இதயம் செயல் இழந்தால் என்ன செய்வது? (மருத்துவம்)

Read Time:18 Minute, 31 Second

பலருக்கும் இந்த வார்த்தைகள் புதிதாகவே இருக்கும். ஏன், புதிராகவும் இருக்கலாம். இதயத்தைப் பொறுத்தவரை ‘ஹார்ட் அட்டாக்’கை தெரிந்திருக்கிற அளவுக்கு ‘ஹார்ட் ஃபெயிலியர்’ என்று அழைக்கப்படுகிற ‘இதயச் செயல் இழப்பு’ குறித்து படித்தவர்கள் கூட தெரிந்து வைத்திருக்கவில்லை.

இதயச் செயல் இழப்பு எது?

இதயம் ஒவ்வொருமுறை சுருங்கி விரியும்போதும் சுமார் 70 மி.லி. ரத்தத்தை வெளியேற்ற வேண்டும். அப்போதுதான் கல்லீரல், மூளை, சிறுநீரகம் போன்ற உயிர்காக்கும் உறுப்புகளுக்குத் தேவையான ரத்தத்தை அதனால் கொடுக்க முடியும். ஆனால், சில நேரங்களில் அது இயலாமல் போய்விடும். அப்போது இதயம் தனது வழக்கமான பணிகளைச் செய்ய இயலாது. அந்த நிலைமையை ‘இதயச் செயல் இழப்பு’ (Heart failure அல்லது Cardiac failure) என்கிறோம். இந்த நோயின் முக்கிய அறிகுறிகள் இரண்டு. ஒன்று, மூச்சுத் திணறல்.

மற்றொன்று, நீர்த் தேக்கம். மூச்சுத் திணறல் நுரையீரல் ஆஸ்துமாவிலும் (Bronchial asthma) காணப்படும். ஆகையால், இதயம் சார்ந்த மூச்சுத் திணறலை ‘இதய ஆஸ்துமா’ (Cardiac asthma) என அழைக்கலாம். இதில் மூச்சுத் திணறலுடன், உடலில் நீர்த் தேக்கமும் காணப்படும். நுரையீரல் ஆஸ்துமாவில் இந்த நீர்த் தேக்கம் இருக்காது.

அடிப்படைக் காரணம் எது?

உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு போன்ற பல்வேறு நோய்களால் திடீரென்றோ, நாளடைவிலோ இதயம் பாதிக்கப்படும்போது, இதயத் தசைகளின் சுருங்கி விரியும் தன்மை குறைந்து விடுகிறது. இதன் விளைவாக, இதயத்தின் வேலைப்பளு அதிகமாகிறது. இந்த நிலைமையைச் சரிக்கட்ட, இதயம் வழக்கத்தைவிட வேகமாகவும் அதிகமாகவும் துடிக்கிறது. இதயம் விரிந்து அதன் கொள்ளளவை அதிகப்படுத்திக் கொள்கிறது. இவற்றின் மூலம் உறுப்புகளுக்குத் தேவையான ரத்தத்தைக் கொடுக்க முயற்சி செய்கிறது.

தொடக்கத்தில் இந்த முயற்சியால் இதயத்துக்கு வெற்றி கிட்டும் என்றாலும், நாளடைவில் ‘தன்வினைத் தன்னைச் சுடும்’ என்பதைப்போல இதயத்தில் ஏற்பட்ட மாற்றங்களே அதற்கு வினையாகி, இதயம் தனது செயல்திறனை இழக்கிறது. ஓரளவுக்கு விரிந்த இதயம் அளவுக்கு மீறி விரியும்போது, இயல்பாகச் சுருங்கி விரிய முடியாமல் சிரமப்படுகிறது. வேகமாகவும், மிக அதிகமாகவும் துடித்த இதயம் ஒரு கட்டத்தில் துடிப்பதற்கே சிரமப்படுகிறது. இதனால், இதயத்திலிருந்து ரத்தம் வெளியேறும் அளவு குறைகிறது. இதேபோல் உடலின் பல பகுதிகளிலிருந்தும், நுரையீரல்களிலிருந்தும் இதயத்துக்கு ரத்தம் வருவதும் குறைந்துவிடுகிறது. விளைவு, நுரையீரல், கல்லீரல், குடல் ஆகியவற்றில் நீர்த் தேக்கம் உண்டாகிறது. இதுதான் இதயச் செயல் இழப்புக்கு அடிப்படைக் காரணம்.

