By 10 September 2020 0 Comments

வாழ்வென்பது பெருங்கனவு!! (மகளிர் பக்கம்)

‘நாம் தூங்கினாலும் நமக்குள் தூங்காமல் விழித்துக்கொண்டிருக்கும் கனவுதான் நம்முடைய லட்சியக் கனவு. இந்த உலகத்தில் பிறந்த அனைவருமே ஏதோ ஒரு லட்சியத்தோடுதான் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறோம். அது நாம் பார்த்த, உள்வாங்கிய, நம்மை பாதித்த சம்பவமாக… என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அப்படித்தான் என்னை பாதித்த ஒரு சம்பவத்தையே நினைத்துக் கொண்டிருந்தாலோ என்னவோ அதற்குண்டான தீர்வை ஏற்படுத்தும் கல்வி முறையை தேர்ந்தெடுத்து எனது கனவுகளை நனவாக்கிக் கொண்டிருக்கிறேன்’’ என்கிறார் கற்றல் குறைபாடு மற்றும் சிறப்பு குழந்தைகளுக்கு பயிற்சி அளித்து வரும் ஷோபா அசோக்குமார்.

‘‘அது ஒரு திகில் கனாக்காலம் என்றே சொல்லலாம், 1992ஆம் ஆண்டுகளில் லிபியாவில் எனது சிறு வயது ஆரம்பக்கல்வி. உற்றார், உறவினர்கள் என யாரும் இல்லாமல் அங்குள்ள மாணவர்களைப் பார்த்தாலே உள்ளுக்குள் ஒருவித பயம். ஏனெனில், அயல்நாட்டு பிள்ளைகளை பார்த்தால் அவர்கள் அடித்துத் துன்புறுத்துவார்கள் என்கிற ஒருவித நடவடிக்கை என்றுகூட சொல்லலாம். பெரியவர்களை அழைத்துக் கொண்டுதான் எங்கும் செல்வோம். 6வது வரை அங்குதான் படித்தேன். கல்பாக்கம் பவர் பிளான்டில் எனது தந்தை பாலசுந்தரம் வேலை பார்த்ததால் நான் எனது தாயார் சாந்தி மற்றும் தம்பி சதீஷ் ஆகியோருடன் சொந்த ஊரான காஞ்சிபுரத்திலிருந்து வசித்து வந்தோம்.

அங்கிருந்துதான் 1983களில் குடும்பத்தோடு எங்களை லிபியாவுக்கு தந்தை பாலசுந்தரம் அழைத்துச் சென்றிருந்தார். 1992 வாக்கில் அங்கு போர் ஏற்படும் சூழல் நிலவியது. குழந்தைகளையும், பெண்களையும் அவரவர் சொந்த நாடுகளுக்கு அழைத்துச் சென்றுவிடுங்கள் என்ற உத்தரவால், எனது தாயார், தம்பி ஆகியோருடன் லிபியாவின் தலைநகர் திரிபோலியிலிருந்து கப்பல் மூலம் மால்டா, ஏதென்ஸ் வந்தோம். உயிர் பிழைத்தால் போதும் என்று வந்த அந்த நாட்கள் இன்றும் என் கண்களில் நிழலாடிக் கொண்டிருக்கிறது. அங்கிருந்து துபாய், பம்பாய் என ஊர்கள் கடந்து சென்னைக்கு வந்து சேர்ந்த பிறகே தான் எங்களுக்கு உயிர் வந்தது.

எனது தந்தையும் லிபியாவிலிருந்து குவைத் சென்று அங்கு சிறிது காலம் வேலை பார்த்துவிட்டு சொந்த நாட்டில் வேலை கிடைக்காமலா போகும் என இந்தியா திரும்பி வந்துவிட்டார். சென்னை வந்ததும் எனது படிப்பைத் தொடங்கினேன். மெட்ராஸ் யுனிவர்சிட்டியில் பி.ஏ. இங்கிலீஷ் லிட்டரேச்சர் முடித்தேன். 1997ஆம் ஆண்டில் அசோக்குமார் என்பவருடன் திருமணம். எங்களின் அன்பிற்கு அடையாளமாக ரகுராம், கிருஷ்ணா என இரண்டு அழகிய ஆண்பிள்ளைகள். அன்பால் அழகாகிக் கொண்டிருக்கிறது எங்கள் வீடு.

2002 ஆம் ஆண்டில் ஒருநாள் திடீர் என்று எனது சொந்த ஊரான காஞ்சிபுரத்திலிருந்து என்னுடைய தோழி போன் செய்து ஓர் அதிர்ச்சியான செய்தியைச் சொன்னார். அந்தச் செய்தி இடி போன்று பயங்கரமான சத்தத்துடன் மண்டையில் இறங்கியது. “உன்னோட அப்பா வீட்டின் அறையில் இறந்து கிடக்கிறார். எப்படியும் இறந்து இரண்டு நாள் இருக்கும்னு நினைக்கிறேன்…’’ என்பதுதான் அந்த செய்தி. என்னால் அதை நம்ப முடியவில்லை, சிரித்துக் கொண்டே “ என்னடி தமாஷ் பண்றியா?’’ என்று கேட்டேன். கொஞ்ச நேரம் கழிச்சு தோழியோட வார்த்தையில் இருந்த பதற்றம் என்னை நிஜ உலகத்திற்கு கொண்டு வந்தது.

