வீட்டிலேயே இருந்தால் எங்கள் வாழ்வாதாரம்? (மகளிர் பக்கம்)

Read Time:6 Minute, 6 Second

கொரோனா ஊரடங்கால் தினக்கூலிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வாழ்வாதாரம் இழந்துள்ள நிலையில் வாழ்வாதாரத்திற்காக பல்வேறு மாற்று தொழில்களை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி மதுரை கரும்பாலை அருகேஉள்ள இந்திராநகர் பகுதியை சேர்ந்த 26 வயதுடைய உம்மசல்மா என்ற பெண் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது குழந்தையுடன் தனியாக வசித்துவரும் நிலையில் கொரோனாவிற்கு முன்பாக வீட்டு வேலை செய்து வந்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக வீடுகளில் வேலைக்கு அழைக்காத நிலையில் மூன்று மாதமாக எந்தவித வருமானமின்றி உணவிற்கே வழியின்றி தவித்து வந்துள்ளார்.

‘‘மதுரை கலெக்டர் ஆபீஸ் பின்னாடிதான் வீடு. வீட்டு வேலைக்கு போன இடத்தில், ‘இனி வேலைக்கு வர வேணா, கொரோனா முடிஞ்சதும் வா’னு சொல்லிட்டாங்க. அதனால அங்கிட்டு இங்கிட்டு நானும் கடன் வாங்கி சில காலம் வாழ்க்கையை ஓட்டினேன். ஒரு கட்டத்துக்கப்பறோம் முடியல. யாருகிட்டயும் திரும்பி கடன் கேட்க முடியாத சூழல்.

மூணு வேள சாப்பாடு இரண்டு வேலையானது. அப்பதான், அப்பா செஞ்சிட்டு இருந்த டீ தொழிலை நாம் ஏன் செய்யக் கூடாதுன்னு ஒரு யோசனை வந்துச்சு. அப்பாவோட மொபட்டை எடுத்துட்டு நானும், தங்கச்சியும் டீ விக்க கிளம்பினோம். அம்மா என்னோட மகனை பார்த்துக்கிறேன்னு சொல்லிட்டாங்க. அதனால நான் டீ விற்கலாம்ன்னு முடிவு செய்தேன்.

என் கணவர் தினமும் குடிச்சிட்டு வந்து சண்டை போடுவார். நானும் பொருத்து பார்த்தேன். ஆனால் அவர் திருந்தவே இல்லை. வீட்டு செலவுக்கும் காசு தரமாட்டார். ஒரு கட்டத்தில் என்னால் சமாளிக்க முடியவில்லை. அதனால அப்படிப்பட்ட வாழ்க்கை வேண்டாம்ன்னு என் மகனைக் கூட்டிக் கொண்டு தனியே வந்துட்டேன். இப்ப ஒன்றரை வருஷமா நானும் என் மகனும் தனியாகத்தான் வாழ்ந்து வருகிறோம். என்னுடைய வாழ்வாதாரத்திற்கு வீட்டு வேலைகள் செய்து வந்தேன். அதை வச்சு தான் சமாளிச்சிட்டு இருந்தேன்.

இப்ப கொரோனா வந்ததால வீட்டு வேலைக்கு வர வேண்டாம்ன்னு சொல்லிட்டாங்க. எவ்வளவு தான் கடன் வாங்குறது. ஒரு கட்டத்தில் கடனை திருப்பி தர முடியாத நிலையும் வந்தது. இனிமேல் கடனை நான் திருப்பி தராமல் கடனும் வாங்க முடியாது. மேலும் நானும் சும்மா வீட்டில் இருந்தாலும் என்னுடைய இந்த நிலை மாறாது. அதனால் தான் டீ விற்கலாம்ன்னு முடிவு எடுத்தேன்’’ என்றவர் கலெக்டர் அலுவலகத்தில் தற்போது மொபட்டில் டீ விற்பனை செய்து வருகிறார்.

‘‘கலெக்டர் அலுவலகம் மட்டுமில்லை, எல்லா பகுதிகளுக்கும் விற்பனை செய்கிறேன். ஆரம்பத்தில் பெரிய அளவில் விற்பனை இல்லை. பலர் கொரோனா வந்திடும்ன்னு பயந்து டீ வாங்க மறுத்தாங்க. மேலும் ஊரடங்கும் இருந்து வந்ததால் பிசினஸ் டல்லாகத்தான் இருந்தது. இப்பதான் கொஞ்சம் சூடு பிடிக்க ஆரம்பிச்சு இருக்கு. காலை, மாலை என இரண்டு வேளைக்கு சுமார் 100 டீ விற்பனையாகுது. ஓரளவு செலவினை சமாளிக்க முடியுது. அப்படியும் வீட்டு வாடகை முழுசா தர முடியல. பாதி தான் தரேன்.

என் நிலையை புரிந்துகொண்டு வீட்டு உரிமையாளரும் எனக்கு தொந்தரவு கொடுக்கவில்லை. வெளில போனா கொரோனா வந்துரும்னு சொல்றாங்க. ஆனால், வீட்டிலேயே இருந்தால் எங்களை யார் பார்த்துக்கிறது. சாப்பாட்டுக்கு என்ன செய்றது?” என்ற கேள்வியை முன் வைக்கிறார் உம்மசல்மா. ‘‘கொஞ்சம் படிச்ச பெண்கள் ஏதாவது ஒரு நிறுவனத்தில் மாதச் சம்பளத்திற்கு வேலைக்கு சேர்ந்திடுவார்கள்.

என்னை போல் அதிகம் படிக்காதவர்கள் வீட்டு வேலை தான் செய்ய முடியும். இப்போது இருக்கும் சூழ்நிலையில் அந்த வேலைக்கும் செல்ல முடியாத கட்டாயத்தில் இருக்கிறோம். பல குடும்பங்கள் கொரோனா ஊரடங்கால் வேலை இல்லாமல் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் தவிக்கிறார்கள். அவர்களுக்கு அரசு மானியத்துடன் கூடிய கடனுதவிகளை வழங்கினால், அதன் மூலம் ஒரு தள்ளுவண்டி கடையினை வைத்தாவது பிழைத்துக் கொள்ள முடியும்’’ என்று கோரிக்கையை விடுத்தார் உம்மசல்மா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மக்கள் பணியில் திருநங்கைகள்!! (மகளிர் பக்கம்)
Next post தலைச்சுற்றலுக்கு மருந்தாகும் வன்னி மரம்!! (மருத்துவம்)