மக்கள் பணியில் திருநங்கைகள்!! (மகளிர் பக்கம்)

Read Time:7 Minute, 33 Second

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு ஆயிரக்கணக்கில் அதிகரித்து வரும் நிலையில், நம் சென்னை நகரம் மட்டுமல்லாமல் தமிழகம் முழுதும் பல மாவட்டங்கள் கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறி வருகிறது. இதன் விளைவாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கினால் பலரும் வருமானம் இழந்து, வருங்காலமே கேள்விக்குறியாகி நிற்கின்றனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில் தங்கள் துயரத்தையும் மறந்து மக்களுக்கு உதவ களப்பணியில் இறங்கியுள்ளனர் இந்தியத் திருநங்கை சமுதாயத்தினர்.

வட சென்னையில், திருநங்கைகள் மக்களின் கவனத்தை ஈர்த்து கொரோனா தொற்றை கட்டுப்படுத்த, தெருக்கூத்து போன்ற கலைநிகழ்ச்சிகளை செய்து சுவாரஸ்யமான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். கொரோனா அறிகுறிகள் இருப்பவர்களை சோதனைக்கு அழைத்துச் செல்வது முதல் அவர்களுக்குச் சிகிச்சை குறித்து ஆலோசனைகள் வழங்குவது வரை உடனிருந்து உதவிகள் செய்கின்றனர்.

இதே போல இந்தியாவில் பல இடங்களிலும் திருநங்கை சமூகத்தினர் மக்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இந்த ஊரடங்கு காலத்தில் அதிகம் பாதிக்கப்பட்டதும் இவர்கள் தான். திருநங்கைகள் பெரும்பாலும் தினசரி கூலித் தொழிலாளிகளாகவே இருக்கின்றனர். இந்த லாக்டவுன் இவர்களின் வாழ்வாதாரத்தை பறித்துள்ளது. வேலை இழந்து, வாடகை செலுத்த முடியாமல் வீட்டை விட்டு வெளியேற்றப்படும் அவலங்களும் நடந்துள்ளன.

மத்திய அரசும் திருநங்கை களுக்கென தனியாக சலுகைகள் அறிவிக்கவே இல்லை. இங்கு அடையாள அட்டை, ரேஷன் கார்டு இருப்பவர்களுக்குத்தான் சலுகைகள் அறிவிக்கப்பட்டது. திருநங்கைகள் பலரிடமும் அடையாள அட்டையோ ரேஷன் கார்டோ கிடையாது. இவர்கள் பெரும்பாலும் குடும்பத்திலிருந்து வெளியேறி, இடம்பெயர்ந்து, குழுக்களாகவே வசிக்கின்றனர். இந்த நிலையில் இவர்கள் இந்த அசாதாரணமான சூழ்நிலையிலும் தங்கள் உரிமை களைப் போராடித்தான் பெற வேண்டி இருக்கிறது.

திருநங்கை சமூகத்தின் அழுத்தத்திற்குப்பின், அடையாள அட்டை இல்லாமலேயே சலுகைகள் வழங்க அரசு முன்வந்தது. அதில் கிடைக்கும் பணத்தையும் மளிகைப் பொருட்களைக் கொண்டும், குஜராத்தில் ஒரு குழு, பசியில் தவிக்கும் மக்களுக்கு உணவு அளித்துள்ளனர். குஜராத்தில் பசியில் வாடும் குழந்தையை, தாய் அமைதியாய் இருக்கச் சொல்லி அடிக்கும் காட்சியை பார்த்த திருநங்கை ஒருவருக்கு, அந்த சம்பவத்தைக் கடந்து போக முடியவில்லை. உடனே தன் சமுதாயத்தினரை ஒன்றிணைத்து, பசியில் வாடும் ஆயிரம் குடும்பங்களுக்கு ஒரு வாரம் உணவும், உணவுப் பொருட்களும் வழங்கியிருக்கிறார். 25 திருநங்கைகள் இணைந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து, அதிகாரிகளிடம் முறையான அனுமதியும் பெற்று மக்களுக்கு உதவி செய்துள்ளனர். மேலும், இனி உணவு தட்டுப்பாடு ஏற்பட்டால் தங்கள் அமைப்பைத் தொடர்பு கொள்ளும்படியும் மக்களுக்கு உறுதியளித்துள்ளனர்.

