By 31 December 2019 0 Comments

அன்னப்பிளவு வராமல் தடுக்க முடியாதா?! (மருத்துவம்)

எல்லா தம்பதியருக்கும் தனக்கு பிறக்கப் போகும் குழந்தை லட்சணமாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், அவர்கள் யாரும் எதிர்பார்க்காத நிலையில் ஒரு சிலருக்கு முகத்தில் மூக்கு மற்றும் வாய் பகுதிகளில் குறைபாடுகளுடன் குழந்தை பிறந்து விடுவதுண்டு. அன்னப்பிளவு என அழைக்கப்படுகிற இந்த பாதிப்பு ஏன் ஏற்படுகிறது? தடுக்க முடியாதா?

தம்பதியருக்கு ஆலோசனைகள்

நீங்கள் சொந்தத்தில் திருமணம் செய்து கொள்ள போகிறவர்களா? அல்லது சொந்தமல்லாதவரை திருமணம் செய்தவரா? இரண்டு தரப்பினருக்குமே மரபியல் ஆலோசனை அவசியமானது. இதில் உங்களுக்கு பிறவி குறைபாடுள்ள குழந்தை பிறக்க வாய்ப்பிருக்கிறதா என்பதை உங்கள் மரபணுவை ஆராய்வதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். கருத்தரிக்க திட்டமிடும்போதே பெண்ணுக்கு ஃபோலிக் அமில குறைபாடு இல்லாமலும் இரும்பு, அயோடின், துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமலும் பார்த்து கொள்வது அவசியம். ஏனெனில், கருகாலத்தில் ஃபோலிக் அமில குறைபாடு இருப்பின் உதடு அன்னப்பிளவு ஏற்படுகிறதென்பதை கண்டுபிடித்துள்ளார்கள்.

கருத்தரிக்கும் பெண்ணுக்கு வலிப்பு நோய் இருந்து, அதற்காக மருந்து மாத்திரை சாப்பிடுபவராக இருந்தால் பிறக்கப் போகும் குழந்தைக்கு அந்த மருந்தால் குறைபாடுகள் வருமா என்பதை உங்கள் மருத்துவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். ஏனெனில் பெனிடாயின், சோடியம் வால்புரோயெட் போன்ற மருந்துகள் பிளவுகுறைபாட்டை உண்டாக்கும் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறே நீங்கள் தைராய்டு நோய்க்காகவோ, ரத்த அழுத்தத்திற்காகவோ, நீரிழிவு நோய்க்காகவோ, ஹார்மோன் குறைபாடுகளுக்காகவோ அல்லது வேறு எந்த நோய்க்காகவோ, மருந்து சாப்பிட்டு கொண்டிருந்தால் முதலில் உங்கள் மருத்துவருடன் ஆலோசித்து நீங்கள் உட்கொள்ளும் மருந்துகளால் கரு பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உண்டா என்பதை அறிந்து, அதற்கு பிறகு கருத்தரிக்க திட்டமிடவும்.

நீங்கள் கதிர்வீச்சு அபாயமுள்ள பகுதியில் வசிப்பவராகவோ, கதிர்வீச்சு நிலையங்களில் பணிபுரிபவராகவோ அல்லது அது சார்ந்த தொடர்பு உடையவராகவோ இருந்தால் கருத்தரிக்கும் முன்பு மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.
புற்றுநோய்க்காக கதிரியக்க சிகிச்சையோ, கீமோ தெரபியோ எடுத்திருந்தால் கருத்தரிப்பதை ஒத்தி போடுங்கள்.

கர்ப்ப காலத்தில்…

ஒருவேளை கர்ப்பம் தரிந்திருந்தால் மருந்து மாத்திரைகள் உட்கொள்வதில் எச்சரிக்கையோடு நடந்து கொள்ளுங்கள். கர்ப்ப காலத்தில் தாய் உட்கொள்ளும் மருந்தால் தோன்றும் குறைபாடுகளுக்கு டெரட்டோ ஜெனிசிஸ்(Teratogenesis) என்று பெயர். கருவுற்ற நிலையில் கர்ப்பிணிகள் மேற்கொள்ளும் சில மருத்துவ சிகிச்சைகளும், மருந்துகளை உண்பதால் ஏற்படும் பக்க விளைவுகளுமே விகாரமான குறைபாடுகள் தோன்றுவதற்கான முக்கிய காரணங்களாக விளங்குகின்றன. மருந்து மாத்திரைகளிலுள்ள நச்சுப்பொருட்கள் கருவின் வளர்ச்சி நிலையின்போது உயிரணுக்களில் பாதிப்பை ஏற்படுத்துவதால் கருவிலேயே குழந்தைக்கு பிறவி கோளாறுகள் உண்டாகின்றன.

