By 10 September 2020 0 Comments

மண்வாசம் வீசும் ஓவியங்கள்!! (மருத்துவம்)

“வீட்டில் உள்ள உடைந்து போன மற்றும் பயன்படாத பழைய பொருட்களை கொண்டு தான் என் ஓவியங்களுக்கு ஒரு உருவம் தருகிறேன். முள் கரண்டி, பாத்திரம் துலக்கும் நார், ஸ்பூன், தோடு, உடைந்த தக்காளி கூடை, குழாய் போன்ற பொருட்களைத்தான் அதிகம் பயன்படுத்துகிறேன்’’ என்கிறார் கயல்விழி. மானாமதுரையில் பிறந்தவர் என்றாலும், வளர்ந்தது படிச்சது பாண்டிச்சேரியில். இப்போது திருமணமாகி இரண்டு
குழந்தைகளுடன் பெங்களூரில் செட்டிலாகிவிட்டார்.

“பள்ளியில் படிக்கும் காலத்தில் விடுமுறை விட்டால் கொண்டாட்டமா தான் இருக்கும். காரணம் அப்போது தான் பாட்டி, மாமா, சித்தி வீடுகளுக்கு போக முடியும். எனக்கும் அப்படித்தான். விடுமுறை விட்டதும், பாட்டி வீடு, மாமா வீடுன்னு உறவினர்கள் வீட்டிற்கு செல்வது வழக்கம்.நகர வாழ்க்கையில் இருந்து அந்த சில நாட்கள் கிராமத்தில் வசிக்கும் போது, ரொம்பவே மனநிறைவா இருக்கும். நான் ஆனந்தமாக செலவிட்ட நாட்கள் இன்றும் என் மனதில் நிலையாக உள்ளது. அந்த பசுமையான நினைவுகள் தான் என் ஓவியங்களுக்கு இன்றும் உயிர் கொடுத்து வருகிறது.

எனக்கு எப்போதும் ஓவியம் மேல் தனி ஈடுபாடு உண்டு. கிராமத்து வாழ்வியல் சம்மந்தமான ஓவியம் வரைவதில் கல்லூரியில் படிக்கும் போதே ஆர்வம் ஏற்பட்டது. சாதாரணமா வரைவேன். கிராமத்து வாழ்வியல் குறித்த படங்களை கல்லூரியில் படிக்கும் போது வரைய ஆரம்பித்தேன்.

எங்கள் கிராமத்துக்கு பஸ் வழியே செல்லும் போது சில சமயம் என் ஓவியத்துக்கான கரு கிடைக்கும். பயணம் செய்யும் போது அதை அப்படியே கூர்ந்து கவனித்து, மனதில் பதிவு செய்திடுவேன். வீடு வந்ததும் முதல் வேலையாக ஓவியம் வரைய ஆரம்பிச்சிடுவேன்.

என் ஓவியங்கள் பெரும்பாலும் நம் பாரம்பரிய கிராமிய வாழ்வுமுறையையும், அங்கு வாழும் பெண்கள் சிறுவர்களை மையமாக வைத்துதான் இருக்கும். என் மனதிற்கு பிடித்த காட்சிகள் எல்லாமே கிராமங்களும் கிராமிய வாழ்வியலையும் சுற்றித்தான் வரும். திருவிழா நேரங்களில் தவறாமல் கிராமம் சென்று, அமைதியாக வேடிக்கை பார்ப்பேன். பிடித்த காட்சிகளை புகைப்படம் எடுத்துக்கொண்டு, அந்த காட்சியின் சாராம்சத்தை மட்டும் வைத்து, என்னுடைய கற்பனைக்கு பொருந்தும்படி ஓவியத்தை மாற்றியமைத்துக் கொள்வேன்.

அவர் ஓவியங்களில் இருக்கும் பாரம்பரிய விளையாட்டுகள் பற்றி கேட்ட போது, “இப்போது நகரத்தின் குழந்தைகள் வீடியோ கேம்ஸ் அல்லது மால்களில் இருக்கும் விளையாட்டு மையங்களில் காசு கொடுத்து பைக்கில் அமர்ந்து, கம்ப்யூட்டர் திரையுடன் போட்டிப் போட்டு கொண்டு விளையாடுகின்றனர்.

