கருவிலேயே தண்டனை தரலாமா? (மருத்துவம்)

Read Time:12 Minute, 25 Second

மது… மயக்கம் என்ன? டாக்டர் ஷாம்

உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு, ஹார்மோன்கள், மன அழுத்தம்… இவை அனைத்துமே பெண்களுக்குச் சவாலாக விளங்குபவை. மதுவும் பெண்கள் விஷயத்தில் சவால் பட்டியலில்தான் இடம் பெறுகிறது. ஆண்களுக்கு எந்தப் பிரச்னையையும் ஏற்படுத்தாத மிகக்குறைவான அளவு மது கூட, பெண்களுக்கு குழப்பம் தரும். அதிக அளவு மதுவோ, ஆண்களுக்கு அளிக்கிற அபாயத்தை விட, மிக அதிக பாதிப்பை பெண்களுக்கு ஏற்படுத்தும்.

அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ஆண்கள் குடிப்பதும் பெண்கள் குடிப்பதும் வேறுபடுத்திப் பார்க்கப்படுவதில்லை. ஆண் குடிப்பதைப் போல பெண் குடிப்பதும் அங்கெல்லாம் இயல்பான விஷயமே. இருப்பினும், அங்கும் கூட மருத்துவ ரீதியாக பெண்கள் குடிப்பதற்கு வரையறை அறிவுறுத்தல்கள் உண்டு.அமெரிக்காவில் 60 சதவிகிதம் பெண்கள் ஆண்டுக்கு ஒரு முறை மட்டும்தான் குடிக்கின்றனர். அது பிறந்த நாளாகவோ, மண நாளாகவோ, புத்தாண்டாகவோ, கிறிஸ்துமஸ் ஆகவோ இருக்கக்கூடும். அந்த ஒரு நாளிலும் அவர்கள் அளவு மீறுவதில்லை.

ஒரு கொண்டாட்டத்தின் வெளிப்பாடாக, மகிழ்ச்சியின் பகிர்தலாக, விருந்தோம்பலின் பகுதியாகவே மது இடம்பெறுகிறது. இவர்களைப் பொறுத்த வரை எந்தப் பிரச்னையும் இல்லை.அடிக்கடி குடிக்கிறவர்களும் அதிகமாகக் குடிக்கிறவர்களும்தான் பாதிப்புக்கு ஆளாவதில் முன்னுரிமை பெறுகிறார்கள். அங்கு இந்தப் பட்டியலில் உள்ள பெண்கள் கூட வாரத்துக்கு சுமார் 300-350 மி.லி. அளவுதான் குடிக்கிறார்கள். இதையே அதிக குடி எனக் கருதி, அங்கு விழிப்புணர்வு செய்யப்படுகிறது.

நம் ஊரிலோ, ஒரே நாளிலே இதை விட அதிகமாகக் குடிக்கிறவர்கள் ஏராளம். அது மட்டுமல்ல… மற்ற நாடுகளில் அருந்தப்படுவதை விட, தரம் குறைந்த, வீரியம் அதிகமான மதுவே இங்கு விற்கப்படுகிறது என்பதை நினைவில் கொள்க.பெண்கள் எடுத்துக் கொள்கிற பல வகை மருந்துகளோடும், மதுவானது நேரடியாக வினை புரியக் கூடியது. குழந்தைப்பேறு சார்ந்த மருந்து முதல் அஜீரண மாத்திரை எல்லாவற்றுக்கும் இது பொருந்தும். மருந்தின் செயல்திறனை மது குறைத்து விடும் என்பது மட்டுமே அல்ல… பலவித பக்கவிளைவுகளையும் அளிக்கும்.

இதயம் மற்றும் ரத்த நாள நோய்கள், ஜீரண பிரச்னைகள், நீரிழிவு போன்றவற்றுக்கான மருந்துகளை எடுத்துக்கொள்ளும் பெண்கள் மது அருந்தினால், ஆண்களை விட அதிக சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். அரைத் தூக்க நிலைக்குத் தள்ளக்கூடிய மருந்துகள் மதுவின் காரணமாக, அயர்வை அதிகப்படுத்தும். உதாரணம்: சளி, இருமல் மருந்துகள், மனக்கலக்கம் மற்றும் மன அழுத்தத்துக்கான மருந்துகள்…மார்பக கேன்சர் விஷயத்திலும் மதுவின் பங்கு நிரூபிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக குடும்பத்தில் இப்பிரச்னை உள்ள பெண்களுக்கும், மெனோபாஸ் பருவத்தை எட்டியோருக்கும் மதுவானது அதிக மார்பக கேன்சர் அபாயத்தை அளிக்கிறது.

