சின்னக் கடலில் பெரிய மீனா இருப்பதும் ஒரு வித சந்தோஷம் தான்! (மகளிர் பக்கம்)

Read Time:11 Minute, 16 Second

சன் டிவியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் ‘அன்பே வா’ என்ற புதிய மெகா தொடரின் மூலம் சின்னத்திரையில் முத்திரை பதித்திருக்கிறார் ‘குரங்கு பொம்மை’ படத்தின் நாயகி டெல்னா டேவிஸ். ‘விடியும்வரை பேசு’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர், ‘பட்ற’, ‘49-ஓ’, ‘நனையாத மழையே’, ‘ஆக்கம்’ ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்திருப்பதோடு, ‘யூ டூ புரூட்டஸ்’, ‘ஹேப்பி வெட்டிங்’ போன்ற மலையாளப் படங்களிலும் நடித்திருக்கிறார்.

‘‘நான் அடிப்படையில் கிளாசிக்கல் டான்சர். என்னுடைய நடன ஆசிரியருக்கு திரைத்துறையில் பல நண்பர்கள் இருக்கிறார்கள். நாங்கள் அரங்கேற்றம் பண்ணும் போதெல்லாம் அவர்களும் கலந்து கொள்வார்கள். அப்படித்தான் ஒரு நாள் ஒரு இயக்குநர் ‘இந்த பொண்ணுக்கு நடிக்க விருப்பமா’ என்று கேட்டதோடு ‘அப்படி இருந்தால் ஒரு போட்டோ ஷூட் பண்ண சொல்லுங்க’ என்று என் ஆசிரியரிடம் சொல்லி இருக்கிறார். அவரும் என்னிடம் சொல்ல, பிரபல ஃபேஷன் போட்டோகிராபரை வைத்து கொச்சியில் ஒரு போட்டோ ஷூட் பண்ணினேன்.

சென்னையிலிருந்து காஸ்டிங்கிற்காக கேரளா வந்தவர்களிடம் என்னுடைய புகைப்படங்களை காட்டி இருக்காங்க. அவர்களுக்கும் பிடித்து போக எனது முதல் படமாக ’விடியும்வரை பேசு’ தமிழில் அமைந்தது. அந்த 17 வயதில் எனக்கு நடிப்பு பற்றியும், தமிழில் ஒரு வார்த்தை கூடவும் தெரியாது. ஒரு ட்ரிப் மாதிரி சென்னை வந்தேன்.

அந்த படத்தின் அசோசியேட் டைரக்டர் மூலமாக அடுத்து ‘49ஓ’ படத்தில் கவுண்டமணி சார் பொண்ணாக நடித்தேன். இப்படி தொடர்ந்து தமிழில் படங்கள் நடித்துக் கொண்டிருந்தாலும் எனக்கான ஓர் அடையாளம் கொடுத்தது ‘குரங்கு பொம்மை” என்று கூறும் டெல்னா டேவிஸ், கல்வியின் முக்கியத்துவம் பற்றி பேசினார்.

“திரைப்படங்கள் ஒரு பக்கம் நடித்துக் கொண்டிருந்தாலும், அதே நேரத்தில் கல்லூரியிலும் படித்துக் கொண்டிருந்தேன். அதிக விடுப்பு காரணமாக கல்லூரியிலும் பிரச்சினை ஆனது. அப்போது படிப்பா? நடிப்பா? என்ற கேள்வி என்னுள் எழுந்த போது படிப்புதான் முக்கியம் என்று முடிவு செய்தேன். ஏனென்றால் சிறு வயதிலிருந்தே நடிப்பு என்பது என் கனவாகவோ அல்லது அது தான் என்னுடைய தொழிலாக இருக்கும் என்று நான் முடிவு செய்யவில்லை. எல்லாரையும் போல் நானும் படித்து பட்டம் பெற வேண்டும் என்பதே தான் என் மனதில் பதிந்திருந்தது.

