By 24 April 2020 0 Comments

கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்? (உலக செய்தி)

கோவிட்-19 நோய் தாக்குதலுக்கு உலகெங்கும் இதுவரை 170,000-க்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டனர். ஆனால் அதற்கான சிகிச்சை தருவதற்கு, நோயை குணமாக்கும் என்று நிரூபிக்கப்பட்ட மருந்துகள் எதுவும் மருத்துவர்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை.

இந்த உயிர் காக்கும் மருந்துகளைத் தயாரிப்பதில் நாம் இன்னும் எவ்வளவு தொலைவில் இருக்கிறோம்? சிகிச்சை முறைகளைக் கண்டறிய என்ன பணிகள் நடக்கின்றன?

கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க, உலகம் முழுக்க 150-க்கும் மேற்பட்ட மருந்துகள் குறித்து ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. ஏற்கெனவே இருக்கும் சில மருந்துகள், இந்த வைரஸ் நோய் சிகிச்சைக்கு பயன்படுமா என்றும் பல பரிசோதனைகள் நடைபெறுகின்றன.

மிகவும் நம்பிக்கை தரும் சிகிச்சை முறைகளை மதிப்பீடு செய்வதற்காக உலக சுகாதார நிறுவனம் ´சாலிடாரிட்டி´ (WHO Solidarity) திட்டத்தின்கீழ் மருத்துவப் பரிசோதனையைத் தொடங்கியுள்ளது.

இந்த நோயைக் குணமாக்குவதற்கு தாங்கள் ´ரெக்கவரி´ (Recovery ) திட்டத்தின்கீழ் மேற்கொண்டுள்ள பரிசோதனை முறைதான் உலகிலேயே மிகப் பெரியது என்று பிரிட்டன் கூறியுள்ளது. இதில் ஏற்கெனவே 5,000க்கும் மேற்பட்ட நோயாளிகள் பங்கேற்றுள்ளனர்.

நோய் தாக்கி குணம் அடைந்தவர்களின் ரத்தத்தை எடுத்து சிகிச்சைக்குப் பயன்படுத்துவதற்கு ஏராளமான ஆராய்ச்சி மையங்கள் முயற்சி செய்து கொண்டிருக்கின்றன.

மூன்று பரந்த அணுகுமுறைகளில் முயற்சிகள் நடைபெறுகின்றன:

வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் – இவை உடலில் நேரடியாக கொரோனா வைரஸ்களை தாக்கும் திறன் கொண்டவை.

நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஆற்றுப்படுத்துபவை – நோய் எதிர்ப்பு மண்டலம் தீவிரமாக வேலை செய்யும்போது, உடலுக்கு பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

குணம் அடைந்தவர்களின் ரத்தத்தில் இருந்து எடுத்த அல்லது ஆய்வகங்களில் உருவாக்கிய நோய் எதிர்ப்பு அணுக்கள் கொரோனா வைரஸை தாக்கக் கூடியவை.

சீனாவுக்கு தாம் சென்று வந்த பிறகு, remdesivir என்ற மருந்துதான் இதற்கு நல்ல பலன் தருவதாக தெரிகிறது என்று உலக சுகாதார நிறுவனத்தை சேர்ந்த மருத்துவர் புரூஸ் அயில்வர்டு தெரிவித்துள்ளார்.

வைரஸ் எதிர்ப்புக்கான இந்த மருந்து இபோலா நோய்க்கு சிகிச்சை தருவதற்காக தயாரிக்கப்பட்டது. ஆனால் வேறு நோய்களின் சிகிச்சைக்கான பயன்பாடுகளும் சிறப்பாக உள்ளன.

விலங்குகளுக்குப் பயன்படுத்திப் பார்த்ததில், மற்ற கொரோனா வைரஸ்களுக்கு எதிரான சிகிச்சைகளில் (சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும் நோய்களுக்கு) இந்த மருந்து நல்ல பலனைத் தந்துள்ளது. எனவே கோவிட்-19 தொற்றை உண்டாக்கும் சார்ஸ்-கொரோனா வைரஸ்-2 (Sars-CoV-2) தாக்குதலுக்கு எதிராகவும் இது சிறந்த பலனைத் தரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

சிகாகோ பல்கலைக்கழகம் முன்னின்று நடத்திய மருத்துவப் பரிசோதனையின் முடிவுகள் கசிந்துள்ளன. அதன்படி இந்த மருந்து நல்ல பயனைத் தருவதாக தெரிந்துள்ளது.

