கிச்சன் டைரீஸ்!! (மகளிர் பக்கம்)

Read Time:15 Minute, 22 Second

கடந்த இதழில் வெயிட் வாட்சர்ஸ் டயட் குழுவினரின் டயட் பற்றி பார்த்தோம். அதையே இந்த வாரமும் கொஞ்சம் விளக்கமாகப் பார்த்துவிடுவோம். உலகின் மிகப் பெரிய கமர்ஷியல் டயட் நிறுவனமான வெயிட் வாட்சர்ஸ் குழு, ஒவ்வொரு நபருக்கும் ஏற்ற பிரத்யேகமான டயட்டை பரிந்துரைக்கிறது என்று சொல்லியிருந்தோம். குழுவாகச் செயல்படுவது, மதிப்பெண்கள் வழங்குவது ஆகியவற்றின் மூலம் டயட்டை கண்காணிப்பதுதான் இந்தக் குழுவின் சக்சஸ் சீக்ரெட்.கொழுப்புகள், கார்போஹைட்ரேட்கள், வைட்டமின்கள், நார்ச்சத்து என ஒவ்வொரு விதமான உணவுப் பொருளுக்கும் ஒவ்வொரு மதிப்பெண் உள்ளது.

அதிகப் பழங்கள், காய்கறிகள் உண்பது, அளவான புரோட்டின் உண்பது, குறைவான கொழுப்புச்சத்து உணவுகளை உண்பது ஆகியவற்றை இலக்காகக் கொண்டு இந்த மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. உதாரணமாக, ஒரு முட்டைக்கு இரண்டு மதிப்பெண்கள், குறைந்த கொழுப்புச்சத்து உணவுகளுக்கு ஒரு மதிப்பெண், காய்கறிகளுக்கும் கீரைகளுக்கும் பூஜ்யம் மதிப்பெண், எண்ணெய்க்கு ஒரு மதிப்பெண். ஒரு நாளைக்கு முப்பது மதிப்பெண் அல்லது பாயிண்டுகளுக்குத்தான் ஒருவர் சாப்பிட வேண்டும் என்றால் இரண்டு முட்டையை ஒருவர் காலையில் சாப்பிட்டால் அன்றைய கோட்டாவில் நான்கு மதிப்பெண்களை அவர் காலி செய்துவிடுவார்.

இனி இருபத்தாறு மதிப்பெண்களுக்குத்தான் சாப்பிட முடியும். ஒரு நாளைக்கு எத்தனை பாயிண்ட்கள் சாப்பிடலாம் என்பது நபருக்கு நபர் வேறுபடும். எழுபது கிலோ எடையுள்ள ஒருவர் தினசரி பதினெட்டு முதல் இருபத்து மூன்று பாயிண்டுகள் எடுக்கும்படி சாப்பிட வேண்டும். அது போலவே நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, வீடு பெருக்குவது, சுத்தம் செய்வது போன்ற உடல் சார்ந்த வேலைகள் செய்யும்போது ஃபிட் பாயிண்ட்ஸும் உண்டு. இந்த மதிப்பெண்களை தினசரி உங்களது இ-டூலில் பதிய வேண்டும். ஒவ்வொரு நாள் மதிப்பெண்ணும் சேர்ந்து ஒரு வார மதிப்பெண்ணையும் ஒரு மாத மதிப்பெண்ணையும் உருவாக்கும். தொடக்கத்தில் கொஞ்ச காலம் வழங்கப்பட்ட எடை குறைப்பு நிகழ்ந்த பிறகு, உறுப்பினர்கள் மெயின்டனன்ஸ் பீரியட்டுக்குள் நுழைகிறார்கள்.

