அக்கா கடை- எல்லாம் ஆண்டவன் விட்ட வழி !! (மகளிர் பக்கம்)

Read Time:12 Minute, 48 Second

அண்ணாநகர் போகன்வில்லா பூங்கா என்றால் தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அதே போல் அங்குள்ள சாட் கடை அண்ணாநகர் வாசிகளுக்கு மட்டுமல்ல மயிலாப்பூர், புரசைவாக்கம் மற்றும் அயனாவரம் ஏரியா மக்கள் மத்தியிலும் மிகவும் பிரபலம். அந்தி சாயும் ஆறு மணி போல் தான் கடையை சாரதா மற்றும் ரவிக்குமார் தம்பதிகள் திறப்பார்கள். திறந்த ஐந்ேத நிமிடங்களில் மக்கள் கூட்டம் அலைமோத ஆரம்பித்துவிடும்.

‘‘பூங்காவிற்கு வருபவர்கள் மட்டும் இல்லை வேலை முடித்து வீட்டுக்கு போகிறவர்களும் இங்கு வருவது வழக்கம்’’ என்று பேசத் துவங்கினார் சாரதா.‘‘நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் ஆந்திரா. அங்கு தான் படிச்சேன். ரொம்ப சாதாரண குடும்பம். பெரிய வசதி எல்லாம் கிடையாது.அப்பா ஒரு தனியார் நிறுவனத்தில் சொர்ப்ப சம்பளத்தில் வேலைப் பார்த்து வந்தார். அப்புறம் கொஞ்சம் நிலம் இருந்தது. அதை ஒத்திகைக்கு கொடுத்து இருந்தோம். அப்பாக்கு வரும் வருமானத்தை கொண்டு தான் எங்க குடும்பம் நகர்ந்தது’’ என்றவர் ஏழாம் வகுப்பு வரை தான் படித்துள்ளார்.

‘‘நாங்க இருந்தது, ஆந்திராவில் உள்ள ஒரு கிராமத்தில். அங்கு ஏழாம் வகுப்பு வரை தான் இருந்தது. மேலே படிக்க டவுனுக்கு போகனும். அம்மா அப்பாக்கு என்னை அங்க தனியா அனுப்ப பயம் என்பதால், ஏழாம் வகுப்பு மேல் நான் மேலே படிக்கல. படிக்க ஆசை தான். ஆனால் குடும்ப சூழல் அதற்கு ஒத்துழைக்கல. அதனால் வீட்டில் அம்மாவுக்கு உதவியா இருந்துட்டேன்.

இதற்கிடையில் எனக்கு 18 வயசில் கல்யாணமாச்சு. என் கணவரின் வீடு ஐதராபாத். கல்யாணம் முடிந்து நான் அங்கு செட்டிலாயிட்டேன். அவர் துணிக் கடை ஒன்றில் வேலைப் பார்த்து வந்தார். ஐதராபாத் என்றால் முத்துக்கு பிரபலம். அதனால் நான் முத்து ரகம் பிரிக்கும் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன். என் நாத்தனார் அங்கு வேலைப் பார்த்து வந்தார்.

வீட்டில் சும்மா இருக்க பிடிக்காமல், கல்யாணமான மூன்று மாசத்திலேயே என் நாத்தனார் மூலமாக நானும் வேலைக்கு போக ஆரம்பிச்சேன். வாழ்க்கையும் ஓரளவு நன்றாக நகர்ந்து கொண்டு இருந்தது. அந்த சமயத்தில் என் கணவரின் சின்ன அக்கா சென்னையில் வசித்து வந்தார். அவர் இங்கு இதே போல் சாட் கடை ஒன்றை தள்ளு வண்டியில் நடத்தி வந்தார்.

அவர் தான் எல்லாரும் சென்னைக்கு வந்திடுங்க. இங்க உணவு சம்மந்தமான தொழிலுக்கு நல்ல வருமானம் இருக்குன்னு ெசான்னார். முதல்ல என் கணவர் சென்னைக்கு வந்தார். அவர் அக்காவுடன் சேர்ந்து இந்த தொழிலை முழுமையாக கற்றுக் கொண்டார். ஒரு வருடம் இங்கு ஒரு விடுதியில் தங்கி கடையை நடத்தி வந்தார்’’ என்றவர் 1998ம் வருடம் முதல் இன்று வரை இதே பூங்காவில் தான் தொழில் செய்து வருகிறார்களாம்.

