By 15 March 2021 0 Comments

ஐ நெவர் கிரை!! (மகளிர் பக்கம்)

தன் தந்தையின் மரணத்திற்குப் பின் அவர் யாரென புரிந்துகொள்ளும் ஒரு 17 வயது பெண்ணின் தேடல் பயணமே ‘ஐ நெவர் கிரை’. சக தோழியுடன் ஊர் சுற்றிக் கொண்டு, ஆண் நண்பனுடன் ஜாலி சாட், சிகரெட், வாய்ப்புக் கிடைத்தால் மது என சுற்றித் திரியும் 17 வயது ஐ டோன்ட் கேர் பெண் ஓலா. வயதான அம்மா, படுக்கையில் இருந்தே எழுந்திருக்கக் கூட முடியாத மாற்றுத்திறனாளி சகோதரர். அப்பா ஐயர்லாந்தில் குடும்பத்திற்காக உழைத்து பணம் அனுப்ப இங்கே இவர்கள் வாழ்க்கையை ஓட்டுகிறார்கள்.

ஓலாவின் முக்கிய குறிக்கோள் ஒரு கார் வாங்க வேண்டும் என்பதுதான். தன் விருப்பத்தை தந்தையிடம் சொல்ல டிரைவிங் லைசென்ஸ் எடுத்தா… கார் வாங்கித் தருவதாக கூறுகிறார். ‘டிரைவிங் ‘லைசென்ஸ் சோதனையில் மறுபடியும் நான் பெயில்’ என அம்மாவிடம் மீண்டும் பணம் கேட்கும் ஓலாவிற்கு அப்பாவின் கஷ்டமும், அவரின் உழைப்பும் புரியவில்லை. ‘அவர் உழைக்கவில்லை எனில் நீ இங்கே சிகரெட் அடித்து சுற்ற முடியாது’ என கோபம் காட்டுகிறார் அம்மா. பகலில் பள்ளிப் படிப்பு மாலையில் தன் சின்ன பணத் தேவைகளுக்காக பகுதி நேர வேலையாக கார் சர்வீஸ் நிறுவனத்தில் காரை கழுவுவது என ஓலாவின் வாழ்க்கை ஓடுகிறது.

இதற்கிடையில் மொத்தக் குடும்பத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது ஒரு மொபைல் அழைப்பு.வெளிநாட்டில் இருக்கும் தந்தை வேலை செய்யுமிடத்தில் ஏற்பட்ட விபத்தில் மரணம் என்பது தான் அந்தத் தகவல். அம்மாவும், மகளும் செய்வதறியாமல் ஸ்தம்பித்து நிற்கிறார்கள். உடல்நிலை சரியில்லாத மகனை விட்டு விட்டு வருவது கடினம், ‘நீதான் சென்று அப்பாவின் உடலைக் கொண்டு வர வேண்டும். மேலும் சரியான இறப்புச் சான்று, உள்ளிட்ட வேலைகளை முடித்தால் காப்பீட்டுப் பணம் கிடைக்கும்.

அதைக் கொண்டே உன் வாழ்க்கையை பார்த்துக்கொள்ளலாம்’ என்கிறார் ஓலாவின் அம்மா. ஓலா… 17 வயது நிரம்பிய மைனர். ‘‘நான் எப்படி விமானத்தில் செல்ல முடியும், மேலும் என்னால் இதையெல்லாம் சமாளிக்க முடியாது’’ என அம்மாவிடம் போராடுகிறாள். ஆனாலும் வேறு வழியில்லை. செல்ல வேண்டிய கட்டாயம். ஐயர்லாந்தில் இறங்கும் ஓலாவிற்கு நிறைய சவால்கள் வரிசைக் கட்டிக் கொண்டு நிற்கிறது. சின்ன வயதில் குடும்பத்தை போலாந்தில் விட்டு சென்றதால், ஓலாவிற்கு தன் தந்தையைப் பற்றி நல்ல அபிப்பிராயம் இருந்தது இல்லை. அவர் எப்படிப்பட்டவர் என்றுக் கூட தெரியாது.

இன்னும் சொல்லப்போனால், அவரின் அங்க அடையாளங்களை கூட தன் அம்மாவிடம் கேட்டு தெரிந்துகொண்டு மருத்துவமனையில் தன் தந்தையின் உடலை அடையாளம் காண்கிறாள். மேலும் அவர் வேலைப் பார்த்த நிறுவனத்தில் அவர் தன் குடும்பத்திற்காக இன்னொருவரின் வேலை நேரத்தில் வேலை செய்யும் போது தான் இறந்தார் என்று அவர் வேலைப் பார்த்த நிறுவனம் தெரிவிக்கிறது.

