செம்முள்ளி!! (மருத்துவம்)

Read Time:10 Minute, 34 Second

மூலிகை மந்திரம் சித்த மருத்துவர் சக்தி சுப்பிரமணியன்

இந்தியா முழுவதிலும் வெப்பமான பகுதிகளில் விளையக்கூடிய செம்முள்ளிச்செடி, இரண்டு அடி உயரம் வரை வளரக்கூடியது. செம்முள்ளி என்று பெயர் பெற்றிருந்தாலும் மஞ்சள், நீல நிறங்களில் மலைகளின் அடிவாரத்திலும் ஆற்றங்கரை ஓரத்திலும் அழகான பூக்களோடு வளரக் கூடியது. இச்செடியின் மலர், தண்டு, இலைகள் என அனைத்துமே மருத்துவ குணம் வாய்ந்தது.வருடம் முழுவதும் பூக்கக்கூடிய செம்முள்ளியின் வேர் மரத்தைப் போல அடியில் அநேக சிறிய வேர்கள் கிளைத்துக் காட்சியளிக்கும். இதன் இலைச்சாறு கசப்புச் சுவை கொண்டது. பூக்கள் கனகாம்பரம் பூக்களை நினைவுபடுத்துவதாகவும், இலைகள் முட்கள் நிறைந்ததாகவும் இருக்கும்.செம்முள்ளிக்கு Barleria prionitis என்பது தாவரப் பெயர் ஆகும். Common yellow nail dye plant என்றும் Porcupine flower என்றும் ஆங்கிலத்தில் குறிக்கப்பெறும். இந்தியில் ‘வஜ்ர தந்தி’ என்ற பெயரால் குறிப்பர். தமிழில் கோரண்டம், குறிஞ்சி, குடான் என்கிற பெயராலும் அழைப்பார்கள்.செம்முள்ளியின் இலைகள் தண்டுப் பகுதிகள் சற்று விரைப்பானவை.

இலைகள் 100 மி.மீ. நீளமும் 40 மி.மீ அகலமும் உடையது. முட்டை வடிவ இலையில் மூன்று முதல் ஐந்து என்னும் எண்ணிக்கையில் மெல்லிய கூர்மையான சற்று வெளிர்நிற முட்களைக் கொண்டு விளங்கும்.மஞ்சளும், ஆரஞ்சு நிறமும் கொண்ட குழல் போன்ற வடிவுடைய அடர்ந்த கொத்தான பூக்களைக் கொண்டு விளங்கும். விதைக் கொத்து மெல்லிய கூர்மையான பறவை மூக்கை ஒத்த விதைப்பையைக் கொண்டு விளங்கும். ஒவ்வொரு விதைப்பையிலும் இரண்டு தட்டையான 8 மி.மீ. நீளமும் 5 மி.மீ. அகலமும் சுற்றிலும் சிறு ரோமங்களையும் பெற்றிருக்கும்.செம்முள்ளியின் மருத்துவப் பயன்கள்:‘செம்முள்ளி என்றால் சிலேத்துமம் நடுங்கும்’ என்று ஒரு பழமொழி வழக்கத்தில் உண்டு. இதற்குக் கபத்தை அறுக்கும் குணமுள்ளதால் இதைத் தீநீர் இட்டுக் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். இதன்மூலம் மாந்தம், மேல் மூச்சு வாங்குதல் போன்றவை குணமாகும்.

இலைச்சாறு வியர்வையை உண்டாக்கும் தன்மையுடையது. இதனால் காய்ச்சல் குணமாகும். சளித்தொல்லையினின்றும் விடிவு ஏற்படும். உள்ளங்கால், குதிகால் ஆகியவற்றில் ஏற்படும் வெடிப்புக்கு இதன் சாற்றினை பூசுவதால் சீக்கிரத்தில் குணம் கிடைக்கும்.இதன் பூண்டை நெருப்பில்இட்டுக் கொளுத்திப் பெற்ற சாம்பலை இருமலுக்குக் கொடுக்கலாம். இதன் வேரை மேற்பூச்சாகப் பயன்படுத்த கொப்புளங்கள், கிரந்திப் புண்கள் குணமாகும். செம்முள்ளியின் இலைகள் தண்டு இவற்றை எண்ணெயில் இட்டு மேற்பூச்சாகப் பூச காயங்கள் குணமாகும்.

