வேண்டாம் என்று சொல்ல மனப்பக்குவம் வேண்டும்!! (மகளிர் பக்கம்)

Read Time:10 Minute, 14 Second

சமகாலத்தில் நிகழும் சம்பவங்களுக்கு முக்கியத்துவம் தந்து பத்திரிகையில் பதிவு செய்வது தொடர்ந்து பெண்கள், குழந்தைகள் நலனில் அக்கறை கொண்டு அவர்களுக்காக குரல் கொடுத்து வருவது… என பல்வேறு வேலைகளைச் செய்து வருகிறார் சென்னையைச் சேர்ந்த சுதா உமாசங்கர்.

“1984 ஆம் ஆண்டுகளிலிருந்து, அந்தந்த காலகட்டங்களில் நிகழும் நிகழ்வுகள் பற்றி ஃபிரிலான்சராக பத்திரிகைகளில் எழுதி வருகிறேன். நிகழ் கால சமூகத்தில் எந்த மாதிரியான விஷயங்கள் நடக்கிறது என்பதை விழிப்புடன் பார்க்க வேண்டிய கடமை பத்திரிகையாளர்களுக்கு இருக்கிறது. அந்த விஷயங்களோடு பிரபலங்களான கமல், மணிரத்தினம், ஏ.ஆர்.ரஹ்மான் போன்றவர்களை நேர்காணல் செய்திருக்கிறேன். அதே நேரம் கண்ணுக்கு தெரியாமல் பல சாதனைகளை நிகழ்த்திக் கொண்டிருப்பவர்களையும் அடையாளம் கண்டுள்ளேன்.

என் குடும்பத்தில் மருத்துவத்துறை சார்ந்தவர்கள் இருப்பதால் தொடர்ந்து மருத்துவம் சார்ந்த கட்டுரைகள் எழுதி இருக்கிறேன். குழந்தையின்மை பற்றி எழுதும் போது, தாமதமாக திருமணம் செய்து கொள்ளுதல், குழந்தை பெற்றுக் கொள்வதைத் தள்ளிப் போடுதல், செல்போன் அதிக அளவில் பயன்படுத்துவதால் அதிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சுகள், உணவு பழக்கம், தூங்கும் நேரம் மாற்றம்… என ஏராளமான காரணங்கள் உள்ளது. இது எல்லாம் தெரிந்திருந்தாலும் அதை நாம் கவனத்தில் கொள்ளாதது வருத்தமாகவே இருக்கிறது.

இன்றைய தலைமுறை கணவன், மனைவிக்கு உதவி செய்வதோடு வேலைகளையும் பகிர்ந்து கொள்ளும் மனோபாவம் வளர ஆரம்பித்திருக்கிறது” என்று கூறும் சுதா பல்வேறு சமூக சேவைகளும் செய்து வருகிறார். “யார் யார் NGO ஆரம்பிக்க விரும்புகிறார்களோ அவர்களுக்கு அதை எவ்வாறு செயல் வடிவமாக மாற்ற வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுக்கிறேன். இருபது ஆண்டுகளுக்கு மேலாக ரோட்டரியில் இருந்த போது
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, குழந்தைகள் நலனில் தீவிரமாக செயல்பட்டு வந்தேன்.

பொதுவாகக் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமைகள் அவர்களுக்கு தெரிந்த நபர்களாலே நிகழ்கிறது. இது நிறைய டைமண்ட்ஷனில் இருக்கிறது. இது நிகழாமல் இருப்பதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம். குழந்தைகளோடு நேரத்தைச் செலவிட்டு அன்றைய நாள் எப்படி இருந்தது என்று விசாரிப்பது ஒவ்வொரு பெற்றோரின் வேலை. சில சமயம் பயத்தால் குழந்தைகள் சொல்லாமல் கூடப் போகலாம். அந்த பயத்தை நீக்குவது பெற்றோரின் கடமை. குழந்தைகளை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். அப்போதுதான் அவர்களிடம் நிகழும் மாற்றங்களை நம்மால் கண்டுபிடிக்க முடியும்.

அவர்களிடம், ‘உனக்குப் பிடிக்காத மாதிரி யாராவது நடந்து கொண்டால் உடனே சொல்ல வேண்டுமென்று தெளிவாக சொல்லணும்” என்கிறார் சுதா.
சமூகத்தின் மீதான பார்வை எவ்வாறு இருக்க வேண்டும், சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு போன்றவற்றின் அடிப்படையில் வாரம் ஒரு முறை குழந்தைகளுக்கு கதைகள் சொல்லி வருகிறார் சுதா, “வெளியூர்களில் இருந்து இங்கு தங்கி வேலைப் பார்க்கும் நபர்களிடம் குழந்தைகள் வைத்திருப்போர் கவனமாக இருக்க வேண்டும். ஆண், பெண் பேதமின்றி குழந்தையாக இருக்கும் போது எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் அபியூஸ் ஆகியிருப்போம். அது இன்றும் பலருக்குத் தொந்தரவு செய்து கொண்டிருப்பதை உணர்கிறோம்.