எனது ஆசையெல்லாம் வழக்கறிஞர் ஆக வேண்டும் என்பதுதான். அதனால்தான் கல்லூரி படிப்பில் English literature with Journalism துறையை தேர்வு செய்தேன். அந்த நேரத்தில் ஒரு சில நல்ல படங்களில் இருந்தும் வாய்ப்புகள் வந்தது. ஆனால் படிப்பு தான் முக்கியம் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தேன்.

கல்லூரிப் படிப்பை முடித்து ஒரு வருஷம் கேரளாவில் மாடலிங், விளம்பர படங்களில் நடித்து வந்தாலும் அதே நேரத்தில் LLB தேர்வுக்கும் என்னை தயார் படுத்திக் கொண்டு இருந்தேன். இப்போது பெங்களூர் REVA பல்கலைக்கழகத்தில் LLB படிச்சுட்டு இருக்கேன். லாயர்தான் ஆக வேண்டும் என்பதை பத்தாம் வகுப்பு படிக்கும் போதே முடிவு செய்தேன். காரணம் உறவினர்கள், டான்ஸ் கிளாஸ் வரும் நண்பர்களின் பெற்றோர் என என்னை சுற்றி லாயர்ஸ் வட்டாரமாகதான் இருந்தது. அந்த கருப்பு – வெள்ளை உடை பிடித்திருந்தது. அதோடு எனக்கு என்ன வரும் என்பதும் தெரிந்திருந்தது.

இயல்பிலேயே கம்யூனிகேஷன் ஸ்கில், ஒரு விஷயத்தை சரியாக புரிந்து எடுத்து சொல்வது, நண்பர்களுக்குள் ஏதாவது பிரச்சினை என்றால் கூட அதை தீர்த்து வைப்பது என நான் இருந்ததால் என்னவோ நமக்கு ஏற்றது வழக்கறிஞர் தொழில் தான் என்று என் மனதில் பிக்ஸ் செய்து கொண்டு அதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தேன்.

திரைப்படங்கள் நடிக்கும் போது இதுதான் என் தொழில் என்பதை முடிவு செய்யவில்லை. இப்ப கூட சொல்கிறேன் இந்த துறையில் எவ்வளவு நாள் நான் இருப்பேன்னு தெரியாது. ஒரு வயதிற்கு பிறகு இந்த கிளாமர் இண்டஸ்ரி என்னை தூக்கி எறிந்து என் வாழ்க்கைக்கு ஒரு முற்றுபுள்ளி வைத்துவிடும். ஆனால் கல்வி என்பது என்றைக்கும் நிரந்தரம். நம் வாழ்க்கைக்கு கேரண்டி கொடுக்கக் கூடியது.

திருமணமாகி குடும்பத்தில் பிரச்னை என்றால், மற்றவரை எதிர்பாராமல் நிற்பதற்கும், பேசுவதற்கும்… சிறந்த ஆயுதம் கல்வி மட்டுமே. எத்தனை வயதானாலும் நம்மை விட்டு போகாது” என்று கூறும் டெல்னா டேவிஸ், ‘அன்பே வா’ தொடரில் இணைந்தது பற்றி பேசினார். ‘‘பிரபல சீரியல்களிலும், பெரிய பெரிய ஹீரோக்களுக்கு தங்கையாகவும் நடிக்க வாய்ப்புகள் வந்தது. படிப்பில் முழு கவனம் செலுத்தியதால் நேரம் கிடைக்கவில்லை. கொரோனாவால் யுனிவர்சிட்டியும் மூடிட்டாங்க. அதனால் மீண்டும் கேரளா திரும்பினேன். ஆறு மாதம் வீட்டிலேயே இருந்து எனக்கு பைத்தியமே பிடிச்சுருச்சு.

நம்ம வாழ்க்கையில் எதையோ இழந்து வருகிறோம்… இப்படியே இருந்தால் நன்றாக இருக்காது… ஏதாவது செய்யணும்ன்னு அந்த நேரத்தில் உணர்ந்தேன். திரும்ப மாடலிங் செய்ய ஆரம்பிச்சேன். அதில் எடுத்த வீடியோ ஒன்றை என்னுடைய காஸ்டிங் டைரக்டர் சரிகம தயாரிப்பு நிறுவனத்திடம் காட்டி இருக்காங்க.

