ரூ.197 கோடிக்கு மதுபானம் விற்பனை!! (உலக செய்தி)
கர்நாடகத்தில் 40 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் மதுபான கடைகள் திறக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் 4,200 கடைகள் திறக்கப்பட்டன. மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபானங்களை வாங்கி சென்றனர்.
ஆண்களுடன் போட்டிபோடும் வகையில் பெண்களும் வரிசையில் காத்திருந்து மதுபானம் வாங்கிய காட்சிகளும் அரங்கேறின. முதல் நாளில் மொத்தம் 3.90 லட்சம் லிட்டர் பீர் மற்றும் 8.50 லட்சம் லிட்டர் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானம் விற்பனையானது. இதன் மதிப்பு ரூ.45 கோடி ஆகும்.
இந்த நிலையில் 2வது நாளான நேற்று மாநிலத்தில் மது விற்பனை முதல் நாளைவிட அதிகரித்தது. 2வது நாளில் ரூ.197 கோடிக்கு மதுபானம் விற்பனை ஆகியுள்ளது. இந்தியாவில் தயாரிக்கும் வெளிநாட்டு மதுபானம் 36.37 லட்சம் லிட்டர் மற்றும் 7.02 லட்சம் லிட்டர் பீர் விற்பனையாகியுள்ளது. கர்நாடகத்தில் 2 நாட்களில் ரூ.242 கோடிக்கு மதுபானம் விற்பனையாகியுள்ளது.
பெங்களூரு தாவரகெரேவில் ஒரு மதுபான கடையில் ரூ.52 ஆயிரத்து 800 க்கு மதுபானம் வாங்கியதற்கான ரசீது ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலானது. கலால்துறை விதிமுறைப்படி ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானம் அதிகபட்சமாக 2.6 லிட்டர் அல்லது 18 லிட்டர் பீர் விற்பனை செய்ய முடியும்.
ஆனால் அந்த கடையின் ரசீதில் ஒரு நபருக்கு 13.5 லிட்டர் மதுபானம் மற்றும் 35 லிட்டர் பீர் விற்பனை செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து கலால்துறை அதிகாரி கிரி கூறுகையில், “அந்த கடையின் உரிமையாளரிடம் நேரில் சென்று விசாரித்தேன். அவர் 8 நபர்கள் மதுபானம் வாங்கியதாகவும், அவர்கள் ஒரே ரசீதில் பணத்தை செலுத்தியதாகவும் கூறினார். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையின் முடிவில், சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்” என்றார்.
Average Rating