யாரை பாதிக்கும்?

இந்த நோய் பெரும்பாலும் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே வருகிறது. என்றாலும், பிறவி இதயக் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கும், சிறுவர், சிறுமிகளுக்கும் இந்த நோய் வரலாம். இந்தியாவில் 50 லட்சம் பேருக்கு இந்த நோய் உள்ளது. ஆண்டுதோறும் புதிதாக 20 லட்சம் பேருக்கு இது வருகிறது. இந்த நோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்களில் பாதிப் பேர் நோய் ஆரம்பித்த இரண்டு ஆண்டுகளில் இறந்து விடுகின்றனர். பலர் உடனடியாக மரணத்தைத் தழுவுகின்றனர்.

காரணங்கள்?

இதயத்தை பாதிக்கும் எந்தவொரு நோயும் இதயச் செயல் இழப்பை ஏற்படுத்தலாம். என்றாலும், உடனடியாக இந்த நோயை வரவழைக்கும் நோய்கள் வரிசையில் முன்னணியில் நிற்பவை ‘ஆஞ்சைனா’வும் மாரடைப்பும்தான். அடுத்து வருவது, உயர் ரத்த அழுத்தம். இதனைத் தொடர்வது, இதய வால்வு நோய்கள் மற்றும் இதய இடைச் சுவர்த் துளை நோய்கள் (Septal defects), நுரையீரல் தமனி மிகு ரத்த அழுத்தம் (Pulmonary hypertension), இதயத் தசை அழற்சி நோய் (Myocarditis), இதயத் தசை நோய் (Cardiomyopathy), இதய உள்ளுறை அழற்சி நோய் (Endocarditis), இதய வெளிஉறை நீர்த் தேக்கம் (Pericardial effusion), நுரையீரல் தமனி ரத்த உறைக்கட்டி (Pulmonary embolism), இடது இதயக் கீழறைப் பெருக்க நோய் (Left ventricular hypertrophy), இதயத் தசைக் கட்டிகள் ஆகியவையும் இதயச் செயல் இழப்புக்கு வழிவகுக்கும். தைராய்டு ஹார்மோன் மிகைச் சுரப்பு (Hyperthyroidism), கடுமையான ரத்தசோகை, நிமோனியா, நீரிழிவு, வைட்டமின் பி-1 குறைவால் வருகின்ற பெரிபெரி நோய் (Beri beri) ஆகியவற்றாலும் இந்த நோய் ஏற்படலாம்.

வகைகள்?

இந்த நோய் ஏற்படுகிற தன்மையைப் பொறுத்து இதை இரு வகைகளாகப் பிரிக்கலாம்.

1. திடீர் இதயச் செயல் இழப்பு (Acute Heart Failure)

திடீரெனத் தொடங்கும் இதயச் செயல் இழப்பு இது. மாரடைப்பு, நுரையீரலில் நகர்கிற ரத்த உறைக்கட்டி போன்றவற்றால் இத்தகைய இதயச் செயல் இழப்பு ஏற்படுகிறது.

2. நாட்பட்ட இதயச் செயல் இழப்பு (Chronic Heart Failure)

இது சிறிது சிறிதாக ஏற்படும் இதயச் செயல் இழப்பு. இதய வால்வுக் குறைபாடுகள், ரத்தசோகை, உயர் ரத்த அழுத்தம் ஆகியவை இவ்வகை இதயச்செயலிழப்பை ஏற்படுத்துவது வழக்கம்.இதயச் செயல் இழப்பு இதயத்தைப் பாதிக்கின்ற முறையைப் பொறுத்து இதை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.

