பரிசுகளில் இது புதுசு…!! (மகளிர் பக்கம்)

Read Time:12 Minute, 35 Second

பிறந்த நாள், கல்யாண நாள், வளைகாப்பு… என எல்லா தருணங்களிலும் பரிசுகள் கொடுப்பது வழக்கமாகி விட்டது. பரிசு எதுவாக இருந்தாலும், நாம் நேசிக்கும் இதயத்திற்கு அல்லது நம்மை நேசிப்பவர்கள் தங்களின் அன்பை வெளிப்படுத்தும் அழகான தருணம். பரிசுகளை தரும் போதும், பெறும் போதும் நமக்குள் ஒரு சந்தோஷம் ஏற்படும். ஆனால், காதலிப்பவருக்கோ அல்லது துணைவருக்கோ, நண்பருக்கோ பரிசினை தரும் போது என்ன தருவது என்று ஒரு நிமிடம் தடுமாறித்தான் போவோம்.

கிஃப்ட் என்றாலே கடிகாரம், பொக்கே, பொம்மைகள், டீஷர்ட், அணிகலன்கள்… இது போன்றவை தான் நம் நினைவுக்கு வரும். கடிகாரமா போன ஆண்டு காதலர் தினத்துக்கு கொடுத்தாயிற்று… வாலட் புரொமோஷனுக்காக… இப்படி எல்லாமே பொதுவாக அளித்து இருப்பதால், என்ன கொடுப்பதுன்னு குழம்பி தான் போவோம்.

இனி குழப்பமே வேண்டாம். இதற்கும் ஓர் தீர்வைத் தருகிறார் ஸ்ருதி ஜெயச்சந்திரன். இவர் நம் மனசுக்கு பிடிச்சவருக்காகவே நம் மனசுக்கு பிடித்த விஷயங்களை அழகான பரிசுப் பொருட்களாக மாற்றி அமைத்து தருகிறார். ‘பிக் பாக்ஸ் தியரி’ என்ற ெபயரில் கிரியேட்டிவிட்டியுடன் அழகியல் உணர்வுடன் வடிவமைத்து தருகிறார்.

‘‘நான் சென்னை பொண்ணு. படிச்சது வளர்ந்தது எல்லாம் சென்னை தான். கல்லூரியில் விஸ்காம் முதலாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த சமயம். அப்போ என் நெருங்கிய தோழிக்குப் பிறந்தநாள் வந்தது. தோழிக்கு பரிசளிப்பது கிட்டத்தட்ட காதலுருக்கு பரிசளிப்பது போல தான். எனக்கு அவளுக்கு என்ன பரிசு கொடுப்பதுன்னு ரொம்பவே குழப்பமா இருந்தது. மேலும் கல்லூரியில் செமினார் பிராஜெக்ட் இருந்ததால் அவளுக்கு என்று நேரம் ஒதுக்கி ஷாப்பிங் செய்ய முடியல.

பிறந்தநாள் தினம் நெருங்க நெருங்க… அவளுக்குப் பிடித்தமான… அதே சமயம் புதுமையா இருக்கணும்ன்னு நினைச்சேன். கடைகளில் போய் வாங்குவதற்கு பதில் நாமளே ஏன் ஒரு பரிசு பொருளை தயாரிச்சு தரக்கூடாதுன்னு தோணுச்சு. அப்படித்தான் ‘த பிக் பாக்ஸ் தியரி’ உருவானது. ஒரே பரிசு பொருள் அதில் எல்லாமே அடங்கி இருக்கும். அதாவது ஒரு பாக்ஸில், கேக், சாக்லெட், பரிசுப் பொருட்கள், அவளின் புகைப்படம், எங்களின் புகைப்படம், பூங்கொத்து எல்லாம் அழகாக வைத்து கொடுத்தேன். அவளுக்கு அது பெரிய சர்பிரைசா இருந்தது. கண்கள் விரிய அதைப் பார்த்தாள்.

மற்ற நண்பர்களும் அழகாக இருக்கிறது என பாராட்டினார்கள். அப்போது என் தோழிதான் ‘‘உனக்கு நல்ல கிரியேட்டிவிட்டி இருக்கு. நீ ஏன் இதையே தொடர்ந்து செய்யக்கூடாது’’ன்னு கேட்டா. எனக்கும் அப்படித்தான் செய்தா என்னன்னு தோணுச்சு. நண்பர்கள், உறவினர்கள் என தெரிந்தவர்களுக்கு எல்லாம் செய்து தர ஆரம்பிச்சேன்’’ என்றவர் விளையாட்டாக ஆரம்பித்தது இப்போது மூன்றரை வருடம் சக்சஸ்ஃபுல்லாக செய்து வருகிறார்.
‘‘விளையாட்டாகத்தான் மூன்றரை வருடங்களுக்கு முன்பு தொடங்கினேன்.