இந்த மெயிண்டனன்ஸ் பீரியட்டில் இருப்பவர்கள் தங்கள் எடையை சரியாகப் பராமரித்தால் அவர்கள் கூட்டங்களுக்கு கட்டணங்கள் கட்ட வேண்டியிருக்காது. இந்த மெயின்டனன்ஸ் பீரியட்டுக்குப் பிறகு தினசரி ஆறு பாயிண்டுகள் கூடுதலாக வழங்கப்படும். அடுத்த ஆறு வாரங்களுக்கு எடை அதிகரித்தாலும் குறைந்தாலும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் உண்ணும் உணவை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க வேண்டும். இந்த ஆறு வாரங்களுக்குப் பிறகும் அவர் ஒரு கிலோ மட்டும் அதிகரித்தார் என்றால் அவர் இதில் வாழ்நாள் உறுப்பினராக முடியும்.

வாழ்நாள் உறுப்பினர்கள் கட்டணம் ஏதும் இல்லாமலேயே கூட்டங்களில் கலந்துகொள்ள முடியும். ஆனால், மாதம் ஒருமுறை அவரின் எடை பரிசோதிக்கப்படும். அதில் அவர் குறிப்பிட்ட எடைக்கு ஒரு கிலோவுக்கு மேல் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால், அந்த வாழ்நாள் உறுப்பினர் அந்தஸ்து பறிக்கப்படும். எடையைக் கட்டுப்படுத்தினால் மறுபடியும் வழங்கப்படும்.அமெரிக்காவின் லைஃப் ஸ்டைல் மெடிசின் என்ற பத்திரிகை இந்த வெயிட் வாட்சர்ஸ் டயட்டை பாராட்டியுள்ளது. இது போலவே சுமார் இருபத்தைந்து ஆய்வுகளை Annals of Internal Medicine இதழ் வெளியிட்டு பல்வேறு மருத்துவர்கள், உணவியல் நிபுணர்கள் இந்த டயட் குழுவினரின் செயல்பாடுகள் ஆக்கப்பூர்வமான விளைவுகளைத் தருபவை என்று சொல்லியிருக்கிறார்கள்.

எக்ஸ்பர்ட் விசிட்

சினைப்பை கட்டிகள் எனப்படும் பாலிசிஸ்டிம் ஓவரிஸ் சிண்ட்ரோம்- சுருக்கமாக பி.சி.ஓ.எஸ் . இன்று ஐந்தில் ஒரு பெண்ணுக்கு இருக்கும் பிரச்சனையாக உள்ளது. மரபியல் காரணிகள் முதல் லைஃப் ஸ்டைல் வரை பல காரணங்கள் உள்ள இந்தப் பிரச்சனையை ஹெல்த்தியான உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் எதிர்கொள்ளலாம் என்று சொல்கிறார், இந்தியாவின் புகழ்பெற்ற டயட்டீஷியனும் கரீனா கபூர், அலியா பட் போன்ற செலிபிரிட்டிகளின் ஃபேவரைட் ஃபுட் குருவுமான ருஜுதா .இவர் பி.சி.ஓ.எஸ் பிரச்சனையை எதிர்கொள்ளப் பரிந்துரைக்கும் உணவுகள் இதோ…

சமவிகிதமான உணவுமுறையே வயிற்றில் உள்ள பாக்டீரியா உள்ளிட்ட நுண்ணியிர்களின் சமவிகிதத்தை சரியாகப் பராமரித்து நமது இன்சுலின் சுரப்பை சீராக்கி ஒழுங்கான மாதவிடாய்க்கு வழிவகுக்கிறது. எனவே, சமச்சீர் உணவுகள் முக்கியம். லோ கிளைசெமிக் இண்டக்ஸ் கொண்ட உணவுகளை உடலில் அதிகமாகச் சேர்க்கலாம். இதனால் ரத்தத்தில் சர்க்கரை மெதுவாகச் சேர்வதால் சிறப்பான இன்சுலின் சுரப்பு இருக்கும். கார்போஹைட்ரேட் உணவுகள் வேகமாக ரத்தத்தின் சர்க்கரையைச் சேர்க்கும் என்பதால் அதைக் குறைக்கலாம். முழுதானியங்கள், நட்ஸ், ஸ்டார்ச் நிறைந்த காய்கறிகள், பழங்கள், லோ கார்போ உணவுகள் ஆகியவை நல்லது.

