By 29 July 2020 0 Comments

முஸ்லிம் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம்: இலக்கை அடைய முடியுமா? (கட்டுரை)

கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தில் முஸ்லிம் உறுப்பினர்கள் 21 பேர் இருந்தனர். அவர்களில் ஹிஸ்புல்லாஹ் இராஜினாமா செய்து விட்டு, கிழக்கு மாகாண ஆளுநர் பதவியைப் பெற்ற பின்னர், அந்தத் தொகை 20 ஆனது.

இலங்கையில் சுமார் 10 சதவீதம் முஸ்லிம்கள் வாழ்கின்றனர். எனவே, விகிதாசாரப்படி 22 முஸ்லிம்கள் நாடாளுமன்றில் உறுப்பினர்களாக இருக்க வேண்டும். கடந்த முறை கிட்டத்தட்ட இந்தத் தொகையினர் இருந்தனர். ஆனால், வருகின்ற நாடாளுமன்றில் முஸ்லிம்களின் சதவீதத்துக்கு ஏற்ப, உறுப்பினர்கள் இருப்பார்களா என்கிற கேள்வி பல்வேறு மட்டங்களிலும் எழுந்துள்ளது. நாடாளுமன்றத்துக்கு முஸ்லிம் சமூகத்திலிருந்து ஓர் உறுப்பினர் மட்டும் தெரிவு செய்யப்பட்டாலும், அவர் ‘பெறுமானம்’ மிக்கவராக இருக்க வேண்டும் என்கிற வாதத்தைக் கணிசமானோர் முன்வைப்பதுண்டு. நாடாளுமன்ற அமர்வுகளுக்குச் செல்லாதவர்கள், சென்றாலும் அங்கு உரையாற்றாதவர்கள், உரையாற்றாமல் விட்டாலும் அடுத்த உறுப்பினர்களின் உரைகளைச் செவிமடுக்காமல் உறங்குகின்றவர்கள் 20 பேர், நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பதை விடவும், செயலூக்கம் மிக்க ஓர் உறுப்பினர் மட்டும் இருந்தாலே போதும் என்கிற தர்க்க ரீதியான வாதத்தில், நியாயம் இல்லாமலும் இல்லை.

ஆனாலும், பெரும்பான்மை விருப்புக்கமைய முடிவுகள் எட்டப்படுகின்ற சட்டவாக்க சபையான நாடாளுமன்றில், முஸ்லிம்கள் தமது பிரதிநிதிகளின் எண்ணிக்கையை உச்ச அளவில் வைத்திருக்க வேண்டியமையும் அவசியமாகிறது.

மறுபுறம், இந்தத் தேர்தலில் எவ்வாறானவர்களைத் தெரிவு செய்ய வேண்டும் என்பதிலும், முஸ்லிம் வாக்காளர்கள் அக்கறை காட்டுதல் வேண்டும்.

அடுத்து அமையவிருக்கும் நாடாளுமன்றம், சவால்கள் நிறைந்ததாக இருக்கப் போகின்றது எனப் பலரும் கூறுகின்றனர். குறிப்பாக, முஸ்லிம்கள் அங்கு பெரும் சவால்களை எதிர்கொள்வார்கள் என்பதை, அனுமானிக்க முடியுமாக உள்ளது.

ஹக்கீமின் சமிக்ஞை

“மிகுந்த சவால்களை எதிர்கொள்ளப் போகும், அடுத்த நாடாளுமன்றத்துக்குப் பொருத்தமானவர்களை உறுப்பினர்களாகத் தெரிவு செய்ய வேண்டிய கட்டாயம் ஒவ்வொருவருக்கும் உள்ளது” என்று, அம்பாறை மாவட்டத்தில், கடந்த வாரம் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கலந்து கொண்டு பேசிய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், தனது கட்சி ஆதரவாளர்களிடம் வலியுறுத்தினார்.

அதற்கிணங்க, அம்பாறை மாவட்டத்தில் தமது கட்சி சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற பிரசாரக் கூட்டங்களில் உரையாற்றிய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், தமது கட்சி ஆதரவாளர்கள், எந்த வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும், யாருக்கு வாக்களிக்கக் கூடாது என்பதை, நேரடியாகவும் சூசகமாகவும் சொல்லி விட்டுச் சென்றார்.

