’வெட்கமின்றி பதவிகள் கேட்டால் அமைச்சுப் பதவியை வாங்கித் தருகிறேன்’ (கட்டுரை)

Read Time:24 Minute, 57 Second

கேள்வி: பிராந்திய மட்டத்தில் அல்லாது தேசிய மட்டத்தில் பணியாற்றக்கூடிய அமைச்சுப் பதவி கிடைத்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு மத்தியில் அமைச்சின் பணிகளின் நிலைமைகள் எவ்வாறு உள்ளன?

பதில்: புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்களுக்குள், நாடு கொரோனா வைரஸ் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளது.இதனால் எனது அமைச்சு மட்டுமல்ல எல்லோரது அமைச்சுப் பணிகளிலும் தடங்கல் ஏற்பட்டுள்ளதோடு, ஸ்தம்பிதமடைந்துள்ளன. கிராமசக்தி அமைச்சும் எனக்கே வழங்கப்பட்டிருக்கின்றது. அதன் வேலைத்திட்டங்களைத் தொடங்கும்போதே கொரோனா வைரஸ் பிரச்சினையும் ஏற்பட்டுவிட்டது. எனவே, அதன் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

மீள் குடியேற்றத்தைப் பொறுத்தவரையில் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டன. வடக்கில் மீள் குடியேற்றப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் குறைவடைந்ததும் அதன் பணிகளை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளேன்.

தோட்ட உட்கட்டமைப்பின் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன. இதுவரையில் 349 திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 133 திட்டங்கள் நூற்றுக்கு நூறு சதவீதம் நிறைவு பெற்றுள்ளன. ஏனையதிட்டங்களும் 20 – 30 சதவீதப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவிட்டன.

கேள்வி: வடக்கு, மலையகம் என அமைச்சின் சேவைகளை முன்னெடுப்பது சவாலாக இருக்கிறதா?

பதில்: எனக்கு வழங்கப்பட்டிருக்கும் அமைச்சு தனியாக மலையகத்துக்கு மாத்திரம் சேவையாற்றக்கூடியதல்ல. அது முழு இலங்கைக்குமானது. வடக்கு மக்களும் என் மக்கள்தான். அவர்களும் இலங்கைப் பிரஜைகள்தான். அது எனக்கு ஒரு சவாலாகத் தெரியவில்லை. விரும்பிச் செய்கிறேன்.

கேள்வி: ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்தில் மலையகத்தில் செய்த வேலைத்திட்டங்கள் என்ன?

பதில்: கடந்த ஐந்து வருடங்களாக நான் எந்தவோர் அமைச்சுப் பொறுப்பையும் ஏற்கவில்லை. அமைச்சுப் பதவி இல்லை என்று ஏனையோரைப் போல அழுது புலம்பிக்கொண்டு, குறைகளை மாத்திரமே கூறிக்கொண்டிருக்காது, அமைச்சுப் பதவி இல்லாமலே மலையகத்தில் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருக்கிறேன்.

முன்னாள் அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருந்தவர்கள் மலையகத்தில் வீடுகளை மாத்திரமே கட்டிக்கொடுத்து விட்டுச் சென்றுவிட்டார்கள். அந்த வீடுகளும் தரமானவையாக இல்லை.

இந்திய வீடமைப்புத் திட்டங்கள் கொஞ்சம் இடைநிறுத்தப்பட்டிருக்கின்றன. ஏற்கெனவே வழங்கியிருந்த இந்திய வீடமைப்புத் திட்டங்களின்படி, வீடுகளை மாத்திரமே இந்தியா வழங்கும். அந்த வீடுகளுக்கான நீர், மின்சாரம், வீதி என்பனவற்றை இலங்கை அரசாங்கம் வழங்க வேண்டும்.