உட்புற புண்கள் மற்றும் வீக்கங்களைக் குணமாக்கும் ஆன்டி-இன்ஃபளமேட்டரி உணவுகளான பெர்ரி, நெல்லிக்காய், மீன், கீரைகள், எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆலிவ் ஆயில் ஆகியவற்றைச் சேர்க்கலாம். தேங்காய், நெய், ஆலிவ் விதைகள் ஆகியவற்றில் உள்ள கால்சியம் மற்றும் நல்ல கொழுப்பு உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைக்கிறது. வாழைப்பழம் ஜீரணத்தை அதிகரிப்பதோடு கார்போஹைட்ரேட்டையும் உடலுக்கு வழங்குகிறது. கேழ்வரகில் உள்ள சத்துக்கள் பி.சி.ஓ.எஸ் பிரச்சனையால் முகத்தில் ஏற்படும் பருக்களையும் உட்புறக் கட்டிகளையும் ஓரளவுக் கட்டுப்படுத்தும் என்பதால் அதையும் உணவில் சேர்க்கலாம்.

ஃபுட் சயின்ஸ்

உப்பு சுமார் பத்தாயிரம் ஆண்டுகளாக நம் உணவோடு உறவாடும் இயற்கைப் பொருள். ருமானியாவின் கடலோரங்களில் வாழ்ந்த பழங்குடிகள் சுமார் எட்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கோடை காலத்தில் நீராய் மாறிய பனிக்கட்டிகள் கரையொதுக்கிய உப்பை உணவுக்குப் பயன்படுத்தியிருக்கிறார்களாம். நம் நாட்டில் குறிப்பாக தமிழகத்தில் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட சங்க இலக்கியங்களிலேயே உப்பு பற்றி அத்தனை குறிப்புகள் உள்ளன. உப்புக் காய்ச்சி வணிகத்துக்கு எடுத்துச் செல்லும் மக்களை உமணர் என்று வர்ணிக்கின்றன தமிழ் நூல்கள்.

இதற்கு மேல் சொன்னால் இந்தப் பகுதி ஃபுட் ஹிஸ்டரியாய் மாறிவிடும். எனவே, இதன் வேதித்தன்மை பற்றி பார்ப்போம். பலருக்கும் தெரிந்திருக்கும் உப்பு என்பது சோடியம் குளோரைடு கலவை. இதை, NACL என்பார்கள். இதில் சோடியமும் குளோரினும் சமவிகிதத்தில் கலந்திருக்கின்றன. உப்பு 801 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் உருமாறக்கூடியது. 1465 டிகிரி செல்சியசில் நீர்மமாய் மாறி கொதிக்கத் தொடங்கிவிடும். இதன் அடர்த்தி ஒரு சதுர சென்டிமீட்டரில் 2.17 கிராம்.

அதேபோல் இதன் மூலக்கூறு அடர்த்தி 58.443 gm/mol. மைனஸ் இருபத்தொரு டிகிரி குளிரில் உப்பு பனிக்கட்டிபோல் உறைந்துவிடும். அதாவது அதில் உள்ள 23.31 சதவீத நீர் உறைவதால் இவையும் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ளும். டேபிள் சால்ட் என்று நாம் சொல்வதும் இதே சோடியம் குளோரைடுதான். ஆனால், இவற்றில் அயோடின் போன்ற சத்துகளும் உள்ளன. இன்று ஃபுட் ஃபோர்டிபிகேஷன் என்ற முறைப்படி இவற்றில் அயோடின் சேர்த்து வழங்கப்படுகிறது. ஊட்டச்சத்துப் பற்றாக்குறையை நீக்கும் பொருட்டு உருவாக்கப்பட்ட இந்த ஃபோர்ட்டிபிகேஷன் ப்ராசஸ்கள் பற்றி நிறைய மாறுபட்ட கருத்துகளும் இருக்கின்றன. அவற்றை எல்லாம் வேறு ஒரு சமயம் பார்ப்போம்.