1. வலது இதயச் செயல் இழப்பு (Right heart failure)

இதயத்தின் வலது மேலறையும் வலது கீழறையும் சேர்த்து ‘வலது இதயம்’ எனப்படுகிறது. இந்த இரு அறைகள் தங்கள் செயல்திறனை இழக்கும் போது ஏற்படுவது ‘வலது இதயச் செயல் இழப்பு’ என அழைக்கப்படுகிறது. இது நுரையீரல் தமனி வால்வுக் குறைபாட்டினாலும், நாட்பட்ட நுரையீரல் நோய்களாலும், நுரையீரல் ரத்த உறைக் கட்டிகளாலும் உண்டாகிறது. இதில் வலது கீழறையிலிருந்து ரத்தம் வெளியேறுகின்ற அளவு குறைகிறது. இங்கிருந்து நுரையீரல்களுக்கு ரத்தம் சரிவரச் செல்வதில்லை. இதனால் மேற்பெருஞ்சிரை மற்றும் கீழ்்பெருஞ்சிரை வழியாக அசுத்த ரத்தம் வலது மேலறையை அடையச் சிரமப்படுகிறது. ஆகவே, உடலின் எல்லா பகுதிகளிலும் அசுத்த ரத்தம் தேங்குகிறது. இதன் விளைவாக, உடலின் பல பகுதிகள் வீங்குகின்றன.

2.இடது இதயச் செயல் இழப்பு (Left heart failure)

இதயத்தின் இடது மேலறையும் இடது கீழறையும் சேர்த்து ‘இடது இதயம்’ எனப்படுகிறது. இந்த இரு அறைகள் தங்கள் செயல்திறனை இழக்கும் போது ஏற்படுவது ‘இடது இதயச் செயல் இழப்பு’ என அழைக்கப்படுகிறது. மகாதமனி வால்வுக் குறைபாடு, உயர் ரத்த அழுத்தம், ஆஞ்சைனா, மாரடைப்பு போன்றவற்றால் இவ்வகை இதயச் செயல் இழப்பு ஏற்படுகிறது. இதில் இடது கீழறைச் சுவர்கள் பலவீனமடைவதால், அவற்றின் சுருங்கி விரியும் தன்மை பாதிக்கப்படுகிறது.

இடது கீழறையிலிருந்து ரத்தம் வெளியேறுகிற அளவு குறைகிறது. நுரையீரல்களிலிருந்து சிரை ரத்தம் இடது மேலறைக்கு வருவதும் குறைகிறது. எனவே, நுரையீரல்களில் ரத்தம் தேங்குகிறது. இதனால் நோயாளிக்கு மூச்சுத்திணறல் உண்டாகிறது. நோயாளி உட்கார்ந்திருக்கும்போது நுரையீரல்களின் அடிப்பகுதியில்தான் ரத்தம் தேங்கும். நுரையீரல்களின் மற்ற பகுதிகளில் அவ்வளவாக ரத்தம் தேங்குவதில்லை. ஆகவே, நோயாளி உட்கார்ந்திருக்கும்போது மூச்சுத்திணறல் குறைவாக இருக்கும். ஆனால், நோயாளி படுத்திருக்கும்போது நுரையீரல்களில் முழுப்பகுதியிலும் ரத்தம் தேங்குவதால் அப்போது மூச்சுத் திணறல் அதிகரிக்கிறது.

3. தேக்கமுறும் இதயச் செயல் இழப்பு (Congestive heart failure)

இதயத்தின் இரு பக்கங்களும் செயலிழக்கும் போது இதயக் கீழறைகள் இரண்டும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. அப்போது உடலெங்கும் நீர்த்தேக்கம் உண்டாகிறது. மூச்சுத் திணறல் கடுமையாக இருக்கும். சிறுநீர் பிரியாது.

அறிகுறிகள்?

இடதுபக்க இதய பாதிப்பால் இதயச் செயல் இழப்பு ஏற்படும் நோயாளிகளுக்கு மூச்சுவிடுவதில் சிரமம் தோன்றும். படுக்கும்போது பெருமூச்சு வாங்கும். மூச்சுத் திணறல் உண்டாகும். சிலருக்கு உறக்கத்தில் மூச்சுத் திணறல் உண்டாகி விழிப்பு வந்துவிடும். இவர்கள் உடனே எழுந்து உட்கார்ந்து, முன்புறம் நன்கு சாய்ந்து கொண்டால் மூச்சுத் திணறல் சிறிதளவு குறையும். தொடர் இருமல் வரும்.