அவங்களும் சீரியலில் பூமிகா கதாபாத்திரத்திற்காக 2019 நவம்பரில் இருந்து தேடிட்டு இருந்திருக்காங்க. நிறைய பேர் ஆடிஷன் பண்ணியும், யாரும் செட் ஆகல. என்னுடைய வீடியோவை பார்த்து ‘விருப்பம் இருந்தா ஆடிஷன் வாங்க’னு கூப்பிட்டாங்க. ‘சீரியல் போனா படம் நடிக்க முடியாது, போகாதீங்க’னு நிறைய பேர் சொன்னாங்க. எதுக்கும் ஒரு முறை முயற்சி பண்ணி பார்க்கலாமேனு ஆடிஷன் அட்டன் பண்ணேன். தேர்வும் ஆகி இன்று நடித்துக் கொண்டிருக்கிறேன். ரொம்ப சந்தோஷமாகவும் இருக்கு.

பெரிய நட்சத்திரங்களோடு திரையில் தோன்றி இருந்தாலும், சின்னத் திரையில் வந்த மூன்றே மாதத்தில் எல்லா தரப்பு மக்களிடமும் சென்று சேர்ந்திருக்கிறேன். பெரிய திரையில் கிடைக்காத அங்கீகாரம் இன்று சின்னத்திரை மூலமா சாத்தியமாகி இருக்கிறது. இதற்கு சன் டி.விக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

ஒரு பெரிய நெட்வொர்க் மூலம் மக்களிடம் அறிமுகமாகியிருக்கிறேன். ஒரு பெரிய கடலில் சின்ன மீனா இருப்பதை விட ஒரு சின்னக் கடலில் பெரிய மீனா இருக்கிற மாதிரி உணர்வு. எதுவாக இருந்தாலும் செய்யும் வேலை ஒன்றுதான்” என்று கூறும் டெல்னா டேவிஸ், கொரோனா நமக்கு கற்றுக் கொடுத்திருக்கும் பாடம் என்ன என்பதை விளக்கினார்.

‘‘எண்ணிலடங்கா விஷயங்கள் வரும் காலத்திற்காக திட்டமிட்டிருப்போம். ஆனால் எல்லாமே இன்று ட்விஸ்ட் ஆகிவிட்டது. நமக்கு இருப்பது இந்த நிமிடம் மட்டும்தான். ஒரு விஷயத்தை தள்ளிப் போடக்கூடிய பழக்கம் கொண்டவளான நான், கொரோனாவிற்கு பிறகு அதை தவிர்த்து வருகிறேன். இன்றைய நாளில் நண்பர்களோடு, செய்யும் வேலையில், அம்மா-அப்பாவோடு, மூன்று வேலை உணவு என எல்லாவற்றிலும் சந்தோஷமாக இருந்தேனா என்பதை ஒவ்வொரு இரவும் தூங்கும் முன் யோசிக்கிறேன்.

பலர் தற்கொலை தான் எல்லாவற்றிற்கும் தீர்வு என்று முடிவு செய்கிறார்கள். இது தீர்வு அல்ல. தனிமையாகவும், மன உளைச்சலாக இருப்பதாக உணர்ந்தால் உங்களை சுற்றி நெருக்கமாக இருக்கும் நண்பர்களிடம் பேசுங்கள். நல்ல உறவுகளை வளர்த்துக் கொள்வது ரொம்ப ரொம்ப முக்கியம். அவர்களிடம் மனம் திறந்து பேசும் போது எல்லாமே சரியாகும். என்னை பொறுத்தவரை சந்தோஷமாகவும், மனநிறைவாகவும் வாழ்க்கை வாழவே முயற்சிக்கிறேன். ஏனென்றால் நாளை என்பது கிடையாது. நமக்கு இருப்பது இந்த நிமிடம் மட்டுமே” என்கிறார் டெல்னா டேவிஸ்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எனக்கு எந்தவிதமான பதவிகள் வேண்டாம் – இது குடும்ப கட்சி தான்!! (வீடியோ)
Next post தைரியமும் நம்பிக்கையும்தான் அழகு! (மகளிர் பக்கம்)