அதாவது ரசாயன பொருட்கள் குழந்தையின் வளர்ச்சி நிலையை பாதித்தால் அந்த குழந்தைக்கு ஊனம் ஏற்படும் அல்லது கருவே அழிந்துவிடும். மாறாக அதே ரசாயன பொருட்கள் குழந்தையின் மரபணுக்களில் பாதிப்பை ஏற்படுத்தினால் குழந்தைக்கு ஏற்படும் ஊனம் பரம்பரையாக தொடர ஆரம்பித்துவிடும். மேற்கூறியவை தவிர மது அருந்தும் பழக்கம், புகைப்பிடித்தல், புகையிலை பயன்படுத்தும் பழக்கம் போன்றவை தாய்க்கு இருந்தால் அவற்றிலுள்ள நச்சுக்களின் பாதிப்பினாலும், கருவுற்ற தாய்க்கு வரும் நோய்களாலும் குழந்தைக்கு உதடு, அன்னப்பிளவு வர வாய்ப்புள்ளது.

புற்றுநோய் மருந்துகள்

புற்றுநோய்க்காக கொடுக்கப்படும் மருந்துகள் நேரடியாக டி.என்.ஏ. மூலக்கூறுகளை பாதிக்கவோ, செல்பிரிதலின்போது பக்க விளைவுகளையோ ஏற்படுத்திவிடும். இதனால்தான் பெரும்பாலான குழந்தைகள் இறந்து பிறக்கின்றன. கரு உருவான மூன்று மாதத்தில் ஏற்படும் கோளாறுகளால் கருவுக்கு மண்டை நீர் மிகைப்பு, மண்டை எலும்புகள் முழுமையாக உருவாகாத நிலை, குறைந்த காது வளர்ச்சி போன்றவை ஏற்படும்.
இதைப்போலவே ஆஸ்பிரின், ஆன்ட்டிபயாடிக் மாத்திரைகள், டி.பி. நோயை நீக்க அளிக்கப்படும் மாத்திரைகள், குயினைன், இமிப்ராமைன், இன்சுலின் போன்றவற்றை கர்ப்ப காலத்தில் பயன்படுத்தினாலும் இத்தகைய பிரச்னைகள் ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

தொழிலால் வரும் துயரம்

தொழிற்சாலை பெருக்கங்கள் மற்றும் வாகன பெருக்கங்கள் ஆகியவற்றின் காரணமாக ரசாயன கழிவுகளும், நச்சுக்களும் நாம் சுவாசிக்கும் காற்றில் அதிகமாக கலந்துள்ளன. இவை நமது உடலின் இயல்பு தன்மையை பாதித்து மரபணுக்களில் மாற்றத்தை உண்டாக்கி, பிளவுக் குறைபாடுக்கான அடித்தளத்தை கருத்தரிக்கும் முன்பே பெற்றோரிடத்தில் ஏற்படுத்திவிடுகின்றன. இதனால்தான் ஆண்கள் குறை அணுக்களை உடையவர்களாகவும், பெண்கள் குறைபாடான முட்டைகளை உடையவர்களாகவும் இருக்க நேரிடுகிறது. உதாரணத்திற்கு வயல்வெளியில் வேலை செய்யும் பெண்கள் கூட, பயிர்களுக்கு தெளிக்கப்படும் பூச்சிக் கொல்லி மருந்துகள் மற்றும் இரசாயன உரங்களின் தாக்கத்தினால் பாதிக்கப்படுகிறார்கள்.

இது அவர்களின் மரபணுக்களை பாதித்து, கருவில் குறை வளர்ச்சியாக வெளிப்படும். அதிக வெப்பத்தை உண்டாக்கக்கூடிய தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு உயிரணுக்கள் இல்லாத நிலை தவிர, அவற்றில் குறைபாடுகளும் அதிகளவில் தோன்றுகின்றன. இதனால் பிறவிக்குறைபாடுகள் அதிகமாக ஏற்படுகின்றன. புகைப்பழக்கம் அல்லது புகைப்பவரின் அருகில் இருத்தல், மதுப்பழக்கம் போன்றவற்றின் காரணமாகவும் மரபணுக்கள் பாதிக்கப்பட்டு குறைவளர்ச்சி ஏற்படுகிறது.

