ஆரோக்கியப் பெட்டகம்: கோவைக்காய்!! (மருத்துவம்)

Read Time:11 Minute, 17 Second

கிராமங்களில் எல்லார் வீட்டு வேலிகளிலும் கொடியாகப் பரவி, காய்த்து, பழுத்து சீண்டு வாரற்றுக் கிடக்கும் கோவைக்காயின் அருமை அனேகம் பேருக்குத் தெரியாது. நட்சத்திர ஓட்டல்களின் ஸ்பெஷல் மெனுவில் இடம்பெறுகிற அளவுக்கு இன்று கோவைக்காயின் அந்தஸ்து எங்கேயோ போய்விட்டது, காரணம், அதன் மருத்துவக் குணம்!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கோவைக்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை, சுவையான கோவைக்காய் ரெசிபிகளுடன் சொல்கிறார் சஞ்சீவனம் ஆயுர்வேத தெரபி மையத்தின் மருத்துவர் விஜயகுமார்.கோவைக்காய், பச்சையாக இருக்கும்போது இந்திய சமையலில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இதைக் கொண்டு பல்வேறு வகையான உணவுகளைத் தயாரிக்கலாம். பொதுவாக இது உணவுடன் தொட்டுக்கொள்ளும் ஒரு காய்கறியாகத்தான் பயன்படுத்தப்படுகிறது.

நாம் உணவோடு எடுத்துக் கொள் ளும் காய்கறிகளால் நமக்கு சில நன்மைகள் ஏற்படுகின்றன. நமது உடலின் உள்ளுறுப்புகளுக்கு இதனால் பயன்கள் விளைகின்றன. அந்த வகையில் கோவைக்காயை ‘ஷக வர்க்கா’ என்று ஆயுர் வேத மருத்துவத்தில் குறிப்பிடுகின்றனர். காய்களில் உள்ள பல்வேறு வகையான குணங்கள் நமக்கு நன்மை களை அளிப்பதாக அதில் கூறப்படுகிறது.கோவைக்காயால் உடலுக்குக் கிடைக்கும்

நன்மைகள்

கோவைக்காயில் உடல் சூட்டைத் தணிக்கும் தன்மை உள்ளது. அத்துடன் இது உடலில் உள்ள நச்சுத் தன்மைகளை நீக்கும் குணம் கொண்டது. அதற்கேற்ற பாக்டீரியா எதிர்ப்பு சக்தி இதில் உள்ளது. கோவைக்காய் உடலில் உள்ள அதிகபட்ச சூட்டைத் தணிக்கும் தன்மை கொண்டது. தேவையற்ற உணவுப் பழக்கங்களால் வயிற்றில் ஏற்படும் சூட்டைத் தணிக்கும் தன்மை கொண்டது. ரத்தத்தைச் சுத்திகரிக்கும்!

பழமையான ஆயுர்வேத மருத்துவ நூல்களில் கோவைக்காயில் உள்ள சிறப்பு அம்சங்கள் நமது உடலில் உள்ள ரத்தத்தை சுத்திகரிப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கோவைக்காயில் உள்ள மெட்டபாலிக் தன்மைகள் நமது இதயத்துக்கு மிகவும் நல்லது. இது கல்லீரலுக்கும் நன்மை பயக்கக் கூடியது. சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் ஏற்ற காய் இதுவாகும். மஞ்சள் காமாலை, ஆஸ்துமா நோயாளிகள் இதை சாப்பிட்டால் விரைவில் குணம் ஏற்படும்.

மருத்துவ பயன்பாடு இதில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு தன்மை காரணமாக கோவைக்காய் மற்றும் செடியிலிருந்து ஆயுர்வேத மருந்துப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. மேலும் பெண்களுக்கு ஏற்படும் அதிகபட்ச வெள்ளைப்படுதலைக் குணப்படுத்தவும், சிறுநீர் சார்ந்த நோய்களைக் குணப்படுத்தவும், வயிறு சார்ந்த செரிமான பிரச்னைகளைத் தீர்க்கும் மருந்துகளுக்கும் கோவைக்காய் பயன்படுத்தப்படுகிறது. விடாரியாடி கஷாயம் எனப்படும் ஆயுர்வேத மருந்து கோவைக்காய் செடியிலிருந்து பெறப்படும் சாறிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

இந்த கஷாயம் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் சோர்வுத் தன்மை யை நீக்க அளிக்கப்படுகிறது. பெண்களுக்கு ஏற்படும் பொதுவான சோர்வை போக்கவும் தரப்படுகிறது. எடையிழப்பு போன்ற ஊட்டச்சத்து குறை பாட்டால் ஏற்படும் பிரச்னைகளுக்குத் தீர்வாகவும் அளிக்கப்படுகிறது.இது எக்ஸிமா எனப்படும் சருமப் பிரச்னையைக் குணப்படுத்த மருந்தாக அளிக்கப்படுகிறது. வாய்ப்புண்ணை – குறிப்பாக நாக்கில் ஏற்படும் புண்களைக் குணப்படுத்த இது உதவுகிறது.எடை குறைக்க உதவும்!

எடை குறைக்க விரும்புவோருக்கு உணவுடன் சாப்பிட ஏற்ற மிகச் சிறந்த காய் இதுவே. கோவைக்காயை மூலப்பொருளாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட மருந்துப் பொருட்கள், அதன் செடியிலிருந்து பெறப்பட்ட சாறுகளிலிருந்து தயாரிக்கப்பட்ட மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். உரிய மருத்துவர் பரிந்துரைப்படி சாப்பிடுவது நல்லது. வேக வைத்த கோவைக்காயுடன், குறைந்த அளவிலான உப்பு, காரம், மசாலா சேர்த்து சாப்பிட்டால், அது செரிமான பிரச்னையைப் போக்கும். சிறுநீர் பிரச்னை களை நீக்கும். நாக்குப் புண், மூச்சு விடுதலில் சிரமம் ஆகியவை கோவைக்காயில் உள்ள ரத்த சுத்திகரிப்பு தன்மை காரணமாக விரைவில் குணமாகும். அத்துடன் சருமத்தில் ஏற்படும் அரிப்பு, பூச்சிக் கடியால் ஏற்படும் அரிப்புகளைப் போக்கவும் இது உதவுகிறது.