மது சார்ந்த உருப்பெற்ற கருப் பாதிப்பு நோய் (Fetal Alcohol Syndrome)

மது குடிக்கிற பெண்கள் கருவிலேயே தங்கள் குழந்தைக்குத் தருகிற தண்டனை இது. இக்குழந்தைகள் அளவில் சிறியதாகவோ, முக அமைப்பில் வித்தியாசமாகவோ பிறக்கக்கூடும். மது காரணமாக கருவிலேயே அதன் மூளையில் ஏற்படுகிற பாதிப்பானது, வாழ்நாள் முழுக்கவே கற்றல், நினைவாற்றல், கவனம், பிரச்னைகளைக் கையாளுதல் போன்ற செயல்பாடுகளில் குறைபாடுகளை உண்டாக்கும்.

மது காரணமாக ஏற்படும் இப்பிரச்னைகள், நன்றாகத் தோற்றம் அளிக்கிற / வளர்கிற குழந்தைகளுக்கும் ஏற்படக்கூடும்.
கர்ப்ப காலத்தில் மிகக்குறைவாகக் குடிப்பது என்ற வரையறையே கிடையாது. எவ்வளவு குடித்தால் குழந்தைக்குப் பாதிப்பு ஏற்படாது எனக் கணக்கிடவும் முடியாது. ஒருவேளை கர்ப்பம் அறிவதற்கு முன் குடித்திருந்தால் கூட, அது உறுதி செய்யப்பட்ட அடுத்த நொடியே மதுவை மறந்துவிடுவதே நல்லது. அது குழந்தைக்கு ஏற்படும் பாதிப்பு
அளவுகளை குறைக்க உதவும்.

அதிக அளவு குடித்தல் அளவு மீறிய மது அருந்தும் பெண்களின் உடலும் மனமும் மட்டுமல்ல… கருவும் பாதிக்கப்படும் என்பது மட்டுமே அல்ல… இயல்பாகவே இந்தப் பெண்கள் வன்முறைக்கும் ஆளாகக் கூடும். மது அருந்துவோர் இயல்பாகவே புகைப்பழக்கத்துக்கு உள்ளும் தள்ளப்படக் கூடும். இது இன்னும் மோசமான விளைவுகளை தரக்கூடும். பள்ளி மாணவிகள்அண்மைக்கால தமிழக வரலாற்றில் பள்ளி மாணவிகள் குடிக்கிற செய்தியை கூட அடிக்கடிப் பார்க்க முடிகிறது.

இது வழக்கமான உடல்/ மனப் பாதிப்புகளை அவர்களுக்கு அளிப்பதோடு நிற்பதில்லை என்பதுதான் சோகம். டீன் ஏஜ் என்கிற பதின்மப் பருவத்துக்கே உரிய குழப்பங்களையும் மது அதிகரித்து விடும். மாதவிடாயும் ஒழுங்கற்று மாறும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும். அசட்டுத் தைரியத்தை அள்ளி வழங்கும். கல்வியில் கவனமின்மை உண்டாகும். கோபம், வெறி, பொறாமை போன்றவையும் கட்டுப்படுத்த முடியாமல் போகும். புகைப்பழக்கம், இதர போதைப் பொருட்களில் நாட்டம், பாலியல் சிக்கல்கள் ஆகியவையும் உண்டாகும்.

அறியா பருவத்தில் பாலியல் சீண்டல்களுக்கு உள்ளாகும் குழந்தைகளும், பின்னாளில் மதுவை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள்.கல்லூரி மாணவிகள் / இளம் பணியாளர்கள் ஹாஸ்டலில் தங்கிப் பயிலும் கல்லூரி மாணவிகளுக்கும், ஐ.டி. போன்ற துறைகளில் புதிதாகச் சேர்கிற பெண்களுக்கும் எப்படியாவது ஒரு விதத்தில் – விரும்பியோ, விரும்பாமலோ மது அறிமுகமாகி விடுகிறது. அந்த ஒரு கோப்பை மதுவை ‘இது நமக்கானதல்ல’ எனத் தாண்டி வருகிற பெண்களே மெஜாரிட்டி. எனினும், ஆர்வக் கோளாறு காரணமாக அதில் மூழ்கி மீள முடியாது தவிப்போர்
சமீபகாலமாக அதிகமாகி வருகிறார்கள் என்பதுதான் உண்மை.