‘‘முதலில் ஷெனாய் நகரில் தான் கடையை ஆரம்பிச்சாங்க. அதன் பிறகு சிந்தாமணி. அங்கு ஒரு ஆறு மாசம் தான் கடையை நடத்தி இருப்போம். அதன் பிறகு இந்த பூங்காவின் முன் கடையை போட ஆரம்பிச்சோம். கிட்டத்தட்ட 20 வருஷமா இங்கதான் கடையை நடத்தி வருகிறோம். ஆரம்பத்தில் இந்த பூங்கா புதர் எல்லாம் மண்டி காடு போல தான் இருக்கும்.

அதன் பிறகு தான் இதை புதுப்பிச்சாங்க. அப்ப எங்க கடையும், வேர்க்கடலைக் கடலையும் தான் இங்க இருக்கும். வேற எந்த கடையும் இருக்காது. ஆட்களும் குறைவாத்தான் வருவாங்க. எட்டு மணிக்கு மேல் அந்த இடமே ஜிலோன்னு இருக்கும். நானும் என் சின்ன நாத்தனாரும் தான் பெரும்பாலும் கடையில் இருப்போம். இவரும் எங்களுக்கு உதவியா உடன் இருப்பார்’’ என்றவர் ஆரம்பத்தில் சுண்டல் மட்டுமே விற்பனை செய்து வந்துள்ளார்.

‘‘கடை போட ஆரம்பிச்ச போது, சுண்டல், சமோசா மட்டும் தான் விற்று வந்தோம். அதன் பிறகு படிப்படியா கட்லட், பானி பூரி, பாவ் பாஜி போட ஆரம்பிச்சோம். இப்ப போண்டா, வடை, பஜ்ஜிக் கூட போடுறோம். நாங்க ஆந்திரா என்பதால், இது போன்ற சாட் உணவுகள் எல்லாம் தெரியாது. ஆனால் இவரின் அக்கா நல்லா சமைப்பாங்க. எந்த உணவுனாலும், ஒரு முறை சொன்னா போதும், அப்படியே செய்வாங்க. அவங்க தான் எங்களுக்கு எல்லாமே சொல்லிக் கொடுத்தாங்க.

ஆனால் இப்ப கடந்த மூணு வருஷமா அவங்க இங்க வரதில்லை. கடையில் நின்று கொண்டே தான் வியாபாரம் பார்க்கணும். உட்கார கொஞ்சமும் நேரமிருக்காது. அவங்களால ரொம்ப நேரம் நிற்க முடியல. அதனால இப்ப அவங்க வீட்டு வேலைக்கு அதாவது சமையல் வேலைக்கு போயிட்டாங்க. கடையை நானும் என் கணவரும் தான் முழுக்க முழுக்க பார்த்துக் கொள்கிறோம்’’ என்று கூறும் சாரதாவும் சமையல் வேலைக்கு செல்கிறார்.

‘‘எங்களுக்கு மூணு பொண்ணுங்க. நாங்க தான் இப்படி மழை, பனின்னு ரோட்டுல நின்னு கஷ்டப்படுறோம். அவங்க இந்த கஷ்டம் படக்கூடாதுன்னு நானும் என் கணவரும் ஆரம்பத்திலேயே முடிவு செய்திட்டோம். நானும் படிக்கல. என் கணவரும் பத்தாம் வகுப்பு வரை தான் படிச்சிருக்கார். அதனால எங்க பசங்கள நல்லா படிக்க வைக்கணும்ன்னு முடிவு செய்தோம்.

அதை சாதித்தும் இருக்கோம்ன்னு நினைக்கிறேன். என் பெரிய மகள் பட்டப்படிப்பு முடிச்சிட்டு வங்கி ஒன்றில் வேலைப் பார்த்து வருகிறாள். அதே சமயம் தொலைதூரக் கல்வியில் எம்.பி.ஏ படிக்கிறா. இரண்டாவது மகள் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வருகிறாள். கடைசி பெண் ஒன்பதாம் வகுப்பு படிச்சிட்டு இருக்கா’’ என்றவர் அனைத்தையும் வீட்டிலேயே தயார் செய்து விடுகிறார்.

‘‘அவரின் அக்கா சொல்லிக் கொடுத்தார். அதன்பின் அதில் நாங்க மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப சின்னச் சின்ன மாற்றம் செய்திருக்கோம். இந்த கடை மாலை நேரம் மட்டுமே என்பதால், பசங்க படிப்பு எல்லாவற்றையும் இந்த ஒரு வருமானத்தை கொண்டு சமாளிக்க முடியல.

அதனால, நான் சமையல் வேலைக்கு போக ஆரம்பிச்சேன். காலை எட்டரை மணிக்கு கிளம்பினா பகல் மூன்று மணிக்கு தான் நான் வீட்டுக்கு வருவேன். ஒரு வீட்டில் காலை மற்றும் மதிய சாப்பாடு செய்திடுவேன். அதன் பிறகு இன்னொரு வீட்டில் மதியம் மற்றும் இரவு சாப்பாடு. வேலை முடிச்சிட்டு வர மூணு மணியாயிடும். அதற்குள் என் கணவர் எல்லாவற்றையும் தயார் செய்து வைத்திடுவார். சுண்டலை நான் வேக வச்சிட்டு போயிடுவேன்.