உலக சுகாதார நிறுவனம் ´சாலிடாரிட்டி´ (WHO Solidarity) திட்டத்தின்கீழ் நடத்தி வரும் பரிசோதனையில் இடம் பெற்றுள்ள 4 மருந்துகளில் இதுவும் ஒன்று. அதைத் தயாரிக்கும் Gilead நிறுவனம், இந்தப் பரிசோதனைகளை நடத்தி வருகிறது.

எச்.ஐ.வி. சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் lopinavir மற்றும் ritonavir ஆகிய மருந்துகள் கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு பயன்தரும் என்று நிறைய பேசப்படுகிறது என்றாலும் அதற்கான ஆதாரங்கள் குறைவாகவே உள்ளன.

சில மருந்துகள் ஆய்வகப் பரிசோதனையின்போது நல்ல பலன் தரும். ஆனால் மனிதர்களுக்குப் பயன்படுத்தும் போது முடிவுகள் ஏமாற்றமாகிவிடுவது உண்டு.

கோவிட்-19 தீவிர பாதிப்பு உள்ளவர்கள் குணமாவதற்கு, மரணங்களைக் குறைப்பதற்கு அல்லது வைரஸ் அளவைக் குறைப்பதில் இந்த மருந்துகள் பயன் தரவில்லை.

இருந்தபோதிலும், அதிக ஆபத்தில் உள்ள நோயாளிகளிடம் (25 சதவீதம் மரணம் அடைந்தவர்கள்) நடத்திய மருத்துவப் பரிசோதனையில், நோய்த் தொற்றுக்கு எதிராக இந்த மருந்து செயல்படுவதற்கான காலம் கடந்துவிட்டது தெரியவந்துள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின் ´சாலிடாரிட்டி´ மற்றும் இங்கிலாந்தில் நடக்கும் ´ரெக்கவரி´ ஆகிய திட்டங்களின்கீழ் செய்யப்பட்ட பரிசோதனைகள் இரண்டிலுமே மலேரியா மருந்துகள் இடம் பெற்றுள்ளன.

குளோரோகுயின், அதன் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்ட ஹைட்ராக்சி குளோரோகுயின் ஆகியவை வைரஸ் எதிர்ப்பு மற்றும் நோய் எதிர்ப்புத் திறனை ஆற்றுப்படுத்தும் குணங்களைக் கொண்டதாக இருக்கலாம்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறிய காரணத்தால், இது கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு உகந்ததாக இருக்கும் என்ற எண்ணம் பெரிதாக ஏற்பட்டுள்ளது. ஆனால் அது எந்த அளவுக்குப் பயன் தரும் என்பது குறித்து குறைவான ஆதாரங்களே உள்ளன.

ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்து மூட்டுவலி சிகிச்சைக்கும் பயன்படுத்தப்படுகிறது. நோய் எதிர்ப்பு மண்டலத்தை இது சீர் செய்வதால் மூட்டுவலிக்கு பயன்படுத்தப்படுகிறது.

இந்த மருந்து கொரோனா வைரஸ் கிருமியின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும் என்று ஆய்வகப் பரிசோதனைகளில் தெரிய வந்துள்ளது. நோயாளிகளுக்கு இது உதவிகரமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியதாகவும் தகவல்கள் உள்ளன.

இருந்தபோதிலும், இந்த மருந்து பயனுள்ளதாக இருக்கும் என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

வைரஸ் தாக்குதலுக்கு எதிராக நோய் எதிர்ப்பு அமைப்பு அதிகமாக செயலாற்றும்போது, நோய்த் தொற்றுக்கு எதிரான போரை தீவிரப்படுத்த இது உதவிகரமாக இருக்கும். ஆனால் அது அதிகமாகும்போது, உடலில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி, மரணத்தையும் ஏற்படுத்தக்கூடும்.

´சாலிடாரிட்டி´ பரிசோதனையில் இன்டெர்ஃபெரான் பீட்டா (Interferon beta) மருந்து பற்றியும் ஆய்வு செய்யப்படுகிறது. இது தண்டுவட மரப்பு நோய் உள்ளிட்ட சிகிச்சைகளில் பயன்படுத்தப் படுகிறது. வைரஸ் தாக்குதல் நடைபெறும்போது உடலில் உருவாக்கப்படும் ரசாயனங்களின் தொகுப்பாக இருக்கும் நச்சுயிரிப் பெருக்கத் தடுப்புப் பொருட்கள் இன்டெர்ஃபெரான் எனப்படும்.