ஆனால் கிராமப் புறங்களில் இன்றும் நொண்டி, பாண்டி, கபடியில் தொடங்கி, நொங்கு வண்டி, டயர் வண்டி இழுத்தல், ஸ்கிப்பிங்… என கிடைக்கும் பொருட்களை தங்கள் விளையாட்டு பொருளாக மாற்றி, ஊரிலுள்ள அனைத்து சிறுவர், சிறுமிகளும் ஒன்றுகூடி சந்தோஷமாக விளையாடுவார்கள் மாட்டுச் சாணம் பூசி மொழுவிய சுவர் வீடு.

அந்த வீட்டின் வாசலில் இரண்டு சிறுமிகள் நொண்டி விளையாடுகின்றனர், சிறுவர்கள் தென்னங்கீற்றில் அமர்ந்து வண்டி இழுத்து விளையாடுகின்றனர். இதெல்லாம் நாம் குழந்தைகளாக இருந்த போது விளையாடி மகிழ்ந்த தருணங்கள். அந்த அழகான நினைவுகளைத்தான் என் ஓவியங்களில் வருணிக்க விரும்பினேன். அழிந்து வரும் விளையாட்டின் மீது அதிக கவனம் செலுத்துகிறேன். அதை எப்படியாவது ஏதாவது ஒரு வகையில் மக்களுக்கு நினைவூட்டி கொண்டிருக்க வேண்டும் என்பது தான் என் ஆசை’’ என்றார்.

அவர் வரைந்ததிலேயே பிடித்த ஓவியம் பற்றிக் கேட்ட போது, “ஒரு ஓவியம் வரைந்து முடித்து, அடுத்த ஓவியம் வரையும் போதே, பழைய ஓவியங்கள் எல்லாம் சலித்துவிடும். அதில் ஏதோ குறை இருப்பது போல், அல்லது ஏதோ சரியில்லை என்றுதான் தோன்றும். இருந்தாலும், மறக்க முடியாத ஓவியம் என்றால், அன்று எங்கள் ஊரில் திருவிழா. சேவல் சண்டை நடக்கும் இடத்தில் பயங்கர கூட்டம்.

சேவல்கள் சண்டைக்கு தயாராகி கொக்கரித்துக் கொண்டிருக்க, உரிமையாளர் சேவல்களுக்கு தண்ணீர் கொடுத்து, வெற்றி பெறுவதற்கான டிப்ஸை ரகசியமாக சேவலுக்கும் அவருக்குமே உரிய மொழியில் பேசிக்கொண்டிருந்தார். சேவலுக்கும் மனிதனுக்குமான பரிமாற்றம் என்னை ஈர்த்தது. உடனே அதை ஓவியமாக தீட்டினேன். அதுதான் என் மனதில் என்றும் பசுமையாக இருக்கும் ஓவியம்” என்றார்.

அவர் உபயோகிக்கும் நிறங்கள் பற்றி கேட்ட போது, “என் ஓவியங்களை வாங்கி சுவரில் வைத்ததும், அது மகிழ்ச்சியான பழைய நினைவுகளை தந்து, சந்தோஷமான சூழ்நிலையை உருவாக்க வேண்டும். அதனால் தான் நீளம், மஞ்சள், பச்சை போன்ற மனதை லேசாக் கும் நிறங்களை அதிகம் பயன்படுத்துகிறேன். கேமராவில் எப்படி குறிப்பிட்ட பொருளை மட்டும் ஃபோகஸ் செய்கிறோமோ அதே போல் என் ஓவியங்களில் குறிப்பிட்ட பொருளின் மேல் மட்டுமே கவனம் செலுத்தி, பின்னணிச்சூழலை தெளிவாக விளக்காமல் அதை பார்ப்பவரின் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன்.

அதை அவரவர் விருப்பம் போல் கற்பனை செய்து கொள்ளலாம்” என்ற கயல்விழி, இம்மாதம் 26ம் தேதி பாண்டிச்சேரியில் தன் ஓவியங்களுக்கான கண்காட்சியினை அமைக்க உள்ளார். இதனை தொடர்ந்து கேரளா மற்றும் வட இந்தியாவிலும் நிகழ்த்த இருப்பதால் அதற்காக தயாராகிக் கொண்டிருக்கிறார் கயல்விழி.Post a Comment

Protected by WP Anti Spam