கோடை காலத்தில் கோவைக்காய் சாப்பிடுவது உடலில் ஏற்படும் அதிகபட்ச வெப்பத்தைத் தணிக்க உதவுகிறது. இதனால் அதிக வெப்பத்தால் ஏற்படும் ஸ்ட்ரோக்குகள், சிறுநீர் நோய்கள் உள்ளிட்டவை வராமல் தடுக்க உதவுகிறது.

கோவைக்காய் துவையல்

என்னென்ன தேவை?

கோவைக்காய் – 400 கிராம், தேங்காய் – 100 கிராம், தேங்காய் எண்ணெய் – 10 மி.லி., பச்சை மிளகாய் – 20 கிராம், இஞ்சி – 20 கிராம், கடலைப் பருப்பு – 130 கிராம், கொத்தமல்லி இலை – 10 கிராம், கறிவேப்பிலை – 10 கிராம், உப்பு –
தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

1. கோவைக்காயை சுத்தப்படுத்தி நன்கு கழுவவும்.
2. கழுவிய கோவைக்காயை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
3. கடாயில் தேங்காய் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும்.
4. அதில் கடலைப் பருப்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், இஞ்சி, கோவைக்காய், உப்பு இவற்றைப் போடவும்.
5. இந்தக் கலவையை நன்கு வேக வைக்கவும். இத்துடன் துருவிய தேங்காயை சேர்த்து நன்கு அரைக்கவும்.
6. பிறகு அரைத்த துவையல் மீது கொத்தமல்லி இலையை தூவவும்.

கோவைக்காய் ஊறுகாய்

என்னென்ன தேவை?

கோவைக்காய் – 1 கிலோ, தக்காளி – 500 கிராம், பச்சை மிளகாய் – 50 கிராம், நல்லெண்ணெய் – 50 மி.லி., சீரகத் தூள் – 50 கிராம், வெந்தயம் – 30 கிராம், மஞ்சள் தூள் – 10 கிராம், எலுமிச்சை – 7, உப்பு – தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

1. கோவைக்காயை சுத்தப்படுத்தி நன்கு கழுவவும்.
2. கழுவிய கோவைக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
3. கடாயில் சிறிது எண்ணெயை ஊற்றி அதில் வெந்தயத்தை பொன்னிறமாகும் வரை வதக்கி அரைத்துப் பொடியாக எடுக்கவும்.
4. சிறிதளவு தண்ணீர் சேர்த்து தக்காளியை முழுமையாக வேக வைக்கவும். பிறகு வேகவைத்த தக்காளியின் தோலை உரித்தெடுத்து அரைத்து சாறை வடிகட்டி எடுக்கவும்.
5. கடாயில் எண்ணெயை ஊற்றி அதில் நறுக்கிய பச்சை மிளகாய், கோவைக்காய் மற்றும் அரைத்துப் பொடியாக்கிய வெந்தயத்தை போட்டு கோவைக்காய் முழுமையாக வேகும் வரை வதக்கவும்.
6.இந்தக் கலவையுடன் மஞ்சள் தூள், தக்காளி சாறை சேர்த்து சீரகத் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
7.நறுக்கிய பச்சை மிளகாய், கோவைக்காய் முழுமையாக வேகும் வரை வதக்கவும்.
8.இந்தக் கலவை ஊறுகாய் பதம் வந்தவுடன், இவற்றுடன் எலுமிச்சைச்சாற்றை ஊற்றி அடுப்பை அணைக்கவும்.
9.பின்னர் இந்த ஊறுகாயை அறை வெப்பநிலை வந்தவுடன் சுத்தமான ஜாடியில் வைக்கவும்.

ஊறுகாய் செய்வதற்கு பழுத்த கோவைக்காயை உபயோகிக்க வேண்டாம். கல் உப்பும் உபயோகிக்கலாம்.

கோவைக்காய் மெழுகுபிரட்டி

என்னென்ன தேவை?

கோவைக்காய் – 500 கிராம், பச்சை மிளகாய் – 30 கிராம், தேங்காய் எண்ணெய் – 10 மி.லி., மிளகுத் தூள் – 20 கிராம், கறிவேப்பிலை – 20 கிராம், மஞ்சள் தூள் – 10 கிராம், உப்பு – தேவையான அளவு, கொத்தமல்லி – சிறிது.

எப்படிச் செய்வது?

1. கோவைக்காயை சுத்தப்படுத்தி நன்கு கழுவவும்.
2. கழுவிய கோவைக்காயை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
3. கடாயில் தேங்காய் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும்.
4. அதில் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், கோவைக்காய், மஞ்சள் தூள், உப்பு இவற்றைப் போடவும்.
5. சிறிதளவு தண்ணீர் சேர்க்கவும்.
6. லேசாகக் கிளறி அதன் மீது மிளகுத் தூள் தூவி அடுப்பை அணைக்கவும்.
7. இதன் மேல் கொத்தமல்லி இலையைத் தூவவும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மயக்கம்… குழப்பம்… கலக்கம்!! (அவ்வப்போது கிளாமர்)
Next post முஸ்லிம் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம்: இலக்கை அடைய முடியுமா? (கட்டுரை)