உதாரணமாக, நிந்தவூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய ரவூப் ஹக்கீம், அங்கு தமது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரின் பெயரைக் கூறி, அவர் அடுத்த நாடாளுமன்றில், தன்னுடன் இருந்தே ஆக வேண்டிய ஒருவர் என்றார். ஆனால், அட்டாளைச்சேனை வேட்பாளரின் மேடையில் உரையாற்றிய போது, “சில வேட்பாளர்களிடம் கட்சி ஆதரவாளர்கள் குறை காணக்கூடும். எனவே, அதை மனதில் நிறுத்தி, நீங்கள் வாக்களியுங்கள்” என்றார்.

தர்மசங்கடம்

அம்பாறை மாவட்டத்தில் கடந்த பொதுத் தேர்தலின்போது, ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்தே முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிட்டது. அதன்போது, மூன்று முஸ்லிம் வேட்பாளர்களை முஸ்லிம் காங்கிரஸ் களமிறக்கி, மூவரையும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக வென்றெடுத்தது.

ஆனால், அம்பாறை மாவட்டத்தில் இம்முறை, சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணியமைத்து, தொலைபேசி சின்னத்தில் முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடுகிறது. அந்த வகையில், இம்முறை மு.கா சார்பில் ஆறு முஸ்லிம் வேட்பாளர்கள் அங்கு களமிறக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, மூன்று சிங்களவர்களும் தமிழர் ஒருவரும் அம்பாறை மாவட்டத்தில், தொலைபேசி சின்னத்தில் போட்டியிடுகின்றார்கள்.

இந்த நிலைவரமானது, முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களிடையே விருப்பு வாக்குப் போட்டியை உருவாக்கியிருக்கிறது. அதுமட்டுமன்றி, மு.கா தலைவரும் தர்மசங்கடமானதொரு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் என்பதை, அவரின் உரைகளை வைத்துப் புரிந்து கொள்ள முடிகிறது.

முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களிடையே விருப்பு வாக்குகளுக்கான போட்டி அதிகரித்தமையால், சில வேட்பாளர்கள், தமது ஊர்களுக்குள் சக வேட்பாளர்கள் நுழைவதைத் தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இவ்விவகாரம் தொடர்பில், மு.கா தலைவரிடம் முறையிடப்பட்டதை அடுத்து, “எவரும் எங்கும் செல்லலாம்; சக வேட்பாளர்களுக்குத் தடை விதிக்கக் கூடாது” என்று உத்தரவிட்டுள்ளார் என அறிய முடிகிறது.

இதேபோன்று அம்பாறை மாவட்டத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்கள் சிலர் கூட, தமது பிரதேசங்களுக்குள் நுழைய சக வேட்பாளர்களுக்குத் தடை விதித்ததாக, அந்தக் கட்சியின் சில வேட்பாளர்கள் புகார் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது. அம்பாறை மாவட்டத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதால், அந்தக் கட்சியின் சார்பில் 10 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.

இந்தப் பின்னணியில், அம்பாறை மாவட்டத்தில் எந்தக் கட்சி, எத்தனை ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும் என்கிற கேள்விக்கு, பதில்களை எதிர்வுகூறுதல் கடினமானதாக உள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில், அம்பாறை மாவட்டத்தில் வேட்பாளர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குகளின் அடைப்படையிலும், அதற்கு முன்னர் 2018ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்குகளின் அடிப்படையிலும், எதிர்வரும் பொதுத் தேர்தல் முடிவுகளை எதிர்வுகூற முடியும்.

ஜனாதிபதித் தேர்தல் முடிவின் அடிப்படையில்

கடந்த ஜனாதிபதித் தேர்தலில், அம்பாறை மாவட்டத்தில், சஜித் பிரேமதாஸ பருமட்டாக 260,000 வாக்குகளைப் பெற்றார். கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு 135,000 வாக்குகள் கிடைத்தன.

இதனடிப்படையில், நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில், சஜித் தலைமையிலான தொலைபேசி சின்னம், எத்தனை வாக்குகளைப் பெறும் சாத்தியம் உள்ளது என்பதைப் பார்ப்போம்.

ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவுக்குக் கிடைத்த மேற்படி 260,000 வாக்குகளில் (அண்ணளவானது) இருந்து, தமிழர்களின் 50 ஆயிரம் வாக்குகளையும் (அம்பாறை மாவட்டத்தில் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் வாக்காளர்கள் உள்ளனர்) அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் 40 ஆயிரம் வாக்குகளையும் கழித்தால் 170,000 வாக்குகள் மிகுதியாக வரும்.

அம்பாறைத் தொகுதியில், ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸ சுமார் 42 ஆயிரம் வாக்குகளைப் பெற்றிருந்தார். அம்பாறைத் தொகுதி, முற்று முழுதாக சிங்களவர்களைக் கொண்டது.

இப்போது, ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து பிரிந்து, சஜித் அணி போட்டியிடுவதால், அம்பாறைத் தொகுதியில், அண்ணளவாக அரைவாசித் தொகை வாக்குகள் (25 ஆயிரம்) இந்தத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்குச் சென்று விடும் என வைத்துக் கொள்வோம். அந்தவகையில், இம்முறை தொலைபேசிச் சின்னம் 145,000 வாக்குகளைப் பெறும் என்கிற முடிவுக்கு வரலாம்.

அதேவேளை, கடந்த ஜனாதிபதித் தேர்தலில், கோட்டாபய ராஜபக்‌ஷவுக்குக் கிடைத்த 130,000 வாக்குகளில், தேசிய காங்கிரஸுக்கு உரித்தானது என்கிற வகையில் 40,000 வாக்குகளைக் கழிப்போம். (ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாவுக்கு ஆதரவளித்த அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ், இம்முறை அம்பாறை மாவட்டத்தில் தனித்துப் போட்டியிடுகிறது). அந்த வகையில் அம்பாறை மாவட்டத்தில், பொதுஜன பெரமுனவுக்கு 90 ஆயிரம் வாக்குகள் கிடைப்பதற்கான சாத்தியம் உள்ளது.

(தமிழர், முஸ்லிம்களிடமிருந்து நேரடியாக ஐக்கிய தேசிய கட்சிக்கும் பொதுஜன பெரமுனவுக்கும் இம்முறை கிடைக்கும் வாக்குகளை, நாம் இங்கு கருத்திற் கொள்ளவில்லை).
இந்தக் கணக்கின் அடிப்படையில், அம்பாறை மாவட்டத்தை, தொலைபேசி சின்னம் வென்றெடுப்பதற்கான சாத்தியம் உள்ளது.

உள்ளூராட்சி கணக்கு

கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில், அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் 70 ஆயிரம் (பருமட்டாக) வாக்குகளைப் பெற்றிருந்தது. அந்தத் தேர்தலில், அம்பாறை மாவட்டத்தின் பல இடங்களில், யானைச் சின்னத்தில்தான் முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிட்டது. அந்தத் தொகையுடன், அம்பாறை தொகுதியில் கிடைக்கும் சுமார் 15 ஆயிரம் வாக்குகளையும் சேர்த்தால், 85 ஆயிரம் வாக்குகளையே இம்முறை பொதுத் தேர்தலில் தொலைபேசி சின்னம் பெறுவதற்கான சந்தர்ப்பம் உள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் மொத்தம் ஏழு நாடாளுமன்ற ஆசனங்கள் உள்ளன. அவற்றில் 01 போனஸ் ஆசனமாகும். அம்பாறை மாவட்டத்தின் மொத்த வாக்காளர் தொகை 05 இலட்சத்து 14 ஆயிரமாகும் (பருமட்டான தொகை). இந்த வாக்காளர்களில், சுமார் 50 ஆயிரம் பேர் வெளிநாடுகளில் உள்ளனர் என வைத்துக் கொள்வோம். வரும் விடை 464,000 ஆகும். இவர்களில் 80 சதவீதமானோர் வாக்களித்தால் 371,200 வாக்குகள் அளிக்கப்படும். அவ்வாறாயின் ஓர் ஆசனத்தைப் பெற்றுக் கொள்வதற்கான வாக்குகளின் எண்ணிக்கை (371,200 ஐ 06ஆல் பிரித்தால்) 62 ஆயிரம் (பருமட்டான தொகை) என வரும். இந்தக் கணக்கின் அடிப்படையில் பார்த்தால், தொலைபேசி சின்னத்துக்கு ஓர் ஆசனம் மட்டுமே கிடைப்பதற்கான சாத்தியம் உள்ளது.

