கொரோனா வைரஸ்: பெருந்தொற்றும் உலகப் பதற்றமும் !! (கட்டுரை)

Read Time:18 Minute, 45 Second

உலகமே வீட்டுக்குள் முடங்கிப்போய், பதறிக்கொண்டிருக்கிறது. இராஜ பரம்பரை முதல், வீடற்று இருப்பவர்கள் வரை, பாரபட்சமில்லாது மனிதர்களைத் தீண்டி, பற்றிப் பரவிக்கொண்டிருக்கிறது ‘கொவிட்-19’ எனும் கொள்ளை நோய்.

‘இன்றுளார் நாளையில்லை’ எனும் நிலையாமையை, முழு உலகமுமே கண்முன்னே கண்டுகொண்டிருக்கும் இந்த நிலையின் காரணகர்த்தா, கொரோனா எனும் வைரஸ் ஆகும். சுவாச நோயைத் தரும் கொரோனா வைரஸ், உலகைப் பதறவைப்பது, இது முதன்முறையல்ல.

2003இல் ஒரு வகையான கொரோனா வைரஸ் பரவி, ‘சார்ஸ்’ நோயை ஏற்படுத்தி, ஆசியாவையும் உலகத்தையும் பதறவைத்தது.

2012இல் ஒரு வகையான கொரோனா வைரஸ் பரவி, ‘மேர்ஸ்’ நோயை ஏற்படுத்தி, மத்திய கிழக்கையும் உலகையும் பதறவைத்தது.

தற்போது 2020இல், ஒரு வகையான கொரோனா வைரஸ், சீனாவின் வூஹானில் தொடங்கி, உலகெங்கும் பரவி, மனிதனின் இருப்பையே கேள்விக்கு உள்ளாக்கிக் கொண்டிருக்கிறது.

இந்த நிமிடத்தில், இலங்கையும் இந்தியாவும் உலகின் பல்வேறு நாடுகளும், தம்முடைய மக்களை, வீட்டுக்குள்ளேயே தடுத்து வைத்திருக்கிறார்கள்; ஊரடங்கி, உலகமே முடங்கிப் போய் இருக்கிறது.

சீனாவின் வூஹானில் தொடங்கிய நோய், அங்கு அடங்கி விட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அது பரவிய இத்தாலி,ஸ்பெயின், அமெரிக்கா ஆகிய நாடுகள், சீனாவை விட அதிகமாகப் பாதிப்பை எதிர்நோக்கியுள்ள அதேவேளை, ஏனைய நாடுகளிலும் கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளோரின் எண்ணிக்கை, பரிசோதனைகள் நடத்தப்பட நடத்தப்பட, நாளாந்தம் அதிகரித்த வண்ணமே இருக்கிறது.

தினமும் கேள்விப்படும், தொற்று ஏற்பட்டுள்ளோரின் எண்ணிக்கை அதிகரிப்பும், ‘கொவிட்-19’ பலிகொண்ட உயிர்களின் எண்ணிக்கையும், உலகத்தை ஒருபுறம் பதறவைத்தாலும், மறுபுறத்தில், திடீரென முடக்கப்பட்டுள்ள மக்களின் அன்றாட வாழ்க்கைச்சுழல், உலகெங்கும் வாழும் மக்களை ஆட்டம் காணச் செய்திருக்கிறது.

குறிப்பாக, பொருளாதார வசதி, சுகாதார வசதி வாய்ப்புகள் குறைந்த பெரும்பான்மையான மக்கள், இந்தத் திடீர் முடக்கத்தால், மீளமுடியாத பாதாளப் படுகுழிக்குள் தள்ளப்பட்டு விட்டார்களோ என்று தோன்றுகிறது.