வலதுபக்க இதய பாதிப்பால் இந்த நோய் ஏற்படுமானால், நோயாளிகளுக்குத் தொடக்கத்தில் கணுக்கால்களில் வீக்கம் தோன்றும். சிறுநீரின் அளவு குறையும். பாதங்களில், கால்களில், வயிற்றில், முகத்தில் வீக்கம் காணப்படும். நகங்கள் நீலநிறமாகும். கல்லீரல் வீங்கும். கழுத்திலுள்ள சிரைக் குழாய்கள் வீங்கிப் புடைத்துவிடும்.

இதயத்தில் இரண்டு பக்கங்களிலும் இதயச் செயல் இழப்பு ஏற்படும்போது மேற்கூறிய எல்லா அறிகுறிகளும் காணப்படும். நாட்பட்ட நோயாளிகளுக்குப்பசி குறைந்து, உடல் மெலியும். எடை குறையும். உடல் தசைகள் நலிவடைந்து எலும்பும் தோலுமாகக் காணப்படுவார்கள்.

சிக்கல்கள்?

ரத்த யூரியா மிகைப்பு… இதயச் செயல் இழப்பினால் இதயத்திலிருந்து ரத்தம் குறைவாக வெளியேறுவதால் சிறுநீரகங்களுக்கும் குறைவாகவே ரத்தம் வந்து சேர்கிறது. இதனால் சிறுநீரகங்களின் இயல்பான பணி தடைபடுகிறது. ரத்தத்திலுள்ள கழிவுகளை முழுமையாக வெளியேற்ற முடிவதில்லை. விளைவு, ரத்தத்தில் யூரியாவின் அளவு அதிகரித்து விடுகிறது.

ரத்தப் பொட்டாசியம் மற்றும் சோடியம் குறைவு…

இந்த நோய்க்கு சிறுநீர்ப் பிரித்திகளை அதிகமாகப் பயன்படுத்துவதால், ரத்தத்திலுள்ள பொட்டாசியம், சோடியம் சிறுநீரில் மிகுதியாக வெளியேறி விடுகிறது. இதன் விளைவாக, ரத்தத்தில் பொட்டாசியம் மற்றும் சோடியம் அளவு குறைந்துவிடுகிறது. இதனால் உடலில் அமிலக்கார அளவுகள் மாறுவதால், ரத்த ஓட்டத்தில் சிக்கல் உண்டாகிறது

கல்லீரல் செயல்பாடு குறைவது…

கல்லீரலுக்கு வருகின்ற ரத்தத்தின் அளவு குறைவதாலும், கல்லீரலில் சிரை ரத்தம் மிகுதியாகத் தேங்குவதாலும் அதனுடைய செயல்பாடு குறைகிறது. விளைவு, மஞ்சள் காமாலை தோன்றுகிறது.

நகரும் ரத்த உறைக்கட்டி (Embolism)…

இதுவும் இதயத்திலிருந்து ரத்தம் மிகக் குறைவாக வெளியேறுவதால் ஏற்படுகின்ற சிக்கல்தான். குறிப்பாக, நுரையீரல் சிரைகளிலும் கால் சிரைகளிலும் ரத்தம் உறைந்துவிடும். இந்த நோயாளிகள் நீண்டகாலம் படுக்கையிலேயே படுத்துக் கொண்டிருப்பதாலும் இம்மாதிரியாக ரத்தம் உறைவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

ஒழுங்கில்லாத இதயத்துடிப்பு (Arrhythmia)…

இதய மேலறை லயமின்மை மற்றும் கீழறை லயமின்மை இதயச் செயல் இழப்பு நோயாளிகளுக்கு மிகச் சாதாரணமாக வரக்கூடிய சிக்கல். சோடியம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற ரத்த அயனிகள் குறைவதாலும், இதய அமைப்புக் குறைபாட்டாலும், டிஜாக்சின், கேட்டக்காலமின் போன்ற மருந்துகளின் அதீத விளைவுகளாலும் இந்தச் சிக்கல் உண்டாகிறது. இதயச் செயல் இழப்பு நோயாளிகளில் 50 சதவிகிதம் பேர் இதனால்தான் மரணமடைகின்றனர்.

