஷா என்ற ஆரீஃப், கேசவலு, சிவா, நவீன் ஆகிய நான்கு பேரை கைது செய்து நால்வரின் வாக்குமூலங்களை பெற்றுள்ளனர். பிரியங்கா கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்பது காவல் துறையினரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதில் அவர்கள் கூறியுள்ள தகவல்கள் மேலும் அதிர்ச்சியூட்டுவதாகவும் உள்ளன.

பிரியங்காவுக்கு என்ன நடந்தது என்பது குறித்து ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் சஞ்சனார் பேசும்போது, சம்பவத்தன்று வழக்கம்போல இருசக்கர வாகனத்தை டோல்கேட்டில் நிறுத்திவிட்டு அங்கிருந்து வாடகைக் கார் மூலம் சென்றுள்ளார் பிரியங்கா. அவர் வண்டி நிறுத்துவதைக் கண்காணித்த முகமது பாஷா தன் கூட்டாளிகளுடன் சதித் திட்டம் தீட்டி அவரது பைக் டயரை வேண்டுமென்றே பஞ்சர் செய்துள்ளான். இரவு 9.15 மணிக்கு பிரியங்கா தனது பைக்கை எடுக்க டோல்கேட் வந்தபோது, பைக் பஞ்சராகி இருப்பதை அறிந்தவர் அதை உருட்டிச் செல்ல முயன்றுள்ளார். இதைக் கவனித்தவர்கள் பிரியங்காவிடம் பேச்சு கொடுத்து பைக்கை சரி செய்ய உதவுவதுபோல் நடித்துள்ளனர்.

இரவு 9.30 மணியளவில் பஞ்சர் ஒட்டிக்கொண்டு வருவதாக சிவா, பிரியங்காவின் பைக்கை எடுத்துச் சென்றுள்ளான். அவன் பைக்கை எடுத்துச் சென்ற சமயத்தில்தான், மற்ற மூவரின் நடவடிக்கை சரியில்லாமல் இருப்பதை அறிந்தவர் தனது தங்கைக்கு போன் செய்து விவரத்தைக் கூறியுள்ளார். இந்தச் சமயத்தில் முகமது பாஷா, நவீன், கேசவலு ஆகிய மூவரும் பிரியங்காவை அருகில் இருந்த மதில் சுவருக்குப் பின்னால் தூக்கிச் சென்று, அவரின் வாயில் மதுவை ஊற்றி மயக்கமடையச் செய்து, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பைக்கைக் கொண்டுசென்ற சிவாவும் திரும்பிவந்து அவர்களோடு இணைந்து கொண்டான். பின்னர் நால்வரும் இணைந்து பிரியங்காவின் மூக்கு, வாயினை அடைத்தும், பிரியங்காவின் துப்பட்டாவால் அவரின் கழுத்தை நெறித்தும் கொலை செய்துள்ளனர். அவரது உடலை அப்புறப்படுத்த நினைத்தவர்கள், தார்பாயை உடல்முழுவதும் சுற்றி தங்களது லாரியில் ஏற்றியுள்ளனர்.

10.30 மணி அளவில் சிவாவும் நவீனும் பிரியங்காவின் வண்டியை எடுத்துக்கொண்டு முன்செல்ல, முகமது பாஷாவும் கேசவலுவும் லாரியில் அவர்களைப் பின்தொடர்ந்துள்ளனர். பின்னர் பிரியங்காவை எரித்துவிட நினைத்தவர்கள் அதற்காக அங்கிருந்து 15 மைல் தொலைவில் உள்ள பாலத்தைத் தேர்வு செய்துள்ளனர். தாங்கள் சிக்கிவிடக்கூடாது என்பதற்காக பிரியங்காவின் கைபேசியினை ஸ்விட்ச் ஆஃப் செய்து, வண்டியில் இருந்த நம்பர் பிளேட்டையும் கழட்டியுள்ளனர்.

நள்ளிரவு 2.30 மணிக்கு பாலத்துக்குக் கீழே பிரியங்காவின் உடலை எரித்தவர்கள், மீண்டும் சிட்டிக்குள் வந்து எதுவும் தெரியாததுபோல் செங்கல் லோடை இறக்கிவிட்டு, மீண்டும் பாலத்துக்கு சென்று பிரியங்காவின் உடல் முழுமையாக எரிந்துவிட்டதா என சரிபார்த்துள்ளனர்.

மகளுக்கு நேர்ந்த துயரச் சம்பவம் குறித்து கண்ணீர் மல்கப் பேசிய பிரியங்காவின் தாயார், அன்றைய இரவு வெகு நேரமாகிவிட்டதால் என்னால் ஒரு இடத்தில் அமரமுடியவில்லை. வாசலில் நின்றபடியே என் மகள் வருகிறாளா என எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன்.