அப்படி நடந்தால், அம்பாறை மாவட்டத்தை பொதுஜன பெரமுன கட்சி வென்றெடுக்கும் வாய்ப்புகள் காணப்படுகின்றன.

மட்டக்களப்பில் குழப்பம்

அம்பாறை மாவட்டத்தில் கூட்டணியமைத்து, முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடும் அதேவேளை, மட்டக்களப்பில் கடந்த முறை போன்று, அந்தக் கட்சி தனது மரச் சின்னத்திலேயே இம்முறையும் தனித்தே போட்டியிடுகின்றது.

ஆயினும், அங்கு முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிடும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானாவும், அதே கட்சியில் போட்டியிடும் மற்றொரு வேட்பாளரான கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீரும் மிக மோசமான வகையில், முட்டி மோதிக் கொள்கின்றனர்.

அலிஸாஹிர் மௌலானாவும், ஹாபிஸ் நஸீரும் ஏறாவூரைச் சேர்ந்தவர்களாவர். அதே ஊரில்தான் முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளரும் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தற்போதைய தவிசாளருமான பசீர் சேகுதாவூத்தும் வண்ணத்துப்பூச்சி சின்னத்தில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஏறாவூருக்குக் கடந்த வாரம், தேர்தல் பிரசாரத்துக்காக மு.கா தலைவர் சென்றிருந்த நிலையில், அலிஸாஹிர் மௌலானாவும் ஹாபிஸ் நஸீரும் வெவ்வேறாகவே பிரசாரக் கூட்டங்களை ஒழுங்கு செய்திருந்தனர்.

முதலில் அலிஸாஹிர் மௌலானா ஒழுங்கு செய்திருந்த கூட்டத்தில் ஹக்கீம் கலந்து கொண்டார். அங்கு உரையாற்றிய அலிஸாஹிர் மௌலானா, சக வேட்பாளர் ஹாபீஸ் நஸீரைப் பற்றிக் குறிப்பிடும் போது ‘ஊழல் பேர்வழி’ என்றும் ‘டம்மி வேட்பாளர்’ எனவும் ஆத்திரத்துடன் கூறினார்.

ஆனால், இதற்குக் கண்டனங்கள் எதையும் மு.கா தலைவர் தெரிவிக்கவில்லை.
அதுமட்டுமன்றி, அங்கு உரை நிகழ்த்திய ஹக்கீம், “அலிஸாஹிர் மௌலானா நாடாளுமன்றத்தில் இருந்தாக வேண்டிவர். அவர் வகிக்கும் பாத்திரம், தங்கப் பாத்திரமாகும். அலிஸாஹிர் மௌலானாவின் இடத்தை, யாரும் அத்தனை எளிதில் எட்டிப் பிடிக்க முடியாது” என்றார். ஹக்கீமுடைய இந்தப் பேச்சு, மௌலானாவின் ஆதரவாளர்களுக்குப் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

அதையடுத்து, ஹாபிஸ் நஸீர் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்திலும் ஹக்கீம் கலந்து கொண்டு உரையாற்றினார். ஆனால், ஹாபிஸ் நஸீருக்கு வாக்களிக்குமாறு, அங்கு ஒரு வார்த்தையைக்கூட, ஹக்கீம் கூறியிருக்கவில்லை.

முஸ்லிம் காங்கிரஸுக்கு எதிராகச் செயற்பட்டு வந்த ஹாபிஸ் நஸீர், சில காலங்களுக்கு முன்னர், அந்தக் கட்சியில் இணைந்து, பிரதித் தலைவர் பதவியையும் பெற்றுக் கொண்டமை நினைவுகொள்ளத்தக்கது.

இவ்வாறான வெட்டுக் குத்துகள், முஸ்லிம் கட்சிகளின் சக வேட்பாளர்களுக்கு இடையிலேயே, பரவலாக இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில், முஸ்லிம்களின் விகிதாசாரப்படி எதிர்பார்க்கப்படும் 22 முஸ்லிம் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவங்களை வென்றெடுக்க முடியாமல் போய்விடுமோ என்கிற அச்சம், பொதுமக்கள் மத்தியில் தோன்றியிருப்பது நியாயமானதாகும்.Post a Comment

Protected by WP Anti Spam