ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஒரு வெற்றிப் பெண் இருக்கிறாள்!! (மகளிர் பக்கம்)

Read Time:9 Minute, 31 Second

“விளையாட்டில் கூட நான் ஃபர்ஸ்ட் வரணும்னு ஆசைப்படுவேன். பள்ளி, கல்லூரின்னு பல இடங்கள்லயும் நான் முதலிடத்தைப் பிடிக்கிறதுக்கும் அந்த ஆசைதான் என்னை விடாமல் துரத்தியது. அப்பா மின்வாரியத்துல பொறியாளர், அம்மா ஆசிரியர். என்னோட அக்காவும் டீச்சர். நானும் டீச்சர் ஆகணும்னு அப்பா ஆசைப்பட்டார். எதையாவது சாதிக்கணும், எனக்குன்னு அடையாளம் வேணும்ன்ற தேடல் மனசுக்குள்ள எப்பவும் இருந்தது.

திருமணத்துக்கு அப்புறம் பெண்ணோட வாழற இடம் மாறுது. அவளே பழைய மனுஷியா இருக்கிறதில்ல. தாயா உருமாறுறா. மனைவின்ற பொசிஷனும் தாய்மைக்கு இணையானதே. கணவர் கனரா வங்கில மேலாளர். ரெண்டு பெண் குழந்தைகள். எங்களோட அன்புக் கூடு பெரிதானது. நானோ டெரகோட்டா ஜூவல்லரி மேக்கிங் ஸ்பெஷலிஸ்ட்” என்று தன்னை அழகாய் அறிமுகம் செய்து கொண்ட கவியரசி, சேலம் ஓமலூரைச் சேர்ந்தவர். பின்னணிப் பாடகிகள் மஹதி, சுஜாதா ஆகியோருக்கு டெரகோட்டா ஜூவல்லரிகளைக் கொடுத்து அசத்தியுள்ளார்.

சீரியல் நாயகிகள் சிலர் கவியரசியின் கஸ்டமர்கள். தனது வாட்ஸ் ஆப் க்ரூப் வழியாக வெளி நாடுகளுக்கும் டெரகோட்டா ஜூவல்லரிகளை விற்பனை செய்கிறார். டெரகோட்டா ஜூவல்லரியில் தான் ஸ்பெஷலிஸ்ட் ஆனது எப்படி என நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் கவியரசி, “எந்த அவுட் புட் போட்டாலும் வித்தியாசமான ஜூவல்லரி அணிவது தான் என்னோட விருப்பம்.

அதுக்காக நேரம் கிடைக்கும் போது ஆன் லைனில் தேடுவேன். அப்படித்தான் டெரகோட்டா ஜூவல்லரி பற்றியும் தெரிய வந்தது. என்னோட நட்பு வட்டாரங்களில் டெரகோட்டா ஜூவல்லரி விற்பனை, பயிற்சி வகுப்பும் நடந்தது. டெரகோட்டா ஜூவல்லரி பாரம்பரியமானது. ஆனா அதை மார்டன் டிரெண்டுக்கு ஏற்ற மாதிரி கஸ்டமைஸ்டா பண்ணா நல்லா இருக்குமேன்னு யோசிச்சேன்.

டெரகோட்டா ஜூவல்லரி களி மண்ல உருவாக்குற நகைகள்தான். ஜூவல்லரி பண்றதுக்கு ஸ்பெஷலா புராசெஸ் செய்து சுத்தமான களி மண் தான் அதற்கான மோல்ட். அந்த களிமண் மற்றும் ஹேண்ட் மேட் டூல்ஸ், பெயிண்டிங்னு நானே களத்துல இறங்கினேன். ஒரு செட் டெரகோட்டா ஜூவல்லரி ரெடி பண்ண குறைந்தது 5 நாட்களாகும். ஜூவல்லரி டிசைன் மோல்ட்ல உருவாக்கணும், அதை பத்திரமா உலற வைக்கணும், டிசைன்ஸ் உடைஞ்சிடாம தீயில் சுட்டு எடுக்கணும். பெயிண்டிங்ல தான் ஒரு டெரகோட்டா ஜூவல்லரி முழுமை அடையும். மோல்ட்ல பண்ணின டிசைனை பெயிண்ட் பண்ணும் போது ஸ்பெஷலா காட்டுற மாதிரி கலர்ஸ் கொடுக்கணும்.

ஒரு டெரகோட்டா ஜூவல்லரி அழகா வர்றது சாதாரண விஷயம் கிடையாது. மனதை முழுமையா அர்ப்பணிச்சா மட்டும் தான் ஜூவல்லரியும் அழகா இருக்கும். சின்னதா தப்புப் பண்ணினாலும் மொத்த அழகும் கெட்டுப் போகும். டெரகோட்டா ஜூவல்லரில ஒவ்வொரு இம்ப்ரஷனும் அவ்வளவு முக்கியம். எம்போஷிங், ஃபினிஷிங் ரெண்டும் நுணுக்கமா செய்ய வேண்டியிருக்கும். அதனால ஜூவல்லரி வொர்க் பண்ணும் போது வேற எந்த டென்ஷனும் மனசுல ஓடக் கூடாது. நான் இதுல மூழ்கிட்டா உலகத்தையே மறந்துடுவேன். ஜூவல்லரி மோல்டிங்ல, பெயிண்டிங்ல புதுசா என்ன பண்ணலாம்னு முயற்சி பண்ணுவேன்.