செம்முள்ளியின் இலைச்சாறு வயிற்றுக் கோளாறுகள், சிறுநீரகக் கோளாறுகள், காய்ச்சல், மூக்கொழுகுதல் ஆகியவற்றைக் குணப்படுத்தும். இலை மற்றும் பூங்கொத்து சிறுநீரைப் பெருக்கக்கூடியது. தண்டு வியர்வையைப் பெருக்கும்.செம்முள்ளியின் சமூலம்(மொத்தப்பகுதி) பல் நோய்களைப் போக்க வல்லது. இந்திய மருத்துவத்தில் ஈறுகளைப் பற்றிய நோய்களை குணமாக்க செம்முள்ளியின் சமூலம் பயன்படுத்தப்படுகிறது. இந்திய ஆயுர்வேத மருத்துவம் செம்முள்ளிச் செடியினின்று தயாரிக்கப்பட்ட தைலம் தலைமுடி இளமையிலேயே நரைப்பதைத் தடுக்கத் தைலமாகப் பயன்படுத்த சிபாரிசு செய்கிறது.செம்முள்ளியின் இலைகள் மற் றும் பூங்கதிர்களில் பொட்டாசியம் என்னும் தாது உப்பு மிகுதியாக அடங்கியுள்ளது. இலைகள் மற்றும் தண்டுப்பகுதியில் எண்ணற்ற மருத்துவ வேதிப் பொருட்கள் மிகுந்துள்ளன.

உடலில் நமைச்சல், கொப்புளங்கள், சீழ் பிடிக்கும் புண்கள் ஆகியவற்றுக்குக் காரணமாகும் நுண்கிருமிகளை செம்முள்ளியின் சமூலம் கொல்ல வல்லது.மாசுபட்ட நீர், உணவு, காய்கறிகள் ஆகியவற்றின் மூலம் மனித உடலைப்பற்றி நோகச் செய்யும் E.coli எனும் நோய்க்கிருமியையும் செம்முள்ளி எளிதில் அழிக்கவல்லது.

செம்முள்ளி பெற்றிருக்கும் மருத்துவ குணங்கள்:

வீக்கத்தை வற்றச் செய்வது, மூட்டுவலியை குணமாக்கக்கூடியது, ஈரல்களுக்கு பலமூட்டக்கூடியது. சர்க்கரை நோயைத் தணிக்கக் கூடியது. ஒட்டுண்ணிகளான நோய்க்கிருமிகளைப் போக்க வல்லது. இதயத்தைப் பற்றி வரும் நோய்களைக் கண்டிக்கவும், வயது முதிர்வின்போது பலரையும் பாதிக்கிற அல்சைமர் மறதிநோயை குணமாக்கவும் செம்முள்ளி பயன்படுத்தப்படுகிறது.

செம்முள்ளி பூஞ்சைக் காளான்களைப் போக்கும் தன்மை பெற்றது. செம்முள்ளி வாயைப்பற்றி நின்று பற்களைச் சொத்தைப்படுத்தும் நுண்கிருமிகளை எதிர்த்து நின்று தடுப்பதோடு, வந்தவற்றையும் விரட்ட வல்லது. மேலும் மத்திய நரம்பு மண்டலத்தை பலப்படுத்தி, மனஅழுத்தத்தைப் போக்க வல்லது.