உணவு விதி#17

நான்கு காலில் நிற்கும் உயிர்களைவிட (ஆடு, மாடு, பன்றி) இரண்டு காலால் நிற்கும் உயிர்கள் (கோழி, காடை) உண்ணச் சிறந்தவை. இந்த இரண்டையும்விட ஒற்றைக்காலில் நிற்கும் உயிர்கள் (தாவரங்கள்) மேலும் சிறந்தவை. ஒற்றைக் காலை அதிகமாகவும் இரட்டை கால்களை ஓரளவும் நான்கு கால்களை குறைவாகவும் உணவில் பயன்படுத்துங்கள். இப்படி ஒரு வித்தியாசமான உணவு விதியை உணவியல் நிபுணர் பொல்லான் குறிப்பிடுகிறார். கொழுப்பு உடலுக்குக் கெட்டது என்ற பொதுவான சிந்தனையின் அடிப்படையில் இருந்தாலும் முக்கியமான விதிதான் இது.

காபித் தூள் கலப்படம்

காபித்தூளில் புளியங்கொட்டைத்தூள், சிக்கரி போன்ற பொருட்கள் கலக்கப்படுகின்றன. சிக்கரி கலந்தது என்று பாக்கெட்டில் குறிப்பிடப்படாவிட்டால் அதைக் கலப்படம் என்றே கொள்ள வேண்டும். ருசிக்காக சிக்கரி கலந்த காபித்தூளும் சந்தையில் கிடைக்கிறது. புளியங்கொட்டை நிறைந்த காபித்தூளை தொடர்ந்து பருகும்போது வயிற்று உபாதைகள் ஏற்படும். சிறிது தண்ணீரில் காபித்தூளைப் போட்டு நன்கு குலுக்கினால், காபித்தூள் மேலே மிதக்கும். சிக்கரி, புளியங்கொட்டைத்தூள் நீரில் மூழ்கிவிடும்.

புத்தர் உண்ட காலா நமக்

அரிசி இந்தியாவுக்கு வந்து சுமார் மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் என்கிறார்கள். அரிசியின் பூர்விகம் இந்தியா அல்ல சீனாதான். சீனாவின் மஞ்சள் நதிக் கரைகளில் சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நெல்லில் தொல் படிமங்கள் கிடைத்துள்ளதுவே இதற்கு சாட்சி. ஆனால், மிக ஆதிகாலத்திலேயே சீனாவிலிருந்து நமது வடகிழக்கு மாநிலங்கள் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்துவிட்டது அரிசி. இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த காலத்தில் நம்மிடம் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட பாரம்பரிய அரிசி ரகங்கள் இருந்தன என்கிறார் நெல் ஆராய்ச்சி நிபுணர் ரிச்சாரியா.

அந்த பாரம்பரிய அரிசிகளில் ஒன்றுதான் காலா நமக். காலா என்றால் கருப்பு. நமக் என்றால் உப்பு. கறுப்பு உப்பு என்பதே இதன் பொருள். பிளாக் சால்டை ஹிந்தியில் காலா நமக் என்று சொல்வார்கள். இந்த அரிசியும் உப்புத்தன்மை மிகுந்து இருப்பதால் இதை காலா நமக் என்கிறார்கள். சுமார் மூன்றாயிரம் ஆண்டுகளாக கங்கை நதிக்கரை சமவெளிகளில் பயிரிடப்பட்ட இந்த காலா நமக் அரிசியைத்தான் புத்தர் விரும்பிச் சாப்பிட்டார் என்கிறார்கள்.

சாதாரண பழுப்பு அரிசியில் உள்ளதைவிட சிறப்பான தாது உப்புகள் இதில் நிறைந்துள்ளன. தொடர்ந்து இதனை சாப்பிடும் போது உடலில் சாத்விக குணம் உண்டாகும் என்கிறார்கள். ரத்த ஓட்டம் சீராக இருக்கும். உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படும். இன்றும் புத்த பிக்குகள் காலா நமக் அரிசியைத்தான் சாப்பிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்கானிக் கடைகளில் காலா நமக் இன்றும் கிடைக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?!! (அவ்வப்போது கிளாமர்)
Next post தமிழகத்தை வந்தடைந்தது கிருஷ்ணா நதி நீா் !! (உலக செய்தி)