சில தினங்களுக்கு முன்னர், டெல்லியிலிருந்து பெருந்தொகையான மக்கள், கால்நடையாக வௌியேறிச் சென்ற காட்சியின் படங்கள், மனதில் ஆற்றொனா வலியை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

உலக வரலாற்றில், பெருந்தொகையான மக்கள், ஓரிடத்திலிருந்து வௌியேறிய சம்பவங்கள் அனைத்துமே, பெருந்துயரான சம்பவங்களாகவே இருந்துள்ளன.

“எல்லோரும் வீட்டுக்குள் இருங்கள்” என்று நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் முதல், அரசாங்க இயந்திரம் வரை, மக்களை அறிவுறுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதில், இவர்களைத் தவறும் சொல்ல முடியாது. கொள்ளை நோய் தொற்றாது தடுக்க, மனித நடமாட்டத்தையும் மனிதர்கள் பெருமளவில் புழங்குவதையும் தடுப்பது, மிக அடிப்படையான நடவடிக்கைகளில் ஒன்றாகும்.

ஆனால், உணவின்றி மனிதன் எப்படி வாழ்வான்? இன்றைய பொருளாதார, சமூகக் கட்டமைப்பின் கீழ், பணமின்றி உணவு எப்படிக் கிடைக்கும்? தொழிலின்றி எப்படிப் பணம் கிடைக்கும்? பணமும் பொருளும், உணவும் உள்ளவர்கள், வீடுகளுக்குள் முடங்கிக் கிடப்பதில் உடனடியான பெருஞ்சவால்கள் எதுவுமில்லை.

அடுத்த வேளை, உணவுக்கான அரிசியை வாங்குவதற்கு, இன்று வேலை செய்தால்தான் பணம் கிடைக்கும் என, அன்றாட உழைப்பில் வாழும் மனிதனால், வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்க முடியுமா?

பணம், பொருள் உள்ளவர்கள் கூட, எத்தனை நாள்தான் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்க முடியும்? இவை, வெறும் அடிப்படையான பிரச்சினைகள் தான். இதிலிருந்து, ஒரு சங்கிலித் தொடராக, பெரும் வலைப்பின்னலாக, இந்தக் கட்டாய முடக்கம், மனித இயக்கத்தை ஸ்தம்பிக்கச் செய்திருக்கிறது.

பொருளாதாரம் ஸ்தம்பித்திருக்கிறது. பொருளாதார ஸ்தம்பிதம் என்பது, பறந்து கொண்டிருக்கும் விமானமொன்றின் இயந்திரம் நிறுத்தப்பட்டதைப் போலாகும். ஒரு குறுகிய காலத்துக்குக் காற்றில், அது மிதந்த படி கீழே வரும். ஆனால், ஒரு கட்டத்துக்குப் பின்னர், அது மிக வேகமாகக் கீழ்நோக்கி விரைந்து, தரையில் முட்டி மோதி வெடித்துவிடும். கொரோனா வைரஸின் தற்போதைய அச்சுறுத்தலுக்கும், பொருளாதார முடக்கத்தால், விரைவில் ஏற்படக்கூடிய பொருளாதார நெருக்கடிக்கும் நடுவில், உலகம் சிக்கிக்கொண்டிருக்கிறது.

உலகெங்கும், இலட்சக்கணக்கில் உயிர்களைக் காவுகொண்ட பற்பல கொள்ளை நோய்களை, வரலாற்றுக் காலம் முதல், உலகம் சந்தித்திருக்கிறது. அந்தக் கொள்ளை நோய்கள் ஏற்படுத்திய இழப்புகளிலிருந்து, மனிதன் மீண்டு வந்திருக்கிறான். அதுதான், மனித வரலாற்றின் வெற்றி.

ஆனால், இதுபோன்ற உலகளாவிய ரீதியிலான, பாரிய கொள்ளை நோய் பாதிப்பு, நிச்சயமாக உலக இயக்கத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திச் செல்லும். கிட்டத்தட்ட உலகம், செயலற்று இருக்கும் நிலைக்குச் சென்று வருவதைப்போலாகும்.