கடந்த அரசாங்கத்தில் அரசியல் போட்டிக்காக வீடுகள் மாத்திரமே நிர்மாணிக்கப்பட்டுள்ளன. நீர், மின்சாரம், வீதி எதுவும் இல்லை. எனவே, இந்த ஏமாற்று வித்தைகளை நான் செய்யப்போவதில்லை. நாங்கள் நிர்மாணிக்கும் வீடுகளை மக்களுக்குக் கையளிக்கும்போது, ஒரு குடும்பம் வாழ்வதற்கு ஏற்றவாறு நீர், மின்சார வசதிகளுடன் கையளிப்போம்.

கேள்வி: கடந்த அரசாங்கத்தால் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளின் தரம் தொடர்பில் தொடர்ந்து குற்றஞ்சுமத்தி வருகிறீர்கள். சில வீட்டுத் திட்டங்கள் முழுமையாக இன்னும் நிறைவடையவில்லை. அந்த வீட்டுத் திட்டங்களை உங்களது அமைச்சினூடாக நிறைவு செய்வீர்களா?

பதில்: கடந்த அரசாங்கம் நிர்மாணித்த சில வீடுகளில் இப்போதே வெடிப்புகள் ஏற்பட்டுள்ளனவென பொதுமக்கள் குற்றஞ்சுமத்துகின்றனர். அதற்கு நான் பொறுப்பேற்க முடியாது. அதனை நிர்மாணித்தவர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும்.

மலையகத்தில் முன்னெடுக்கப்பட்ட வீட்டுத் திட்டங்கள் தொடர்பில், இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தினூடாக அறிக்கை ஒன்றைப் பெறத் திட்டமிட்டிருக்கிறேன்.

கேள்வி: இதற்கு முன்னரும் அறிக்கை ஒன்றைத் தயாரித்திருப்பதாகக் கூறியிருந்தீர்களே?

பதில்: ஆமாம் அந்த அறிக்கையில் தான் பொகவந்தலாவையில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளின் தரம் தொடர்பான தகவல்கள் வெளியாகியிருந்தன. அந்த வீட்டுத் திட்டங்கள்கூட முழுமையாக நிறைவடையவில்லை.

கேள்வி: அரைகுறையாக நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகளை நீங்கள் நிறைவு செய்வீர்களா?

பதில்: இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் அனுமதி அறிக்கை கிடைத்தால் செய்வேன். தரம் குறைந்த வீடுகளை நான் திருத்தியமைக்கப்போய், அந்த வீடுகள் ஒரு நாள் இடிந்து விழுந்தால், அதனை நான் பொறுப்பேற்க முடியாதுதானே?

கேள்வி: 7 ஆயிரம் இளைஞர்கள், சட்டவிரோதமாக மலையகத்துக்கு வந்திருந்ததாக நீங்கள் கூறியிருந்ததைப் பொலிஸார் மறுத்துள்ளனரே?

பதில்: ஊரடங்குச் சட்டத்தை மீறி நுவரெலியா மாவட்டத்துக்குள் 7 ஆயிரம் இளைஞர்கள் வந்திருப்பதாக நான் கூறியிருந்தேன். நான் கூறுவது பொய்யென்று கூறிய பொலிஸ் அதிகாரி ஒருவர், எனக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்க முடியுமெனவும் கூறியிருந்தார்.

இந்தப் பொலிஸ் அதிகாரி தொடர்பில் நான் பொலிஸ் தலைமையகத்திலும் முறைப்பாடு செய்திருக்கிறேன். அதுபோல அமைச்சரவைக் கூட்டத்திலும் ஜனாதிபதி, பிரதமரிடம் நேரடியாக முறையிட்டிருந்தேன். அந்தப் பொலிஸ் அதிகாரிமீது விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

எனக்குப் பொய் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. மலையகத்துக்கு 7 ஆயிரம் பேர் வந்தமைக்கான தகவல்கள் என்னிடம் இருக்கின்றன.

