தடம் மாறும் வாழ்க்கை!! (மகளிர் பக்கம்)

Read Time:16 Minute, 44 Second

சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் சென்னை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவக் காப்பகத்தில் இருந்து, 103 ஆண்கள் மற்றும் 56 பெண்கள் உட்பட 159 மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களித்த நிகழ்வு செய்தியானது. வாக்களிக்கும் மன நிலையில் உள்ள இவர்கள் எல்லாம் மனநலக் காப்பகத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற கேள்விகளோடு கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவ காப்பகத்தை அணுகியபோது..

உள்ளே ஆவேசம் குறையாமல் சிலர்… அன்பை எதிர்பார்த்து சிலர்… சிரித்துக்கொண்டே சிலர்… நம்மை பின் தொடர்ந்து சிலர்… கட்டி அணைக்க முயலும் சிலர்… குட் மார்னிங் சொல்லியபடி சிலர்… அமைதியாகச் சிலர்… இவர்களோடு குடி நோயாளிகள்… கஞ்சா பழக்கத்துக்கு அடிமையானவர்கள்… மனம் பேதலித்து தவறிழைத்தவர்கள் என ஒரு மனநல காப்பகத்திற்குள் சென்று வாருங்கள். இறுகிய மனநிலையோடுதான் நாம் வெளியேற முடியும். நம் மனசைக் கசக்கி நொறுக்கிப்போடும் அளவிற்கு நிகழ்வுகள் அங்கு நிறையவே இருக்கும்.

கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையின் இயக்குநரான மருத்துவர் பூர்ண சந்திரிகா நம்மிடம் பேசத் தொடங்கினார். ‘‘வாக்களிக்கத் தகுதியானவர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு பயிற்சி வழங்கிய பிறகே ஓட்டுப்போட வைத்தோம். யாருக்கு தாங்கள் வாக்களிக்க வேண்டும் என்பதை அவர்களே சுயமாக சிந்தித்து முடிவெடுத்த பிறகு தாங்களாகவே வாக்களித்தனர். மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்றாலே நாம் அவர்களைப் பார்க்கும் பார்வை தவறாகவே உள்ளது. அப்படிப் பார்த்தே பழகிவிட்டோம்.

இதன் காரணமாகவே பெரும்பாலான மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கை நான்கு சுவற்றுக்குள் அடைக்கப்படுகிறது. காப்பகத்தில் சேர்த்த பிறகு, அவர்கள் பழைய நிலைக்கு திரும்பினாலும், உறவினர்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்ல விரும்புவதே இல்லை. உறவினர்கள் தன்னை ஏற்காத நிலையில், வெளியே சென்று வேலை பார்த்துவிட்டு மீண்டும் இங்கேயே வந்து தங்குபவர்களும் எங்களிடத்தில் உண்டு. மனநலம் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் பெரும்பாலும் இங்கு தங்குவதையே விரும்புகின்றனர்.

மனநலம் சரியான பிறகு உணவும், மருந்தும் மட்டும் கொடுத்து சும்மா அவர்களைத் தூங்க வைத்துக்கொண்டே இருந்தால் அவர்கள் எதையாவது தனிமையில் சிந்தித்துக்கொண்டேதான் இருப்பார்கள். தெரிந்த கை வேலைகளை அவர்களைச் செய்ய வைப்பதன் மூலமாக அவர்களிடத்தில் நல்ல மாற்றம் கிடைப்பதோடு, கைத்தொழில் கற்பதன் வழியே வருமானம் ஈட்டவும் அவர்களுக்கு வழி கிடைக்கிறது. ஆண், பெண் பிணியாளர்களை தனித்தனியாகப் பிரித்து தொழில்வழி மறுவாழ்வு மருத்துவம்(ITC) இங்கு தரப்படுகிறது. எங்கள் மருத்துவ அலுவலகர்களின் மேற்பார்வையின் கீழ், சிகிச்சைக்குப் பின் நலம் பெற்றவர்களை தொழில்வழி மருத்துவத்தில்(occupational theraphy) ஈடுபடுத்துகிறோம்.