ஓர் இயந்திரம், செயலற்றிருக்கும் நிலைக்குச் சென்று வரும் போது, அது விட்ட இடத்திலிருந்து இயங்கத் தொடங்கும். ஆனால், உலகமும் மனிதர்களும், அப்படி விட்ட இடத்திலிருந்து தொடங்க முடியாது. நான்கு வாரங்கள் முடங்கிப் போன நாடு, மீண்டும் விட்ட இடத்திலிருந்து தொடர, அந்த இடத்தை அடையவே சில பல வருடங்கள் ஆகலாம். பொருளாதாரம், ஆரோக்கியம், சமூகப் பின்னடைவைச் சரிசெய்வது, இன்றைய உலகுக்குப் பெரும் சவாலாக இருக்கப் போகிறது.

அதனால், கொரோனா வைரஸ் உலகுக்குப் பெரும் சவாலாக மட்டுமின்றி, உலகின் போக்கை மாற்றி அமைக்கப்போகும் திருப்புமுனையாகவும் இருக்கப் போகிறது.

அரசியலும் அதிகாரமும்

கொரோனா வைரஸின் தாக்கமும் பரவுகையும் அமெரிக்காவில் கடுமையாக அதிகரித்துக் கொண்டிருப்பதை, அவதானிக்கக் கூடியதாக உள்ளது. அமெரிக்காவின் மருத்துவக் காப்புறுதி மய்ய சுகாதாரக் கட்டமைப்பு, சுகாதார சேவைகள் அனைவரையும் சென்றடைவதை எப்போதும் சவாலாக வைத்திருந்தது.

மருத்துவக் காப்புறுதி இல்லாதவர்கள், சாதாரணமாகவே சிறு நோய் அறிகுறிகளுக்காக மருத்துவமனைக்குச் செல்வதில்லை. இந்தச் சுகாதாரம்சார் கலாசாரக் கட்டமைப்பு, கொரோனா வைரஸை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்துவதில் அமெரிக்காவுக்குப் பெரும் சவாலாக மாறியிருக்கிறது. இதன் விளைவாக, கொரோனா வைரஸின் பரவுகை, மிகப்பாரியளவில் அமெரிக்காவில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. உலகின் பல்வேறு நாடுகள் ஊரடங்கைக் கடுமையாக அமல்ப்படுத்தும் போது, அமெரிக்கா வீட்டுக்குள் இருக்குமாறும், சமூக ஊடாட்டங்களைக் குறைக்குமாறும் அறிவுறுத்தல் மட்டுமே வழங்கியிருக்கிறது.

அமெரிக்காவின் நிலை இவ்வாறு இருக்க, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய ஐரோப்பிய நாடுகளின் நிலைமை மிகவும் கவலைக்கிடமானதாக மாறியிருக்கிறது. ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் ஆகிய நாடுகளும் கடுமையாகச் சவாலைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. ஈரானின் நிலைமையும் மோசமானதாக இருக்கிறது.

சீனாவிலிருந்து பரவியதாக அறியக்கிடைக்கும் இந்தக் கொரோனா வைரஸின் தாக்கத்திலிருந்து, சீனா பெருமளவு மீண்டு விட்ட நிலையில், மேற்கு மீண்டும் ஓர் இருண்ட யுகத்துக்குள் சிக்கிக்கொண்டுள்ள நிலையே ஏற்பட்டுள்ளது.

இந்தச் சூழல், சர்வதேச அரசியல் இயங்கியலில், கணிசமான மாற்றங்களை ஏற்படுத்தலாம் எனச், சில எதிர்வுகூறல்களை, கேட்கக்கூடியதாக இருக்கிறது.

