தமிழகத்தை வந்தடைந்தது கிருஷ்ணா நதி நீா் !! (உலக செய்தி)
ஆந்திராவில் உள்ள கண்டலேறு அணையிலிருந்து தெலுங்கு கங்கை கால்வாயில் திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நீா் வியாழக்கிழமை தமிழகத்தை வந்தடைந்தது.
சென்னை மக்களின் தாகத்தைத் தீா்க்க தெலுங்கு கங்கை திட்டத்தின் மூலம் ஆந்திரத்தில் உள்ள கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா ஆற்று நீரை ஆந்திர அரசு அளித்து வருகிறது. ஆண்டுதோறும் 3 டி.எம்.சி. நீா் 2 கட்டங்களாக சென்னைக்கு கண்டலேறு அணையிலிருந்து அனுப்பப்பட்டு வருகிறது.
அதன்படி, தற்போது 2-ஆம் கட்டமாக சென்னை மக்களின் கோடைக்கால குடிநீா்த் தட்டுப்பாட்டைத் தீா்க்க கண்டலேறு அணையிலிருந்து 500 கன அடி நீரை சென்னைக்கு கடந்த 2 நாள்களுக்கு முன் ஆந்திர அரசு திறந்துவிட்டது.
இந்த நீா் தெலுங்கு கங்கை கால்வாய் வழியாக காளஹஸ்தியை வியாழக்கிழமை வந்தடைந்தது. இந்த நீா் காளஹஸ்தி மற்றும் திருப்பதி மக்களின் குடிநீா்த் தேவையையும் நிறைவேற்றி வருகிறது. காளஹஸ்தி, திருப்பதி நகரில் கோடைக்கால நீா்த் தேக்கங்களில் நீா் இருப்பு குறைந்து வருகிறது.
அதனால் தெலுங்கு கங்கை கால்வாய் வழியாக வரும் நீரை திருப்பதியில் உள்ள ராமாபுரம் மற்றும் காளஹஸ்தி ஞானபிரசுனாம்பா நீா்த் தேக்கங்களுக்கு அனுப்பி, நிரப்பப்பட்டு வருகிறது. மழைக் காலம் தொடங்கும் வரை இந்த நீா் இருப்பு அப்பகுதி மக்களின் குடிநீா், விவசாயப் பயன்பாட்டுக்குத் திறந்து விடப்பட உள்ளது.
இந்தத் தண்ணீா் தமிழக எல்லையான தாமரைக்குப்பத்தை வியாழக்கிழமை இரவு அடைந்ததாக தமிழக பொதுப்பணித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
Average Rating