ஆரம்பித்த கொஞ்ச நாட்களிலேயே எல்லாருக்கும் பிடித்து போக நான் பிசியாகிட்டேன். சின்ன வயசில் கலை சார்ந்த பொருட்கள் மேல் ஏற்பட்ட ஆர்வம்தான் எனக்கான ஒரு தொழிலை இப்போ அமைக்க காரணமா இருந்திருக்கு. பள்ளியில் படிக்கும்போது ஆர்ட்ஸ் அண்ட் கிராஃப்ட் வகுப்பில் ரொம்ப ஆர்வமா இருப்பேன். கல்லூரி சேர்ந்த பிறகு படிப்புன்னு பிசியானதால் கலை சார்ந்த வேலையை கொஞ்சம் தள்ளி வச்சு இருந்தேன். ஆனால், ‘பிக் பாக்ஸ் தியரி’ ஆரம்பிச்ச போது, நான் பள்ளி நாட்களில் படிச்ச கலை தான் இப்போது எனக்கு கைக் கொடுக்கிறது.

வீட்டிலும் அப்பா, அம்மா எனக்கு ரொம்பவே சப்போட் செய்றாங்க. படிப்பு முடிந்த பிறகும் கையில் ஒரு கலைத் தொழில் இருப்பதால் நான் யாரிடமும் வேலைக்காக சேரவேண்டாம். என்னுடைய இந்த தொழிலையே நல்ல நிலைக்கு கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது. வாடிக்கையாளர்களும் என்னுடைய கலைக்கு முழு அங்கீகாரம் கொடுப்பாங்கன்னு நான் எதிர்பார்க்கல’’ என்றவர் அவரின் பரிசுப் பொருட்களை பற்றி விவரித்தார்.

முதலாம் ஆண்டு படிக்கும் போது, நேரம் இருந்ததால், பிக் பாக்ஸை கொஞ்சம் கொஞ்சமாக துவங்கினேன். முதலில் நண்பர்கள், உறவினர்களுக்கு செய்து வந்தேன். பிறகு முகநூலில் இதற்காக ஒரு பக்கம் ஆரம்பிச்சேன். அதைப் பார்த்து சிலர் ஆர்டர் கொடுத்தாங்க. வாடிக்கையாளர்களின் வட்டம் விரிவடைந்தது. இப்போது ஒரு மாதம் மட்டுமே 50 முதல் 60 ஆர்டர்கள் வருகின்றன. வாடிக்கையாளர்களை பொறுத்தவரை எல்லாரும் ஒரே மாதிரி இருக்க மாட்டார்கள். சிலர் பயங்கர கிரியேட்டிவ்வாக இருப்பாங்க.

சிலருக்கு என்ன செய்வதுன்னு தெரியாது. யாராக இருந்தாலும் முதலில் அவர்களுக்கு என்ன வேண்டும்னு கேட்பேன். அதற்கேற்ப பரிசுகளை வடிவமைப்பேன். சிலர் முகநூலை பார்த்து அதில் இருப்பது போல் வேண்டும்னு கேட்பாங்க. சிலர் வித்தியாசமாக இருக்கணும்னு நினைப்பாங்க. ஒரு சிலர் பரிசுப் பொருட்களை காண்பித்து அதே போல் வேண்டும்ன்னு கேட்பாங்க.

காரணம் எல்லாரும் ஒரே மாதிரி விரும்பமாட்டாங்க. அவர்களுக்கு என்று தனித்து இருக்கணும்னு விரும்புவாங்க. அங்கதான் என் கிரியேட்டிவிட்டிக்கு வேலை. தற்போது பிறந்த நாள், கல்யாண நாள், கல்யாணத்தின் போது கொடுக்கப்படும் பரிசுப் ெபாருட்கள்… என எல்லா விதமான விசேஷங்களுக்கும் பரிசுகளை தயார் செய்து தருகிறேன்.