இவர்களுக்கு மற்ற வயது பெண்களை விட குடிப்பதற்கான சந்தர்ப்பம் அதிகம் கிடைக்கிறது என்பதும் முக்கியப் பிரச்னையே. குடிப்பது அந்தஸ்தின் / நாகரிகத்தின் அடையாளமாக ஆண்களால் நிறுவப்படும் ஒரு மாயவலையில் அறியாது சிக்குகிற பெண்களும் பலர் இருக்கிறார்கள். குடிப்பழக்கம் அதிகரிக்க அதிகரிக்க வழக்கமான உடலியல் கோளாறுகளோடு, இந்த வயதினருக்கு உறவுச் சிக்கல்களும் அதிகமாகின்றன. நட்பிலும், காதலிலும், திருமண உறவிலும், இணைந்து வாழ்தலிலும் பிரச்னைகள் முளைக்கின்றன.

எளிதாகத் தீர்க்கக்கூடிய பிரச்னைகள் கூட, குடி காரணமாக தீவிரமான பிரச்னைகளாக உருமாற்றம் பெறுகின்றன. மன அழுத்தம் இவர்களிடையே உச்சத்தை எட்டுகிறது. அதன் காரணமாக குடி இன்னும் அதிகமாகிறது – ஒரு தீ வளையம் போல…40களுக்குப் பிறகு…உறவுச் சிக்கல்களோடு வாழும் பெண்கள், திருமணம் செய்துகொள்ளாத பெண்கள், ‘லிவிங் டுகெதர்’ ஆக வாழும் பெண்கள், விவாகரத்து பெற்ற / கணவனை இழந்த/ தனித்து வாழும் பெண்கள் போன்றோர் எளிதில் மதுவுக்கு ஆட்படுகிறவர்களாக இருக்கிறார்கள். அதோடு, நாளுக்கு நாள் அளவு தாண்டவும் செய்கிறார்கள் (குழந்தைகளோடோ, கூட்டுக் குடும்பத்திலோ வாழ்வோர் விதிவிலக்கு). கணவன் மூலம் அறிமுகப்படுத்தப்படும்/ வலியுறுத்தி பருகச் செய்யப்படும் மதுவும் ஒரு கட்டத்தில் கணவனுக்கு நிகராகவோ, அதைவிட அதிகமாக ஈர்க்கும் வகையில் மனைவியை மாற்றிவிடுகிறது.

மூத்த குடிமக்கள்

குடிப்பழக்கத்துக்கு ஆளான முதுமைப் பெண்களுக்கு வழக்கமான பிரச்னைகளுக்குக் கிடைக்கக்கூடிய மருத்துவ நிவாரணங்கள் கூட, மதுவின் ஆதிக்கம் காரணமாக தாமதமாகும். மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகமாகும். மனக் கலக்கம், மன அழுத்தம் ஏற்படும். மனவியல் பிரச்னைகளுக்கு எடுத்துக் கொள்ளும் மருந்துகள் மதுவோடு சேரும்போது, எல்லாமே குழப்பமாகும்.

தூக்கமின்மை அதிகரிக்கும். உணவு எடுத்துக் கொள்ளும்/ ஏற்றுக் கொள்ளும் திறன் குறையும். மூப்பு காரணமாக உடலில் ஆல்கஹாலை ஏற்றுக்கொள்ளும் தன்மை குறைந்து காணப்படும். இளம் வயதினர் குடிப்பதை விட குறைவாகவே குடித்தாலும், ரத்த ஆல்கஹால் செறிவு அதிகமாகக் காணப்படும். முதுமையில் உடலில் உள்ள நீரின் அளவு குறைந்திருப்பதும், ஆல்கஹாலின் அடர்த்தி அதிகமாக இருப்பதும் இதற்குக் காரணம்.

குடிக்கிற முதியவர்கள் அடிக்கடி கீழே விழுவதைக் கவனித்திருக்கிறீர்களா?பெண்களின் மன அழுத்தமும் மதுவும் மன அழுத்தம் இல்லாத பெண்கள் மிகக்குறைவு. அதிலிருந்து விடுபடுவதற்காக மதுவை மருந்தாக நினைக்கும் பெண்கள் பலர் உண்டு. ஆனால், குடியே மன அழுத்தத்தை அதிகரித்து விடும் என்பதும், வீட்டிலும் வேலையிடத்திலும் பிரச்னைகளை வலுப்படுத்தும் என்பதுமே உண்மை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்களின் பருவ மாற்றங்களும், ஹார்மோன்களும் !! (அவ்வப்போது கிளாமர்)
Next post நடிப்பு ராட்சசியும், நடன ராட்சசியும்! (மகளிர் பக்கம்)