வுகான் சந்தையில் கொரோனா உருவாகவில்லை – புதிய குழப்பம்? (உலக செய்தி)
கண்ணுக்கு தெரியாத இந்த கொரோனா வைரஸ் தோன்றியது எங்கே?
சீனாவின் மத்திய நகரமான வுகானில் உள்ள விலங்குகள் சந்தையில் கடந்த டிசம்பர் 1 ஆம் திகதி இந்த வைரஸ் முதன்முதலாக வெளிப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன. அந்த வைரஸ் காட்டுத்தீ போல பரவத்தொடங்கியதும் அந்த சந்தை மூடப்பட்டு விட்டது.
இந்த 5 மாத காலத்தில் சுமார் 200 நாடுகளில் இந்த கொடிய வைரஸ் கால் பதித்து விட்டது. அந்த வகையில், ஏறத்தாழ 57 லட்சம் பேரை உலகமெங்கும் இந்த வைரஸ் பாதித்துள்ளது. ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை பெற்றும் பலன் இன்றி 3 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
ஆனாலும் கொரோனா வைரஸ் தோற்றம் பற்றிய சர்ச்சை முடிவுக்கு வரவில்லை. இது ஒரு தொடர்கதையாய் நீளுகிறது.
இந்த வைரஸ் வுகான் கடல்வாழ் உயிரினங்கள் சந்தையில் தோன்றவில்லை, அந்த சந்தைக்கு அருகே அமைந்துள்ள வுகான் வைராலஜி நிறுவனத்தின் ஆய்வுக்கூடத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்டது, அங்கிருந்து கசிந்துதான் பரவி விட்டது என அமெரிக்க டெலிவிஷன் பரபரப்பு செய்தி வெளியிட அதை டிரம்ப் நிர்வாகம் கெட்டியாகப்பிடித்துக்கொண்டது. இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என டிரம்ப் நிர்வாகம் அறிவித்தது. இந்த குற்றச்சாட்டை உறுதி செய்யும் ஆதாரங்களை தான் பார்த்ததாக அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ கூறினார்.
கொரோனா வைரசின் பிறப்பிடம் பற்றி சர்வதேச அளவிலான விசாரணை நடத்த வேண்டும் என்று அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தும் சீனா அதை எதிர்த்து வருகிறது. கொரோனா வைரசின் பிறப்பிட விவகாரம் அரசியலாக்கப்படுவதாக சீனா சொல்கிறது.
இந்த வைரஸ் பரவத்தொடங்கியதும் வவ்வால் பெண் என்று அழைக்கப்படுகிற சீன பெண் விஞ்ஞானி ஷி ஜெங்லி மாயமானார்.
இப்போது திடீரென அவர் கடந்த செவ்வாய்க்கிழமையன்று சீன அரசு தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அவர் கொரோனா வைரஸ் தீவிரமான பிரச்சனை, இதில் அறிவியல், அரசியல் ஆக்கப்படுகிறது என கூறி வருத்தம் தெரிவித்தார்.
ஏற்கனவே அவர் கொரோனா வைரஸ் வுகான் வைராலஜி நிறுவனத்தின் ஆய்வுக்கூடத்தில் உருவானது என்ற அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் குற்றச்சாட்டை ‘வீசாட்’ என்னும் சமூக வலைத்தளத்தில் மறுத்தார்.
இப்போது இந்த வைரஸ் வுகான் சந்தையில் இருந்து வெளிப்படவில்லை என்று சீன விஞ்ஞானிகள் உறுதிபட சொல்கிறார்கள்.
ஷாங்காய் நகரை சேர்ந்த ஆராய்ச்சி அமைப்பு, ஒரு ஆராய்ச்சியின்மூலம் வுகான் கடல்வாழ்உயிரினங்கள் சந்தையில் கொரோனா வைரஸ் உருவானது என்ற குற்றச்சாட்டை மறுத்துள்ளது.
இந்த அமைப்பு நடத்திய ஆராய்ச்சி முடிவு, ‘நேச்சர்’ என்ற பத்திரிகையின் இணையதளத்தில் வெளியாகி உள்ளது.
இதில் கொரோனா வைரசின் பிறப்பிடம் வுகான் சந்தையாக இருக்காது என்று கூறப்பட்டுள்ளது. அந்த சந்தையில்தான் கொரோனா வைரஸ் உருவானது என்பதற்கு வலுவான பல அடிப்படை இருந்தும் அது இதில் மறுக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 20-ந் தேதி தொடங்கி பிப்ரவரி 25-ந் தேதி வரையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட 326 பேரிடம் இருந்து சேகரிக்கப்பட்ட தரமான 112 மாதிரிகளை பகுப்பாய்வு செய்துள்ளதாக இந்த அமைப்பு சொல்கிறது. வேறுபட்ட வெளிப்பாடு வரலாற்றை கொண்ட 2 முக்கிய பரம்பரைகளை (கிளாட்-1 மற்றும் கிளாட்-2) கண்டறிந்ததாக கூறுகின்றனர்.
கலப்பினமாக கொரோனா வைரஸ் தொற்று வுகான் சந்தையில் நிகழ்ந்தது என்பதற்கு நேரடி ஆதாரங்கள் எதுவும் இல்லை. இந்த சந்தையில் பெருமளவு மக்கள் கூடியதால் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு வைரஸ் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு என்ற நிலையிலும் இது சீன ஆராய்ச்சியாளர்களால் மறுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆராய்ச்சி தரவுகளின் அடிப்படையில் பார்த்தால், கொரோனா வைரசின் தோற்றம் எங்கே என்பது தெரியவில்லை. இதற்கு இன்னும் தொடர்ச்சியான முயற்சிகளை விஞ்ஞானிகள் எடுக்க வேண்டும் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்தாக உள்ளது.
இந்த ஆராய்ச்சியாளர்கள் குழுவில் ஷாங்காய் பொது சுகாதார மருத்துவ மையம், ஷாங்காய் ஜியோவா டோங் பல்கலைக்கழக மருத்துவ கல்லூரி, ஷாங்காய் ஹெமாட்டாலஜி உள்ளிட்ட மருத்துவ நிறுவனங்களை சேர்ந்தவர்கள் இடம் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க அம்சம்.
வுகான் சந்தையிலும் கொரோனா வைரஸ் தோன்றவில்லை, வுகான் வைராலஜி நிறுவனத்தின் ஆய்வுக்கூடத்திலும் இந்த வைரஸ் உருவாக்கப்படவில்லை என்றால் இந்த வைரசின் பிறப்பிடம்தான் எங்கே என்பதில் பெரும் குழப்பம் எழுந்துள்ளது. இந்த குழப்பத்துக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதுதான் உலக நாடுகள் அனைத்தின் ஏகோபித்த கோரிக்கை!
Average Rating