என்னோட மற்ற வேலைகளை முடிச்சிட்டு குழந்தைகள் தூங்கும் நேரம், எந்தத் தொந்தரவும் இல்லாத நேரமாப் பார்த்துதான் ஜூவல்லரிக்கான வேலைகள் செய்வேன். ஒவ்வொரு முறையும் மணிக்கணக்குல மெனக்கெட்டாத்தான் நல்ல ஜூவல்லரிய உருவாக்க முடியும்” என்கிறார் கவியரசி.
கவியரசி, டெரகோட்டா ஜூவல்லரி செய்வதில் வித்தியாசமான முயற்சிகள் செய்துள்ளார்.

காட்டன், சில்க், வொர்க் சாரீஸ், ஜீன்ஸ் என எந்த உடைக்கும் ஏற்ப கஸ்டமைஸ்டாகப் புதுமைகள் செய்துள்ளார். கஸ்டமர்கள் அவர்களது உடையைப் போட்டோ எடுத்து அனுப்பினால் அதற்கு ஏற்ற காம்பினேஷனில் டெரகோட்டா ஜூவல்லரிகளை வடிவமைத்துக் கொடுக்கிறார். டெரகோட்டாவில் செய்யக் கடினமான டெம்பிள் ஜூவல்லரி டிசைன்களையும் செய்து கொடுத்துள்ளார்.

எல்லைகள் கடந்தும் தனது கலை நயத்தால் கஸ்டமர்களை ஈர்த்துள்ளார். பெங்களூர், ஆந்திரா, கனடா, ஆஸ்திரேலியா என இந்தியஅளவிலும், உலகளவிலும் இவரது விற்பனை வட்டம் விரிகிறது. ஹோல்சேல், ரீட்டெயில் என இரண்டு விதமாகவும் டெரகோட்டா ஜூவல்லரி விற்பனை செய்கிறார். மாதம் அதிகபட்சமாக ஐம்பதாயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கிறார்.

பாடகிகளான மஹதி மற்றும் சுஜாதாவுக்கு இவர் காம்ப்ளிமெண்டாகக் கொடுத்த டெரகோட்டா ஜூவல்லரி பிடித்துப் போக இப்போது சின்னத்திரை பிரபலங்களும் இவரது கஸ்டமர்கள்.

இதற்கெல்லாம் காரணம் என்ன?

“ஸ்கூல் லைப்ல கஷ்டப்படற மாணவர்கள் லைஃப்ல சாதிச்சுடறாங்க. ஆனா எப்பவும் ஃபர்ஸ்ட் வர்ற மாணவர்கள் வாழ்க்கைல நிறைய சிரமங்கள சந்திக்கிறாங்க. நிறையக் கனவுகளோட முதலிடம் பிடித்த என்னால திருமணத்துக்குப் பின்னால இல்லத்தரசின்ற அடையாளத்தோட மட்டும் இருந்திட முடியல. நான் யார், என்னோட ஸ்பெஷாலிட்டி என்னன்னு என் மனம் என்கிட்ட நச்சரித்தது. எதைச் செய்தாலும் நான் தான் அதுல பெஸ்ட்னு பேர் வாங்கணும். அதுக்காக எவ்வளவு கஷ்டப்படவும் நான் தயங்கினதில்ல. டெரகோட்டா ஜூவல்லரி செய்ய ஆரம்பிச்ச பின்னால அதுலயும் பெஸ்ட் வேணும்னு தேடினேன். எல்லாரும் செய்ற மாடல் பண்றது என் வேலையில்லைன்னு முடிவு பண்ணினேன்.

டிரெடிஷனல் டிரஸ்ல கூட மார்டனாத் தெரியத்தான் இன்றைய பெண்கள் விரும்புறாங்க. அது போன்ற ஃபியூஷன்கள டெரகோட்டா ஜூவல்லரில செய்து பார்த்தேன். நான் யாரையும் வாங்கச் சொல்லி வற்புறுத்துறதில்ல. ஆரம்பத்துல யூ டியூப்ல அப்லோட் பண்ணினேன். இப்போ kayelscreations கயல்கிரியேஷன்ஸ்ன்ற ஃபேஸ்புக் பக்கத்துல என்னோட புது டிசைன் ஜூவல்லரிகள் அப்லோட் பண்றேன். அதன் மூலமா வர்ற ஆர்டர்ஸ் தான் என்னோட பிசினஸ் இந்தளவுக்கு அதிகமாகக் காரணம்” என்கிறார் கவியரசி.

கவியரசி இப்போது கான்பிடன்ட் மனுஷி. இவரது புது முயற்சிகளுக்கு கணவரின் ஒத்துழைப்பும் இருப்பதால் உயர உயரப் பறக்கிறார். ஆர்வமும், வருமானத்துக்கான தேவையும் உள்ள பெண்களுக்கு டெரகோட்டா ஜூவல்லரி செய்யக் கற்றுக் கொடுக்க ஆசைப்படுகிறார். இதற்கான முயற்சிகளிலும் உள்ளார். ஒவ்வொரு பெண்ணும் அவளுக்குள்ள இருக்கும் வெற்றிப் பெண்ணைக் கண்டுபிடிக்கணும். அவளை சிகரம் ஏற்றக் கடுமையா உழைக்கணும். பெண்ணோட வாழ்க்கை அர்த்தமுள்ளதாவும் கொண்டாட்டமாவும் மாறும் என்பதைக் கவியரசி மெய்ப்பித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தடம் மாறும் வாழ்க்கை!! (மகளிர் பக்கம்)
Next post சந்திரயான்-2 நடந்தது என்ன? (வீடியோ)