பெண் மனநலப் பிணியாளர்களுக்கு தையல் வேலை, மெழுகுவர்த்தி தயாரிப்பு, சணல்(jute) பை, பர்ஸ், லெட்டர் பாக்ஸ், போல்டர், ஃபைல் தயாரிப்பு, பேப்பர் பேக் தயாரிப்பு, துணி பை தயாரிப்பு, ஃப்ளவர் வாஷ், பொக்கே தயாரிப்பு, பொம்மை தயாரிப்பு, ஜெம் டிரீ தயாரிப்பு, க்ளாஸ் பெயிண்டிங், வயர் கூடை பின்னுதல் என அனைத்திற்கும் பயிற்சி வழங்கப்படுகிறது. ஆண்களாக இருந்தால் தோட்டவேலை, பேக்கரி மேக்கிங் போன்ற வேலைகளுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.

பெரும்பாலானவர்கள் விவசாயக் குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர்களாக இருப்பதால் ஆர்வத்தோடு நாங்கள் கொடுக்கும் பயிற்சி மூலமாக இயற்கை விவசாயத்தில் ஈடுபடுகின்றனர். தோட்ட வேலை சொல்லித்தர பயிற்சியாளர் ஒருவரும் இருக்கிறார். இங்கிருக்கும் ஆர்கானிக் தோட்டம் இவர்களால் உருவாக்கப்பட்டதே.

சாதாரண நிலையில் இருந்த நிலத்தை பண்படுத்தி விளைநிலமாக மாற்றி இருக்கிறார்கள். சமையல் கூடத்தில் வரும் கழிவுகள் உரமாக மாற்றப்பட்டு இயற்கை முறை உரமாக செடி கொடிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. காய்கறிகள், பழங்கள், கீரைகள் இங்கு பயிர் செய்யப்பட்டு விளைவிக்கப்படுகிறது. இவர்களால் விளைவிக்கப்படும் பொருட்கள் புற நோயாளிப் பிரிவில் விற்பனைக்கு வைக்கப்படுவதோடு, அதில் கிடைக்கும் வருவாய் ஊக்கத் தொகையாக இவர்களுக்கே திரும்ப வழங்கப்படுகிறது.

கட்டி வைப்பது, அடைத்து வைப்பது என்ற நிலைகள் மாறி இப்போது மருத்துவ முன்னேற்றங்கள் நிறைய வந்துவிட்டது. இவர்களது மன அமைதிக்காக நேச்சுரோபதி மருத்துவர் மூலமாக யோக, தெரபி போன்றவையும் கற்றுத்தரப்படுகிறது. மனநலப் பிணியாளர்களுடைய பாதுகாப்பைத் தவிர, இங்குள்ள கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்’’ என முடித்தார்.

அவரைத் தொடர்ந்து பெண் மனநலப் பிணியாளர்களுக்கு தொழில்வழி மருத்துவம் பயிற்சி வழங்கும் பயிற்சியாளர் சவுந்தர்யா அமுல் நம்மிடம் பேசத் தொடங்கினார். ‘‘நான் இங்கு பத்து வருடமாக பணியில் இருக்கிறேன். வாழ்க்கை ஓட்டத்தில் ஏதோ ஒரு நிலையில் வருவதே மனநல பாதிப்பு. இங்குள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு கலையில் திறமைசாலிகள். சிலருக்கு எழுதுவது, சிலருக்கு வரைவது, சிலருக்கு வண்ணம் தீட்டுவதில் ஆர்வம் இருக்கும். சிலர் சுவர் அலங்காரப் பொருட்களை நேர்த்தியாகச் செய்வார்கள். சிலர் அழகாக வயர் கூடை பின்னுவார்கள்.

சிலர் நன்றாக தையல் வேலை செய்வார்கள். யாருக்கு எதில் ஆர்வம் இருக்கிறதோ அதில் நுணுக்கமான பயிற்சிகள் கொடுக்கப்படும். எதுவும் தெரியாதவர்களும் மற்றவர்களைப் பார்த்து ஆர்வத்துடன் செய்து பார்க்க முயற்சிக்கிறார்கள். அவர்கள் எதில் ஆர்வம் காட்டுகிறார்கள் என அறிந்து அதை செய்ய வைக்க ஊக்கப்படுத்துவோம்.

அவர்களின் தனிப்பட்ட திறமைகளுக்கும் கூடுதல் பயிற்சி கொடுக்கப்படுகிறது. துவக்கத்தில் செய்யும்போது, சற்று தடுமாறுவார்கள். தொடர்ந்து ஊக்கப்படுத்துவதன் மூலமே முயற்சிப்பார்கள். அவர்களின் கைகள் வேலை செய்யும் நேர்த்தியிலேயே அவர்களது முன்னேற்றத்தை நாம் கணித்துவிடலாம். இவர்கள் வெளியில் சென்றாலும் தொழில் அவர்களுக்கு கைகொடுக்கும்’’ என முடித்தார்.