அவர் அதை மசாலா போல் செய்திடுவார். அதன் பிறகு பானிபூரிக்கு இரண்டு விதமான தண்ணீரும் தயார் செய்து வச்சிடுவார். நான் வந்து சமோசா செய்வேன். பிறகு வடைக்கு மாவு அரைப்பது, பஜ்ஜி, போண்டாவுக்கு தேவையானதை தயார் செய்திடுவேன். இவர் ஆறு மணி போல் கடையை திறப்பார். நாங்க கிளம்ப ஒன்பது மணியாயிடும். கடை என்னவோ எட்டரை மணி வரைக்கும் தான் இருக்கும். அதன் பிறகு எல்லாவற்றையும் ஏறக்கட்டி, கழுவி எடுத்து வைச்சிட்டு தான் கிளம்புவோம்.

இது சாப்பாட்டு பொருள் என்பதால், எதையும் நாங்க மறுநாள் வரை வைத்திருப்பதில்லை. அன்றைக்கு செய்வதை அன்றே விற்றிடுவோம். சில சமயம் கொஞ்சம் மீந்து போகும். அதையும் அங்குள்ள வாட்ச்மேன், செக்யூரிட்டிக்கு கொடுத்திடுவோம். ஆரம்பத்தில் இங்க எங்க கடையும், மசாலா கடலை கடையும் தான் இருந்தது. இப்ப ஷவர்மா, மோமோஸ், பணியாரம், சூப்புன்னு… ஏகப்பட்ட கடை வந்திடுச்சு. ஆனா நமக்கான கஸ்டமர்கள் என்றும் குறைந்ததில்லை. நம்ம உணவின் சுவை பிடிச்சிருந்துச்சுன்னா அவங்க வேற எங்கேயும் போவதில்லை.

அப்படியே ஒரு நாள் மற்ற கடையில் சாப்பிட்டாலும், அடுத்த நாள் நம்ம கடையை தேடித்தான் வராங்க. என்னதான் நான் வேலைக்கு போனாலும், இங்க கடையை போட்டாலும், விக்கிற விலைவாசியில் குடும்பத்தை நடத்துவது கொஞ்சம் சிரமம்தான். சில சமயம் பசங்க படிப்புக்கு காசு இருக்காது. அதுக்காக நல்லா படிக்கிற பசங்கள படிப்பை பாதியில் நிறுத்த முடியுமா என்ன? எங்க வீட்டில் செய்த தவறை நான் என் பசங்களுக்கு செய்ய விரும்பல. அதனால தண்டலுக்கு பணம் வாங்குவோம். அதை மூணு மாசத்துல தினமும் ஒரு தொகைன்னு கட்டிடுவோம்.

அது எங்களை போன்ற வியாபாரிகளால் சுலபமா கட்ட முடியும். மொத்தமா கட்டுவது மாசா மாசம் ஒரு பெரிய தொகையை செலுத்துவது முடியாத காரியம். இப்படி சிறுக சிறுக சேகரித்து ஒரு கிரவுண்ட் நிலம் வாங்கி இருக்கோம். அதில் வீடு கட்டணும். எங்களை நல்லா தெரிஞ்சவங்க, எத்தனை நாளைக்கு தான் இப்படி கடை போடுவீங்க.

சின்னதா ஒரு சாட் கடை ஆரம்பிக்கலாமேன்னு சொல்லுவாங்க. இது நாள் வரைக்கும் அது பத்தி யோசிக்கல. கடைன்னா வாடகை அதிகமா இருக்கும். அவ்வளவு வசதி எல்லாம் இல்லை. சொந்த வண்டி என்பதால், வாடகை கிடையாது. இப்ப என் பெரிய பொண்ணும் வேலைக்கு போறா. கொஞ்சம் சமாளிக்க முடிகிறது. பார்க்கலாம்… எவ்வளவு காலம் எங்களால இதை நடத்த முடியுமோ அது நாள் வரை செய்வோம். அதன் பிறகு ஆண்டவன் விட்ட வழி’’ என்றார் சாரதா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடிப்பு ராட்சசியும், நடன ராட்சசியும்! (மகளிர் பக்கம்)
Next post “குறிகாட்டுவான் முனியப்பபுலம் மயானம்” முழுமையாக புனரமைக்கப்பட்டு மக்களின் பாவனைக்கு கையளிப்பு..! (படங்கள் & வீடியோ)