தொடுதல் மூலம் மட்டுமின்றி வார்த்தையாலும், பார்வையாலுமே சிலர் பாதிக்கப்பட்டிருக்கலாம். அப்படி இருக்கும் பலரும் தங்கள் குழந்தைகள் மீது அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. தனக்கு நடந்ததைப் பாடமாக எடுத்துக் கொண்டு, தங்களது குழந்தைகளுக்கு அது நிகழாமல் பார்த்துக் கொள்வதோடு, எதுவாக இருந்தாலும் உடனே சொல்லக்கூடிய அளவிற்கு ஒரு பிணைப்பினை குழந்தைகளோடு பெற்றோர்கள் உருவாக்க வேண்டும்” என்று கூறும் சுதா சமீபத்தில் ஓர் அதிர்வலையை ஏற்படுத்திய “மீடு” பற்றிப் பேசினார். ‘‘ஸ்வர்ணா ராஜகோபால் நடத்தும் பிரக்யா என்ற NGO- வோடு சேர்ந்து பாலின சமத்துவத்திற்காக வேலை பார்க்கிறோம்.

நான் கதை சொல்வதைத் தெரிந்த அவங்க, ஒவ்வொரு விஷயத்தையும் ஏன் கதை மூலம் சொல்லக் கூடாது என்று முடிவு செய்தார். அதன்படி ஆண்டுக்கு ஒரு முறை ஒவ்வொரு கதையாக மூன்று வீடியோ வெளியிட்டிருக்கிறோம். அதில் இன்றும் ஆண் குழந்தைகள் தான் வேண்டுமென்று சமூகத்தில் இருக்கிறது. சாலைகளில் செல்லும் பெண்களைத் தொந்தரவு செய்வது, முதியோர் அபியூஸ் குறித்து சொல்லி இருக்கேன். நவம்பர் 25ஆம் தேதி பெண்கள் மீது நடக்கும் வன்முறையை ஒழிக்க முற்படும், சர்வதேச நாளாக யு.என் அறிவித்துள்ளது. ஆனால் புள்ளிவிவரம் எடுத்துக் கொண்டால், செக்ஸ்வல், எமோஷ்னல், வார்த்தைகள்… போன்ற காரணங்களால் 1:3 பெண், ஏதோ ஒரு வகையில் வன்முறையை அனுபவிக்கிறாள்.

பணிபுரியும் இடங்களில் வேலைக்காகப் பொறுத்துப் போக வேண்டியிருக்கிறது. அங்கு ஏற்படும் பிரச்னையை வீட்டில் சொன்னால் வேலைக்கு அனுப்ப மாட்டார்கள் என்ற பயத்தில் சொல்லாமல் சகித்துக் கொள்கின்றனர். பணிபுரியும் இடம் பாதுகாப்பானதாக இருக்கிறது என்கிற உத்தரவாதம் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் உண்டு. ஒரு சிலர் தெரிந்தே தூண்டில் போடும் விதத்தில் ஆபாசப் படங்களை அனுப்புகின்றனர். ‘பெண்கள் பாதுகாப்பிற்கான சட்டங்கள் இருக்கிறது, ஏன் அவர்கள் துணிந்து தங்களுக்கு நடக்கும் பிரச்சினைகளை அதன் மூலம் தீர்ப்பதில்லை’ என்று ஒரு சிலருக்குக் கேள்வி வரும்.

ICC என்று ஒரு கமிட்டி இருக்கிறது. அது எத்தனை நிறுவனங்களில் இருக்கிறது. ஆனால் இது போன்ற கமிட்டி நிறுவனங்களில் உள்ளது குறித்து பணியாளர்களுக்கு தெரிவிப்பது அவசியம். அப்போது தான் பயம் வரும்’’ என்கிறார் சுதா உமாசங்கர். “பெண்கள் பாதுகாப்பிற்கென்று ஹெல்ப்லைன்
உருவாக்கினால் துணிந்து தங்களுக்கு நிகழ்பவற்றை புகார் அளிக்க முன் வருவார்கள்” என்று கூறும் சுதா, ஆண் குழந்தைகளுக்கு நிகராக பெண் குழந்தைகளையும் வளர்க்க வேண்டும் என்கிறார். “வீட்டில் இருக்கும் சூழலைத்தான் குழந்தைகள் பிரதிபலிக்கிறார்கள். அதனால் கவனமாக இருக்க வேண்டியது நமது பொறுப்பு.

பொதுவாகப் பெண்கள் ஏதாவது சிக்கலில் சிக்கும் போது, ‘நீ தான் பார்த்து அடக்க ஒடுக்கமாக இருக்கணும்’ என்கிறார்கள். புகார்களை நடைமுறைப்படுத்தி அதற்கான தீர்வு காணும் போது சமூக மாற்றங்கள் நிகழும். இங்கு புகார் சொல்லவோ, தனக்கு நிகழ்ந்ததை வெளியில் சொல்லவோ முன் வருவதற்குத் தயங்குகிறார்கள். அது மாற வேண்டும். சில சமயங்களில், இது நமக்குத்தான் நிகழ்ந்ததா என்ற அதிர்ச்சியும் உண்டாகிறது. அதை நிதானமாகக் கையாண்டு யோசித்துத் திருப்பி கேட்பதற்கான சூழலை உருவாக்க வேண்டியுள்ளது. நமக்குப் பிடிக்காத விஷயங்களை யாராவது செய்யும் போது அது வேண்டாம் என்று கூறுவதற்கான மனப் பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்” என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக அமெரிக்காவில் ஆர்ப்பாட்டம் !! (உலக செய்தி)
Next post அன்னப்பிளவு வராமல் தடுக்க முடியாதா?! (மருத்துவம்)