மேற்குலகுடனான, சீனாவின் அதிகாரப் போட்டி என்பது, வௌிப்படையாகத் தெரியாததொன்றல்ல. கடந்த இரண்டு தசாப்தங்களாக, அமெரிக்கா உள்ளிட்ட பல மேற்கு நாடுகள், தங்கள் உற்பத்திக் கட்டமைப்பை, பொருளாதாரக் காரணங்களுக்காக சீனா நோக்கி நகர்த்தியிருந்தன. இது, சீனாவின் பொருளாதாரப் பலத்தை, கணிசமாகப் பெருக்கியதுடன், இந்த நாடுகளும், அவற்றின் பொருளாதாரமும் சீனாவில் தங்கியிருக்க வேண்டிய சூழலையும் ஏற்படுத்தி இருந்தன.

யுத்தம், நேரடித் தலையீடுகள் மூலம் அதிகாரத்தையும் செல்வாக்கையும் ஏற்படுத்தும் அணுகுமுறை சீனாவிடம் இல்லை. சீனா, பொருளாதார ரீதியாகவே நாடுகள் மீது செல்வாக்குச் செலுத்த விளைகிறது.

பொருளாதாரத்தில் தன்னிறைவடைந்த நாடுகளை, தனது உற்பத்திகளில் தங்கியிருக்கச் செய்கிறது; பொருளாதாரத்தில் பின்னடைந்த நாடுகளைத் தனது கடன்களிலும் முதலீட்டிலும் தங்கியிருக்கச் செய்கிறது.

ஆகவே, இந்த வகையில் உலகில் தவிர்க்க முடியாத சக்தியாகச் சீனா, தன்னை உருவாக்கிக் கொண்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவுகை கூட, சீனாவுக்கு இலாபகரமானதாகவே மாறியிருக்கிறது.

கொரோனா வைரஸ் நோய்ப் பரிசோதனைக்கான கருவிகளிலிருந்து, முகக்கவசம் உள்ளிட்ட அத்தியாவசிய மருத்துவ உபகரணங்கள் வரை, சீனா உற்பத்தி செய்து, மேற்குலகுக்கு அவற்றை விற்பனை செய்து வருகிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு, இலவசமாக அவற்றை வழங்கியும் உடனடியாகக் கடன்களை வழங்கியும் தனது செல்வாக்கை, அந்த நாடுகளில் அதிகரித்தும் வருகிறது.

கொரோனா வைரஸை, மேற்குலக நாடுகள் முறையாக எதிர்கொள்ளத் தவறும் போது, பொருளாதார ரீதியாக, மேற்குலக நாடுகள் கடுமையான பின்னடைவைச் சந்திக்கும் அதேவேளை, சீனாவின் பொருளாதார பலமும் சர்வதேச ரீதியிலான செல்வாக்கும் கணிசமாக அதிகரிக்கும். இது, 21ஆம் நூற்றாண்டின் முக்கிய திருப்பமாக அமையலாம்.

பொருளாதாரமும் ஆரோக்கியமும்

முடங்கி இருக்கும் பல நாடுகளின், பொருளாதாரம் மீள இயங்கத் தொடங்கும் போது, பொருளாதார ரீதியில் பின்தங்கி இருந்தவர்களின் நிலைமை, கணிசமாக மோசமடைந்திருக்கும். வேலையில்லாத் திண்டாட்டம் பெரும்பிரச்சினையாக உருவெடுக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. அன்றாட உழைப்பை நம்பி வாழும் மக்களின் நிலைமை, இன்னும் மோசமாகும்.

அமெரிக்கா போன்ற, திறந்த சந்தைப் பொருளாதாரக் கொள்கையுடைய நாடுகளே, மக்களுக்கு நிவாரணம் வழங்க முடிவெடுத்துள்ள நிலையில், இலங்கை போன்ற நாடுகளில் நிவாரணங்களின் தேவை மிக அதிகமாகும்.

சேவை மய்யப் பொருளாதாரமாக உருவாகிக் கொண்டிருக்கும் இலங்கை போன்ற நாடுகளின் பொருளாதாரம், மீட்சியடையப் பல ஆண்டுகள் தேவைப்படலாம். அதுவரை காலமும் மக்களுக்கு முறையான நிவாரணமும் பாதுகாப்பும் வழங்க வேண்டிய தேவை, அரசுகளுக்கு இருக்கிறது.