கேள்வி: மேல் மாகாணத்திலிருந்து மலையகத்துக்கு வரும் இளைஞர், யுவதிகளின் வாழ்வாதாரத்துக்கு நீங்கள் மேற்கொள்ளப்போகும் நடவடிக்கை என்ன?

பதில்: கொரோனா வைரஸால் மலையக இளைஞர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் பலர் தொழில் இல்லாது இருக்கிறார்கள். அரசாங்கம் இவர்களுக்கு உதவ வேண்டுமென நான் தொடர்ந்து கூறிவருகிறேன்.

குறிப்பாக அரசாங்கத்தால் வழங்கப்படும் 5 ஆயிரம் ரூபாய், மேல் மாகாணத்திலிருந்து மலையகத்துக்கு வந்திருக்கும் இளைஞர், யுவதிகளுக்கும் வழங்க வேண்டுமென இந்த வாரம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கோரிக்கை விடுத்திருந்தேன்.

இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, இது தொடர்பில் உத்தியோகபூர்வக் கடிதம் ஒன்றை, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ தலைமையிலான பொருளாதார புத்தெழுச்சி, வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணிக்கு அனுப்புமாறு கேட்டிருந்தார். சற்றும் தாமதிக்காது அன்றையே தினமே, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி ஆகியோருக்கும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ தலைமையிலான பொருளாதார புத்தெழுச்சி, வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணிக்கும் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்திருக்கிறேன்.

கேள்வி: விவசாய நடவடிக்கைகளுக்காகப் பெருந்தோட்டப் பகுதிகளிலுள்ள தரிசு நிலங்களைத் தோட்ட மக்களுக்கே பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறியிருந்தீர்கள். அதற்கு அமைச்சரவைப் பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்ய முடியாதா?

பதில்: அதற்கு அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. இது தொடர்பாகப் பெருந்தோட்ட அமைச்சுடன் கலந்துரையாடி வருகிறேன். ஒவ்வாரு தோட்டக் கம்பனிகளும், பெருந்தோட்ட மனிதவள நிறுவனத்துடன் இணைந்து எவ்வாறு தோட்டத்துக்குச் சொந்தமான காணிகளை விவசாய நடவடிக்கைகளுக்காக மக்களுக்குக் கையளிப்பது தொடர்பில் விரைவில் சுற்றுநிரூபம் ஒன்று அனுப்பப்படும்.

கேள்வி: விரைவாக என்றால் அதற்கு எவ்வளவு நாள்கள் செல்லும்?

பதில்: (சிரித்துக்கொண்டே) நாங்கள் செய்யும் வேலைத்திட்டங்கள் விரைவாகச் செய்ய வேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள். சிலர் 50 ரூபாய், 5 ஆயிரம் ரூபாயை என்ன இழுஇழுத்தார்கள் என்று தெரியும். இறுதியில் வெறும் 50 ரூபாயைக்கூடப் பெற்றுக்கொடுக்க முடியவில்லை.

கேள்வி: மலையகப் பல்லைக்கழகத்தை 5 வருடங்களில் நிறைவு செய்ய முடியுமா?

பதில்: இதுவொரு வரலாற்றுச் சாதனை. எல்லோரும் பேச்சளவில் கூறிக்கொண்டிருந்தார்கள். நான் அமைச்சுப் பதவியேற்றதும் மலையகத்துக்கென பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தேன்.

கொட்டகலையில் இந்தப் பல்கலைக்கழகத்தை அமைக்க இடம் ஒன்று தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தை அமைச்சர் பந்துல குணவர்தன நேரில் சென்று ஆராய்ந்திருந்தார்.

இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தைத் தாக்கல் செய்யவுள்ளேன். பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவிடமும் இது தொடர்பில் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளேன். கொரோனா வைரஸ் காலத்தில் பல்கலைக்கழகத்துக்கான ஆவணங்களைத் தயார் செய்யத் திட்டமிட்டிருக்கிறேன்.