அதனால் காப்பீட்டுப் பணமோ அல்லது வேறு எந்த செட்டில்மென்டும் கொடுக்க முடியாது என்கின்றனர். தன் தந்தையின் உடலை போலாந்திற்கு கொண்டு வருவதற்கு ஓலாவிடமும் தேவையான பணம் இல்லை. அப்பா தனக்காக ஏதேனும் சேமித்து வைத்திருக்கிறாரா என்னும் கேள்விகளுடன் ஐயர்லாந்தில் செய்வதறியாமல் தேடும் ஓலாவிற்கு தன் தந்தை இன்னொரு பெண்ணுடன் உறவில் இருந்தது தெரியவர அவளை தேடிப் போகிறாள். முதலாளியின் சீண்டலை பொறுத்துக்கொண்டு ஒரு அழகு நிலையத்தில் தன் அப்பாவின் காதலி சாரா வேலை பார்ப்பதை கண்டறிகிறாள்.

அவளை சந்திக்கும் ஓலா… அழகு கலையை கற்றுக் கொண்டு தனக்கான ஒரு அழகு நிலையத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று நினைக் கிறாள். அழகு நிலையத்தில் சாரா வேலை செய்வது ெதரிய வருகிறது. கடைசியாக தன் அப்பா சாராவுடன் வசித்து வந்ததை தெரிந்து கொண்ட ஓலா, தன் குடும்பத்திற்காக தன் தந்தை பணம் சேமித்து வைத்து இருக்கிறாரா என்று அலசுகிறாள். தான் விரும்பிய கார் வாங்கி தருவதற்காக அவளின் தந்தை பணம் சேர்த்து வைத்திருப்பது தெரிய வருகிறது. மேலும் அவருடன் வேலை பார்த்த சக தொழிலாளர்கள் மற்றும் அவரின் காதலி சாரா மூலம் தன் தந்தையைப் பற்றி தெரிந்து கொள்கிறாள் ஓலா.

தன் தந்தையின் உடலை மீட்டாரா… அவருக்கு செய்ய வேண்டிய காரியங்களை நிறைவாக செய்தாரா… அவரின் காதலி கர்ப்பமாக இருக்கிறார் என்று தெரிந்து அந்த நிலையை எவ்வாறு மேற்கொண்டார் என்பதை நறுக்கென்ற வசனங்கள் மற்றும் காட்சிகளுடன் திரையமைக்கப்பட்டுள்ளது. தன் தந்தையின் ஒரே ஆசை தன்னுடன் காரில் செல்வதுதான் என்பதை உணரும் ஓலா தந்தையின் அஸ்தி வைக்கப்பட்ட காரை ஓட்டிச் செல்லும்போது, எத்தனையோ சவால்களை எதிர்கொண்ட போதும் சிறிதும் கண்ணீர் விடாத ஓலா தன் தந்தையின் அன்பைப் புரிந்துகொள்ளும் தருவாயில் வெடித்து அழுகிறார்.

அசால்ட்டாக சிகரெட்டைப் பிடிப்பது ‘இந்த வயதில் ஏன் புகைப்பழக்கம்?’ எனக் கேட்போருக்கு சளைக்காமல் ‘சரி எந்த வயதில் புகைக்க வேண்டும்?’ என அவர்களிடமே திருப்பிக் கேட்பது. மது பாட்டில் பேருந்துக்குள் அனுமதி இல்லை என்றவுடன் ஒரே மூச்சில் மொத்த பாட்டிலையும் குடித்து முடித்து ‘இப்போ ஓகேவா?’ எனக் கேட்பதாகட்டும் ஓலா பாத்திரத்தில் நடித்த சோபியா ஸ்டாஃபீஜ் நடிப்பில் ஆச்சர்யம் காட்டுகிறார்.

தன் தந்தையை புரிந்துகொள்ள ஒரு மகளின் தேடல் பயணமாக இயக்குநர் பியோடர் டொமாலேவ்ஸ்கி இப்படத்தை உருவாக்கியிருக்கிறார். தன் அப்பா, அம்மா தன் மீது வைத்திருக்கும் அன்பை சரிவர புரிந்துகொள்ளாமல் ஓலா போல் இருக்கும் அத்தனை பேருக்கும் பாடமாக கண்களை நனைக்கிறது இந்த ‘ஐ நெவர் கிரை’.Post a Comment

Protected by WP Anti Spam