குழந்தைகளுக்கு சாக்லெட், கேக் மற்றும் பொம்மைகள் கொடுக்கலாம். சிலர் குறிப்பிட்ட சாக்லெட்தான் விரும்புவார்கள். மற்றபடி, சாக்லெட் நானே தயாரிப்பது வழக்கம். டீன் ஏஜ் பெண்களுக்கு மனசுக்கு நெருக்கமான பரிசா இருக்கணும்ன்னு எதிர்பார்ப்பார்கள். காதலர் தினம் என்றால் ஹார்ட் வடிவ சாக்லெட் மற்றும் ரோஜாக்களை இணைத்து பொக்கே தயார் செய்தேன். அது பெண்கள் மத்தியில் சூப்பர் ஹிட்டாச்சு.

ஆண்களுக்கு என்றால் மினியேச்சர் ஆல்கஹால் பாட்டில் வைத்த பொக்கே. 30 இஞ்ச் உயரத்தில் பிரமாண்டமான சுழலும் விளக்கு, பாட்டில் லேம்ப் மற்றும் உள்ளங்கை அளவே கொண்ட மினி ஆல்பம். வயதுக்கு ஏற்ப பரிசுப் பொருட்களும் மாறுபடும்’’ என்றவர் கஸ்டமர்களை சமாளிப்பது தான் பெரிய சவாலாக இருப்பதாக தெரிவித்தார்.

‘‘வாடிக்கையாளர்கள் நான் 24 மணி நேரமும் இருக்கணும்ன்னு நினைக்கிறாங்க. அன்று எனக்கு செமஸ்டர் பரீட்சை, முதல் நாள் இரவு ஒரு வாடிக்கையாளர் அவசரமாகப் பரிசு வேண்டும் என்றார். என்னால் மறுக்கவும் முடியவில்லை. விடிய விடிய அதைத் தயாரித்து கொடுத்துவிட்டு பரீட்சைக்குச் சென்றேன். அதேபோல் டெலிவரியின் போது பாட்டில் லேம்ப் உடைந்துவிட்டது. மறுபடி செய்து கொடுத்தேன்.

சிலர் ஆர்டர் கொடுப்பார்கள். சில காரணங்களால் வேண்டான்னு சொல்லிடுவாங்க. அவர்களுக்காகச் செய்தது, மற்றவர்களுக்கு கொடுக்க முடியாது. முழுக்க முழுக்க மூளை உழைப்பு. அதில் சின்ன தவறு இருந்தாலும், பரிசுப் பொருளின் தரம் குறைந்திடும். அதனாலேயே ரொம்ப கவனமா செய்வேன். கல்லூரிப் படிப்பு ஒரு பக்கம் பரிசுப் பொருட்கள் மறுபக்கம், இப்படித்தான் கல்லூரியை முடித்தேன்’’ என்றவர் நல்ல வேலை கிடைச்சும்
நிராகரித்துவிட்டார்.

‘‘படிக்கும்போதே, இரண்டு நிறுவனங்களில் வேலைக்கான வாய்ப்புகள் வந்தது. ஆனால் எனக்கு இப்போது 200க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இருப்பதால், இதையே முழுநேரமா செய்ய முடிவு செய்திட்டேன். இப்போ வீட்டில் இருந்து தான் செய்றேன். கூடிய விரைவில் கடை ஒன்றை ஆரம்பிக்கணும்ன்னு எண்ணம் இருக்கு. மேலும் ஆரம்பிச்ச போது கொடுக்கும் பரிசுப் பொருளை இப்பவும் கொடுக்க முடியாது. நாமளும் லேட்டெஸ்ட் டிரண்டுக்கு மாறணும். கேக் பொதுவாக கொடுக்கக்கூடிய பரிசு பொருள். முன்பு கிரீம் கொண்டு செய்தேன்.

இப்போது பக்கெட் கேக் மற்றும் பூக்கள் வைத்து அலங்காரம் செய்வது தான் டிரண்ட். புதுமண தம்பதிக்கு என்றால் அவர்களின் புகைப்படம் மற்றும் அவர்களின் திருமண மாலையில் உள்ள பூக்களை வைத்து பரிசு பொருள் அமைக்கலாம்.

அவர்களின் எவர்டைம் பெஸ்ட் பரிசாக இருக்கும். நம்முடைய கிரியேடிவ் சிந்தனையை தட்டிவிடணும். காரணம் இப்ப நிறைய பேர் இது போல் செய்ய ஆரம்பிச்சுட்டாங்க. அதனால நாம் ரொம்ப யுனிக்கா செய்யணும், எப்போதுமே அப்டேட்டா இருக்கணும். அப்பதான் நிலைச்சு இருக்க முடியும்’’ என்றார் பொக்கேவிற்காக சாக்லெட் மற்றும் பூக்களை அடுக்கியபடி ஸ்ருதி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பீட்ரூட்!! (மருத்துவம்)
Next post போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)