இது மலையகத்துக்கு மாத்திரமென சிலர் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். உண்மையில் இதுவொரு தேசிய பல்கலைக்கழகம். 5 வருடங்களுக்குள் அதனை ஆரம்பிக்கவே எதிர்பார்த்திருக்கிறேன். அதற்கான பணிகளை முழுவீச்சில் மேற்கொள்வோம்.

கேள்வி: நாட்டில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலைமைகளைக் கருத்திற்கொண்டு முன்னாள் அமைச்சர்களான மனோ, திகாவுடன் இணைந்து மலையக மக்களுக்காகச் செயற்பட வாய்ப்புகள் இருக்கின்றனவா?

பதில்: ஒன்றிணைந்து என்ன செய்ய முடியும்? அவர்களால் குறைகூறவே முடியும். வேறு என்ன செய்ய முடியும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தலைமையில் 15 பேர் கொண்ட அமைச்சரவை உள்ளது. மலையகம் மட்டுமல்ல முழு நாட்டுக்கும் சிறப்பான வேலைத்திட்டங்களை அரசாங்கம் செய்து வருகிறது.

கேள்வி: நுவரெலியாவில் தயார்படுத்தப்பட்டுள்ள மூன்று தனிமைப்படுத்தும் நிலையங்கள் தொடர்பில் பல கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றனவே?

பதில்: ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும் எனது மக்களின் பாதுகாப்பு எனக்கே முக்கியம். நாளைக்கே கொரோனா வைரஸ் பரவும் என்பதற்காக நுவரெலியாவில் தனிமைப்படுத்தும் நிலையங்கள் அமைக்கப்படவில்லை. ஒருவேளை கோரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டால் அதற்கு முகங்கொடுக்கத் தயாராக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்ட பிறகு அது தொடர்பில் சிந்திப்பது அர்த்தமற்றது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காகத் தனிமைப்படுத்தும் நிலையங்களை தயார்படுத்தியிருப்பதில் தவறில்லையே. கொரோனா வைரஸ் நோயாளி ஒருவர் நுவரெலியா மாவட்டத்தில் இனங்காணப்பட்டால், அந்த நோயாளி சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைகளுக்கு அனுப்பப்படுவார்.

ஆனால், அந்த நோயாளியுடன் பழகியவர்களை எங்கு தனிமைப்படுத்துவது? இதற்காகவே தனிமைப்படுத்தும் நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

கேள்வி: பெருந்தோட்ட நிர்வாகங்கள் தொழிலாளர்களைப் பாதுகாக்க சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனவா?

பதில்: அவர்கள் பாதுகாக்கிறார்களோ இல்லையோ, பெருந்தோட்ட மக்களை அரசாங்கம் பாதுகாக்கும். பெருந்தோட்ட மக்களும் சுகாதார நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும்.

கேள்வி: ஆயிரம் ரூபாய் கிடைக்குமா?

பதில்: நிச்சயமாக. அதில் சந்தேகமில்லை. ஆயிரம் ரூபாயை நான் பெற்றுக்கொடுப்பேன். ஆனால், அதனைப் பெறுவதற்கு மக்கள் உயிரோடு இருக்க வேண்டும். ஆயிரம் ரூபாய்க்கான பேச்சுவார்த்தைகளில் கொரோனா வைரஸ் தாக்கம் செலுத்தியிருக்கிறது. கொஞ்சம் பொறுமையாக இருங்கள், நான் அதனைப் பெற்றுக்கொடுப்பேன். கொரோனா வைரஸ் இல்லை என்றால் இந்நேரம் ஆயிரம் ரூபாய் கிடைத்திருக்கும். பொதுத்தேர்தலும் நடைபெற்றிருக்கும்.

கேள்வி: மலையக மக்களின் கனவு என்றுகூடச் சொல்லாம். பெருந்தோட்ட மக்களை எப்போது சிறுதோட்ட உடமையாளராக்கப்போகிறீர்கள்?