இந்த விடயத்திலிருந்து அரசுகள் தவறும் போது, அது பாரதுரமான சமூக, பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தலாம். ஆகவே தடுமாறும் பொருளாதாரத்தையும் அதைச் சில ஆண்டுகளுக்கு சமாளிக்க வேண்டிய பெரும் பொறுப்பும் சவாலும், பல்வேறு நாடுகளுக்கும் ஏற்படப்போகிறது.

மறுபுறத்தில், கொரோனா வைரஸை, அந்த நோய்த்தொற்று ஏற்பட்டவர்களின் உடல் ஆரோக்கியப் பிரச்சினையாக மட்டும் மட்டுப்படுத்தி அணுகிவிட முடியாது. பல வாரங்களாக, இயல்பு வாழ்க்கையிலிருந்து விலகி, பெருமளவான மக்கள் கூட்டம், வீட்டுச்சிறைக்குள் அடைபட்டு இருக்கிறார்கள். இதனால் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் உள ஆரோக்கியப் பிரச்சினைகள், மிகப்பாரதுரமானவை.

மேற்குலகம் இன்றளவில் கூட, உள ஆரோக்கியம் பற்றிப் பெருமளவு விழிப்புணர்வையும் உள ஆரோக்கியத் தேவைக்கான வசதிகளையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. ஆனால், இலங்கை போன்ற நாடுகளில், உள ஆரோக்கியம் என்பது, இன்னமும் பேசப்படாத பொருளாகவும் ‘பைத்தியங்களுக்கு’ மட்டுமானதும் என்ற அபத்தமான பொது மனநிலையைக் கொண்டதாகவுமே காணப்படுவது துரதிர்ஷ்டவசமானதே. இது, உள ஆரோக்கியப் பிரச்சினைகளை, இலங்கை போன்ற நாடுகள் எதிர்கொள்வதை, மிகக் கடினமாக்கப் போகிறது.

நீண்டகாலத்தின் பின்னர், இனம், மதம், மொழி, நாடு கடந்து, மனிதர்கள் அனைவரினதும் இருப்புக்கு ஒரு பொதுவான சவால் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், கொரோனா வைரஸ் மனிதனை இந்தப் புவியிலிருந்து இல்லாதொழிக்கப் போவதில்லை; அது நிச்சயம்!

வரலாற்றில் தான் சந்தித்த அனைத்துக் கொள்ளை நோய்களையும், மனிதன் எவ்வாறு வெற்றி கொண்டானோ, அதைப் போலவே கொரோனா வைரஸையும் வெற்றி கொள்வான். ஆனால், இந்தச் சில மாதங்கள், கொரோனா வைரஸ் தந்த தாக்கம், மனித வாழ்வைத் தனி மனித அளவிலும், நாடுகள் ரீதியாகவும் உலக அளவிலும் அடுத்த ஒரு தசாப்த காலத்துக்கேனும் பாதிக்கப்போகிறது.

பறக்கும் கார்களைப் பற்றிய கனவைக் கொண்ட மனிதனை, அடிப்படையான உணவு, சுகாதார வசதிகள் பற்றித் தீவிரமாகச் சிந்திக்கச் செய்திருக்கிறது கொரோனா வைரஸ். இயற்கை பற்றிய பிரக்ஞையும், பரவலாக உயிரூட்டம் கொண்டுள்ளது. ஒன்று மட்டும் உண்மை! கொரோனாவுக்கு முந்திய உலகம் போல, கொரோனாவுக்குப் பிந்திய உலகம் இருக்கப் போவதில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உலகை வேற லெவலுக்கு எடுத்து செல்லும் வெறித்தனமான கண்டுபிடிப்புகள் ! (வீடியோ)
Next post இப்படிப்பட்ட ரோடு மெஷின்களை நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை ! (வீடியோ)