அவரைத் தொடர்ந்து, மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தாயாக, சகோதரியாக, தோழியாக செயல்படும் செவிலியர் அருணாச்சலம் சாந்தியிடம் பேசியபோது.. ‘‘93ல் இங்கு பணியில் சேர்ந்தேன். 26 ஆண்டுகள் கடந்துவிட்டது. மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுயநலம் என்பது துளியும் இருக்காது. எதிர்பார்ப்பே இல்லாத அன்பிற்கு உரியவர்கள்.

நமக்கு தலைவலி, காய்ச்சல் வந்தால் மற்றவர்களிடம் சொல்ல முடியும். ஆனால் இவர்களுக்கு வெளிப்படுத்தத் தெரியாது. அப்போது ரொம்பவும் சோர்வுற்று காணப்படுவார்கள். நாமாக அவர்களிடம் சென்று பேச வேண்டும். அவர்கள் நிலையை அறிய முற்பட வேண்டும். அவர்களின் தேவையை காதுகொடுத்துக் கேட்க வேண்டும்’’ என பேசிக்கொண்டிருந்தபோதே, தன்னை நோக்கி வந்த ஒரு மனநலப் பிணியாளரை வலது கரத்தை உயர்த்தி ‘ஹை ஃபை’ செய்கிறார் சாந்தி. தனது மொபைலில் அவரை போட்டோ எடுத்து அவரிடம் காட்டி சிரிக்க வைக்கிறார்.

மீண்டும் நம்மிடம் பேசத் துவங்கியவர், ‘‘இந்தம்மா புன்னகை அரசி. எப்பவும் ஒரே சிரிப்புதான். போட்டோ எடுத்தால் உடனே காட்டிடனும்’’ என்றவர், இடையில் குறுக்கிட்டு கைபேசியைக் கேட்கும் மனநலம் பிணியாளர் ஒருவரிடம் தன் கைபேசியினைக் கொடுத்து மொபைலில் பேசவைக்கிறார். பேசி முடித்தவரிடம், ‘என்னடா பட்டு வீட்டுக்கு பேசிட்டியா? காஃபி குடிச்சியா? சாப்பிட்டியா? சரிடா செல்லம் நான் பேசிட்டு வர்ரேன் இரு’ என்றவர், ‘‘இங்கு அன்புதான் ரொம்ப முக்கியம். அன்பை விதைத்தால் அவர்கள் அமைதியாவார்கள்.

நாம் சொல்வதைக் கேட்பார்கள். அவர்கள் மீது நாம் கவனத்தை எப்போதும் வைக்க வேண்டும். அவர்கள் செய்யும் வேலைகளை நன்றாக இருக்கு எனச் சொல்லி பாராட்டு தெரிவிக்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒரு பழக்கம் இருக்கும். அதை கவனித்து அவர்களிடம் அன்பாக இரண்டு வார்த்தையினை பேசினாலே, நம் சொல்லுக்கு கட்டுப்பட்டு நிற்பார்கள். இது ரொம்ப சின்ன விசயம்தான். அதுபோல் அவர்களின் எதிர்பார்ப்பும் சின்னதுதான். அவர்கள் நினைக்கும்போதே, கேட்கும்போதே செய்துவிட்டால் அமைதியாய் கடந்துவிடுவார்கள்.

கடந்த ஆண்டு எங்களுடைய காப்பக பெண் மனநலப் பிணியாளர்கள் தயாரித்த கைவினைப் பொருட்களை எல்லாம் காதியில் அனுமதி பெற்று, கடைபோட்டு 70 ஆயிரத்திற்கு விற்பனை செய்தோம். இந்த ஆண்டும் கடைபோட முடிவு செய்து குறளகத்தில் அனுமதி கேட்டுள்ளோம். விற்பனையில் வரும் வருமானத்தை ஊக்கத் தொகையாக அவர்களுக்கே திருப்பித் தருகிறோம். பேக்கரி பயிற்சி மூலமாக பிரட், பிஸ்கட், குக்கீஸ், கேக், பஃப்ஸ் தயாரிப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. வெளியில் இருந்தும் எங்களுக்கு ஆர்டர்கள் வருகின்றன. பேக்கரி தயாரிப்பில் ஈடுபடும் மனநலப் பிணியாளர்களுக்கு 300 முதல் 400 வரை ஊக்கத் தொகையாகத் தருகிறோம்.

சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளும் மனநிலை இல்லாதவர்களால்தான் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு நிரந்தரமாகத் தங்கி விடுகின்றனர். இவர்களை திரும்பவும் வீட்டிற்கு அழைத்துச் செல்வதைப் பற்றி உறவினர்கள் யோசிப்பதே இல்லை. சிலர் தவறான முகவரி,
உபயோகத்தில் இல்லாத கைபேசி எண்களை கொடுத்துச் செல்கிறார்கள்.

மனநலம் சரியாகி வீட்டுக்குபோக நினைப்பவர்களை எங்களால் குடும்பத்தினரோடு சேர்த்துவைக்க முடியாத நிலையே இங்கு நிதர்சனம். மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் கொண்டுவந்து விடுபவர்கள், பூரண நலம் பெற்ற பிறகும் ஏன் அவர்களை அழைத்துச் செல்வதில்லை’’ என்ற கேள்வியோடு நமக்கு விடைகொடுத்தார்.

குழந்தை மாதிரி நடந்து கொள்பவர்களிடமும், அடம் பிடிப்பவர்களிடமும் அன்பாகப் பேசி, சாப்பிட வைத்து, மருந்து எடுக்க வைத்து, உடைமாற்றச் செய்து, குளிக்க வைத்து, தொழில் கற்றுக்கொடுத்து என ஒவ்வொரு மனநல பிறழ்வு பிணியாளர்களோடும் ஐக்கியப்பட்டு, அவர்கள் விருப்பம் அறிந்து பணியாற்றும், தன்னலமற்ற மருத்துவர்கள், செவிலியர்கள். பயிற்சியாளர்களின் பணியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. சேவை மனப்பான்மை உள்ள இதயங்களால் மட்டுமே இதை அர்ப்பணிப்பு உணர்வோடு செய்ய முடியும்.

ஒருவர் மனநலப் பிரச்னையிலிருந்து மீளும்போது அவருக்கு ஆதரவு அளிக்கவேண்டிய மிகப்பெரிய பொறுப்பு அவரது குடும்பத்தாருக்கும் சமூகத்திற்கும் உள்ளது. ஒவ்வொரு மனிதரும் தன்னை பிறர் நேசிக்கவேண்டும், மதிக்கவேண்டும் என்றுதானே விரும்புகிறார்கள். மனநலம் பாதிப்படைந்த ஒருவர் அதிலிருந்து மீண்டு, அன்பிற்காகவும், அரவணைப்புக்காகவும் ஏங்கும்போது, அவர்களுக்கு உணர்வுப்பூர்வமான ஆறுதல் கிடைப்பது எத்தனை முக்கியம்.

சக மனிதர்களை மனிதர்களாகப் பார்க்காத நிலையே இங்கு நிதர்சனம். இந்த உலகம் இயங்குவது அன்பெனும் அச்சாணியில். அது இயங்க மறுக்கும்போது மனிதர்களை நாம் இழக்கிறோம். நம்மைச் சுற்றியும், நமக்கு அருகாமையிலும் இருப்பவரிடத்தில் அன்பைக் காட்டாமல் அவர்களது பிரச்சனையை உணராமல் இயல்பாய் கடந்து போகிறோம். மனிதன் தன் நிலை மறந்து.. தடம் மாறி.. நான்கு சுவற்றுக்குள் அடைத்து வைக்கும் நிலை வரும்போது.. அவனை அன்பு செய்யவும்.. பார்க்கவும்.. அவன் இருக்கும் இடத்தை அறியவும்..

எத்தனை பேர் முயற்சிக்கிறோம்..? கை நழுவிய நிலையில் அவர்கள் தங்கள் இரு கரத்தை நம்மை நோக்கி நீட்டும்போது, அவர்களைக் கண்டும் காணாமல் நாம் எதை நோக்கி நகர்கிறோம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நரம்புகளை பலப்படுத்தும் வன்னி இலை!! (மருத்துவம்)
Next post ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஒரு வெற்றிப் பெண் இருக்கிறாள்!! (மகளிர் பக்கம்)