பதில்: இது தொடர்பான பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டு வருகிறேன். இதை வைத்து அரசியல் செய்யப் பலர் எதிர்பார்த்துகொண்டு இருக்கிறார்கள். எனவே, அது தொடர்பில் என்னால் இப்போது எதனையும் கூற முடியாது. இது தொடர்பில் இப்போது நான் எதையாவது கூறினால், எப்போது வரும், இப்போது வருமா? அப்போது வருமா? எனச் சிலர் குறைகூறிக்கொண்டே இருப்பார்கள்.

கேள்வி: இந்த நெருக்கடி நிலைமைகளில் மலையக அபிவிருத்தி அதிகாரசபை இயங்குகிறதா?

பதில்: மலையக அபிவிருத்தி அதிகாரசபைக்கான தலைவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். கொரோனா வைரஸ் பிரச்சினையால் இந்தப் பணிகளிலும் தடங்கல் ஏற்பட்டுள்ளது. மலையகப் பல்கலைக்கழக நடவடிக்கைகளை மலையக அபிவிருத்தி அதிகாரசபையிடம் வழங்கியிருக்கிறேன்.

கே ள்வி: கடந்த அரசாங்கம் தனிவீடுகளுக்கு 7 பேர்ச் காணி வழங்கியிருந்தது. அதில் மாற்றங்கள் ஏற்படுமா?

பதில்: ஐயா (மறைந்த சௌமிய மூர்த்தி தொண்டமான்) காலத்திலும், நான் அமைச்சராக இருந்த கடந்த காலத்திலும் மலையக மக்களுக்கு வெறும் 7 பேர்ச் என வழங்கியதில்லை. 20 – 25 பேர்ச்களில் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் நல்லாட்சி அரசாங்கத்தில் வெறும் 7 பேர்ச் மாத்திரமே வழங்கப்பட்டிருந்தது.

கேள்வி: 7 பேர்ச்சை விட அதிகமாகப் பெற்றுக்கொடுப்பீர்களா?

பதில்: கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் 7 பேர்ச் இடத்தை வழங்க வேண்டுமெனச் சட்டமாக்கப்பட்டுள்ளது.

கேள்வி: வெளிமாவட்டங்களில் வாழும் மலையக மக்கள், அங்குள்ள பெரும்பான்மை மக்களால் தாக்கப்படுவது தொடர்கிறதே? காவத்தையில் கூட அண்மையில் இப்படியான சம்பவமொன்று இடம்பெற்றிருந்தது.

பதில்: அடிப்படையில் இந்தப் பிரச்சினைக்குக் காரணம் வெளிமாவட்டங்களில் உள்ளவர்கள் அவர்களை எவ்வாறு அடையாளப்படுத்துகிறார்கள் என்பதுதான். தேர்தல் காலங்களில் தமிழ் பிரிதிநிதிகளை அவர்கள் தெரிவு செய்வதில்லை. பெரும்பான்மையினரையே தெரிவு செய்கிறார்கள். இதுதான் பிரச்சினைக்குக் காரணம். மலையக மக்கள் தாக்கப்படுவதை நான் பார்த்துக்கொண்டிருக்கப்போவதில்லை. அதற்கான நடவடிக்கைகளை நிச்சயம் எடுப்பேன். ஆனால், இதிலுள்ள பிரச்சினை அவர்கள் தங்களை எப்படி அடையாளப்படுத்துகிறார்கள் என்பதுதான்.

தேர்தல் காலங்களில் பெரும்பான்மை இனத்தவர்களோடு இருப்பதுதான் அவர்கள் பாதுகாப்பென நினைக்கிறார்கள்.

கேள்வி: கடந்த ஐந்து வருடங்களாக நீங்கள் அமைச்சுப் பதவிகள் எதனையும் பெறவில்லை. உங்களது தொழிற்சங்க நடவடிக்கைளில் இது தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறதா? தொழிற்சங்க உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறதா?