கதிர்வீச்சுகளும் காரணம்

அணு உலைக்கூடங்களில் இருந்து கசியும் நச்சு வாயுக்கள், மின் பகுப்பு மையங்கள் அருகில் வசித்தல் (மின் பகுப்பு மையங்களின் அருகில் வசிப்போருக்கு அதிக கதிர்வீச்சு அபாயமும், மூளை பாதிப்பும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது) ஆகியவற்றாலும் மரபணுக்கள் பாதிக்கப்பட்டு பிளவுகள் வருகின்றன. காமா கதிர்களை புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கவும், பல நோய்களை கண்டறியவும் பயன்படுத்தப்படுகிறது. கதிர்வீச்சுகள் மனித உடலில் ஏற்படுத்தும் பாதிப்புகள் நாம் அறியாததல்ல. எனவே, இந்த துறைகளில் வேலை செய்பவர்களிடம் பல குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

உடலின் பெரும்பாலான உறுப்புகள் கருவளர்ச்சியின் எட்டாவது வாரத்தில் தான் உருவாகும். இந்த சமயங்களில் கதிர்வீச்சுகளால் கர்ப்பிணிகள் பாதிக்கப்படும்போது பிறக்கும் குழந்தைக்கு உதடு அன்னபிளவு சிறிய தலை, மார்பு எலும்புகள் இணைந்துவிடுதல் போன்ற குறைபாடுகள் ஏற்படலாம்.பிளவு குறைபாடுகள் தோன்ற தாயின் வயதும் ஒரு காரணம் என்பது கண்டறியப்பட்டுள்ளது. ஒருவேளை உங்களுக்கு 30 வயதுக்கு மேல் முதல் கர்ப்பம் தருத்திருந்தால் உங்களக்கு பிளவு குறைபாடுள்ள குழந்தை பிறக்க வாய்ப்புகள் அதிகம் இருக்கலாம்.

சொந்தத்தில் திருமணம் செய்திருந்தால்…

பிளவு இருக்கும் மூன்று குழந்தைகளில் சராசரியாக ஒரு குழந்தையின் பரம்பரையில் யாருக்கேனும் இதே போல பிளவு குறைபாடு இருக்கும். குறிப்பாக உறவினர்களுக்குள் திருமணம் செய்பவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளிடம் இத்தகைய குறைபாடு ஏற்படலாம். பரம்பரையாக தொடரும் பிளவு குறைபாடுகள் கீழ்க்கண்ட காரணங்களால் ஏற்படலாம்.

* தனியொரு மரபணுவில் ஏற்படும் குறைபாடு.

* பல மரபணுக்களில் ஏற்படும் குறைபாடு.

* குரோமோசோம்களில் ஏற்படும் இயல்பு மாற்றம்.

* அயல் உடல் பொருட்கள்

* பாலினத்தை நிர்ணயிக்கும் குரோமோசோம் மாற்றம்.

உறவல்லாதவரை திருமணம் செய்திருந்தால்…

உங்களுக்கு பாரம்பரிய குறைபாட்டின் காரணமாக பிளவுடன் குழந்தை பிறக்கும் வாய்ப்பு மிக குறைவு. ஆனால், உங்கள் உறவினர்களுள் யாருக்கேனும் பிளவு இருந்தால், வாய்ப்பு அதிகம். எனவே, கருத்தரிக்கும் முன்பு ஆலோசனை அவசியம். காசநோய், பால்வினை நோய்கள் போன்ற நாட்பட்ட நோய்களாலும் அவற்றுக்காக சாப்பிடும் மருந்துகளாலும்கூட உங்கள் மரபணுக்கள் பாதிக்கப்படலாம். இவை இருப்பின் ஆலோசனை அவசியம். இவற்றோடு பின்வரும் பரிசோதனைகளையும் மேற்கொள்ளுங்கள். கருத்தரிக்கும் முன்பு உடற்பரிசோதனை, உயிரணுக்கள் திறன் பரிசோதனை, இரத்த பரிசோதனை. கருத்தரித்திருந்தால் அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை, தேவைப்பட்டால் பனிக்குட நீர்பரிசோதனை!Post a Comment

Protected by WP Anti Spam