கொரோனா வைரஸ் – நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்க ஆயுர்வேத ஆலோசனை! (கட்டுரை)
இந்திய அரசின் ஆயூஷ் அமைச்சகம் ஆயூர்வேத மருத்துவ நூல்களில் கூறப்பட்டுள்ளவை மற்றும் அறிவியல் பதிப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் நோய் எதிர்ப்புத் திறனை உடலில் அதிகரிக்க மற்றும் சுவாச கோளாறில் இருந்து தப்பிக்க சில வழிமுறைகளைக் கூறியுள்ளது.
ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்களை கீழே தொகுத்து வழங்குகிறோம்.
நோய் எதிர்ப்புத் திறனை வளர்க்க:
சுட வைத்த நீரை குடிக்க வேண்டும்.
தினமும் குறைந்தது 30 நிமிடங்களுக்கு மூச்சு பயற்சி, யோகா மற்றும் தியானம் செய்ய வேண்டும்.
சமையலில் மஞ்சள், சீரகம், மல்லி மற்றும் பூண்டு ஆகியவை சேர்த்துக் கொள்ளலாம்.
ஆயுர்வேத முறையில் நோய் எதிர்ப்பு திறனை வளர்ப்பது எப்படி?
சியாவன்பிராஷ் லேகியத்தை தினமும் ஒரு தேக்கரண்டி எடுத்து கொள்ளலாம். நீரிழிவு நோய் உள்ளவர்கள் சக்கரையற்ற சியாவன்பிராஷை மட்டும் ஒரு தேக்கரண்டி உட்கொள்ள வேண்டும்.
தேன், நெய், பழங்கள், மூலிகைகள் உள்ளிட்டவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் கலவையே ஆயுர்வேதத்தில் சியாவன்பிராஷ் எனப்படும்.
மூலிகை தேநீர் அல்லது துளசி, பட்டை, மிளகு, சுக்கு மற்றும் உலர்ந்த திராட்சை ஆகியவை கொண்டு செய்த கசாயத்தை ஒரு நாளுக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை குடிக்கலாம். தேவைப்பட்டால் வெல்லம் மற்றும் எலுமிச்சை சாறை அதனுடன் சேர்த்து கொள்ளலாம்.
அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து 150 மில்லிலிட்டர் சூடான பாலை நாளுக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை குடிக்கலாம்.
எளிய ஆயூர்வேத நடைமுறைகள்
நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் அல்லது நெய்யை மூக்கின் இரு நாசிகளிலும் காலை மற்றும் மாலை வேளைகளில் தடவ வேண்டும்.
ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் எடுத்து 2 அல்லது 3 நிமிடங்கள் வாய் கொப்பளிக்க வேண்டும். பிறகு சூடான நீரை வைத்து வாயை சுத்தம் செய்து கொள்ளலாம். இது ஒரு நாளுக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை செய்யலாம்.
வறட்டு இருமல் இருக்கும்போது என்ன செய்ய வேண்டும்?
புதினா, சிறுஞ்சீரக விதைகள் ஆகியவை கலந்த வெந்நீரில் ஆவி பிடிக்கலாம்.
தொண்டை எரிச்சல் இருந்தால் சர்க்கரையுடன் கலந்த அல்லது தேனுடன் கலந்த லவங்கம் நாள் ஒன்றுக்கு 2-3 முறை எடுத்து கொள்ளலாம்.
இது வறட்டு இருமலைக் கட்டுப்படுத்தும்.
மேற்கண்டவை நோய் எதிர்ப்புத் திறனை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளாக ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்கள் மட்டுமே.
கோவிட்-19 அறிகுறிகள் இருந்தால் மருத்துவ சேவையை அணுகவும்.
Average Rating