பிரிட்டனின் ´ரெக்கவரி´ திட்டத்தின்கீழ் நடக்கும் மருத்துவப் பரிசோதனையில், அழற்சியைக் குறைப்பதற்கான டெக்சாமெதாஸோன் (dexamethasone) என்ற ஸ்டீராய்டு வகை மருந்தை பயன்படுத்துவது குறித்து ஆய்வு நடைபெறுகிறது.

ஒரு நோய்த் தொற்றில் இருந்து குணமானவர்களின் ரத்தத்தில், அந்த வைரஸை எதிர்த்துப் போராடும் அணுக்கள் இருக்கும்.

ரத்தத்தில் இருந்து பிளாஸ்மாவை (நோய் எதிர்ப்பு அணுக்கள் கொண்ட பகுதி) பிரித்து, அந்த வைரஸ் பாதிப்பு உள்ளவருக்கு செலுத்துவது (பிளாஸ்மா தெரப்பி) என்பதுதான் இதன் அணுகுமுறை.

´´கன்வாலெசென்ட் பிளாஸ்மா´´ என்படும் இந்த முறை மூலம் ஏற்கெனவே 500 நோயாளிகளுக்கு அமெரிக்காவில் சிகிச்சை தரப்பட்டுல்ளது. மற்ற நாடுகளும் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை தருவதற்கான மருந்து எப்போது கிடைக்கும் என்பதை இவ்வளவு சீக்கிரத்தில் கூறிவிட முடியாது. இருந்தபோதிலும், மருத்துவப் பரிசோதனைகளின் முடிவு அடுத்த சில மாதங்களில் வரத் தொடங்கிவிடும். (சிகிச்சை தருவதைக் காட்டிலும் இந்த பாதிப்பு வராமல் தடுக்கக் கூடிய) தடுப்பூசி பயன்தருமா என சொல்ல முடியாத அளவுக்கு இது ஆரம்ப கட்டமாக உள்ளது.

ஏற்கெனவே தயாரிக்கப்பட்டுள்ள மருந்துகளை இதற்கும் பயன்படுத்துவது பாதுகாப்பானதாக இருக்குமா என்று மருத்துவர்கள் பரிசோதனை செய்து வரும் நிலையில், புதியாக தடுப்பூசிகளை உருவாக்கும் முயற்சியை ஆராய்ச்சியாளர்கள் அடிப்படை நிலையில் இருந்து தொடங்கியுள்ளனர்.

பரிசோதனை அடிப்படையில், புதிய கொரோனா வைரஸ் மருந்துகளும் பரிசோதனை நிலைய சோதனையில் இருக்கின்றன. ஆனால் மனிதர்களுக்கு செலுத்தி சோதனை செய்யும் அளவுக்கு அதில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

உயிர்களைக் காப்பாற்றுவதற்கான தேவைதான் சிகிச்சைகான தேவை என்பது மட்டுமின்றி, முடக்கநிலை அமலாகியுள்ளதை விலக்க வேண்டும் என்பதும் முக்கியமானதாக உள்ளது.

சரியான சிகிச்சை முறையை உருவாக்கிவிட்டால், கொரோனா வைரஸ், சாதாரண நோயாக மாறிவிடும்.

வென்டிலேட்டர் தேவைப்படும் நிலையை ஏற்படுத்தி, நோயாளிகள் மருத்துவமனைக்கு வரும் சூழ்நிலை நின்றுவிட்டால், தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் கூட்டம் சேரும் நிலை குறையும். மக்களைக் கட்டுப்படுத்துவதில் அதிக கடுமை காட்ட வேண்டியிருக்காது.

கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால், பெரும்பாலானவர்களுக்கு லேசான பாதிப்பாக இருக்கும் நிலையில் வீட்டிலேயே ஓய்வெடுத்துக் கொண்டு, பாரசிட்டமால் மருந்து மற்றும் பழச்சாறுகள் குடிப்பதன் மூலம் சிகிச்சை தரப்படுகிறது.

ஆனால் சிலருக்கு மருத்துவமனையில் வைத்து தீவிர சிகிச்சை தரும் அவசியம் ஏற்படும்போது, வென்டிலேட்டர் போன்ற செயற்கை சுவாசக் கருவிகளின் உதவி தேவைப்படுகிறது.Post a Comment

Protected by WP Anti Spam