பரிசோதனைகள்?

வழக்கமான ரத்தப் பரிசோதனைகளுடன் யூரியா, கிரியேட்டினின், சோடியம், பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம், குளுக்கோஸ், கொலஸ்ட்ரால் ஆகியவற்றைப் பரிசோதிக்க வேண்டும். மார்பு எக்ஸ் – ரே. இசிஜி, இதய எக்கோ ஆகியவை இந்த நோயின் அடிப்படை காரணத்தைத் தெரிவிப்பதோடு, இதயச் செயல் இழப்பின் தன்மை, வகை, தீவிரம் போன்றவற்றையும் தெளிவுபடுத்தி விடும்.

சிகிச்சை முறைகள்?

1. முழுமையான ஓய்வு இதயச் செயல் இழப்பு நோயாளிகள் மருத்துவர்கள் சொல்லும் வரை முழுமையான ஓய்வில் இருக்க வேண்டும். இதனால் இதயத்தின் வேலைப்பளு குறையும்.

2. அடிப்படை நோய்க்கு சிகிச்சை

இதயச் செயல் இழப்பை ஏற்படுத்திய நோயைக் கண்டுபிடித்து அதற்குரிய சிகிச்சையைத் தொடங்க வேண்டும்.

3. பிராணவாயு செலுத்துதல்

இந்த நோயாளிக்கு இது ஒரு முக்கியமான சிகிச்சை முறை. காரணம், இவர்களுக்கு நுரையீரல்களில் நீர்த் தேக்கம் உண்டாவதால், அங்கிருக்கும் குறைந்த அளவு காற்று ரத்தத்தில் கலப்பது கடினம். செயற்கை சுவாசம் அளித்தல் முறையில் நோயாளியின் மூக்கு வழியாக, அதிக அழுத்தத்தில் பிராணவாயுவைச் செலுத்தினால், அது ரத்தத்தில் கலக்கும். இதனால் ரத்தம் சுத்தமாகி நோயாளியின் உயிரைக் காக்கும்.

4. சிறுநீர் பிரித்திகள் (Diuretics)

ஃபுரூசமைட், பூமீட்டனைட் போன்ற சிறுநீர்ப் பிரித்திகளை உபயோகித்து, உடலின் நீர்த் தேக்கத்தைக் குறைக்க வேண்டும். நீண்ட காலத்துக்கு இந்த மருந்துகளைப் பயன்படுத்த வேண்டி இருந்தால், அவற்றுடன் பொட்டாசியம் கலந்த திரவ மருந்துகளையும் சேர்த்துத் தருவார்கள்.

5. சுவாசக் குழாய் தளர்த்திகள் அமினோபிலின், தியோபிலின் போன்ற ஊசிகளைப் பயன்படுத்தி, மூச்சுத் திணறலைக் குறைக்க வேண்டும்.

6. ரத்தக் குழாய் விரிப்பிகள், பீட்டா தடுப்பான்கள்… ‘ஆஞ்சியோடென்சின் கன்வர்டிங் என்ஸைம் இன்ஹிபிட்டார்ஸ்’, டிஜாக்சின் எனப் பல மருந்துகளைக் கொடுத்து நோயைக் கட்டுக்குள் கொண்டு வருவார்கள் மருத்துவர்கள்.

7.பொதுவானவை உணவில் உப்பைக் குறைத்துக் கொள்ள வேண்டியது மிக முக்கியம். வலி மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் சாப்பிடக்கூடாது. புகைப்பிடிக்கக்கூடாது. மது அருந்தக் கூடாது. மாடிப்படிகளிலும் உயரமான இடங்களுக்கும் ஏறி இறங்கக்கூடாது. நோய் மீண்டும் தாக்காமல் இருக்க, தொடர்ச்சியான மருத்துவச் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டியது மிக முக்கியம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நார்ச்சத்து மிகுந்த உணவு மாரடைப்பைத் தடுக்கும்!! (மருத்துவம்)
Next post தண்ணீரை ஆயுதமாக்கும் சீனா !! (வீடியோ)