செம்முள்ளி மருந்தாகும் விதம்:இந்திய மருத்துவர்கள் செம்முள்ளியின் வேர்ப்பகுதியை விஷக்காய்ச்சல்களைப் போக்குவதற்காகப் பயன்படுத்துவர். செம்முள்ளி இலைகள் சிலவற்றை ஒரு பாத்திரத்தில் இட்டு நீர் ஊற்றிநன்றாகக் கொதிக்க வைத்து, தீநீராக்கி வடிகட்டி இனிப்பு சேர்த்து சிறிது சிறிதாகக் குடிப்பதால் விஷக்காய்ச்சல் விலகிப் போகும்.

பற்களுக்கும் ஈறுகளுக்கும் உறவு முறிந்து இடைவெளி ஏற்பட்டு ரத்தம் கசிதல், பற்களில் காணப்படும் ஆட்டம், பற்சொத்தை, பற்கூச்சம் ஆகிய நோய்களைக் குணப்படுத்த செம்முள்ளி சமூலம் மிகச் சிறந்த மூலிகை ஆகும்.

செம்முள்ளிச் செடியின் காய்ந்த வேர், காய்ந்த இலை இவற்றைப் பொடித்து பல் துலக்குவதற்கு பற்பொடிபோல பயன்படுத்துவதால் பற்களைப் பற்றிய கிருமிகள் அதனால் விளைந்த பல் ஆட்டம், பற்சொத்தை, பல்லில் கசியும் ரத்தம், சீழ் ஆகியவற்றைக் குணப்படுத்தும். இதனால் பற்கள் பலம் பெறுவதோடு ஆரோக்கியமும் பெறும்.

இதனாலேயே செம்முள்ளிக்கு ‘வஜ்ர தந்தி’ என்ற பெயர் அனைத்து வஜ்ர தந்தி என்பதற்கு ‘வைரம் போன்ற பற்கள்’ என்பது பொருள் ஆகும்.செம்முள்ளியின் இலைகளை நசுக்கிப் பசையாக்கி அடிபட்ட காயங்களின் மேற்பற்றாகப் போடுவதால் வீக்கம், வலி ஆகியன குறைந்து காயங்கள் சீழ் பிடிக்காமல் ஆறுவதோடு வடுக்கள் வராத வண்ணமும் புண்களை ஆற்றும்.

செம்முள்ளி இலைப் பசையை மேற்பூச்சாகப் பயன்படுத்துவதால் கொப்புளங்கள் மூட்டுவலிகள் ஆகிய நோய்கள் குணமாகும்.செம்முள்ளி சமூலப் பசையை எடுத்து தலைக்குத் தேய்த்து வைத்திருந்து 15 நிமிடம் கழித்து குளித்து விடுவதால் பூஞ்சைக் காளானால் உண்டாகும் கரப்பான், புழுவெட்டு போன்ற நோய்கள் ஓடிப் போகும். இதனால் தலைமுடி உதிர்வது தடுக்கப்பட்டு அடர்ந்த முடி வளர்வதற்கு ஆதரவாகவும் அமைகிறது.

செம்முள்ளி இலைகளை அரைத்து மேற்பற்றாகப் போட குதிகால் வெடிப்பு, அரிப்பு ஆகியன குணமாகின்றன.செம்முள்ளியின் தண்டுப்பகுதியை காய வைத்து சூரணமாக்கித் தீநீர் ஆக்கிக் குடிப்பதால் கக்குவான் இருமல், குத்திருமல், வறட்டிருமல் ஆகியன விரைவில் குணமாகும்.செம்முள்ளி சமூலத்தைக் காய வைத்து சூரணித்து குடிப்பதால் சிறுநீரகக் கோளாறுகள், பக்கவாதம், மூட்டு வலிகள், மஞ்சள் காமாலை, ஈரல் வீக்கம், அடைப்பு ஆகியன குணமாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்ணுக்கும் பெண்ணுக்கும் லவ். காரணம் என்ன? (அவ்வப்போது கிளாமர்)
Next post கொரோனா வைரஸ் – நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்க ஆயுர்வேத ஆலோசனை! (கட்டுரை)