இதற்காக, வாழ்நாள் முழுவதும் உழைத்து சேமித்து வைத்திருந்த தங்க நகைகளை அடைமானம் வைத்துள்ளனர். தங்களின் உணவை எளிமையாக்கிக்கொண்டு, பணத்தை மிச்சம் செய்து, சுமார் ஆயிரம் குடும்பங்களின் பசியை போக்கியுள்ளனர்.திருநங்கைகளுக்கு தங்கம்தான் முக்கிய சேமிப்பு. ‘‘பொதுவாக, வயதானதும் கவனித்துக்கொள்ள அனைவருக்கும் பிள்ளைகள் இருப்பார்கள்.

ஆனால் எங்கள் நிலைமை வேறு. எங்கள் சமுதாயத்தில் பல பேருக்கு குடும்பத்தின் ஆதரவு கிடையாது. நாங்கள் எங்கள் சமூகத்தை மட்டுமே சார்ந்து, தனியாகத்தான் வாழ்க்கையை நகர்த்த வேண்டும். அதனால் கிடைக்கும் வருமானத்தில் தங்க நகைகள் வாங்கி அதை வருங்காலத்திற்காகச் சேமித்து வைத்துக்கொள்வோம். அந்த நகைகள்தான் எங்களை கவனித்துக்கொள்ளும். அதை விட்டுத்தருவது சுலபமாக இல்லாவிட்டாலும், இன்று மக்களின் பசிக்கு முன்னால், எங்கள் எதிர்காலத்திற்கான சேமிப்பு பெரிதாக தெரியவில்லை” எனத் திருநங்கை ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இதே போல, சூரத் மாவட்டத்தில், 150 திருநங்கைகள் ஒன்று சேர்ந்து 1500க்கும் அதிகமான மக்களுக்கு அரிசி, சர்க்கரை, எண்ணைப் போன்ற மளிகைப் பொருட்களை வழங்கியுள்ளனர். நவராத்திரி கொண்டாட்டத்திற்காக சேமித்து வைத்திருந்த பணத்தை பசியில் தவிக்கும் எளிய மக்களுக்கு உதவ முடிவு செய்துள்ளனர். முதலில் 200 பேருக்கு மட்டுமே உணவுப் பொருட்கள் தயாரித்திருந்த இவர்கள், பசி என்று தங்களிடம் வந்த ஆயிரக்கணக்கான மக்களை சந்தித்த போது, தங்கள் சேமிப்பு மொத்தமும் வழங்கி உணவளித்துள்ளனர்.

அரசாங்கம் ஊரடங்கு அறிவிப்பதற்கு முன்னரே, பல ஆண்டுகளாக இந்த சமூகம் திருநங்கைகளைத் தனிமைப்படுத்தியே வைத்திருந்தது. பொழுதுபோக்கு இடங்களிலும், பொது நிகழ்ச்சிகளிலும் ஆயிரம் கண்கள் அவர்களை கேள்விகேட்கும். ஆனால், இப்போது தங்களை ஒதுக்கியே அதே சமூகத்திற்கு உதவ திருநங்கைகள், பல ஆண்டு களாக உழைத்துச் சேமித்து வைத்திருக்கும் பணத்தைத் தன்னலம் பாராமல் வழங்கியுள்ளனர். இந்தியாவில் பல பகுதிகளிலும் அவர்களின் அறப்பணி இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஆயிரக்கணக்கான குடும்பத்திற்கு உதவியாய் இருந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ‌சிகரெ‌ட் புகை‌ப்பதா‌ல் தா‌ம்ப‌த்‌தியத்தில் ‌சி‌க்க‌ல்! (அவ்வப்போது கிளாமர்)
Next post வீட்டிலேயே இருந்தால் எங்கள் வாழ்வாதாரம்? (மகளிர் பக்கம்)