அப்பா ரெண்டு நாளைக்கு முன்னாடி எனக்கு தொலைபேசியில் பேசினார். “எனக்கு ரொம்ப பயமா இருக்கு. நான் சயனைட் சாப்பிட்டு தற்கொலை பண்ணிக்கலாம்னு இருக்கேன்” என்று சொன்னார். அப்பா நான் கடலூரில் இருக்கிறேன். சென்னைக்கு வந்துட்டு உங்களுக்கு போன் பண்ணுகிறேன். எதுவாக இருந்தாலும் தைரியமாக இருங்கள் என்று சொன்னேன். ஆனால் அப்பா நிஜமாகவே தற்கொலை பண்ணிக்க போகிறார் என்பது எனக்கு மனதில் தோன்றவில்லை. அவர் பயங்கரமான மனஅழுத்தத்தில் இருந்திருக்கிறார். அந்த சமயத்தில் அதற்கான விழிப்புணர்ச்சியும் இல்லை. மன அழுத்தம் என்றால் என்ன என்று கூட தெரியாது.

அப்பாவைக் காப்பாற்ற முடியவில்லையே என்ற குற்ற உணர்ச்சி எனக்கு நாளுக்குநாள் மனவருத்தத்தை அதிகப்படுத்தியது. எங்க அப்பா மாதிரி இந்த உலகத்தை விட்டு யாரும் போகக் கூடாது என்று அன்றைக்கு முடிவு பண்ணினேன். என்னுடைய பள்ளி தோழியான மனநல ஆலோசகர் வந்தனாவிடம் மன அழுத்தம் என்றால் என்ன என்பதுப் பற்றி கேட்டு தெளிவாகத் தெரிந்து கொண்டேன். ஒருத்தர் தற்கொலை பண்ணி இறந்து போய்விட்டால், அவரை சார்ந்த அனைவருமே பாதிக்கப்படுகிறார்கள். இந்த கஷ்டம் யாருக்கும் வரக்கூடாது என்று நினைத்தேன்.

மன அழுத்தத்திற்கான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த மனநல ஆலோசகர் வந்தனா “V – COPE” என்கிற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை (NGO) உருவாக்கினார். இதில் நானும், மருத்துவர் ஸ்ரீனிவாசனும் உறுப்பினராக சேர்ந்து பணியாற்றுகிறோம். எங்கள் அமைப்பின் முக்கிய நோக்கமே மன அழுத்தத்திற்கான விழிப்புணர்வு ஏற்படுத்துவதே ஆகும்.. இதைப் பற்றி தெரிந்து கொண்டால் தான் சிகிச்சை பெற மக்கள் முன்வருவார்கள். இந்த மனஅழுத்தம் குறித்து எல்லா தளங்களின் வாயிலாகவும் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி வருகிறோம்.

மனநல ஆலோசகர் வந்தனாவின் ஆலோசனைப்படி Madras Dyslexia Association மூலமாக சிறப்பு கல்வியாளர் கோர்ஸ் பயிற்சி எடுத்தேன். கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கும் நிறைய கனவு இருக்கும். இவர்களுக்கு படிப்பில் மட்டுமே பிரச்னை இருப்பதால் அவர்களால் தனது கனவினை எட்ட முடியாமல் தவிக்கிறார்கள். முறையான மற்றும் சீரான பயிற்சி அளிப்பதினால் அவர்கள் தன்னுடைய கனவை நிஜமாக்க முடியும். எனது சிறப்பு குழந்தைகளுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் நான் சொல்லிக் கொள்வது ஒன்றே ஒன்றுதான் NEVER EVER GIVE UP.

கற்றல் குறைபாட்டால் வாழ்க்கையைத் தொலைத்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். என்னுடைய பக்கத்து வீட்டு பையன் சிவாவிற்கு கற்றல் குறைபாடு என்று ஒன்று இருக்கிறது என்பதே தெரியவில்லை. படிப்பு சரியாக வரவில்லை, காலேஜ் படிக்க முடியவில்லை, வேலை கிடைக்கவில்லை, அதனால் அவன் மன அழுத்தத்திற்கு உள்ளாகி, போதை மருந்துக்கு அடிமையானான். என் அப்பாவின் மரணம் மற்றும் கற்றல் குறைபாட்டால் மன அழுத்தத்தில் தள்ளப்பட்ட என் தம்பியை போன்று பக்கத்து வீட்டுப் பையன் சிவாவும் பாதிக்கப்பட்டான். இந்த இரண்டு சம்பவமும் ஒன்றை மட்டும் எனக்கு உணர்த்தியது,

இவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் நிச்சயமாக அவர்களை இழந்திருக்க மாட்டோம். எனக்கு இன்னொரு கனவும் உள்ளது, அது ஆட்டோகிராப் படத்தில் வருவதுபோல லிபியா சென்று சிறுவயதில் நான் படித்த எனது பள்ளியை பார்க்க வேண்டும். நான் சோர்வடையும் போது, “உன்னால் முடியும்” என்று ஊக்குவிக்கும் எனது தோழிகள் வந்தனா மற்றும் ஷோபா நாகராஜ், எனக்கு எல்லாவிதமான சுதந்திரமும் கொடுத்து எனது லட்சியக் கனவில் பயணித்துக் கொண்டிருப்பதற்கு பக்கபலமாய் இருக்கும் கணவர் அசோக்குமாரும் வாழ்வில் கிடைத்த பெரும்பாக்கியம்’’ என புன்னகையுடன் முடித்தார்.Post a Comment

Protected by WP Anti Spam