பதில்: நான் அமைச்சுப் பதவியில் இருந்தாலும் இல்லை என்றாலும் நான் யார் என்பது மலையக மக்களுக்குத் தெரியும். தொழிற்சங்க உறுப்பினர்களின் எண்ணிக்கை கூடியிருக்கிறதே தவிர குறையவில்லை. இதற்கு உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களே சிறந்த உதாரணம். நுவரெலியாவில் உள்ள 12 சபைகளில் 6 சபைகளில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் வென்றிருக்கிறது. 4 சபைகள் எனது ஆதரவோடு இருக்கின்றன.

ஜனாதிபதித் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் எமக்குப் பின்னடைவு ஏற்பட்டிருந்தது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷதான் யுத்தத்தைச் செய்ததாக மக்களிடத்திலிருக்கும் மனப்பான்மையே இதற்குக் காரணம். பொதுத்தேர்தலில் நுவரெலியா மவாட்டத்தில் மட்டுமல்ல, கண்டி, பதுளை மாவட்டங்களிலும் வெற்றிபெறுவோம்.

கேள்வி: மேதினக் கொண்டாட்டங்களுக்கு இலட்சக்கணக்கான நிதி செலவிடப்படுகிறது. அதனை நல்ல திட்டங்களுக்குப் பயன்படுத்தலாமே?

பதில்: மே தினம் என்பது தொழிலாளர்களுக்கான தினம். அந்தத் தினத்தைத் தொழிலாளர்களுக்காக அர்ப்பணிக்க வேண்டும். தீபாவளிக்குப் பட்டாசு வெடிக்க வேண்டாமெனக் கூறினால் பட்டாசு வெடிக்காமல் இருக்க முடியுமா? மேதினக் கொண்டாட்டங்கள் தவிர்க்க முடியாதவை.

கேள்வி: மலையகத்தின் முன்னாள் அமைச்சர்கள், பொதுத்தேர்தல் முடிந்ததும் அமைச்சுப் பதவிகளைப் பெறுவார்களா?

பதில்: யார் யாருடன் என்ன பேசுகிறார்கள் என்பது எனக்குத் தெரியும். பொறுத்திருந்து பாருங்கள். அப்படி யாராவது வெட்கமில்லாது அமைச்சுப் பதவிகேட்டு வந்தால் நானே அமைச்சுப் பதவியை வாங்கித் தருகிறேன்.

கேள்வி: இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதேசசபைத் தவிசாளர்கள், பிரதேசசபை உறுப்பினர்கள் எவராவது, 5 ஆயிரம் ரூபாயில் அரசியல் செய்தால் நடவடிக்கை எடுப்பீர்களா?

பதில்: நிச்சியமாக. ஆனால், அப்படி எந்தவொரு முறைப்பாடுகளும் என்னிடம் கிடைக்கவில்லை. அது ஒரு குற்றச்சாட்டாக இருக்கக்கூடாது. ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட வேண்டும். அப்படி நிரூபிக்கப்படும் பட்சத்தில் நிச்சயமாக நடவடிக்கை எடுப்பேன்.

கேள்வி: இந்த நேர்காணலினூடாக மலையக மக்களுக்கு எதையாவது சொல்ல விரும்புகிறீர்களா?

பதில்: கொரோனா வைரஸ் ஒழிப்புப் பணிகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குங்கள். சுகாதார தரப்பினர் அறிவுறுத்தல்களைத் தொடர்ந்து பின்பற்றுங்கள். சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாகுமாறு அறிவுறுத்தப்பட்டால், சுயதனிமைப்படுத்திக்கொள்ளுங்கள். கொரோனா வைரஸை அனைவரும் இணைந்து தோற்கடிப்போம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுவயதில் பாலியல் கொடுமை – பகீர் தகவல்! (சினிமா செய்தி)
Next post அடேங்கப்பா இப்படியெல்லாம் கூடவா விலங்குகள் இருக்கு !! (வீடியோ)