அவள் கீழே விழுந்திருப்பாளோ, விபத்து எதுவும் ஏற்பட்டிருக்குமோ எனப் பல எண்ணங்கள் வந்து சென்றன. அவள் வீட்டை விட்டுப் புறப்படும்போது, விரைவில் வந்துவிடுவதாக தெரிவித்துவிட்டுச் சென்றாள். ஆனால், பெட்டியில் வைத்துத்தான் அவளை இறுதியாகப் பார்க்க முடிந்தது. அவளுக்கு விபத்து நடந்திருக்கும் என்றுதான் முதலில் நினைத்தேன். ஆனால், இப்படியொரு கொடூரம் அவளுக்கு நடந்திருக்கும் என்று கனவிலும் நினைக்கவில்லை என்று கதறியவர், அந்த இரவு நேரத்தில் என் மகள் எப்படிப்பட்ட துன்பத்தை அனுபவித்திருப்பாள். அவளது உயிர் எவ்வளவு கொடூரமாக விடைபெற்றிருக்கும் என்றார் கதறி அழுதபடி.

பெண் கால்நடை மருத்துவர் பிரியங்காவிற்கு நடந்த கொடூர சம்பவத்தை கண்டித்தும், குற்றவாளிகளுக்கு விரைவில் அதிகபட்ச தண்டனை வழங்கக் கோரியும் இந்தியா முழுவதும் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இந்த வழக்கை விரைவு நீதிமன்றத்துக்கு மாற்ற தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் உத்தரவிட்டுள்ளார்.

பெண் என்று தனியாக சுதந்திரமாக சாலையில் செல்கிறாளோ அன்றைக்குத்தான் உண்மையான சுதந்திரம் என காந்தி சொல்லி 72 ஆண்டுகள் கடந்தும், மருத்துவத் துறை சார்ந்து இயங்கிய ஒரு பெண் கதற கதற கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்ட நிகழ்வு மிகவும் வன்மையாக
கண்டிக்கத்தக்கது.

பிரியங்கா காணாமல் போன புதன்கிழமை நள்ளிரவில் அவரது பெற்றோர் ஷம்ஷாபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இவர்களின் புகார் தங்கள் காவல் கட்டுப்பாட்டுக்குள் வராது என்று கூறியதோடு, பிரியங்கா காணாமல் போன புகார் தொடர்பாக முதல் தகவல் அறிக்கையையும் பதிவு செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும் பிரியங்காவிற்கு காதல் உள்ளதா? யாருடனாவது சென்றுவிட்டாரா போன்ற கேள்விகளை பெற்றோரிடத்தில் கேட்டு நடவடிக்கையும் எடுக்காமல் நேரத்தை விரையம் செய்ததாகவும் தெரிய வருகிறது.

புகார் அளித்த உடனே காவல் துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்திருந்தால் என் மகளை உயிரோடு காப்பாற்றி இருக்க முடியும், காவலர்கள் மிகவும் அலட்சியமாகச் செயல்பட்டு எங்களை அலைக்கழித்தனர் என்கின்றனர் பிரியங்காவின் பெற்றோர். இந்நிலையில் சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தைச் சேர்ந்த காவல் துறையினர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர்.

துப்பாக்கி எழுதிய தீர்ப்பு…

இந்த வழக்கின் விசாரணைக்காக குற்றம் நடந்த இடத்திற்கு நால்வரையும் காவல் துறையினர் அழைத்து சென்றபோது, காவல் துறையினரைத் தாக்கிவிட்டு நால்வரும் தப்ப முயன்றதாக, பெண் கால்நடை மருத்துவர் எரித்துக் கொலை செய்யப்பட்ட இடத்திலேயே குற்றவாளிகள் நால்வருமே தெலுங்கானா காவல்துறையினரால் என்கவுன்டர் செய்யப்பட்டுள்ளனர்.

பெண்களின் பாதுகாப்பிற்கு…

உங்கள் கைபேசியில் தமிழக காவல் துறையால் உருவாக்கப்பட்டுள்ள “KAVALAN SOS” என்ற செயலியை தரவிறக்கம் செய்து பாதுகாப்புக்காக வைத்துக் கொள்ளவும். எதிர்பாராத இக்கட்டான சூழலை எதிர்கொள்ள நேர்ந்தால் உங்கள் பாதுகாப்பிற்காக செயலியில் இருக்கும் சிவப்புநிற SOS பட்டனை அழுத்துவதன் மூலமாக நீங்கள் கொடுத்திருக்கும் மூன்று கைபேசி எண்களுக்கு தகவல் செல்வதோடு காவல் கட்டுப்பாட்டுத்துறை மூலமாக உங்கள் இருப்பிடம் லைவ் டிராக் செய்யப்படும்.எதிர்பாராத சூழல்களை விவேகத்தோடு கையாள தேவையான சின்னச் சின்ன விசயங்களை அறிந்து கொள்வோம்.விவேக நடைபோட பெண் பிள்ளைகளுக்கு வாழ்த்துகள்…Post a Comment

Protected by WP Anti Spam